சென்னை: இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் பண்டிகை இன்று நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு கட்சி தலைவர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக ரமலான் திருநாள் கொண்டாடப்படுகிறது. சமூக ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் நோக்கில் ஒவ்வொரு வருடமும் ரமலான் பண்டிகையை கொண்டாடப்படுகிறது.
புனித மாதமான ரமலான் மாதத்தில் ஈகையை வலியுறுத்தும் நோக்கில் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் கடந்த மார்ச் 2 ஆம் தேதி ரமலான் நோன்பு தொடங்கப்பட்டு 28 அல்லது 29 நாட்கள் விரதம் கடைபிடித்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த ரம்ஜான் பண்டிகை பிறையின் அடிப்படையில் கொண்டாடப்படும் நிலையில், நேற்று பிறை காணப்பட்டு இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் ரமலான் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக இன்று அதிகாலை முதலிலிருந்து புனித தலமான பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.
இந்த தொழுகையின் போது மத நல்லிணக்கம், உலக அமைதி, ஒற்றுமை, குறித்து சிறப்பு வழிபாடுகளும் நடத்தி வருகின்றனர். அதே சமயத்தில் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் சிறப்பு விருந்து அளித்து தங்களின் அன்பை பரிமாறி வருகின்றனர்.
இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் தமிழக அரசியல் தலைவர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு:
ஈத் (ரம்ஜான் பண்டிகை) புனித ரமலான் மாதத்தின் நோன்பு மற்றும் பிரார்த்தனையின் உணர்வை குறிக்கிறது. இந்த பண்டிகை சகோதரத்துவம், ஒத்துழைப்பு மற்றும் இரக்க உணர்வை வலுப்படுத்துகிறது. இந்த பண்டிகை இணக்கமான, அமைதியான மற்றும் வளமான சமூகத்தை உருவாக்க நாம் உறுதி எடுப்போம். இந்த பண்டிகை அனைவரின் வாழ்க்கையிலும் அமைதி, முன்னேற்றம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவரட்டும்.
மேலும் நேர்மறையான அணுகுமுறையுடன் முன்னேற நமக்கு பலத்தைத் தரட்டும். புனிதமான இந்த நாளில், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வசிக்கும் அனைத்து இந்தியர்களுக்கும், குறிப்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் எனது ரம்ஜான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
பிரதமர் நரேந்திர மோடி:
ரம்ஜான் பண்டிகை சமூகத்தின் நம்பிக்கை, நல்லிணக்கம் மற்றும் கருணையின் உணர்வை அதிகரிக்கட்டும். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
முதல்வர் மு.க ஸ்டாலின்:
இஸ்லாமிய சமுதாய மக்கள் ஒரு மாத காலம் கடுமையாக நோன்பு விருந்து பசி துன்பம் என்பதை அனுபவத்தால் உணர்ந்து ஏழை எளியோர் பால் இரக்கம் கொண்டு, ஈகை பண்பு சிறக்க ரமலான் திருநாளை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள்.
எனது கல்லறையை அலங்காரம் செய்யாதீர்கள்; என்னை இறைவனாக ஆக்கி விடாதீர்கள்; எனக்கு முன்னால் வாழ்ந்த நபிமார்களை அப்படி ஆக்கிவிட்டார்கள்; உலர்ந்த ரொட்டி துண்டுகளையும் காய்ந்த பேரீச்சம் பழங்களையும் உண்டு வாழ்ந்த ஒரு ஏழைப் பெண்ணின் மகன் என்று கூறுவதில் நான் பெருமை அடைகிறேன் என்று தன் நண்பர்களுக்கு கூறியவர் அண்ணல் நபிகள் பெருமான்.
பொய்மை, ஆடம்பரம், இவற்றை தவிர்த்து எளிமை, அன்பு, அடக்கம், இவற்றை குணநலன்களாகக் கொள்ள வழிகாட்டிய கருணை வள்ளல் அவர்.
பசித்தோருக்கு உணவிடவும், சமத்துவ சகோதரத்துவ உணர்வுடன் அனைவரையும் நேசிக்கவும் வழிகாட்டிய பெருமானார்.
தொழிலாளர்களின் வியர்வை உலரும் முன் அவன் கூலியை கொடுத்துவிடு என்று உழைப்பை மதித்திடும் உத்தம பண்பை உலகுக்கு நீதியாய் போதித்தவர்.
மனித வாழ்வு மேன்மை அடைந்தவற்கான இத்தகைய மார்க்கங்களை போதித்ததால்தான் நபிகள் நாயகத்தை மக்கள் என்றும் போற்றுகிறார்கள்.
அத்தகைய நபிகள் பெருமானார் போதித்த நெறியில் வாழ்ந்து நோன்பு கடமைகளை நிறைவேற்றி முடித்துள்ள மனநிறைவோடு, ரமலான் திருநாளை கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் என்ற முறையிலும், முதலமைச்சர் என்ற பொறுப்பிலும், எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களை உரித்தாகி மகிழ்கிறேன்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி:
இஸ்லாமியப் பெருமக்கள் மனமகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஈகைத் திருநாளாம் ரம்ஜான் திருநாளில், அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில், இஸ்லாமியப் பெருமக்களின் நலன் கருதி எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இஸ்லாமியப் பெருமக்களின் பாதுகாவலராக அதிமுக என்றென்றும் இருக்கும் என்பதை இந்த இனிய நாளில் உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்.
'தூய்மையும், பக்தியும் உள்ளதாய், பாவங்களற்றதாய், பொறாமை, அத்துமீறல் இல்லாத இதயமே பரிசுத்தமான இதயம்' என்று நபிகள் நாயகம் உலகிற்குப் பறைசாற்றி உள்ளதை அனைவரும் நினைவில் கொண்டு, தங்கள் கடமைகளைச் செவ்வனே மேற்கொண்டு வாழ வேண்டும் எனத் தெரிவித்து, பிறை கண்டு பெருநாள் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்களின் வாழ்வு, என்றென்றும் வளர் பிறையாக ஒளிர வேண்டும் என்று மனதார வாழ்த்தி, இந்த இனிய திருநாளில் என் அன்பிற்கினிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில், இதயம் நிறைந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்:
புனித ரமலான் மாதத்தில் இறை சிந்தனையோடு உடல் வருத்தத்தையும், பொருட்படுத்தாது உலக நலனை வேண்டி நபிகள் பெருமானார் காட்டிய நெறிவழியில் தவறாது உண்ணா நோன்பினை வாழ்வின் முக்கிய கடமையாக ஏற்று கண்ணும் கருத்துமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
மநீம தலைவர் கமலஹாசன்:
உடல் ஆரோக்கியத்துக்கும் மன நலனுக்கும் ஈகைச் சிந்தைக்கும் எளியோரை அரவணைக்கும் தன்மைக்கும் குறியீடாக விளங்கும் நன்னாள்; சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் எடுத்துக்காட்டும் பெருநாளாம் ரம்ஜான் கொண்டாடும் அன்பர்களுக்கு என் இனிய வாழ்த்துகள்.
தவெக தலைவர் விஜய்:
நோன்பிருந்து உறவுகளுடன் நட்பு நெஞ்சங்களுடன் அன்பை பரிமாறி ஈகை திருநாளாம் ரமலான் திருநாளை கொண்டாடும் உலகெங்கும் வாழும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
இந்நாளில் அனைவரிடமும் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம், ஆகியவை வளர்பிறையாக வளர வாழ்த்தி மகிழ்கிறேன்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை:
அனைவரின் வாழ்விலும், அமைதி, அன்பு, நிம்மதி, நல்லிணக்கம் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ரம்ஜான் பண்டிகை கொண்டாடும் மக்களுக்கு அனைவருக்கும் ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை:
அன்பையும் சகோதரத்துவத்தையும் சமாதானத்தையும் போதிக்கும் ஈகை திருநாளாம் ரம்ஜான் தினத்தில் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் எமது அன்பு கலந்த நல்வாழ்த்துகள். அன்பும் பாசமும் தழைத்தோங்கட்டும்.
டாக்டர். தமிழிசை சௌந்தர்ராஜன்:
புனித ரமலான் மாதத்தில் பிறை கண்டு ஈகைப்பெருநாள் கொண்டாடும் தமிழ்நாடு,புதுச்சேரியில் உள்ள இஸ்லாமிய பெருமக்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய சகோதர,சகோதரிகளுக்கும் என் இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த நன்னாளில் இரக்கம், சகோதரத்துவம், ஈகை குணம், அருட்கொடை, அன்பு, அமைதி எல்லாம் செழிக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் என்று எனது மனமார்ந்த ரம்ஜான் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வக்பு வாரிய சட்ட மசோதா நாளை தாக்கல்.. எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி எம்.பிக்கள் முடிவு
தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக ..2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்..!
வழக்கத்தைவிட.. ஏப்ரல், ஜூனில் வெப்பம் அதிகரிக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!
Emburan Movie: பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துகளை நீக்குக.. பண்ருட்டி வேல்முருகன்..!
Madurai Chithirai Thiruvizha 2025: மீனாட்சி அம்மன் கோவிலில்..ஏப்ரல் 29ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..
அருவறுப்பான ஆண்களே அழிஞ்சு நாசமா போங்க.. பாடகி சின்மயி ஆவேசம்!
கும்பகோணம் வெற்றிலைக்கும் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு!
டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு.. ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அரசு உத்தரவு..!
தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.. அமித்ஷா கூறியது நகைச்சுவை:விசிக தலைவர் திருமாவளவன்!
{{comments.comment}}