டெல்லி: பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தானியர்களுக்கு விசா ரத்து, எல்லை மூடல், சிந்து நதி நீர்ப் பகிர்வு ஒப்பந்தம் ரத்து ஆகியவை இதில் முக்கியமான சில முடிவுகள்.
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் நாட்டையே பெரும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. குருவியை சுடுவது போல வெறித்தனமாக அப்பாவி சுற்றுலாப் பயணிகளை பாகிஸ்தானிலிருந்து ஊடுறுவிய தீவிரவாதிகள் சுட்டுத் தள்ளியிருப்பது மக்களை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் வைத்து இன்று மாலை பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வாகா - அட்டாரி எல்லை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த எல்லைப் பகுதி வழியாக உரிய ஆவணங்களுடன் இந்தியாவுக்குள் வந்தவர்கள் இதே வழியாக மீண்டும் பாகிஸ்தான் திரும்ப கேட்டுக் கொள்ளப்படுகிறது. மே 1ம் தேதிக்குள் அவர்கள் வெளியேறி விட வேண்டும்.
பாகிஸ்தானியர்களுக்கு விசா தருவதையும் நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தரப்பட்டுள்ள விசாக்களும் ரத்து செய்யப்படுகின்றன. அவர்கள் நாட்டை விட்டு வெளியேற 48 மணி நேரம் அவகாசம் வழங்கப்படுகிறது. பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்குள் நடமாட அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு, ராணுவ ஆலோசனை அதிகாரிகள் அனைவரும் ஒரே வாரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை 56 லிருந்து 30 ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை மே 1ம் தேதி முதல் அமலுக்கு வரும்.
அதேபோல இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் உள்ள பாதுகாப்புத்துறை, ராணுவ ஆலோசகர்களை இந்தியாவும் திரும்பப் பெறுகிறது. இந்திய மற்றும் பாகிஸ்தான் துணைத் தூதரகங்களில் உள்ள இந்தப் பதவிகளும் ரத்து செய்யப்படுகின்றன.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சிந்து நதி நீர்ப் பகிர்வு ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.
முதல் கட்ட விசாரணையில் நடந்த சம்பவத்திற்கு எல்லைக்கு அப்பால் உள்ள தொடர்புகள் கண்டறியப்பட்டுள்ளன. பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்களும், ஒரே நேபாள நாட்டவரும் பலியாகியுள்ளனர். ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு வெற்றிகரமாக தேர்தல் நடத்தப்பட்டதால்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டோர், அதற்கான சதித் திட்டத்தைத் தீட்டியோர் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவர் என்று கூறினார் மிஸ்ரி.
நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்?
இதற்கிடையே பஹல்காம் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளுக்கு விளக்கம் அளிக்க மத்திய அரசு நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அக்கூட்டத்தில் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு விளக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபக்கம், முப்படைகளும் தயார் நிலையில் இருக்குமாறு மத்திய அரசு முப்படைத் தளபதிகளையும் அறிவுறுத்தியுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
வாகா எல்லையை மூட மத்திய அரசு உத்தரவு.. பாகிஸ்தானுடனான சிந்து நதி ஒப்பந்தம் அதிரடி ரத்து!
பஹல்காம் தாக்குதலுக்கு விரைவில் சரியான பதிலடி தரப்படும்.. அமைச்சர் ராஜ்நாத் சிங்
சையத் ஆதில் ஹுசைன் ஷா.. மக்களைக் காக்க தீவிரவாதியுடன் மோதி.. உயிர் நீத்த குதிரைப்பாகன்!
பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும்: விசிக தலைவர் திருமாவளவன்!
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில்.. உயிரிழந்தவர்களுக்கு இன்றைய ஐபிஎல் போட்டியில் அஞ்சலி..!
இந்திய உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது..?காஷ்மீர் தாக்குதலுக்கு சீமான் கண்டனம்..!
காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு.. மத்திய அமைச்சர் அமித்ஷா அஞ்சலி!
அமலாக்கத் துறையின் டாஸ்மாக் ரெய்டுக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு தள்ளுபடி!
Pahalgam Terror Attack: தேனிலவு சென்ற இடத்தில்.. உயிரிழந்த கடற்படை அதிகாரி..!
{{comments.comment}}