டெல்லி: ராகுல் காந்தியின் பாரத் ஜோதோ யாத்திரையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு, ஒரு இந்தியனாக இங்கு நான் வந்திருக்கிறேன். சிறந்த எதிர்காலத்துடன் இணைந்திருக்கிறேன் என்று கூறினார்.
காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி நடத்தி வரும் பாரத் ஜோதோ யாத்திரை 100 நாட்களைக் கடந்து தற்போது தலைநகர் டெல்லியை எட்டியுள்ளது. யாத்திரையானது இதுவரை 3000 கிலோமீட்டர் தொலைவைக் கடந்துள்ளது. மேலும் 12 மாநிலங்களில் 3750 கிலோமீட்டர் தொலைவு பயணித்து ஜம்மு காஷ்மீரில் ஜனவரி மாத இறுதியில் நிறைவடையவுள்ளது.
இந்த யாத்திரையில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டு வருகின்றனர். அரசியல்வாதிகள், திரையுலகினர், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு பிரிவினரும் கலந்து கொண்டு ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று டெல்லியில் நடந்த யாத்திரையில் ராகுல் காந்தியுடன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் கலந்து கொண்டார். கூட்டத்தில் கமல்ஹாசனுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். பெரும் திரளான மக்கள் நீதி மய்யம் தொண்டர்களும் இதில் பங்கேற்றனர்.
ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் செங்கோட்டை வரை நடந்து சென்றார். பின்னர் அங்கு நடந்த கூட்டத்தில் பேசுகையில், நான் ஏன் இங்கு இருக்கிறேன் என்று பலர் கேட்கிறார்கள். ஒரு இந்தியனாக நான் இங்கு நிற்கிறேன். எனது தந்தை ஒரு காங்கிரஸ்காரர். எனக்கு பல்வேறு கொள்கைகள் உண்டு. எனக்கென்று ஒரு அரசியல் கட்சியும் உண்டு. ஆனால் நாடு என்று வரும்போது, அனைத்து அரசியல் பார்வைகளையும் நான் ஒதுக்கி வைத்து விடுவேன். அந்த அடிப்படையில்தான் நான் இங்கு வந்துள்ளேன்.
நான் கண்ணாடி முன்பு நின்று கொண்டு என்னைப் பார்த்துக் கேட்டேன். நாட்டுக்கு நான் தேவைப்படுகிறேனா என்று கேட்டேன். அதற்கு எனது உள்மனது சொன்னது, கமல், நாட்டை பிரிக்க நீ உதவாதே.. இணைக்க உதவு என்று அந்தக் குரல் கூறியது. அதனால்தான் இங்கு வந்தேன் என்று கமல்ஹாசன் பேசினார்.
இன்றைய யாத்திரையில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராபர்ட் வத்ரா உள்ளிட்ட காந்தி குடும்பத்தாரும் கலந்து கொண்டனர். ராகுல் காந்தி யாத்திரை தொடங்கிய பின்னர், அவருடன் சோனியா காந்தி இணைந்தது இது 2வது முறையாகும். இதற்கு முன்பு கடந்த அக்டோபர் மாதம் கர்நாடக மாநிலம் மாண்டியாவில் சோனியா காந்தி, ராகுலுடன் இணைந்து நடந்தார். அதேசமயம், ராகுல்காந்தியுடன், அவரது மொத்தக் குடும்பத்தினரும் இணைந்து நடந்தது இதுவே முதல் முறையாகும்.
முன்னதாக சோனியா காந்தியுடன் தான் இருப்பது போன்ற புகைப்படத்தைப் போட்டு டிவீட் செய்திருந்த ராகுல் காந்தி, நான் இவரிடமிருந்து பெற்ற அன்பை இந்த நாட்டுடன் பங்கிட்டுக் கொள்கிறேன் என்று உருக்கமாக கூறியிருந்தார்.
{{comments.comment}}