சென்னை: உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு, தமிழ் மொழியின் பெருமைகளை பறைசாற்றும் விதமாக, எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி. உலகம் எங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி என முதல்வர் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஒவ்வொரு நாட்டிலும் நிலையான கல்வி வளர்ச்சிக்கு மொழிகள் இன்றி அமையாதவையாக கருதப்படுகிறது. ஏனெனில் அவரவர் தாய்மொழிகளில் படிக்கும்போது கற்றலின் திறன் மேம்பட்டு புரிதல் உணர்வோடு கல்வியில் சிறந்த விளங்க உறுதுணை புரிகிறது. இதனால் தாய்மொழிகள் கல்வியின் உரிமையை பெற வழிவகை செய்கிறது. அதிலும் கலாச்சார மற்றும் பண்பாடுகளை பாதுகாப்பதில் மொழி முக்கிய பங்கு வகிக்கின்றது. இதன் மூலம் பண்பாடு பழக்கவழக்களின் பழமை மாறாமல் புரிதலோடு சமூகத்தில் நல்ல தொடர்பை ஏற்படுத்துகிறது.
ஒரு நாட்டின் கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கம், கல்வி வளர்ச்சி போன்றவற்றை பாதுகாக்கவும், மொழியின் பன்முகத் தன்மையினை மேம்படுத்தவும் ஒவ்வொரு வருடமும் உலகத் தாய்மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதன் மூலம் தாய் மொழிகளை ஊக்குவிக்கும் நோக்கில் மொழிகளின் சிறப்புகளை அறிந்து கொள்ளவும், அதனை மேம்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று 2025 பிப்ரவரி 21ஆம் தேதி உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் கொண்டாடப்படும் உலக தாய்மொழி தினம் 25-வது வருடம் நிறைவடைந்து வெள்ளி விழாவை எட்டியுள்ளது.
இந்த நிலையில், உலக தாய்மொழி தினமான இன்று தமிழ் மொழியை போற்றும் விதமாக தமிழ்நாட்டில் உலக தாய்மொழி தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக தமிழில் ஆர்வம் கொண்ட தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள், கலைஞர்கள் என அனைவரும் தமிழின் சிறப்பை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் முதல்வர் மு க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழின் பெருமையை வீறு கொண்டு பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் கூறியதாவது,
எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி!
இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம்!
அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி, போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி!
உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி என பதிவிட்டுள்ளார்.
மேலும் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி எழுதிய உலக செம்மொழி மாநாட்டின் மைய நோக்க விளக்க பாடலான பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும்.. தமிழ் வாழிய வாழியவே.. என்பதையும் பதிவிட்டுள்ளார்.
{{comments.comment}}