பாரபங்கி, உத்தரப் பிரதேசம்: இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சியைப் பிடித்து விட்டால், அயோத்தியில் ராமர் கோவிலை புல்டோசர் ஏற்றி இடித்துத் தள்ளி விடுவார்கள். மீண்டும் குழந்தை ராமர் குடிசைக்கு வந்து விடுவார் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
உ.பி. மாநிலம் பாரபங்கியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது இவ்வாறு அவர் கூறினார். இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:
சமாஜ்வாடிக் கட்சி இப்போது இங்கு முற்றிலும் தனது அஸ்திவாரத்தை இழந்து விட்டது. மேற்கு வங்காளத்தில் அது புகலிடம் தேடி வருகிறது. சமாஜ்வாடி மற்றும் திரினமூல் காங்கிரஸின் நோக்கமே, வெறும் வாக்குகளைப் பெறுவதுதான். அதுவும் மோசடியாக ஏமாற்றி வாக்குகளைப் பெற முயல்கிறார்கள்.
இவர்கள் ஆட்சிக்கு வந்து விட்டால், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்து விட்டால், புல்டோசர் ஏற்றி ராமர் கோவிலை இடித்து விடுவார்கள். குழந்தை ராமரை மீண்டும் குடிசைக்கு மாற்றி விடுவார்கள்.
இந்தியா கூட்டணி நாட்டை சீர்குலைக்கத் துடிக்கிறது. நாமோ நாட்டின் நலனுக்காக நம்மைத் தியாகம் செய்யத் துடிக்கிறோம். 3வது முறையாக நாம் ஆட்சியமைக்கப் போகிறோம். அது உறுதி. புதிய ஆட்சி அமைந்ததும், ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்களுக்காக புதிய திட்டங்களைக் கொண்டு வரப் போகிறோம். அதற்காகத்தான் உங்களது ஆசிர்வாதத்தையும், ஆதரவையும் கோர வந்துள்ளேன்.
ஜூன் 4 வெகு தூரத்தில் இல்லை. மொத்த நாடும், மொத்த உலகமும், மோடி அரசு 3வது முறையாக வெல்லப் போவதைப் பார்க்க காத்திருக்கிறது என்றார் பிரதமர் மோடி.
அதேபோல பதேபூரில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், மாபியாக்கள் மீதான மோகத்திலிருந்து இன்னும் சமாஜ்வாடிக் கட்சி விடுபடவில்லை. அதை முடித்துக் கொள்ள அது விரும்பவில்லை. மாபியாக்களின் சமாதியிலிருந்து பாத்தியா ஓதிக் கொண்டிருக்கிறார் சமாஜ்வாடிக் கட்சித் தலைவர். பாகிஸ்தான் நமது நாட்டைத் தாக்கியது. அவர்களுக்கு நற்சான்றிதழ் கொடுக்கிறது காங்கிரஸ். இதை மறைக்க காவி தீவிரவாதம் என்ற கட்டுக்கதையை கிளப்பி விட்டவர்கள்தான் இவர்கள்.
{{comments.comment}}