Jallikkattu: கம்பீரமாக உயர்ந்து நிற்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம்.. ஏறு தழுவுவோம்..!

Jan 06, 2024,06:33 PM IST

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. சீறிப் பாயவுள்ள காளைகளை எதிர்கொண்டு அடக்கத் துடிக்கும் காளையர் கூட்டம் ஆரவாரமாக காத்திருக்கிறது.. மீண்டும் களம் காண.


இதோ வந்து விட்டது ஜல்லிக்கட்டு.. ஜல்லிக்கட்டு குறித்தும், அலங்காநல்லூர் ஸ்டேடியம் குறித்தும் ஒரு செய்தித் தொகுப்பு.


ஏறு தழுவுதல்.. மஞ்சு விரட்டு.. சல்லிக்கட்டு..


"ஏறு" என்றால் காளை.. காளையைத் தழுவி அதனை அடக்குதல்.. அதனால் அதன் பெயர் ஏறு தழுவுதல். அப்படியானால் மஞ்சு விரட்டு என்று எதற்குப் பெயர் வந்தது.. "மஞ்சி" என்பது காளைகளின் கழுத்தில் கட்டப்படும் கயிறு.. அந்தக் கயிற்றில்தான் காசுகளையும், இன்ன பிற பரிசுப் பொருட்களையும் கட்டி காளைகளின் கழுத்தில் மாட்டியிருப்பார்கள்.. காளைகளை விரட்டிச் சென்று பிடித்து அந்தப் பரிசுகளை எடுக்க வேண்டும்.. இதுவே மஞ்சி விரட்டு.. பின்னாளில் திரிபாகி மஞ்சு விரட்டு என்றானது.




"சல்லி" என்பதுதான் பின்னாளில் "ஜல்லி" என்று திரிந்துள்ளது. சல்லி என்பது காளைகளின் கழுத்தில் கட்டப்படும் பண முடிப்பு, பொருள் முடிப்பு என்று பொருள். காளைகளை அடக்கி அதை அவிழ்க்க வேண்டும்.. காளைகளின் கழுத்தில் கட்டப்பட்ட சல்லி என்பதால்தான்.. இதற்குப் பெயர் சல்லிக்கட்டு. 


ஆதி தமிழர் நிலத்தில்.. முல்லை நிலத்துக்காரர்களுக்குச் சொந்தமான வீர விளையாட்டு. பெண் எடுக்க விரும்பினால்.. முதலில் அவள் வளர்க்கும் காளையை அடக்க வேண்டும். காளையை அடக்கும் காளையர்க்கே அந்தப் பெண்ணுக்கு மண மாலை சூட்டும் தகுதி கிடைக்கும். ஆதி தமிழர்களின் வீரத்தை உரசிப் பார்த்த விளையாட்டுதான் இந்த ஏறு தழுவுதல் எனப்படும் ஜல்லிக்கட்டு


வீர விளையாட்டாக மட்டுமல்லாமல்.. சமயம் சார்ந்த, பண்பாடு சார்ந்த.. நிலம் சார்ந்த.. மக்கள் சார்ந்த மரபு விளையாட்டாகவும் கலந்து கிடந்தது ஜல்லிக்கட்டு. இலக்கியத்திலும் ஏறு தழுவுதல் இடம் பிடித்துள்ளது




பத்துப்பாட்டில் வரும் மலைபடுகடாம்.. ஏறுதழுவுதல் குறித்த குறிப்பை நமக்கு விட்டுச் சென்றுள்ளது.. இரு காளைகள் ஒன்றுடன் ஒன்று பொருதும் காட்சியை அது விவரிக்கிறது.. படிக்கப் படிக்க பிரமிப்பைக் கூட்டும் வரிகள் அவை... இதோ அந்தப் பாடல்.


"இனத்தின் தீர்ந்த துளங்கு இமில் நல் ஏறு

மலைத்  தலை வந்த மரையான் கதழ் விடை

மாறா மைந்தின் ஊறுபடத் தாக்கி

கோவலர் குறவரோடு ஒருங்கு இயைந்து ஆர்ப்ப

வள இதழ்க் குழவியும் குறிஞ்சியும் குழைய நல ஏறு பொரூஉம் கல்லென் கம்பலை"


சிலப்பதிகாரம், கலித்தொகை.. என இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் காணக் கிடக்கிறது ஏறுதழுவுதல் குறித்த குறிப்புகள்


கன்னிகள் மீது கண் வைக்கும் காளையர்கள் எப்படி காளைகளை அடக்கத் துடித்தார்கள் என்பதையும், அப்படி அடக்கிய காளையர்களுக்கு அந்தக் கன்னியர் எப்படிக் கிடைத்தார்கள் என்பதையும் சிலப்பதிகாரம் விரிவாகவே விளக்கிச்  சொல்லியுள்ளது.




பெண்களை அடைவதற்காக நடத்தப்பட்டதாக மட்டுமல்லாமல்.. பல்வேறு சவால்களுக்கும், போட்டிகளுக்கும் கூட ஆதி காலத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது. கலாச்சார பண்பாட்டு விளையாட்டாகவும் இது நடைபெற்றுள்ளது.


அக்காலத்தில் இருந்த ஏறு தழுவுதல் காலப் போக்கில் "ஜல்லிக்கட்டாக" மாறித் திரிபு கண்ட பின்னரும் கூட அதன் வீரியம் குறையவில்லை.. அதனுள் பொதிந்துள்ள பண்பாடும், கலாச்சாரமும், வீரமும் சற்றும் குறையாமல் அப்படியே இருக்கிறது. இப்போதும் இளைஞர்கள்.. எகிறி வரும் காளைகளோடு பொருதுகிறார்கள்.. வீரத்துடன் திமில் பிடித்து தாவி அடக்குகிறார்கள்.. தறி கெட்டு பாய்ந்து வரும் காளைகளை வெறி கொண்டு பிடித்து அடக்கி மடக்குகிறார்கள்... இளைஞர்களின் வீரத்தைப் பறை சாற்றும் வீர விளையாட்டாக இன்றளவும் திகழ்ந்து கொண்டிருக்கிறது ஜல்லிக்கட்டு


இடையில் வந்த பல தடைகள்.. காளைகளையும் சரி, காளையர்களையும் சரி முடக்கி விடவில்லை.. மீண்டும் வீறு கொண்டெழுந்து, சீறிப் பாயத் தொடங்கி விட்டன நமது காளைகள்.. தடைகளைத் தகர்த்து!


தமிழ்நாட்டில் பல ஊர்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில்தான் இது அதிகம் காணப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பல ஊர்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும். அதேபோல சிவகங்கை மாவட்டத்தில் மஞ்சு விரட்டாக இது நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் இது எருது விடும் விழாவாக நடைபெறுகிறது. மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு மிகப் பிரபலமானது.




ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு என்று உச்சநீதிமன்றம் அருமையான தீர்ப்பளித்த வேத்திலேயே பரந்து விரிந்த பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கத்தை நிர்மானிக்க உத்தரவிட்டது தமிழ்நாடு அரசு


தமிழர்களின் பெருமை மிகு அலங்காநல்லூரில்..  ரூ. 44 கோடியில் பிரமாண்டமான.. உலகத் தரத்திலான. நவீன வசதிகளுடன் கூடிய... அசத்தலான கட்டுமானத்தில்.. அழகான ஸ்டேடியம்.. தமிழர்களின் வீர விளையாட்டான.. ஜல்லிக்கட்டுக்கு உருவெடுத்து நிற்கிறது... காங்கேயம் காளை போல கம்பீரமாக!


ஆஹா.. இது ஸ்டேடியமா.. இல்லை அரண்மனையா என்று 

பார்க்கும் விழிகள் பரவசத்தில் படபடக்க

காணும் விழிகள் கட்டடத்திலிருந்து மீளாமல் வீழ்ந்து கிடக்க

வியப்பு மாறாமல் அண்ணாந்து பார்த்து அதிசயிக்கிறது மக்கள் கூட்டம்




காளைகளுடன் காளையர்கள் பொருதும் பிரமாண்ட விளையாட்டுப் பகுதி 

காளைகள் திமில் புடைக்க.. திணவெடுத்து சீறி வரும் வாடி வாசல்

அரண்மனை போன்ற எழிலார்ந்த நுழைவாயில்

நிர்வாக அலுவலகங்கள்

மருத்துவப் பரிசோதனைக்கான அரங்கம்

முதலுதவி மையம்

மீடியாவுக்கான அழகிய கேலரி

காளைகளைப் பதிவு செய்யும் மையம்

உடை மாற்றும் அறைகள்

பொருட்களை வைக்க பிரமாண்ட அறை

ஜல்லிக்கட்டு வரலாறு சொல்லும் மியூசியம்

தற்காலிக சேல்ஸ் கவுண்டர்கள்


இது மட்டுமா.. 


மழை நீர் வடிகால் வசதி

அழகிய நீரூற்று

செயற்கைப் புல்வெளி

50,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

விஐபி காலரி

பிரமாண்ட பார்வையாளர் காலரி


கிட்டத்தட்ட 10,000 பேர் குழுமி இருந்து ஜல்லிக்கட்டைப் பார்த்து ரசிக்கும் வசதியுடன் நிமிர்ந்து நிற்கிறது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஸ்டேடியம்




2022ம் ஆண்டு ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கும் பணிகளுக்கு திட்டமிடப்பட்டது. அரசுக்குச் சொந்தமான நிலம், கீழக்கரை பகுதியில் இருக்கவே அந்த இடத்தையே முடிவு செய்து அடிக்கல் நாட்டு விழா கோலாகலமாக நடந்து கட்டுமானப் பணிகள் தொடங்கின.. மின்னல் வேகத்தில் நடந்து வந்த பணிகள் தற்போது முழுமையாக முடிவடந்துள்ளன.. இதோ வந்து விட்டது ஜல்லிக்கட்டு.. அரங்கமும் தயாராகி விட்டது. 


ரோமாபுரியின் ராட்சச கொலீசியத்தைப் பார்த்து பார்த்து வியந்த விழிகள்

ஸ்பெயின் நாட்டின் காளை அடக்கும் போட்டி நடக்கும் பிரமாண்ட அரங்கம் பார்த்து அயர்ந்த விழிகள்

இனி எங்கள் அலங்காநல்லூர் அரங்கத்தையும் அண்ணாந்து பார்க்கும்.. 

கண் மலர்ந்து.. மனம் மயங்கி.. எங்கள் ஜல்லிக்கட்டின் பெருமை பேசும்..

பார்த்துப் பார்த்து மகிழும்.. 

எங்களது கட்டிளங்காளையர்கள் 

வீரத்துடனும், தீரத்துடனும் ஏறு தழுவி.. 

திணவெடுத்த திமில் பிடித்து

திமிறும் காளையை

எகிறி அடக்கும் 

அந்த அசகாய சூரத்தனத்தைப் பார்த்து பார்த்து உலகம் வியக்கும்..!


தமிழர் திருநாளை கம்பீரத்தோடும், கர்வத்தோடும் கொண்டாடி மகிழ்வோம்.. தமிழர்களின் வீர விளையாட்டாம் ஜல்லிக்கட்டை கண்டு ரசிப்போம்!


புகைப்படங்கள்:  மருதுபாண்டிய ஸ்ரீராம்

Watch: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம்

சமீபத்திய செய்திகள்

news

Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்

news

Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?

news

மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்

news

TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!

news

AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!

news

Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?

news

ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

Govt Holidays 2025: ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை.. எந்த மாதத்தில் அதிக லீவு?

அதிகம் பார்க்கும் செய்திகள்