"புத்துணர்ச்சியோடும்.. பரவசத்தோடும் இருக்கிறேன்.. எனக்கு இது ஸ்பெஷல்"..நெகிழ்கிறார் ஆனந்தி!

Feb 08, 2024,05:26 PM IST

சென்னை:  "மங்கை"திரைப் படம் தனக்கு மிகவும் ஸ்பெஷலானது என்று அதில் நாயகியாக நடித்துள்ள  கயல் ஆனந்தி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


தமிழில் வெற்றிமாறன் தயாரிப்பில் பொறியாளன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆனந்தி. பின்னர் கயல் படத்தில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் பிரபலமானவர். இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் கயல் ஆனந்தி என அழைக்கப்பட்டார். தற்போது வரை இவர் பெயர் கயல் ஆனந்தி என்றே நீடித்து வருகிறது. 


இதனைத் தொடர்ந்து பரியேறும் பெருமாள், திரிஷா இல்லனா நயன்தாரா, போன்ற படங்களில் நடித்ததன் பேசப்பட்டவர். கடந்த 2021 ஆம் ஆண்டு சாக்ரடிஸ் என்பதை என்பவரை திருமணம் செய்து கொண்டார். நீண்ட இடைவெளிக்குப் பின்பு தற்போது தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து மங்கை படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக  வலம் வருகிறார்


ஜே எம் எஸ் பிக்சர்ஸ் சார்பில், ஏ.ஆர் ஜாபர் ஜாதிக் தயாரித்துள்ள படம் மங்கை. குபேரன் காமாட்சி இயக்கத்தில், கயல் நடிகை ஆனந்தி இப் படத்தில் நடித்துள்ளார். இதில் ஆனந்தி, துஷி, பிக் பாஸ் புகழ் சிவின், ராம்ஸ், ஆதித்யா கதிர், கவி பாரதி, மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தீசன் இசையமைத்துள்ளார்.


இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் ஆர்யா, இயக்குனர் பா. ரஞ்சித் ஆகியோர் இணையதளத்தில் வெளியிட்டனர். இந்நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் பல முக்கிய திரை கலைஞர்கள் கலந்து கொண்டனர்.


இயக்குநர் குபேந்திரன் காமாட்சி:




என் மனைவிக்கு நன்றி. ஏனென்றால் பதினைந்து வருடமாக நான் இந்த இடத்திற்கு வர வேண்டும் என்று என்னை விட அதிகமாக விரும்பியவர், உழைத்தவர், கஷ்டம் அனுபவித்தவர் அவர். என் கனவை நனவாக்கிய தயாரிப்பாளர் ஜாஃபர் அவர்களுக்கு நன்றி. ஜே எஸ் எம் பிக்சர்ஸ் என்றால் ஜாஃபர், சலீம், மைதீன் மூவரும் சகோதரர்கள். அவர்களை ஒன்றாகப் பார்க்கும் போது ஒரு பாசிட்டிவிட்டி கிடைக்கும். அவர்கள் மூவருக்கும் என் வாழ்நாள் முழுவதற்குமான அன்பும் நன்றியும். பிறகு என் உடன்பிறவா சகோதரர் கார்த்திக் துரை சாருக்கு நன்றி. 


இன்று நான் இந்த இடத்தில் நிற்பதற்கு மிக முக்கிய காரணம் கார்த்திக் தான், படப்பிடிப்புத் தளத்தில் பல்வேறு பிரச்சனைகளை எங்களுக்காக சமாளித்தார். சினிமாத்தனம் இல்லாமல் பழக் கூடியவர் கார்த்திக் சார். ஆனந்தி மேடத்திற்கு நன்றி. இந்த கதாபாத்திரம் ஆனந்தி நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறியது ஜாஃபர் சார் தான். கதையைக் கேட்டுவிட்டு ஆனந்தி மேடம் 2 நிமிடம் யோசித்தார், பிறகு இப்படத்தில் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று கூறினார். அவர் இல்லை என்றால் இப்படம் இந்த அளவிற்கு வந்திருக்காது, மிகவும் சின்சியரான ஆர்டிஸ்ட். 


சிவின் மேடம் நடித்த கதாபாத்திரம் பத்து நிமிடங்கள் வரும், ஆனால் இந்த கதைக்கு மிகவும் முக்கியமான கதாபாத்திரம். 'லவ் டுடே' ரீலிசுக்குப் பின்னர் ரொம்பவே பிஸியாக இருந்தாலும் தேதி ஒதுக்கி நடித்துக் கொடுத்த கதிருக்கு நன்றி. துஷ்யந்த் நல்ல நடிகர், நல்ல டிரைவர், ஏனென்றால் மலைப்பகுதியில் கார் ஓட்டுவது போல் பல காட்சிகள் இருந்தது. சைலண்டாக இருந்து காட்சிகளில் நடிப்பால் எமோட் செய்வார். கவிதா பாரதி சார் மிகவும் உதவியாக இருந்தார். அவர் ஒரு இயக்குநர் என்பதால் பல ஐடியாக்கள் கொடுத்து உதவினார்.


எங்கள் நடன இயக்குநர் ராதிகா மாஸ்டருக்கு நன்றி. தீசன் இசையமைத்திருக்கிறார். நான்கு பாடல்களும் அருமையாக வந்திருக்கின்றன. மிகச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்து கொடுத்த எஸ்.ஜே. ஸ்டார் சாருக்கு நன்றி. எடிட்டர் பார்த்திபன் ஆண்டனிக்கு நன்றி. இணை இயக்குநர் விக்ரம் ஆரம்பத்தில் இருந்து என்னுடனே இருக்கிறார். அவருக்கு நன்றி. இப்படம் கருத்து சொல்கிற, பெண்ணியம் பேசுகின்ற படம் என்று இல்லை. இது எளிய, நேர்மையான முயற்சி. இன்னும் சொல்லப் போனால் இது ஆண்களுக்கான படம். வயது வந்த எதிர்பாலின ஈர்ப்பு இருக்கிற ஆண்கள், பெண்கள் இருவரும் பார்க்க வேண்டிய படம். பத்திரிகை நண்பர்கள் எப்போதும் நல்ல கண்டண்ட் உள்ள திரைப்படங்களுக்கு ஆதரவு தருவார்கள், அந்த ஆதரவை எங்களுக்கும் தர வேண்டும் . இதை உரிமையுடனும் அன்புடனும் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் வருகைக்கு நன்றி என கூறினார்.


பிக்பாஸ் புகழ் சிவின்:


பிக்பாஸ் நிகழ்விற்குப் பிறகு இது தான் என் முதல் மேடை. முதலில் கதையைக் கேட்கும் போது எனக்கு மிகுந்த குழப்பம் இருந்தது. ஏனென்றால் என்னதான் எண்டர்டெயின்மெண்ட், பிசினஸ் என்று இருந்தாலும், அதைத் தாண்டி நமக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது என்று நான் நம்புகிறேன், அந்த பொறுப்பு இயக்குநருக்கும் இருந்ததை புரிந்து கொண்டேன். இந்த கதாபாத்திரத்தில் நடித்ததை பெருமையாக நினைக்கிறேன். தயாரிப்பாளர் ஜாஃபர் சாருக்கு நன்றி. கயல் ஆனந்தி ஒரு பர்ஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட், பேசிக் கொண்டே இருப்பார், ஆனால் ஆக்ஷன் என்று சொன்னதும் நடித்து தள்ளிவிடுவார் என்று கூறியுள்ளார்.


இசையமைப்பாளர் தீசன்:




கிடா படம் தான் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. அப்படத்தின் மூலமாகத் தான் இப்பொழுது எனக்கு பிற வாய்ப்புகள் வருகின்றன. கிடா பட டீமுக்கு நன்றி. இதற்கெல்லாம் காரணம் எங்கள் தளபதி கார்த்திக் துரை சார். தான். இயக்குநர் குபேந்திரன் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். அவருடன் பணியாற்றியது மிகவும் சந்தோஷமாக இருந்தது என கூறியுள்ளார்.


நடன இயக்குநர் ராதிகா :


இந்த விழாவை நான் வெற்றி விழாவாகத் தான் கருதுகிறேன். இயக்குநர் குபேந்திரன் சார், தயாரிப்பாளர் ஜாஃபர் ஆகியோருக்கும், இப்படத்திற்குள் என்னை கொண்டு வந்த கார்த்திக் துரை சாருக்கும் நன்றி. இப்படத்தின் பாடல்கள் சூப்பராகவும் சவால் நிறைந்ததாகவும் இருந்தன. இப்படத்தில் வேலை செய்தது ஒரு நல்ல அனுபவம். ஒளிப்பதிவாளர் ஸ்டார் பற்றி பேசியே ஆக வேண்டும். மிக வேகமாக வேலை செய்வார். இன்று தான் அவர் பேசி நான் பார்த்திருக்கேன். இந்த டீம் சிறப்பான டீம். இவர்களின் வெற்றிக்கு என் வாழ்த்துகள் என கூறினார்.


இயக்குநரும் நடிகருமான கவிதா பாரதி :


இந்த நிகழ்விற்கு வந்திருக்கும் அனைவரையும் நான் மங்கை குழுவின் சார்பில் வரவேற்கிறேன். இந்த மேடையில் இயக்குநர் தன் மனைவியைப் பற்றிப் பேசியது ஆச்சரியமான, சந்தோஷமான தருணம். ஒரு இயக்குநர் காத்திருந்தே இயக்குநர் ஆக முடியுமா, இல்லை சினிமாவை விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு சென்று விடுவாரா என்பது அவரின் மனைவியிடம் தான் இருக்கிறது. இப்படம் இயக்குநராக முயற்சிப்பவர்களுக்கும், அவர்களுக்கு ஊக்கமாக இருந்து வரும் மனைவிமார்களுக்கும் சமர்ப்பணம். சாவித்ரி, ஸ்மிதா பட்டேல், நந்திதா தாஸ், அர்ச்சனா வரிசையில் அழுத்தமான கதாபாத்திரத்திற்கு எப்போதும் தயாராக இருப்பவர் ஆனந்தி என்று கூறியுள்ளார்.


நடிகர் ஆதித்யா கதிர்;


ஜாஃபர் சார், சலீம் சார் மற்றும் மைதீன் சார் மூவரையும் பார்க்கும் போது சமுத்திரம் படத்தில் சரத்குமார் சாரை அண்ணன் தம்பிகளுடன் பார்ப்பது போல் இருக்கும். எங்கள் அனைவரிடமும் ஜாலியாகப் பேசுவார்கள். இப்படம் சிறப்பாக வர என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருப்பார்கள். ஒரு இயக்குநரின் 12 வருட கனவை நனவாக்கி இருக்கிறார்கள். அதற்காகவே அவர்களுக்கு நன்றி. எங்கள் இயக்குநர் குபேந்திரன் சார் இப்படத்தின் மூலம் வெற்றி பெற்றிருக்கிறார். கண்டிப்பாக அவர் மிகப்பெரிய இடத்திற்கு செல்வார்.


கார்த்திக் துரை சார் சிவன் கோவில் நந்தி மாதிரி, வாழ்வில் பிறரின் தரத்தை உயர்த்தி மகிழ்ச்சி கொள்பவர். ஆனந்தி நடித்த 'பரியேறும் பெருமாள்' படத்தை நான் அவருக்காகவே பத்து முறை பார்த்திருக்கிறேன். டப்பிங்கில் கூட எனக்காக சில நேரங்களில் விட்டுக் கொடுத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் பேசவே மாட்டார். ஆனால் அவரின் ப்ரேம்கள் பேசும். இசையமைப்பாளர் சிறப்பான பாடல்களை கொடுத்திருக்கிறார். அவருக்கும் பிற தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. நிகில் முருகன் சார் போல் ஒரு கடினமான உழைப்பாளியை பார்த்ததே இல்லை. அனைவருக்கும் நன்றி என கூறினார்.


நாயகன் துஷ்யந்த்:


எல்லோருக்கும் வணக்கம். பொதுவாக நான் நிறைய பேசமாட்டேன். என் குருநாதர் சசிக்குமார் சாருக்கு நன்றி. ஈசன் படத்தில் அவர் என்னை அறிமுகப்படுத்தவில்லை என்றால் நான் இன்று இங்கு இல்லை. இப்படத்தின் படப்பிடிப்பை ஒரு நாயை வைத்துத் தான் துவங்கினோம்,. காரில் இரண்டு கேமராக்களை மாட்டி இருப்பார்கள். இதையும் பார்க்க வேண்டும், ரோட்டையும் பார்த்து கார் ஓட்ட வேண்டும். இதில் டயலாக்கை நினைவில் கொள்ள வேண்டும். உடன் நடிக்கும் நபர்களின் ரியாக்ஷன்களையும் கவனிக்க வேண்டும். இதை எல்லாம் கவனத்தில் கொண்டு நடித்த அனுபவம் சிறப்பாக இருந்தது. இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த அனைவருக்கும் நன்றி என கூறினார்.


தயாரிப்பாளர் ஜாஃபர்:


அனைவருக்கும் வணக்கம். அமீர் அண்ணாவின் 'இறைவன் மிகப்பெரியவன்' படத்தின் மூலம் எங்கள் பயணம் துவங்கியது. ‘மங்கை’ எப்படி தொடங்கியது என்றால், குபேந்திரன் சார் முழு மனதுடன் எங்களோடு தொடர்பில் இருந்தார். அவரிடம் லோக்கேஷன் பார்த்துவிட்டு வரச் சொல்லி அனுப்பினோம். ஒரு வாரம் நேரம் கொடுத்தோம். ஆனால் மூன்று நாட்களில் முடித்துவிட்டு வந்துவிட்டார். அந்த டெடிகேஷன் தான் இன்று அவரை இயக்குநராக மாற்றி இருக்கிறது. இயக்குநரும் தயாரிப்பாளரும் நல்ல புரிதலுடன் இருந்தால் சினிமாவில் எந்தப் பிரச்சனையும் வராது. மார்ச் மாதம் வெளியிட முடிவு செய்திருக்கிறோம். அதற்குப் பின்னர் 'இந்திரா' திரைப்படம் வரிசையில் இருக்கிறது என்று கூறினார்.


நடிகை ஆனந்தி:




மங்கை படத்தின் டிரைலர் வெளியீட்டில் நான் மிகவும் சந்தோஷமாகவும், புத்துணர்ச்சியோடும் பரவசத்துடனும் இருக்கிறேன். குபேந்திரன் சாரிடம் கதை பற்றி எதுவும் தெரியாமல் தான் கேட்டேன். கதையை கேட்டதும் கண்டிப்பாக இப்படத்தை தவறவிடக் கூடாது என்று நினைத்தேன். 


இப்படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ஏனென்றால் சில படங்கள் தான் நடிகர் நடிகைகளுக்கு பெயர் வாங்கிக் கொடுக்கும். இது அந்த மாதிரியான படம். இயக்குநர் எப்போதும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து யோசிப்பார், தயாரிப்பாளர் இயக்குநர் தரப்பில் இருந்து யோசிப்பார். இருவருக்குமான புரிதல் பார்க்கும் போதே அழகாக இருக்கும். 


துஷி கார் ஓட்டிக் கொண்டே அழகாக நடித்திருக்கிறார். ராதிகா மாஸ்டர் உடனான போர்ஷன் கலகலப்பாக இருந்தது. எங்கள் குழுவினர் அனைவருக்கும் நன்றி. மிகச் சிறந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். இது கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.  இப்படத்திற்கும் அந்த வரவேற்பை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என கூறினார்.

சமீபத்திய செய்திகள்

news

நாயகன் மீண்டும் வர்றார்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின்.. செம கேட்ச்தான்!

news

CKS rocks.. அஸ்வின், ரச்சின் ரவீந்திரா, டேவன் கான்வே, ராகுல் திரிபாதி.. செம கேம் பிளான்தான்!

news

A R Rahman.. உலகிலேயே மிகவும் சிறந்த மனிதர் ஏ.ஆர். ரஹ்மான்.. உருக்கமான ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு

news

பொங்கல் நாளன்று தேர்வு.. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கிறீர்களா.. மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

இலவச வாக்குறுதிகள்.. மகாராஷ்டிராவை பாஜக வெல்ல முக்கியக் காரணம்.. இன்னொன்று.. பலவீனமான காங். கூட்டணி!

news

இந்தியாவில் எப்படி ஓட்டுக்களை எண்ணுறாங்க பாருங்க.. அமெரிக்க மானத்தை.. முடிச்சு விட்ட எலான் மஸ்க்!

news

IPL Auction 2025.. ஐபிஎல் மெகா ஏலம்.. திக் திக் காத்திருப்பில் 577 வீரர்கள்.. செம கிராக்கி யாருக்கு?

news

அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை.. தெளிவான முடிவெடுத்த தலைவர் ஜானகி அம்மாள்.. ரஜினிகாந்த்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்