- சகாயதேவி
கன்னியாகுமரி புத்தகக் கண்காட்சியில் நாம் கண்ட ஒரு விஷயம் மனதை பட்டென்று ஈர்த்தது.. அதுதான் "கூண்டுக்குள் வானம்".
குடைக்குள் மழை தெரியும்.. அது என்ன "கூண்டுக்குள் வானம்".. பார்த்திபன் மாதிரியே நாமும் யோசித்தபோதுதான் அது ஒரு அருமையான திட்டம் என்று தெரிய வந்து வியந்தோம்.
ஏதோ ஒரு சூழ்நிலையில் தவறு செய்து இப்போது தன் தவறை எண்ணி வருந்துவோர் அடைந்து கிடக்கும் இடம்தான் சிறைச்சாலை. குற்றங்களை செய்து விட்டு.. அதற்கான தண்டனையை அனுபவித்து வரும் கைதிகள் பலரும் படிக்கவும், ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொள்ளவும் ஆர்வம் காட்டுவார்கள். இதற்காக அரசும் நிறைய திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. ஆனால், கைதிகளுக்கு சாதாரண ஜனங்களாக நாம் எதாவது செய்ய வேண்டும் இல்லையா.. ? நம்மால் செய்ய முடியுமா என்றாவது யோசித்திருக்கிறோமா? அப்படிப்பட்ட நம்மை யோசிக்க வைத்ததுதான் கூண்டுக்குள் வானம் என்ற அரசின் திட்டம் .
கொடுக்கலாம் அன்பை:
புத்தகக் கண்காட்சியில் ஒரு பெட்டி வைத்துள்ளனர். அதுதான் இந்த "கூண்டுக்குள் வானம்" பெட்டி. புத்தகக் கண்காட்சிக்கு வரும் நாம், நமக்கு வாங்கியது போக கைதிகளுக்காகவும் சில புத்தகங்களை வாங்கி இதில் போட்டால் அது ஜெயில் நூலகத்துக்கு செல்லும். எவ்வளவு அற்புதமான சிந்தனை. புது புத்தகம் மட்டும் அல்ல நம் வீட்டில் இருக்கும் பழைய புத்தகங்களை கூட அன்போடு கூண்டுக்குள் வானம் பெட்டியில் போடலாம் என்பது இன்னும் சிறப்பு.
கன்னியாகுமாரி புத்தக கண்காட்சியில் பல புத்தக கடைகளை கண்கொட்டாமல் பார்க்கும் அளவுக்கு எல்லா புத்தகங்களும் குவிந்து கிடக்கிறது. குழந்தைகள் புத்தகம் தெனாலிராமன் கதைகள் விக்கிரமாதித்தன் கதைகள் , வைரமுத்து கவிதைகள் , த்ரில் கதை மன்னன் ராஜேஷ் குமார் நாவல்கள் , கல்கி நாவல்கள் என்று இளையவர் முதல் முதியவர் வரை வாசிக்க பல ஆயிரம் புத்தகங்கள் .
புத்தக கடல்:
கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட புத்தக விற்பனை ஸ்டால்கள் குவிந்து கிடக்கின்றன . எதை அள்ள எதை விட என திக்குமுக்காடும் அளவுக்கு புத்தக கடலுக்குள் மூழ்கி முத்தெடுக்கலாம் .. முத்துப் போன்ற புத்தகங்களை முத்தாய்ப்பாய் தேர்ந்தெடுக்கலாம். உலகில் என்றும் அழியாத செல்வமாக கல்வி உள்ளது. அவற்றை அள்ளித்தரும் புத்தகங்களை நாம் தினமும் வாசிப்பதால் நமது வாழ்க்கை மேம்படும்.
கன்னியாகுமரி மாவட்டம் நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 4-வது புத்தக கண்காட்சி திருவிழா ஏப்ரல் 14 அன்று தமிழ் புத்தாண்டு அன்று இனிதே நாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் தொடங்கியது. இந்த கண்காட்சி வருகிற 24-ந் தேதி வரை காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கிறது.
வசந்த காலங்கள்:
புத்தகங்கள் வாசிப்பு பழக்கம் நம்மை அறிவு சார்ந்தவர்களாக சமூகத்தில் உருவாக்கும். மாணவர்களின் நெருங்கிய நண்பர்களாக புத்தகங்கள் உள்ளன என்று வருங்காலம் வரும் எனில் வசந்த காலங்கள் மீண்டும் வரும்.
{{comments.comment}}