அதிகாலை 3 மணி இருக்கும்.. தொற்றிக் கொண்ட பரபரப்பு.. முதல் பயணத்தின் இனிய அனுபவம்!

May 27, 2024,06:15 PM IST

- சுதாகரி


முதல் அனுபவமும், முதல் பயணமும் எப்போதுமே மறக்க முடியாதுதானே.. அப்படிப்பட்ட ஒரு அனுபவத்தையும், அது கொடுத்த இன்பத்தையும்தான் உங்களோடு இப்போது பகிரப் போகிறேன்.


மே 20 ம் தேதி. மறக்க முடியாத ஒரு இனிய நாள். அன்றைய காலையே வெகு பரபரப்பாக  தோன்றியது. அதிகாலை 3.00 மணிக்கே பரபரப்பு என்னை மட்டுமல்ல. என் வீட்டையே தொற்றிக் கொண்டது.

       

ஏனென்றால் அதுதான் என் வாழ்க்கையில் முதல் முறையாக சதாப்தி ரயிலில் செல்லும் நாள். அது மட்டுமல்ல அன்றைய பரபரப்பிற்கு இன்னொரு காரணமும் உண்டு. அன்றுதான் முதன் முதலாக ஒரு பொது மேடையில் என் பாடல் அரங்கேறப் போகும் நாள். அதெல்லாம் எவ்வளவு பெரிய சந்தோஷம்.. மனசெல்லாம் பறக்கிற மாதிரி அப்படி ஒரு உணர்வு. அப்புறம் என்ன பரபரப்பிற்கு பஞ்சமாகவா இருக்கும்?


அதிகாலை 3.00 மணிக்கு அலாரம் வைத்து, அது அடிப்பதற்கு முன்பாகவே நொடிக்கொரு முறை எழுந்து மணி பார்த்து... அப்பப்பா.. அதுக்குள்ளாகவே, 3 மணியாகி ஒரு வழியாக அலாரமும் அடித்து விட்டது. எல்லா நாளும் அலாரம் என்னவோ நாராசமாக இருக்கும். இன்று அடடா! அடடா! சொர்கத்திற்கு அழைப்பு போலல்லவா இனிமையாக ஒலிக்கிறது?




எழும்போதே ஒரு சிலிர்ப்பு. பின்னே இருக்காதா? ஒரு நிகழ்வு என்றாலே சந்தோஷம்தானே.. அதிலும் நமக்குக் கெளரவம் சேர்க்கும், நம்மை உயர்த்திப் பிடிக்கும் ஒரு விஷயம் நடக்கிறது என்றாலே கூடுதல் உற்சாகமும், குபீர் சந்தோஷமும் கொஞ்சம் ஜாஸ்தியாதானே இருக்கும். இதில் ஒன்றுக்கொன்று இலவசமாய் இரண்டு நிகழ்வுகள்??? அட்ரா சக்கை என்று மனசுக்குள் எனக்கு நானே சபாஷ் போட்டுக் கொண்டேன்.


ஒரு வழியாக எழுந்து குளித்து ஒரு மணிநேரம் முன்பாகவே ரயி்ல் நிலையம் வந்தாயிற்று.  அவ்வளவு அவசரம்!  அடுத்த  பரபரப்பு.. எப்போது 6.30 ஆகும்? மணி பார்த்து பார்த்து கண்கள் பூத்துதான் போயிற்று. "பார்த்து பார்த்துக் கண்கள் பூத்திருந்தேன்.. நீ வருவாய் என" அப்படின்னு பாடாத குறையாக ரயில் பாதையை நோக்கி விழுந்து கிடந்தன எனது கண்கள். ஒரு வழியாக 6.30 மணிக்கு அந்த அற்புத சதாப்தி ரதம் மெதுவாக தலையைக் காண்பிக்க ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லைதான். முதல் விஷயம் என்பதால் அந்த நேரத்தில் நானும் ஒரு குழந்தையாக மாறியிருந்தேன்.. மனசளவில். ரதத்தில் முதல் ஆளாக ஏறி உள்ளே நுழைந்த போது ஆஹா ஆஹா அந்த உணர்வைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.. கொஞ்சம் இருங்க ஆசுவாசமாகிக்கிறேன்.


ஓகே.. இப்ப தொடரலாம்.. எங்கே விட்டேன்? ஆ... ரதத்தில் முதல் ஆளாக ஏறியதில்! இருக்கையைத் தேடி அமர்ந்தாயிற்று. இனி மனசெல்லாம் மத்தாப்புதான்!  ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் பணியாள் ஒருவர் அன்றைய தமிழ் ஆங்கில செய்தித்தாள்களையும் இரண்டு பிஸ்கெட் மற்றும் ஒரு மசாலா டீ பாக்கட்டையும் வெந்நீரையும் கொடுக்க, ஆரம்பித்தது சந்தோஷப் பூக்களின் ஆரவாரம்.


இதற்கு இடையிலேயே என்னைப் போலவே முதல்முறை பயணிக்கும் பயணிகளின் சந்தோஷ ஆரவாரப் பேச்சுகள் நெஞ்சை அள்ளிச் சென்றது. சாதாரண ரயிலில் அடிக்கடி பார்த்துச் செல்லும் ஜன்னலோரக் காட்சிகள் கூட அன்று ஏனோ இன்னும் பல மடங்கு புதுமையாக தோன்றியது ஆச்சரியம்தான். இது மட்டுமா?


வீட்டில் சாப்பிடப் பிடிக்காத உணவுகள். கூட இங்கு தேவாமிர்தமாய் தோன்றியது. எல்லாவற்றிற்கும் காரணம் இந்த மனக்குரங்குதானோ? . . "மனம் ஒரு குரங்கு .. மனித மனித மனம் ஒரு குரங்கு".. அப்படின்னு சும்மாவா பாடினார் கவிஞர்.. ஆயிற்று! இறங்க வேண்டிய கோயமுத்தூர் வந்தாயிற்று. நண்பர் எனக்காக காத்திருந்து அழைத்துச் சென்று பதிவு செய்யப்பட்டிருந்த ஹோட்டல் அறையில் இறக்கியதும் அடுத்த பரபரப்பு இல்லையில்லை பதற்றத்தோடு கூடிய பரபரப்பு இதயத்தில் சிம்மாசனம் இட்டது.


பதற்றம் இருந்தாலும் மனமேனோ ஆனந்த ராகத்தையே பாடியது... என்னதான் சொல்லுங்க மனித மனசுக்கு ஒரு சின்ன சந்தோஷம் கிடைச்சா கூட போதுங்க, அது அடைகிற உற்சாகமும், அது கொடுக்கிற உத்வேகமும் சொல்லில் வடிக்க முடியாதது.. அத்தனை சக்தி அதற்கு இருக்கிறது. சிறிது நேர ஓய்விற்குப் பின் ஒரு வென்னீர்க் குளியல் போட்டு... இந்த வெயிலில் வென்னீர்க் குளியலா என்று நீங்கள் கேட்பது காதில் கேட்கிறது. ஆனாலும் மனது அதைத்தானே கேட்கிறது? சரி. வெந்நீர்க் குளியல் போட்டு குட்டி குட்டியாக தேவதை போல அலங்கரித்துக் கொண்டு (தேவதை என்று மனதில் நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.. அப்படியே "ஒரு தேவதை வந்து விட்டாள்" பாட்டையும் நீங்களே ஒலிக்க விட்டுக்கோங்க) முன்னும் பின்னுமாக கண்ணாடியில் பார்த்து சரி செய்து கொண்டு... புரிகிறது புரிகிறது போதும் உன் அலப்பறை என்று தலையில் கொட்டுவது. நிறுத்திக் கொள்கிறேன்.


டாக்சி பிடித்து அடுத்த பரபரப்பிற்கு அதாவது மேடையில் பாடுவதற்கு வந்தாயிற்று. அது ஒரு சிறிய மாரியம்மன் கோவில்தான். ஆனால் பெயரோ பெரிய மாரியம்மன் கோவில். அம்மன் முகம் அடடா! அடடா!.. பொதுவாக பெண்கள் சும்மாவே அழகு.. அதிலும் அம்மன் அழகைச் சொல்ல வேண்டுமா..  காணக்கிடைக்காத ஒரு பேரழகு. கம்பீரம் சேர்ந்த ஓரழகு. முகத்தில் வழிவது சாந்தமா.. சாத்வீகமா? தெரியவில்லை. கண்களின் ஒளி என்னை ஏதோ செய்தது. இன்று நினைத்தாலும் அந்த அழகில் கிறங்கித்தான் போகிறேன். அம்மனை முதலில் தரிசித்து வந்து அமர்ந்ததும் பிரசாதமாக ஒரு டம்ளர் மோரை ஒரு சிறுவன் கொண்டு வந்து கொடுத்தான். அத்தனை பேர் இருந்த இடத்தில் அவன் என்னைத்தேடி மோர் கொடுத்ததும் அம்மனின் அருள் கிடைத்தாற்போல ஒரு புத்துணர்ச்சி. பதற்றம் தணிந்தாற் போன்ற ஒரு உணர்வு... மனசில் மெதுவாக ஒரு அமைதியும், நிம்மதியும் மெல்லக் குடியேறியது.


நாம பாடகர்கள். அதனால மேடைக்கு போயிடலாம் - குரல் கேட்டதும் என்ன என்று சொல்லத் தெரியாத ஒரு உணர்வு மனதில் குடி கொண்டது. சரி என்று எல்லோருடனும் சேர்ந்து மேடையில் கால் வைத்த அந்தத் தருணம்! அப்பப்பா என்னவென்று சொல்வது? சிலிர்ப்பா? பயமா? பதற்றமா என்னவென்று சொல்லத் தெரியவில்லை. அம்மா! என்று கண்களில் நீர் மட்டுமே வழிந்தது.  பிறர் அறியாமல் அதை துடைத்து அம்மா என்னை வழி நடத்து என்று வணங்கி இருக்கையில் அமர்ந்தேன்.


கூட்டத்தைப் பார்த்து இதயம் படபடக்க அமர்ந்து என் முறை வந்ததும் பாடி முடித்து அவையோரின் விசில் சத்தத்தை வாங்கிய பொழுது என்னமோ சிறந்த பாடகிக்கான தேசிய விருது கிடைத்தாற் போன்று ஒரு மகிழ்ச்சி. அடுத்தடுத்து பாடல்கள் ஒலிக்க, நானும் பாடல்கள் பாட எதுவும் மனதில் நிற்கவில்லை. அந்த அம்மனின் அருளால் பாடல்களைப் பாடி முடித்து, நிகழ்ச்சி நிறைவடைந்ததும் அந்த அழகு அம்மனை மீ்ண்டும் ஒரு முறை தரிசனம் செய்து தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு வந்தது வரை கனவில் மிதப்பது போன்ற உணர்வுதான்!


இன்று வரை நினைத்தாலும் நடந்தது எல்லாம் கனவு போன்றே தோன்றுகிறது. அத்துணை உணர்வுகளையும் மனதில் தேக்கி ஏதோ ஒன்றை சாதித்தது போன்ற பெருமிதத்துடன் சென்னை வந்து சேர்ந்தேன். என்னுடைய இனிய பயணம் ஒரு இன்ப முடிவுக்கு வந்தது... என்னுடைய இந்த  பயணக் கட்டுரையும் தான்.. அனுபவங்கள் புதிது புதிதாக கிடைக்கும்போது பயணங்களுக்கும் முடிவிருக்காது.. வாழ்க்கைப் பயணம் நல்லாத்தாங்க இருக்கு!

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்