துபாய்: சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. மகிழ்ச்சியும், எதிர்பார்ப்புகளும் உச்சத்தை எட்டியுள்ளன. இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளும், ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் துபாய் இன்டர்நேஷனல் கிரிக்கெட் மைதானத்தில் மோதவிருக்கின்றன.
தொடக்கத்திலிருந்து அதிரடியான விளையாட்டைக் காட்டி வரும் அணிகளான இந்தியா அனைத்துப் போட்டிகளிலும் வென்றுள்ளது. மறுபக்கம் லீக் சுற்றில் இந்தியாவிடம் மட்டும் தோற்று மற்ற போட்டிகளில் வென்றுள்ள நியூசிலாந்து அணி உத்வேகத்துடன் இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. இருவரும், இப்போது கோப்பையை கைப்பற்ற ஒருமித்த உறுதியுடன் களத்தில் சந்திக்கவுள்ளதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நியூசிலாந்துக்கும், இந்தியாவுக்கும் இடையே தீர்க்க வேண்டிய கணக்குகள் நிறைய உள்ளன. 2000மாவது ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி, 2019 உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டி ஆகியவற்றில் இந்தியாவுக்கு மோசமான தோல்வியைக் கொடுத்து இந்திய ரசிகர்களை அப்செட்டாக்கியது நியூசிலாந்து. இந்த தோல்விகளுக்கு கணக்குத் தீர்க்க தீரத்தோடு காத்திருக்கிறது இந்தியா.
2000மாவது சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடந்து தற்போது 25 வருடங்கள் ஆகி விட்ட நிலையில் இரு அணிகளிலும் நிறைய மாற்றங்கள். இரு அணிகளும் ஒவ்வொரு விதத்தில் பலம் வாய்ந்த அணிகளாக மாறியுள்ளன. இந்தியாவை குறைத்து மதிப்பிட்டு விட முடியாத அளவுக்கு படு ஸ்டிராங்காக உள்ளது. குறிப்பாக இந்தியாவின் ஸ்பின்னர்ஸ் அட்டகாசமாக உள்ளனர். குறிப்பாக வருண் சக்கரவர்த்தி மிரட்டிக் கொண்டுள்ளார். இன்றைய இறுதிப் போட்டியிலும் கூட அவர் கலக்குவார் என்ற பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இந்தியா 2002-ல் இலங்கையுடன் கோப்பையை பகிர்ந்து கொண்டது. 2013-ல் தோனியின் தலைமையில் பட்டம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் பலம்
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறந்த ஆட்டத்தைக் காண்பித்து வருகிறது. குறிப்பாக, சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி அணியில் இணைந்த பிறகு இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளார். இறுதி லீக் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 5/42 என்ற அளவில் பந்துவீசி அட்டகாசமாக நியூசிலாந்தை முடக்கிப் போட்டார். அதே மாஜிக்கை இன்றைய இறுதிப் போட்டியிலும் அவர் நியூசிலாந்துக்கு எதிராக காட்டுவார் என்ற எதிர்பார்ப்பு பலமாக உள்ளது.
இறுதிப் போட்டி நடைபெறும் துபாய் மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளது. எனவே வருண் சக்கரவர்த்தி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் நியூசிலாந்துக்கு பெரும் சவாலாக இருப்பார்கள் என்று நம்பலாம்.
மறுபக்கம் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட பேட்டிங் புயல்களும், நியூசிலாந்து கனவைக் காலி செய்ய வேகத்துடன் காத்திருக்கின்றன.
நியூசிலாந்தின் பலம்
நியூசிலாந்து அணியும் இந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக அவர்களது ஸ்பின்னர்கள் சிறப்பாக உள்ளனர். பாகிஸ்தானில் வைத்து அந்த அணியை அவர்கள் புரட்டிப் போட்ட விதத்தை யாராலும் அத்தனை சீக்கிரம் மறந்து விட முடியாது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதியில் அவர்களின் சுழற்பந்துவீச்சாளர்கள் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, அந்த அணியை நிலை குலைய வைத்தனர். பேட்டிங்கிலும் கூட நியூசிலாந்து சிறப்பாகவே உள்ளது. நல்ல பார்ட்னர்ஷிப்பை அவர்கள் எடுத்து விட்டால் அவர்களைத தடுப்பது சிரமமானது. எனவே அவர்களை பெரிய அளவில் ரன் சேர்த்து விடாமல் தடுக்கவே இந்தியா முயலும்.
இவ்வளவு தூரம் வந்து விட்டோம். கோப்பையை வென்றே ஆக வேண்டும் என்ற அழுத்தத்தில் நியூசிலாந்தும், நியூசிலாந்தைப் பழி தீர்த்து கோப்பையை வெல்ல வேண்டும் என்ற அழுத்தத்தில் இந்தியாவும் உள்ளதால் போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் கூறுகையில், இந்த மோதல் மிகவும் கடினமானது. என்றாலும், எங்களது அணி சிறப்பாக ஆடிவருவதால் போட்டியை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. நிச்சயம் இந்தியா மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஆனால், நாங்களும் தக்க பதிலடி கொடுக்கும் திறனுடன் இருக்கிறோம் என்றார்.
ரோஹித்துக்காக கோப்பையை வெல்ல ஆர்வம்
இந்தத் தொடரோடு ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு பலமாக உள்ளது. எனவே ரோஹித்துக்காக இந்த கோப்பையை வெல்ல இந்திய வீரர்கள் உறுதியாக உள்ளனர். நிச்சயம் கோப்பையை வென்று, ரோஹித் சர்மாவுக்கு சிறப்பான ஓய்வை அளிக்கவும் இந்திய வீரர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.
விராட் கோலி சாம்பியன்ஸ் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை இந்தப் போட்டியில் நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த சாதனையை நிகழ்த்த அவருக்கு 45 ரன்கள் மட்டுமே தேவை. எனவே இந்த சாதனையை விராட் நிகழ்த்தி தனது சாதனை மகுடத்துக்கு மேலும் பொலிவூட்டுவார் என்று நம்பலாம்.
பல வகையிலும் இந்தப் போட்டியில் பல சாதனைகள் காத்திருப்பதால் இரு தரப்பு ரசிகர்களும் பெருத்த ஆர்வத்துடன் காத்துள்ளனர்.
கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!
அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி
கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!
மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!
எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!
அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!
{{comments.comment}}