Alert: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் மிக கன மழை.. தமிழ்நாடு வெதர்மேன்

Jan 07, 2024,06:59 PM IST

சென்னை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று இரவு முதல் நாளை மாலை வரை மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


சென்னையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இன்றும் காலையிலிருந்து விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. மாலைக்கு மேல் மழையின் வேகம் சற்று அதிகரித்துள்ளது. தொடர்ந்து விடாமலும் மழை பெய்து வருகிறது.


மழை தொடர்பாக வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. இருப்பினும் அனைவரும் எதிர்பார்த்தது தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அமைதியாக இருக்கிறாரே.. எதையும் சொல்லவில்லையே என்றுதான். தற்போது அவரது மழை குறித்த கணிப்பு வெளியாகியுள்ளது. வயிற்றில் லைட்டாக புளியைக் கரைப்பது போலத்தான் இருக்கிறது அவரது தகவல்கள்.. காரணம், இன்று இரவு முதல் நாளை மாலை வரை மிக கன மழை பெய்யும் என்று பிர தீப் ஜான் கூறியுள்ளார்.பிரதீப் ஜான் கூறியுள்ள தகவல் விவரம்:


தென் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை




வட கிழக்குப் பருவ மழை ஜனவரி மாதத்திலும் தொடர்வது கடந்த நான்கு ஆண்டுகளாக இயல்பாகி வருகிறது. இந்த வருடமும் நாம் நல்ல மழையை இந்த மாதத்தில் எதிர்பார்க்கலாம். கிங் மேக்கர் MJO நமது கடல் பகுதியில் நுழைந்து வருவதால் இது சாத்தியமாகியுள்ளது. கடந்த 2 நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. 


விருதுகர் மாவட்டம், மாஞ்சோலைப் பகுதிகளில் சில இடங்களில் கன மழையும் பெய்துள்ளது. டெல்டா பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. இந்த மழையானது தெற்கு, மேற்கு தமிழ்நாட்டில் அடுத்த 2, 3 நாட்களுக்கு தொடரும். இந்த மழையின் உச்சம் எங்கு இருக்கும்?


மாஞ்சோலையை இதில் நாம் கணக்கில் சேர்க்கவே வேண்டாம். காரணம், அங்கு சும்மாவே உச்சகட்டத்தில்தான் மழை இருக்கும். நம்ம காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னையில்தான் இந்த உச்சம் இருக்கப் போகிறது. குறைந்த காற்றழுத்தம் அல்லது புயல் போல இந்த மழை இருக்காது, அதிலிருந்து வித்தியாசமாக இருக்கும். கடந்த 2020, அக்டோபர் 28 அல்லது 2021 நவம்பர் 7ம் தேதி பெய்த மழையுடன் இதை ஒப்பிடலாம். அந்த மாதிரி மழை பெய்யும்.


(கேடிசிசி) சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகள்




கேடிசிசி பகுதிகளில் இன்று அட்டகாசமான மழை பெய்து வருகிறது. பார்க்கவே ஜோராக இருக்கிறது. இருப்பினும் சீசன் அல்லாத நேரத்தில் பெய்யும் கன மழையை சற்று கவனத்துடனும், எச்சரிக்கையுடனும்தான் எதிர்கொள்ள வேண்டும். ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில்தான், நமக்கு, இன்று இரவும், நாளையும் என்ன நடக்கும் என்பதை உறுதி செய்ய முடிந்தது.


ஞாயிறு இரவு முதல் திங்கள் மாலை வரை


ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை மாலை வரை கேடிசிசி பெல்ட்டில் சராசரியாக 75 முதல் 150 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்யலாம். இந்த நான்கு மாவட்டங்களில், சில இடங்களில் 150 முதல் 250 மில்லி மீட்டர் அளவிலான மழை பெய்ய வாய்ப்புண்டு.


விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள்,  கடலுக்கு அருகாமையில் உள்ள பகுதிகள், ராணிப்பேட்டை, டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுச்சேரியிலும் இன்று இரவு மழை கிடைக்க வாய்ப்புண்டு.


மிச்சாங் புயல் அளவுக்கெல்லாம் வெள்ளம் வராது




டிசம்பர் மாதம் 24 மணி நேரத்தில் 400 முதல் 450 மில்லி மீட்டர் அளவிலான மழை பெய்தது. மிச்சாங் புயல் காரணமாக அந்த அளவுக்கு மழை கிடைத்தது. ஆனால் தற்போது இந்த அளவுக்கு மழை பெய்யாது. இருப்பினும் 100 முதல் 200 மில்லி மீட்டர் அளவில் மழை பெய்தால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்க வாய்ப்புள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் வசிப்போர், கவனமாக இருப்பது நல்லது.


மேகக் கூட்டங்கள் நகர்வதைப் பொறுத்தே இது வழக்கமான கன மழையா (100 மில்லி மீட்டர் மழை), அல்லது 200 மில்லி மீட்டர் மழையா என்பதை நம்மால் கணிக்க முடியும்.


அலுவலகம் செல்வோரின் அன்பு கவனத்திற்கு!


இரவா பகலா குளிரா வெயிலா, கடலா புயலா இடியா மழையா.. என்னை ஒன்றும் செய்வதில்லை என்பதுதான் அலுவலகங்களின் மோட்டோ. எனவே நாம ஆபீஸுக்குப் போயே ஆக வேண்டும். இருப்பினும் மேகக் கூட்டங்கள் என்ன வச்சிருக்குன்னு கூர்ந்து பார்க்க வேண்டும். மிகவும் கன மழை பெய்ய வாய்ப்பிருந்தால் சொல்றேன்.


நெல்லை - தூத்துக்குடி




மாஞ்சோலைப் பகுதியின் மழைபிடிப்புப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை வரை கன மழை பெய்யும். ஆனால் சமாளிக்கக் கூடியதாக அது இருக்கும். கன மழையே பெய்தாலும் கூட கவலைப்படத் தேவையில்லை. பயப்படவே வேண்டாம். மணிமுத்தாரிலிருந்து விநாடிக்கு 3000 முதல் 10,000 கன அடி நீர் வரை வரலாம். இது சமாளிக்கக் கூடியதுதான்.


நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் பிற பகுதிகளிலும் கூட செவ்வாய்க்கிழமை, புதன்கிழமையன்று நல்ல மழை பெய்யும். அதேசமயம், பயமுறுத்தும் அளவுக்கு அது இருக்காது. இந்த மழையால் பயப்பட வேண்டாம், பீதி அடைய வேண்டாம். 


ஏன் இப்ப போய் இந்த மழை பெய்யுது?


கிழக்கிலிருந்து வரும் காற்று மற்றும் ஒரு தாழ்வு காரணமாகவே இந்த மழை பெய்கிறது. இந்த கிழக்குக் காற்றும், மேற்கிலிருந்து வரும் காற்றும் இணைந்திருப்பதால் மழை பெரிதாக உள்ளது.  தமிழ்நாட்டின் மீது இந்த கிழக்கு காற்று வீசி வருகிறது.  இதன் காரணமாக வடக்கு தமிழ்நாடு, தெற்கு ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மழையைப் பெறுகின்றன.  திருப்பதி, சித்தூரில் கூட இந்த சமயத்தில் கன மழை பெய்யும் என்று கூறியுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்