பெங்களூரு: 6 தேர்தல்களில் நான் போட்டியிட்டு வென்றுள்ளேன். ஒரு முறை கூட வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கவில்லை. ஆனால் பாஜக வேட்பாளர் 500, 1000 என்று செலவழித்து என்னை தோற்கடித்து விட்டார் என்று சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு பாஜகவை விட்டு விலகி காங்கிரஸில் சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டர் கூறியுள்ளார்.
லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர்.ஹூப்பள்ளி தார்வாடு மத்திய தொகுதியில் தொடர்ந்து 6 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கர்நாடக முதல்வராகவும் இருந்தவர். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் இவருக்கு பாஜக மேலிடம் சீட் தர மறுத்தது. இதனால் கோபமடைந்த அவர் கட்சியை விட்டு விலகி அதிரடியாக காங்கிரஸில் இணைந்தார்.
அண்ணாமலை போன்ற அனுபவம் இல்லாதவர்களுக்குக் கீழ் தங்களைப் போன்ற சீனியர்கள் பணியாற்ற நிர்ப்பந்திக்கப்பட்டதாக குற்றம் சாட்டியிருந்தார் ஷெட்டர். மேலும் ஹூப்பள்ளி தார்வாட் தொகுதியில் மிகப் பெரிய வெற்றி பெறுவேன் என்றும் அவர் கூறியிருந்தார். இவரது வருகையால் லிங்காயத்து சமூக வாக்குகள் பெருமளவில் காங்கிரஸுக்குக் கிடைக்கும் என்றும் கருதப்பட்டது. அதற்கு பலனும் இருந்தது. லிங்காயத்து சங்கங்கள் காங்கிரஸுக்கு பகிரங்கமாகவே ஆதரவைத் தெரிவித்தன. தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு லிங்காயத்துகள் வாக்குகள் அதிகம் கிடைத்து அபார வெற்றியையும் அக்கட்சி பெற்றது.
ஆனால் ஹுப்பள்ளி தார்வாட் மத்திய தொகுதியில் ஷெட்டர் தோற்றுப் போய்விட்டார். அவரை பாஜக வேட்பாளர் மகேஷ் தெங்கினக்காய் வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த தோல்வி ஷெட்டரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், பண பலத்தால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியும் என்பதை உணர்ந்து கொண்டேன். நான் ஆறு தேர்தல்களில் போட்டியிட்டுள்ளேன். ஆனால் ஒருமுறை கூட காசு கொடுத்ததில்லை.
ஆனால் இங்கு போட்டியிட்ட பாஜக வேட்பாளர், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார். 500 ரூபாய், 1000 ரூபாய் என்று காசைக் கொடுத்து வெற்றியை திசை திருப்பியுள்ளார். நான் தோற்றுப் போயிருக்கலாம். ஆனால் லிங்காயத்து சமூகத்தினரின் வாக்குகள் காங்கிரஸுக்கு முழுமையாக கிடைத்தது. இதனால்தான் கூடுதலாக 20, 25 தொகுதிகள் கிடைத்தன என்றார் ஷெட்டர்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஷெட்டர், காங்கிரஸ் கட்சி 130 முதல் 140 இடங்கள் வரை வெல்லும் என்று கூறியிருந்தார். அவர் கூறியது கிட்டத்தட்ட பலித்துள்ளது. 135 தொகுதிகளை காங்கிரஸ் வென்றுள்ளது. ஆனால் அவர் சொன்ன ஒன்று மட்டும்தான் நடக்காமல் போய்விட்டது.. ஷெட்டர் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெல்வார் என்று அவருக்கு அவரே கணிப்பு கூறியிருந்தார். அது மட்டும் பலிக்காமல் போய் விட்டது.
{{comments.comment}}