திருவனந்தபுரம்: கேரளா என்ற மாநிலத்தின் பெயரை கேரளம் என்று மாற்றக் கோரும் தீர்மானத்தை கேரள மாநில சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது பினராயி விஜயன் அரசு. மத்திய அரசு கேரளாவின் பெயரை கேரளம் என்று மாற்றுமாறு இந்த தீர்மானத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவின் பல்வேறு பெயர்களும் உருமாற்றமாகி விட்டன. குறிப்பாக சென்னை என்ற பெயரை மெட்ராஸ் என்று மாற்றிச் சொன்னார்கள். மதுரை என்ற பெயரை ஆங்கிலத்தில் மெஜூரா என்று மாற்றி விட்டார்கள். இதுபோல பல்வேறு பெயர் மாற்றங்கள் நடந்து உண்மையானே பெயரே பலருக்குத் தெரியாமல் போய் விட்டது.
இந்த நிலையில் கேரள மாநிலத்தில் அந்த மாநிலத்தின் பெயரை கேரளா என்பதிலிருந்து கேரளம் என்று மாற்றும் தீர்மானத்தை அந்த மாநில அரசு கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது. கேரளம் என்ற பெயர் மாற்றத் தீர்மானம் புதன்கிழமையன்று மாநில சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
விதி எண் 118ன் கீழ் முதல்வர் பினராயி விஜயன் இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்தார். மத்திய அரசு உடனடியாக மாநிலத்தின் பெயரை கேரளம் என்று மாற்றுமாறும் அவர் அப்போது கோரிக்கை விடுத்தார்.
தீர்மான விவரம்:
மலையாளத்தில் நமது மாநிலத்தின் பெயர் கேரளம் என்பதாகும். 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி மொழிவாரி மாநிலங்கள் பிரிவினை நடந்தது. அப்போது கேரளா பிறந்தது. மலையாள மொழி பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளை ஒருங்கிணைத்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வந்தது. அப்படி உருவாக்கப்பட்டபோது நமது மாநிலத்தின் பெயரை கேரளா என்று தவறாக உருவாக்கி விட்டனர்.
அரசியல் சாசன விதி 3ன் கீழ் மாநிலத்தின் பெயரை கேரளம் என்று மாற்ற வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம். இதுதொடர்பாக விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். மேலும், இந்திய அரசியல்சாசனத்தின் 8வது அட்டவணையில் இடம் பெற்றுள்ள அனைத்து மொழிகளிலும் கேரளம் என்ற பெயரே இடம் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம் என்று அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே பாண்டிச்சேரி என்ற பெயர் புதுச்சேரி என்று அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டுள்ளது என்பது நினைவிருக்கலாம்.
{{comments.comment}}