டெல்லி: இந்திய அணியின் பெரும்பாலான வீரர்களுக்கு காசு, பணம்தான் முக்கியமாக போய் விட்டது. திமிர்த்தனம் வந்து விட்டது. யாரையும் மதிப்பதில்லை, மூத்தவர்களிடம் ஆலோசனை கேட்பதும் இல்லை என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் மிகக் காட்டமாக சாடியுள்ளார்.
சமீபத்தில் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரும் இப்படித்தான் புலம்பியிருந்தார். அவர் கூறுகையில், யாருமே என்னிடம் ஆலோசனை கேட்பதில்லை. ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் விளையாடியபோது அடிக்கடி என்னிடம் பேசுவார்கள். தொடர்ந்து என்னுடன் தொடர்பில் இருப்பார்கள். ஏதாவது பிரச்சினை என்றால் உடனே என்னைத் தொடர்பு கொள்வார்கள்.
நானும் அவர்களிடம் அவர்கள் செய்த தவறு என்ன, அதை எப்படி சரி செய்வது என்று தெளிவுபடுத்துவேன். திருத்திக் கொள்வார்கள். அதில் எனக்கு எந்த ஈகோவும் இருந்ததில்லை. அவர்களிடமும் ஈகோ இருந்ததில்லை. ஆனால் இப்போது அப்படி இல்லை. யாரும் என்னிடம் ஆலோசனை கேட்க வருவதில்லை, பேசுவதில்லை என்று குமுறியிருந்தார் கவாஸ்கர்.
இந்த நிலையில் கவாஸ்கரின் கருத்தை ஆமோதித்து கபில் தேவும் பேசியுள்ளார். இப்போது உள்ள வீரர்கள் தங்கள் மீது மிகவும் நம்பிக்கையுடன் உள்ளனர். அது நல்ல விஷயம்தான். கெட்ட விஷயம் என்னவென்றால் தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்று குருட்டாம்போக்கில் நம்புகின்றனர். அது தவறானது. யாரிடமும் நாம் போய் ஆலோசனை கேட்கத்தேவையில்லை என்று அவர்கள் கருதுகிறார்கள். ஆனால் அனுபவம் வாய்ந்த ஒருவரால் இவர்களுக்கு நிச்சயம் உதவ முடியும் என்பது எனது நம்பிக்கை.
நிறையப் பணம் வருகிறது.. கூடவே திமிர்த்தனமும் வந்து விடுகிறது. எல்லாமே எங்களுக்குத் தெரியும் என்ற மிதப்பு வந்து விடுகிறது. பல வீரர்களுக்கு உதவி செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். கவாஸ்கர் இருக்கிறார். ஏன் அவர்களுடன் இவர்கள் பேசக் கூடாது.. இதில் என்ன ஈகோ இருக்கிறது. அதெல்லாம் தேவையில்லை என்றார் கோபத்துடன்.
உண்மையில் ஐபிஎல் எல்லாம் வந்த பிறகுதான் இந்திய வீரர்கள் மிகப் பெரிய அளவில் வர்த்தகப் பொருளாக மாறி விட்டனர். ஐபிஎல்லில் விலை போகாதவர்களுக்கு கிரிக்கெட் வாழ்க்கையே கூட அஸ்தமித்துப் போய் விடுகிறது. அந்த அளவுக்கு வணிகமயமாகி விட்டது இன்றைய கிரிக்கெட். இந்த நிலையில் கபில் தேவையும், கவாஸ்கரையுமா அவர்கள் தேடுவார்கள்.. அவர்கள் டார்கெட்டே வேற பாஸ்!
{{comments.comment}}