- எழுத்தாளர் மாலா மாதவன்
அந்த வீடு இன்னும் சற்று நேரத்தில் கைமாறி விடும். எத்தனை நல்லது கெட்டது பார்த்த வீடு. நாலு பிள்ளைகளின் பிறப்பு, சிரிப்பு, விளையாட்டு, படிப்பு, திருமணம் என படிப்படியாய்ப் பார்த்த வீடு. குடும்பத் தலைவர் இல்லையென்றால் குடும்பமும் இல்லையென்றாகி விடும் போல.
அழுது வீங்கிய கண்களை புரந்தரி அழுந்தத் துடைத்துக் கொண்டாள்.
கணவர் கைலாசம் இருக்கும் வரை ராணியாய் வாழ்ந்தவள். ஒரு வேலை செய்ய விட மாட்டார் அவளை.
“மணி மணியாய்ப் பிள்ளைகளைப் பெற்றிருக்கே புரந்தரி. நாலும் நாலு தூண்களாய் நின்று உன்னைத் தாங்கும்” என்றார் கைலாசம் ஒருமுறை.
“உன்னைன்னு ஏன் சொல்றீங்க மாமா. நம்மைன்னு சொல்லுங்க!” என்பாள் புரந்தரி.
மணிகள் தான் அவர்கள். அதுவும் பெயரில் மட்டும் தான் என்பது புரந்தரிக்கு அவள் கணவன் போனபின் தான் தெரிந்தது.
பெரியவன் ராஜாமணி படிக்கப் போன இடத்தில் ஒருவளைப் பிடித்துத் திருமணம் செய்து கொண்டு அவர்கள் வீட்டோடு மாப்பிள்ளையானான்.
அடுத்தவன் சிகாமணி அண்ணன் காட்டிய வழியில் தானும் ஒரு பெண்ணைப் பார்த்துக் கொண்டு சென்னைக்குச் சென்று விட்டான்.
மூன்றாமவன் முத்துமணி தனக்கென்று ஒரு தொழில் ஏற்படுத்திக் கொண்டு பக்கத்து ஊரில் பெண்டாட்டியுடன் வசிக்கிறான் என்றாலும் அவ்வப்போது வருவான்.
கடைசி மகன் சண்முகமணி படிப்பு படிப்பு என வெளியூர், வெளிநாடு எனச் சென்றவன் அங்கேயே குடும்பத்தை ஏற்படுத்திக் கொண்டான். அந்தத் தகவலை மட்டும் பெற்றோருக்கு அனுப்பினான்.
இப்படிப் பட்ட மணிகளை நான்கு தூண்களெனத் தன் கணவர் சொன்னதை நினைத்து புரந்தரிக்கு அழுகை பீறிட்டது.
“இருந்தாப்ல இருந்தாரு. போயிட்டாரு!” இதுவே அவள் புலம்பலாக இருந்தது.
காஞ்சிபுரத்தில் பேர்பெற்ற விசைத்தறி அவர்களுடையது. பட்டும், பருத்தியும் பாவிக் கிடக்கும். குழித் தறியும் மேசைத் தறியும் இசைபாடிக் கொண்டே இருக்கும்.
கைலாசத்தின் கை ராசிக்கு ஆர்டர்கள் குவியும். அதுவும் பெண்ணுக்குத் திருமணமென்றால் திருமணப் பட்டு அவர் கையால் தான் நெய்ய வேண்டும் என்று தேடி வந்து தந்து விட்டுப் போவார்கள். அந்தப் பெண்ணும் குழந்தை குட்டிகளோடு வளமாய் வாழும். அப்படிப் பட்ட ராசிக்காரர்.
“ஏம்மா! இப்படி அந்த குழித்தறியையே வெறிச்சுப் பார்த்துக்கிட்டு இருந்தா எப்படி? வீட்டை வாங்கறவங்க இதோ வந்துடப் போறாங்க. வீட்டோடு இணைஞ்ச இந்த தறிக் கூடத்தையும் விக்கலாம்னா கேட்க மாட்டேங்கற!” சிகாமணி சப்தம் போட்டான்.
பெரியவனும், கடைசி மகனும் எட்டிக் கூடப் பார்க்க வில்லை. எல்லாச் செலவும் போக வீட்டை வித்த பணத்தை மட்டும் அக்கவுண்டில் போட்டுடு எனச் சிகாமணியிடம் சொல்லி விட்டார்களாம்.
மூன்றாம் மகன் முத்துமணி தன் அப்பாவின் சாவுக்கு வந்து நின்றதோடு சரி. எங்கே அப்பாவுக்குப் பின் அம்மா தனக்கு பாரமாகி விடுவாளோ என்று வருவதை நிறுத்தி விட்டான். இந்த சிகாமணி மட்டும் வீட்டை விற்பதற்காய் வந்து நிற்கிறான்.
“அப்பாரு வைச்ச தறிக்கட்டு ப்பா! அதை ஏன் விக்கறீங்க?”
புரந்தரி மெல்லக் கேட்டாள்.
“விக்காம? யாருக்கு இந்த தொழில் தெரியும் இப்ப? எங்க வாழ்க்கையல்லாம் கம்ப்யூட்டரோட கட்டிக் கிடக்கு. இத வச்சுக்கிட்டு நீயா ஓட்டப் போற?”
“எனக்கு என்னடா தெரியும்? உங்கப்பாரு என்னைய ராணி மாதிரில்ல பார்த்துக்கிட்டாரு.”
புரந்தரி அழ ஆரம்பித்தாள்.
ஆம். அப்படித் தான் கைலாசம் தன் மனைவியைத் தாங்கினார்.
துணியின் அடர்த்திக்கேற்ப அடிமரத்தை அசைத்துக் கொண்டிருந்தார் கைலாசம். அந்தச் சமயம் வந்து நின்ற புரந்தரியை என்னவென்று பார்த்தவர் கண்ணாலயே கேள்வி கேட்டார்.
“எனக்கும் நெசவு சொல்லிக் கொடுங்க மாமா!”
“பொன்னான கையிரண்டும் வலிக்குமே புரந்தரி.”
“ம்க்கும்! நானும் நெசவாளி தான்.. உங்களைப் பார்த்துப் பார்த்து நானும் ஓட்டக் கத்துக்கிட்டேன். என்ன இந்த நுணுக்கம் தான் பிடிபட மாட்டேங்குது.”
அலுத்தாற்போல் குரல் கொடுத்தாள் அவள்.
“நம் நெசவு தான் நாலு மணிகளாய்ப் பெருகிக் கிடக்கே புரந்தரி.. அதைக் கட்டிக் காப்பாத்தவே உனக்கு நேரம் போதலை. உனக்கு என்ன கவலை? நானிருக்கேன் உன்னைப் பார்த்துக்க. நீ ராணி மாதிரி போய் உட்காரு பேசாம!” என்றார்.
“அப்படியாப் பட்ட மனுஷன் இப்படி ஒண்ணுமே சொல்லிக் கொடுக்காமப் போயிட்டாரே!” பிலாக்கணம் வைத்தாள் புரந்தரி.
“உஷ்! அம்மா! அவங்க வந்திட்டாங்க பாரு. கம்முன்னு இரு!” என்ற சிகாமணி வீடு கைமாறி பணமும் அவரவர் அக்கவுண்டில் வந்து விழும் வரை புரந்தரியைப் பேச விட வில்லை.
“இந்த தறிக் கூடம் விலைக்காங்க?”
கேள்வி எழுந்ததும் பொங்கி எழுந்தாள் புரந்தரி.
“இல்ல.. இல்ல.. இது என் புருஷன் ஆசையாசையாய் வச்ச தறி. இத யாருக்கும் கொடுக்க மாட்டேன்!” வீறிட்டாள்.
“இப்ப நான் கிளம்பிருவேன் சார். மெதுவா அம்மாட்ட வந்து கேட்டுக்கங்க. பத்துக்குப் பத்து இருக்கற இந்த தறிக்கூடம் பின்கட்டா இருக்கறதால இத விக்கல.. அம்மாவுக்குன்னு விட்டு வச்சிருக்கு. அதுல கிடக்கற தறியையெல்லாம் வேணா ஒரு விலை போட்டு எடுத்துக்கங்க! இது அம்மாவுக்குத் தெரிய வேணாம்.”
சிகாமணி சொன்ன போது வந்தவருக்குச் சுருக்கென்றது.
அம்மாவுக்குத் தெரிய வேணாமா? அம்மாவுக்காக இந்த பத்துக்குப் பத்தடி இடத்தை விடறாங்களா? அப்ப எந்தப் பிள்ளையும் இவங்களைக் கூட்டிட்டுப் போயி வச்சுக்கலையா? இவ்வளவு தானா தாய்ப்பாசம்?
தாயில்லாத அவருக்கு புரந்தரி தாயாகத் தெரிந்தாள். சிகாமணி அத்துடன் நிற்க வில்லை. உள்ளே சென்று புரந்தரியின் புடவைகள், நகைகள் எல்லாவற்றையும் நான்கு பேருக்கும் சமமாகப் பங்கு வைத்து எடுத்துக் கொண்டான். மறுநாள் அதிகாலை சொல்லாமல் கொள்ளாமல் ஊரை விட்டுப் போய் விட்டான்.
புரந்தரி விழித்த பொழுது தறிக்கூடம் இசை பாட வில்லை. தாங்கப் பிள்ளையும் இல்லை. வெறித்துப் பார்த்த படி சோறு தண்ணி இல்லாமல் உட்கார்ந்திருந்தாள் அவள்.
“அம்மா! நான் பரந்தாமன். நேத்திக்கு வந்து இந்த தறியைக் கேட்டேனே. உங்க மனசறியாமக் கேட்டுட்டேன். மன்னிச்சுங்கங்க!”
இப்ப எதுக்கு வந்தாய் என்பது போல் ஒரு பார்வை பார்த்தாள் புரந்தரி.
“ஒண்ணுமில்லம்மா. இப்படி தறியையே வெறிச்சுப் பார்த்த படி உட்கார்ந்தா எப்படி? சோறு தண்ணி வேணாமா? இனி உங்க வாழ்வுக்கு வழி என்ன? வந்த உங்க பசங்களும் வாசலோட போயிட்டாங்க. உங்களை வேணா உங்க பசங்களோட வீட்டில் கொண்டு போய் விடவா?”
வேண்டாமெனத் தலையசைத்தாள் புரந்தரி.
“அப்ப எங்க வீட்டுக்கு வந்து என்னோட அம்மாவாய் இருங்க. நான் பார்த்துக்கறேன் உங்களை!” என்றான் பரந்தாமன்.
தன் நிலை தெளிவாய் புரிபட புரந்தரி மெல்லச் சொன்னாள்.
“நான் உங்களுக்கு இதை விக்க முடியாது தான். ஆனா நீங்க இங்க வந்து தறி ஓட்டறீங்களா தம்பி? இத எதையும் எங்கயும் எடுத்துட்டுப் போக வேண்டாமே! எனக்கு இந்த.. இதோட சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கணும். இந்த சத்தம் தான் என் கணவரோட மூச்சுக் காத்து. அது கேட்காம எனக்கு என்னவோ மூச்சடைக்கிறாப்புல இருக்கு!”
கண்ணில் நீர் திரண்டது புரந்தரிக்கு.
“கட்டாயம் மா. ஆனா நீங்க இங்க தங்கணுமே!”
“மூச்சுக் காத்து இங்கிருக்க நான் வேறெங்க தம்பி போயி உயிர் வாழ்வேன். இங்கயே ஒரு மூலையில இருந்துங்கறேன்.”
“அப்ப.. தறிக்கான வாடகையை நீங்க மறுக்காம வாங்கிக்கணும்!” என்றான் பரந்தாமன்.
“இல்ல தம்பி! இத்தனை உசத்தியான இசைப் பாட்டுக்கு யாராவது காசு வாங்குவாங்களா? எனக்கு வேணாம்.!”
“இல்ல.. உங்களுக்கு பணம் வேணும்மா. மருந்து மாத்திரை வாங்கவாவது வேணும். நீங்களும் வந்து தறி ஓட்டுறீங்களா? அதுக்கும் சேர்த்து சம்பளம் போட்டுத் தரேன்.”
சும்மாக் கொடுக்கும் பணத்தை அவள் வாங்க மாட்டாள் என்றறிந்தே பரந்தாமன் சம்பளம் என்ற வார்த்தையை உபயோகித்தான்.
“சம்பளமா? எனக்கா? ஒருகாலத்தில் நான் சம்பாதிக்க ஆசைப்பட்டேன் தம்பி. என் கணவர் தான் உன்னை ராசாத்தியாட்டம் வச்சு அழகு பார்க்க நானிருக்க நீயேன் போய் வேலை செஞ்சு சம்பாதிக்கணும்ன்னு பொன்னா பூவா வச்சு தாங்கினாரு. இன்னிக்கு அவரில்லாம.. சம்பளம்.. தம்பி! என்னோட வீடு, நகை நட்டு, புடவை எல்லாத்தையும் நாலு மகன்களுக்கும் கொடுத்துட்டேன். இதோ கட்டின புடவை ஒண்ணு. அதுக்கு மாத்துத் துணி ஒண்ணு. ஆனா எனக்கே எனக்குன்னு நானே ஒரு நூல் புடவை நெய்யணும்ன்னு ஆசைப் படறேன். அதான் என் கடைசிப் பயணத்துக்குன்னு மனசுல ஆசை வச்சுருக்கேன். அதனால.. “
“சொல்லுங்கம்மா!”
“அதனால எனக்கு வேலைக்குக் கூலியா கொஞ்சம் நூலைக் கொடுத்தீங்கன்னா.. நான் நல்லா நூல் கூட்டுவேன். சாயம் தோய்ப்பேன். இடத்தையும் பார்த்துப்பேன். என்ன தம்பி!”
பரந்தாமனுக்கு தறியைக் கொடுத்ததும் அது இசைபாட ஆரம்பித்ததும் இன்று போல இருக்கிறது. காலம் ஓடி விட்டது. புரந்தரியின் மகன்கள் அந்தர்யாமி ஆகி விட்டார்கள் போலிருக்கிறது. காசு இருக்கும் வரை கழுகு மாதிரி சுற்றியவர்கள் காசு கைக்கு வந்ததும் கைகழுவி விட்டார்கள்.
ஒரு நாள் பரந்தாமன் கேட்டான்.
“புரந்தரிம்மா! நிறைய நூல் சேர்ந்தாச்சு போலவே! புடவை நெய்து தரவா?”
“நான் நானே பண்ணிக்கறேன் தம்பி. அதோ அந்தத் தறி ரொம்பப் பழசாப் போச்சுன்னு நகர்த்தி வச்சுருக்கீங்களே. அதில் என் கணவர் எத்தனை முறை நெய்திருக்கிறார் தெரியுமா? நீங்க கொஞ்சம் சொல்லிக் கொடுத்தீங்கன்னா நான் தறியில் உட்காருவேன்!”
புரந்தரியின் ஆசையைப் பார்த்து மெல்ல அவளுக்குச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தான் பரந்தாமன். கையோடு அவளுக்கு என ஒரு அக்கவுண்ட் ஆரம்பித்து சம்பளப் பணத்தை அதில் போட்டு அவள் செலவுக்கு எடுத்துக் கொள்ளச் செய்தான்.
“ மிதி பலகையை மாற்றி மாற்றி மிதிக்கப் பணி மேலும் கீழும் இறங்க உருளை அசைந்து ஊடும் பாவுமாய் துணி நெய்யப் படும்.”
பொறுமையாய் நுணுக்கங்களை விளக்கினான் பரந்தாமன்.
ஒவ்வொரு நாளும் புரந்தரிக்கு தறியின் இசைப் பாட்டு புதிதாகவே இருந்தது. அவள் நெஞ்சமும் அந்த தாள லயத்துக்கு ஏற்றவாறு லப்டப் என்றது.
“புரந்தரிம்மா! உங்க தறி மேல இருக்கற உத்தரம் இத்து போய்க் கிடக்கு. ஆளை வரச் சொல்லி இருக்கேன். சரி பண்ணிடலாம். இப்ப நான் கொஞ்சம் வெளியில் போயிட்டு வரவா? கூடத்தைப் பார்த்துக்கிறீங்களா?”
தலையை ஆட்டினாள் புரந்தரி. அவள் கவனம் முழுவதும் முடியப் போகும் கடைசிப் பாவின் மேல் இருந்தது. இதோ இன்னும் சில நிமிடத்தில் அவள் ஆசைப்பட்ட நூல் புடவை கிடைத்து விடும். அவளே அவள் கையால் நெய்த சேலை. தறியில் இருந்து விடுவித்து அழகு பார்த்தாள்.
அச்சமயம் இற்றுப் போன உத்தரப் பனைமரம் மளுக்கென முறிந்து நேர்கீழாய் அவள் தலையில் இறங்கியது. செய்தி கேட்டு பரந்தாமன் ஓடி வருவதற்குள் எல்லாம் முடிந்திருந்தது. அவள் ஆசைப் பட்ட படியே அவளுக்காய் அவள் நெய்த நூல்புடவை அவளைக் கடைசியாய் ஒரு முறை போர்த்திக் கொண்டது.
தறி தன் இசையை நிறுத்திக் கொண்டது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பெஞ்சல் புயல்: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரேஷன் கார்டுக்கு ரூ.2000 நிவாரணம் .. முதல்வர் ஸ்டாலின்
உள்நோக்கத்தோடு அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியுள்ளனர்.. அமைச்சர் பி.கே.சேகர்பாபு புகார்
சாத்தனூர் அணை திறப்பு.. குறை கூறும் அதி மேதாவிகளே இதைப் படிங்க.. துரைமுருகன் விரிவான அறிக்கை!
சாத்தனூர் அணை விவகாரம் .. தமிழ்நாடு அரசுக்கு.. டாக்டர் அன்புமணி ராமதாஸின் 7 கேள்விகள்!
புயல் பாதித்த குடும்பங்களை.. தவெக அலுவலகத்திற்கு அழைத்து வந்து.. உதவிகள் வழங்கிய விஜய்
Cooking Tips.. இட்லி, தோசை, சப்பாத்தியுடன் சாப்பிட மிகவும் சுவையான .. கடாய் காளான் கிரேவி!
அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விட்டதே பாதிப்பிற்கு காரணம்: அண்ணாமலை குற்றச்சாட்டு
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட.. தமிழ்நாட்டு மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல்!
கருத்து சுதந்திரம்.. சினிமா விமர்சனங்களை வெளியிட தடை விதிக்க முடியாது... சென்னை ஹைகோர்ட் அதிரடி
{{comments.comment}}