லாஸ் ஏஞ்சலெஸ்: அமெரிக்காவின் புகழ் பெற்ற பாப் பாடகராக விளங்கிய எல்விஸ் பிரஸ்லியின் ஒரே மகளும், மைக்கேல் ஜாக்சனின் முன்னாள் மனைவியுமான லிசா மேரி பிரஸ்லிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு, கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
54 வயதாகும் லிசா மேரி, கலிபோர்னியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் கோமா நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
லிசா மேரி தனது வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளதாக அவரது வீட்டு பணிப் பெண் பார்த்து உடனடியாக அவரது முன்னாள் கணவரான டேனி கியோவுக்குத் தகவல் கொடுத்தார். அவர் விரைந்து வந்து சிபிஆர் கொடுத்துப் பார்த்தார். டாக்டர்களுக்குத் தகவல்கொடுக்கப்பட்டு அவர்கள் வந்து பரிசோதித்த பின்னர் மேரியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
தனது மகள் நிலை குறித்து தாயார் பிரிசில்லா பிரஸ்லி கூறுகையில், எனது மகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவர் குணமடைய வேண்டும் என அனைவரும் பிரார்த்தியுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இது தற்கொலை முயற்சி போல தெரியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமைதான், கோல்டன் குளோப் விருது விழாவில் பிரிசில்லாவும், லிசா மேரியும் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் அவர் தற்போது உயிருக்குப் போராடி வருவது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தந்தை எல்விஸைப் போலவே லிசாவும் ஒரு பாடகி ஆவார். எல்விஸ் பிரஸ்லி - பிரிசில்லா தம்பதியின் ஒரே மகள்தான் லிசா மேரி.
லிசா மேரிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். அவர் முதலில் டேனிகியோவை மணந்தார். பின்னர் விவகாரத்து செய்து விட்டு மைக்கேல் ஜாக்சனை மணந்தார். அவரையும் விட்டு விட்டு 3வதாக நடிகர் நிக்கலோஸ் கேஜ்-ஐ திருமணம் செய்து கொண்டார். அந்த வாழ்க்கையும் கசந்த பின்னர் கடைசியாக நடிகர் மைக்கேல் லாக்வுட்டை மணந்து அவரையும் விட்டு விலகி விட்டார்.
{{comments.comment}}