டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 3வது அமைச்சரவை நேற்று பதவியேற்றுக் கொண்டுள்ள நிலையில் அடுத்து அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்படவுள்ளன. இந்த நிலையில் புதிய அமைச்சரவையில் பல சுவாரஸ்யங்கள் இடம் பெற்றுள்ளன.
பிரதமர் மோடி தலைமையில் அமைந்துள்ள முதல் கூட்டணி அரசு இது. மாநில அளவில் முதல்வராக இருந்தபோதும் சரி, பிரதமராக 2 முறை இருந்தபோதும் சரி, நரேந்திர மோடி தனிப் பெரும்பான்மையுடன்தான் ஆட்சியமைத்தார். இப்போதுதான் முதல் முறையாக அவர் கூட்டணி அரசைமைத்துள்ளார்.
மொத்தம் 81 அமைச்சர்களை நியமிக்க முடியும் என்ற நிலையில் தற்போது பிரதமர் உள்பட 72 பேர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். அதில் இடம் பெற்றுள்ள சில முக்கிய அம்சங்களை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாட்டுக்காரர்கள் 3 பேர்:
- மோடி அமைச்சரவையில் மொத்தம் 3 தமிழ்நாட்டுக்காரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆனால் மூன்று பேருமே தமிழ்நாட்டிலிருந்து எம்பி ஆக இல்லை. எல். முருகன் மத்தியப் பிரதேசம், நிர்மலா சீதாராமன் கர்நாடகா, ஜெய்சங்கர் குஜராத் மாநிலத்திலிருந்து ராஜ்யசபா எம்.பியாக உள்ளனர். இவர்களில் ஜெய்சங்கரும், நிர்மலா சீதாராமனும் இதுவரை எந்தத் தேர்தலிலும் போட்டியிட்டவர்கள் இல்லை. எல். முருகன் லோக்சபா தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றவர்.
- மோடி அமைச்சரவையில் பாஜகவுக்கு 61 அமைச்சர் பதவிகள்.. கூட்டணிக் கட்சிகளுக்கு 11 பதவிகள். இது முதல் கட்ட அமைச்சரவையே. விரைவில் விரிவாக்கப்படும் என்று தெரிகிறது. அதிகபட்சம் 81 அமைச்சர்கள் வரை நியமிக்கப்படலாம். எனவே இன்னும் 9 காலியிடங்கள் உள்ளன. தற்போதைய அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளைப் பொறுத்தவரை தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதாதளம் ஆகியவற்றுக்கு தலா 2 பதவி தரப்பட்டுள்ளது. இதுதவிர மேலும் 7 கட்சிகளுக்கு தலா 1 இடம் தரப்பட்டுள்ளது. மொத்தம் 9 கூட்டணிக் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அஜீத் பவார் தலைமையிலான தேசியவாத கட்சி இன்னும் இடம் பெறவில்லை
மிகப் பெரிய கோடீஸ்வர அமைச்சர்:
- மோடி அமைச்சரவையிலேயே மிகப் பெரிய கோடீஸ்வர அமைச்சர் என்ற பெருமை தெலுங்கு தேசம் கட்சியின் பெம்மசானி சந்திரசேகருக்குக் கிடைத்துள்ளது. டாக்டரான இவரது சொத்து மதிப்பு ரூ. 5700 கோடியாகும். அமைச்சரவையில் மட்டுமல்ல லோக்சபா தேர்தலிலும் கூட மிகப் பெரிய கோடீஸ்வர வேட்பாளர் இவர்தான்.
- மோடியின் அமைச்சரவையில் 2 நடிகர்கள் இடம் பெற்றுள்ளனர். ஒருவர் சிராக் பாஸ்வான்.. இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு நடித்துக் கொண்டிருந்தார். இவர் மறைந்த ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் ஆவார். இன்னொருவர் மலையாள நடிகர் சுரேஷ் கோபி. கேரளாவிலிருந்து வந்துள்ள முதல் பாஜக எம்பி என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் இவர்.
- ஜாதி வரிசையில் பார்த்தால் ஓபிசிக்கு அதிக அளவிலான அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது 27 அமைச்சர்கள். பட்டியல் இன பிரிவினருக்கு 10 அமைச்சர் பதவியும், பழங்குடியினருக்கு 5 பதவிகளும் தரப்பட்டுள்ளது. சிறுபான்மையினருக்கு 5 அமைச்சர் பதவியைத் தந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி, இஸ்லாமியர்களுக்கு ஒரு பதவியும் தரவில்லை.
4 முன்னாள் முதல்வர்கள்:
- வழக்கம் போல உத்தரப் பிரதேசத்துக்கு அதிக அமைச்சர்கள் கிடைத்துள்ளனர். அதாவது 9 அமைச்சர்கள் உ.பியைச் சேர்ந்தவர்கள். அடுத்த இடம் பீகார். அந்த மாநிலத்துக்கு 8 அமைச்சர்கள் கிடைத்துள்ளனர். குஜராத், மகாராஷ்டிரா தலா 6, கர்நாடகா 5, ம.பி., ராஜஸ்தான் தலா 4 அமைச்சர்களைப் பெற்றுள்ளனர். ஆந்திராவுக்கு 3 பேர் கிடைத்துள்ளனர். ஒரு எம்.பியைக் கொடுத்த கேரளாவுக்கு 2 பேரும், ஒரு எம்.பியைக் கூட தராத தமிழ்நாட்டுக்கு ஒரு அமைச்சரும் கிடைத்துள்ளனர்.
- பிரதமர் மோடி அமைச்சரவையில் 4 முன்னாள் முதல்வர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 3 பேர் (ராஜ்நாத் சிங், சிவராஜ் சிங் செளகான், மனோகர் லால் கட்டார்) பாஜகவைச் சேர்ந்தவர்கள். எச்.டி.குமாரரசாமி மட்டும் பாஜக அல்லாத கட்சியின் முன்னாள் முதல்வர் ஆவார். பிரதமர் மோடியே கூட ஒரு முன்னாள் முதல்வர்தான் என்பது இன்னும் சுவாரஸ்யமானது!
{{comments.comment}}