ஆட்டுக்கறி நாட்டுக் கோழி.. ஜல் ஜல் மாட்டு வண்டி.. சிலிர்க்க வைக்கும்.. கிராமத்து வாழ்க்கை!

Apr 30, 2024,05:15 PM IST
-  பொன் லட்சுமி

அந்தக் காலத்தில்.. அப்படின்னு சொன்னவுடனேயே அடடே பூமர் அங்கிள் பூமர் ஆன்ட்டி என்று இந்தக் காலத்து இளசுகள் ஓடுகிறார்கள்.. உண்மையில் அந்தக் காலம் போல இப்ப இருக்கான்னு கேட்டா.. அதுக்கு பதிலே வராது.

நிஜமாவே அந்தக் காலத்தில் கிராமங்களில்  வசதிகள் குறைவு தான் என்றாலும் மகிழ்ச்சிக்கு என்றுமே குறைவில்லை.. வெள்ளந்தியான மனசு கலப்படமில்லாத அன்பு, கள்ளம் கபடமற்ற சிரிப்பு  இவைதான் கிராமங்களின் அடையாளம். ஊருக்குள் அறிமுகம் இல்லாத ஒருவர் வந்து விட முடியாது.. யாராவது வந்து விட்டால்.. உடனே ஊரே கூடி விடும்.. "யாருப்பா நீ.. யாரைப் பார்ககணும்.. அட.. இன்னாரு மகனா நீ.. ஆளை அடையாளம் தெரியலையே.. " அப்படின்னு கூடி நின்று குசலம் விசாரித்து, கையில் கொஞ்சம் மோரைக் கொடுத்து குடிக்க வைத்ததான் நடக்கவே விடுவார்கள்.

ஆனால் இன்றைய நிலைமை ?... கிராமங்களே மாறிப் போயிருச்சுங்க.. இன்று எல்லா வசதி வாய்ப்பு வந்த பிறகும் மனம் தேடுவது என்னவோ நாம் இழந்த  பழைய சந்தோஷமான நாட்களை தான். இன்றைய தலைமுறையினர் அனுபவிக்காத வாழ்க்கை கிராமத்து வாழ்க்கை.. கிராமத்து வாழ்க்கை சொர்க்கத்துக்கு சமம் ஆனால் நகரத்து வாழ்க்கை?

மறந்து போன அம்மிக்கல் ஆட்டுக்கல் :-



அன்று  கிராமத்தில்  எல்லோரது வீட்டிலும் அத்தியாவசிய பொருள்களாக இருந்தது அம்மிக்கல் ஆட்டுக்கல், உரல் உலக்கை போன்றவை தான்.. ஆடம்பரம் இல்லாத நாட்களில்  நோய்கள் என்று எதுவுமே இல்லை ஆனால் இன்று தெருவுக்குத் தெரு மருத்துவமனை அதிகமாக இருக்கிறது... காரணம் நாம் மறந்து போன இந்தப் பொருள்களால் தான்...

இன்று தோசை இட்லி வேண்டுமென்றால் உடனடியாக ரெடிமேட் மாவு வாங்குகிறோம். ஆனால் அன்று பொங்கல் தீபாவளி கோவில் கொடை போன்ற நாட்களில் தான் தோசை இட்லியை கண்ணில் பார்க்கலாம். அதுவும் ஆட்டுக்களில் மாவு ஆட்டி செய்யும்போது அவ்வளவு ருசியாக இருக்கும்.. அதேபோல  குழம்புக்கு மசாலா அம்மி கல்லில் அரைத்தால் அவ்வளவு ருசியாக இருக்கும்... ருசிக்காக மட்டுமல்லாது ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயன்பட்டது.. 

ஆனால் இன்றைய தலைமுறையினர்  ஆடம்பரம் மோகம் கொண்டு நேரத்தை சுருக்குவதற்காக மிக்சி கிரைண்டர் போன்ற மின் சாதனங்களை உபயோகப்படுத்துகிறார்கள். இதனால் ருசியும் கிடைப்பதில்லை உடம்புக்கு உழைப்பும் கிடைப்பதில்லை... இன்று கிராமத்தில் கூட இந்த பொருட்களை அரிதாக தான் காண முடிகிறது..

குலுக்கை ( குதிர் )  :-



எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைன்னு சொல்லக் கேட்டிருப்போம்.. அதுதான் இந்தக் குதிர் எனப்படும் குலுக்கை. நெல் முதலிய தானியங்களை சேகரித்து வைக்க பயன்படும் ஒருவகையான மண் கலமாகும் இதுதான் அன்று தானே சேகரிப்பு கிடங்கு ... சின்ன சைஸ் முதல் பெரிய சைஸ் வரையிலான குலுக்கைகள் அன்று கிராமத்து வீடுகளில் இருந்தது. கிட்டத்தட்ட நெல்லைப் பாதுகாக்கும் "லாக்கர்" அது.

அன்றைய காலத்தில் குலுக்கை இல்லாத வீடுகளே இல்லை எனும் அளவிற்கு அனைவரது வீட்டிலும்  நெல் கம்பு சோளம் போன்ற தானியங்களை சேகரித்து வைக்க பயன்பட்டதாகும்.. அன்று கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாயம் தான் செய்து வந்தனர். அதில் விளையும் தானியங்களை பூச்சிகள் மற்றும் எலிகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள இந்த குலுக்கைகள் பெரும் அளவில் பயன்பட்டது... பெரிய உருளை வடிவில் மண்ணால் செய்யப்பட்டது. இதன் மேல்பகுதியில் அகன்று இருக்கும் அதன் மூலம் தானியங்களை உள்ளே கொட்டுவார்கள்.  அடியில் சிறு துவாரம் இருக்கும். அதனை துணியை வைத்து அடைத்து விடுவர். பின்பு தேவைப்படும்போது அதன் மூலம் தானியங்களை வெளியே எடுக்கலாம்.

நெல் அறுவடைக்கு பின் அந்த நெல்லை பிரித்து எடுத்து காய வைத்து இந்த குலுக்கையில் சேகரித்து வைப்பார்கள்... தேவைப்படும்போது அந்த துவாரத்தின் மூலம் வெளியே எடுத்துக் கொள்ளலாம்.. இன்று கிராமத்தில் கூட இந்த குலுக்களை பார்க்க முடியவில்லை என்பதே நிசப்தமான உண்மை...

இன்றைய தலைமுறையினருக்கு அரிசியை எப்படி நெல்லிலிருந்து  பிரித்து எடுப்பார்கள் என்பதே தெரியாத அளவிற்கு இருக்கிறார்கள்... அன்றைய காலத்தில் கிராமத்தில் நெல்லை பெரிய விறகு அடுப்பில் பெரிய அண்டாவை வைத்து அவித்து எடுத்து அதை நன்றாக காய வைத்து பின்பு உரலில் போட்டு குத்தி எடுப்பார்கள் அதன் பிறகுதான் அரிசி கிடைக்கும்... அப்படி அவிக்கும் போது வரும் வாசனையை  இன்றைய தலைமுறையினர் யாரும் அனுபவித்திருக்க மாட்டார்கள்...

அவித்து காய வைத்த நெல்லை  உரலில் போட்டு இரு பெண்கள் இரு உலக்கைகள் வைத்து மாற்றி மாற்றி குத்தி எடுப்பார்கள்... அதிலிருந்து கிடைக்கும் உமியை வைத்து  உமி கறி  தயாரித்து பல் விலக்கினார்கள்... அதனால் நம் தாத்தா பாட்டிகளின் பற்கள் வலுவாகவும்  ஆரோக்கியமாக இருந்தது.. ராஜ்கிரணும், நெப்போலியனும் நல்லி எலும்பை நச்சுன்னு கடிச்சு சாப்பிட்ட ரகசியமே இதுதான்.. ! 

ஆனால் இன்று நாகரீகத்தின் காரணமாக இவற்றையெல்லாம் பழையது என்று ஒதுக்கி நம் ஆரோக்கியத்தை நாமே கெடுத்துக் கொள்கிறோம்..

மாட்டு வண்டிகள் :-



எந்த போக்குவரத்து வசதியும் இல்லாத  அன்றைய காலத்தில் அவசர ஊர்தியாக வலம் வந்தது இந்த மாட்டு வண்டி தான்... பக்கத்து ஊரில் திருவிழா காண வண்டி கட்டிக்கொண்டு குடும்பமாக இந்த மாட்டு வண்டியில் தான் செல்வார்கள். இரவு நேரத்தில் அந்த வண்டியில் தான் படுப்பார்கள்...அதுபோக  திருமணத்தில் பெண் வீட்டாரும்   சரி மாப்பிள்ளை வீட்டாரும்  சரி  சலங்கை கட்டிய மாட்டு வண்டியில் தான் வந்து இறங்குவார்கள்... தோட்டத்தில் விளைந்த தானியங்களை பக்கத்து ஊரு சந்தைக்கு கொண்டு விற்பதற்காக இந்த மாட்டு வண்டியில் தான் செல்வார்கள்... வயலில்  இரண்டு காளை மாடுகளை கட்டி தான் ஏர் உழுவார்கள்..

இன்று  கௌரவத்தின் அடையாளமாக எல்லோரது  வீட்டிலும் கார் பைக் என்று இருப்பது போல அன்று  கிராமத்தில் மாட்டு வண்டி தான் இருந்தது... அதிலும் வில்லு வண்டி என்று அழைக்கப்படும் பெரிய மாட்டு வண்டி ஜமீன்தாரர்கள் மிராசுதாரர்கள் போன்ற செல்வந்தர்கள் வீட்டில் தான் இருக்கும்... கோவில் திருவிழா அல்லது நெடுந்தூர பயணம் செய்பவர்கள் மூங்கில் குச்சியை வில்லாக அமைத்து கூடாரம் போல் அமைத்துக் கொள்வார்கள் மழை அடித்தாலும் வெயில் அடித்தாலும் எந்த பிரச்சனையும் வராது.. வண்டிக்குள் வைக்கோலை பரப்பி அதன் மீது போர்வையை விரித்து  குடும்பத்தினர்கள் அமர்ந்து கொள்வார்கள். 

இரவு பயணத்திற்கு வழிகாட்ட  வண்டிக்கு அடியில் ஒரு அரிக்கேன் விளக்கை தொங்க விட்டிருப்பார்கள்.. பல வீடுகளில் வண்டி மாடுகளை குலதெய்வமாகவே வணங்கினர். ஆனால் இன்றைய காலத்தில் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லாத மாட்டு வண்டிகளை மக்கள் மறந்து விட்டார்கள் என்பது ஒரு துயரம் தான்.. இன்றைய காலகட்டத்தில் புதிய ரக கார்கள், கனரக வாகனங்கள், பைக்குகள்  இவற்றிலிருந்து வரும் புகையினால் சுற்றுச்சூழலுக்கு பெறும் பாதிப்பு தான் ஏற்படுகிறது... இனி வரும் நம் வருங்கால தலைமுறையினர் பொருட்காட்சியில் தான் இந்த மாட்டு வண்டிகளை காண வேண்டி வரும் என்ற நிலையில் தான் நாம் இருக்கிறோம்..

ஆட்டுக் கறி விருந்து :-



முன்பெல்லாம் கறி  குழம்பு என்றாலே அது ஆட்டுக்கறி தான்... அதுவும்   தீபாவளி, பொங்கல், கோவில் கொடை போன்ற ஏதாவது விசேஷ நாள் மட்டும் தான் எடுப்பார்கள்.. காலையில் ஐந்து மணிக்கே ஆட்டை உரிக்க  தொடங்கி விடுவார்கள் .. கறி வாங்குவதற்காக தூக்குவாளியை  கொண்டு சென்று வாங்கி வர வேண்டும்.. அதுபோக கோவில் கொடைக்கு கிடா நேர்ந்து விடுவார்கள்.  சொந்த பந்தங்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சமைத்து சாப்பிடும் போது கிடைத்த சந்தோசம் இன்று  கிடைப்பதில்லை.. அதில் மீதம் இருக்கும் கறியில் உப்பு மிளகு  மஞ்சள் போட்டு நன்றாக காய வைத்து கொடிக்கறியாக பயன்படுத்துவார்கள்...

அதற்கு அடுத்தபடியாக கறி  என்றால் நாட்டுக்கோழி தான்... கிராமத்தில் பெரும்பாலும் அனைவரது வீட்டிலும்  நாட்டுக்கோழி  வளர்ப்பார்கள்.  உடம்பு சரியில்லாத நேரத்தில் நாட்டுக்கோழி சூப் வைத்து கொடுப்பார்கள்... இன்று கிராமத்தில் கூட ஒரு சில வீட்டில் தான்  நாட்டுக்கோழியை காண முடிகிறது.. இன்று தெருவுக்கு தெரு பிராய்லர் கோழி  கிடைக்கிறது. இதை சாப்பிடுவதால் உடம்புக்கு கேடு என்று தெரிந்தும் அதைத்தான் நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்..

ஆடு, மாடு வளர்ப்பவர்களை கேவலமாக பார்க்கும் சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம்.. அன்று கிராமத்தில் பெரும்பாலான வீடுகளில்  நாட்டு மாடு வளர்த்தார்கள். அதன் மூலம்  சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான பால் தயிர் மோர் என்று அனைத்துமே கிடைத்தது. அதை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்...  ஆனால்  இன்று நாட்டு மாடு இனமே அருகி விட்டது.. அதற்கு பதிலாக ஜெர்சி மாட்டுப்பால், பாக்கெட் பால் தான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதில் உடம்பின் ஆரோக்கியம்தான் கெடுகிறது.. நகரத்தில் வாழ்பவர்களுக்கு கூட இந்த பொருட்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது... ஆனால் கிராமத்தில் வாழ்பவர்கள் கூட நாகரிக மோகம் கொண்டு பழைய ஆரோக்கியமான  வாழ்க்கையை கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது வருத்தமான விஷயம்தான்...

மறக்க முடியாத பல சுகமான நினைவுகளை சுமந்து செல்வது தான் இந்த கிராமத்து   வாழ்க்கை... அன்றைய  அழகான கிராமத்து வாழ்க்கை கலைந்து போனதோடு  இன்றைய நவீன கால வாழ்க்கையில் நமது உடல் ஆரோக்கியமும் குன்றி, நமது ஆயுளும் குறைந்துவிட்டது  என்பது மிகவும் வருத்தமான விஷயம்.. இதை இந்த கால தலை முறையினருக்கு  சொன்னால் புரியாது வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும்.... ஆனால் வாழ்வதற்குத்தான் ஆரோக்கியமான கிராமங்கள் குறைந்து கொண்டே வருகின்றன.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்