வயதானவர்கள்.. இவர்களுக்குத் தேவை உங்களது விரலின் நுனி மட்டுமே.. இதயத்திலிருந்து நீளட்டும்.. அன்பு!

May 13, 2024,05:46 PM IST
- பொன் லட்சுமி

இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலரும் வெறுக்கக்கூடிய ஒரு உறவாக "வயதானவர்கள்" பார்க்கப்பட்டு வருகிறார்கள்..  வயதான அம்மாவை நடு ரோட்டில் தவிக்க விட்டுச் சென்ற மகன்.. சொத்துக்களைப் பறித்துக் கொண்டு அம்மா அப்பாவை வீதியில் விட்ட மகன் என்று தினந்தோறும் செய்திகளைப் படித்துக் கொண்டுதான் இருக்கிறோம். 

இளமையில் அவர்களின் தேவை இருக்கும் போது அவர்களை பயன்படுத்திக் கொண்டு முதுமையில் அனாதரவாக பலர் விட்டு விடுகிறார்கள்... உணர்வுகளை பகிர்ந்து கொள்ள  கூட யாரும் இல்லாத தனி மரமாகவே பலரது முதுமைக் காலம் கழிகிறது... முதுமையின் வெற்றிடமே முதல் நரகம் ஆகும். அதை வாழும்போதே பலர் இன்னும் அனுபவித்து கொண்டு தான் இருக்கிறார்கள்... பலர் இளமையாக இருக்கும் போது தன் குழந்தைகளின் மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கையையும் பாசத்தையும் வைத்து விடுகிறார்கள். கடைசியில் அது ஏமாற்றமாக மாறும்போது மனதளவில் உடைந்து விடுகிறார்கள். இந்த இக்கட்டான சூழ்நிலைகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள சில வழிமுறைகள் முடிந்தால் பின்பற்றி பாருங்கள்.

சேர்ந்து வாழ நினைக்காதீர்கள்



எந்த ஒரு  நிலையிலும் உங்கள் வாழ்வின் கடைசி காலத்தில் உங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ்வோம் என்று  நினைக்காதீர்கள்... ஏனென்றால் திருமணம் முடிந்ததும் பிள்ளைகள் அவரவர்களின் வாழ்க்கையை பார்த்துக் கொண்டு செல்வார்கள்.. என் பிள்ளை எப்பொழுதும் என்னுடன் தான் இருப்பான் என்ற எதிர்பார்ப்பை வைத்துக்கொண்டு அது கிடைக்காமல் ஏமாறும்போது  அதிக அளவு மன அழுத்தத்தை தான் கொடுக்கும்... அப்படி நீங்கள் யோசிப்பவர் ஆக இருப்பின் உங்களுக்கு திருமணம் முடிந்ததும் தாய் தந்தையுடன் மாமனார் மாமியாருடன் கடைசி வரை ஒற்றுமையாக வாழ்ந்தீர்களா என்று யோசியுங்கள்.. நீங்கள் திருமணம் ஆனதும் தனி குடித்தனம் வந்துவிட்டு இப்பொழுது உங்கள் பிள்ளைக்கு திருமணமானதும் தன் கூடவே இருக்க வேண்டும் என்று நினைப்பது மிகப்பெரிய தவறு.. பலர் அந்தத் தவறை செய்து அதை முதுமையிலே சந்திப்பவர்களாக உள்ளனர் என்பது கசப்பான உண்மை.

ஒரு சிலருக்கு பிள்ளைகளுடன்  வாழும் யோகம் கிடைக்கும். அவர்கள் கொடுத்து வைத்தவர்கள் தான்.. அதே போல உங்கள் பேரக் குழந்தைகளின் மேல் உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனென்றால் குழந்தைகளை வளர்ப்பதில்  உங்களது கால சூழ்நிலையும் அனுபவமும் வேறாக இருந்திருக்கும் ... ஆனால் இன்றைய காலத்தில் குழந்தை வளர்ப்பு வேறு விதமாக இருக்கிறது. அதனால்  குழந்தைகளை வளர்ப்பதில் உங்கள்  மகனுக்கோ மகளுக்கோ எவ்வித அறிவுரையும் சொல்லாதீர்கள்.... உங்கள் அறிவுரை மற்றும் அனுபவங்களை அவர்கள் மதிக்க மாட்டார்கள். அட்வைஸ் கொடுத்து அதை ஏற்காமல் அவர்கள் புறக்கணிக்கும்போது, அது உங்களுக்கு மன அழுத்தத்தை தான் கொடுக்கும்.

விலகியே இருங்கள்



தன் பிள்ளைகளுக்கு திருமணம் முடிந்ததும் அவர்களை விட்டு சற்று விலகியே இருங்கள். அது உங்கள் உறவுகள் இனிமையா இருக்க வழிவகுக்கும்..  'என் பிள்ளை என் பிள்ளை' என்று  பதறாதீர்கள்.. விழுந்து அப்பாதீர்கள். இவ்வளவு நாட்களாக கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்ட தன் பிள்ளைகளை பார்த்துக் கொள்ள இன்னொரு துணை கிடைத்துவிட்டது. அவர்கள் இனி அவர்களைப் பார்த்துக் கொள்வார்கள்..  இனி தன் பிள்ளைகள்  சிறகு முளைத்த பறவைகள்  என்பதை நினைத்து அமைதியாக இருக்க பழகிக் கொள்ளுங்கள்.. இப்படி இருக்கும்போது பிள்ளைகளும் உங்களிடம் தொடர்ந்து பாசம் பாராட்டுவார்கள்.

பொதுவாக நம்மில் இன்று பல முதியவர்கள் செய்யும் தவறு என்னவென்றால் சிறுவயதிலிருந்தே தன்னுடைய குழந்தைகளுக்காகவே தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்திருந்தாலும்  அவர்களுக்கு சொத்து சுகம் என்று சேர்த்து வைத்திருந்தாலும் தான் சேர்த்து வைத்த அனைத்து  சொத்துகளையும் தன் பிள்ளைகளுக்கு  கொடுத்து விடுகிறார்கள் .. அதுதான் அவர்கள் செய்யும் பெரிய தவறாக இருக்கிறது. இந்த விஷயத்தில் கொஞ்சம் சுயநலமாக இருக்க வேண்டும், வேறு வழியில்லை. இன்றைய சூழ்நிலையில் மனிதனின் மனம் எப்படி மாறும் என்று யாருக்கும் தெரியாது. அதனால் எவ்வளவுதான் தன் குழந்தைகள் ஆனாலும் தங்களுக்கு என்று கடைசி காலத்தில் ஒரு சிறு அளவு சேமிப்பையாவது வைத்துக் கொள்ளுங்கள்... பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை.. சேமிப்பு மற்றும் உங்கள் சுய சம்பாத்ய சொத்துக்களை உயிருடன் இருக்கும் வரை யாருக்கும் பகிரவேண்டாம்... உங்களது காலத்திற்கு பின் உங்கள் குழந்தைகள் அந்த சொத்துக்களை அனுபவிக்கட்டும்.. ஏனென்றால் இன்றைய காலத்தில் பல முதியவர்கள் யாரும் இல்லாத அனாதையாக வாழ்கிறார்கள். ஆனால் அவர்களும் ஒரு காலத்தில் சொத்து சுகம் என்று வாழ்ந்தவர்கள் தான்.  அதனால் உங்களுக்கு என்று சிறு தொகையையாவது கடைசி காலத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

சொல்லிக் காட்டாதீர்கள்



இன்று  பலர் செய்யும் இன்னொரு தவறு.. பழங்கதை பேசுவது. குழந்தைகளின் வாழ்விற்காக காலம் முழுதும்  பாடுபட்டு பல இழப்புகளை சந்தித்து இருப்பீர்கள்  தான்.. தியாகம் செய்து இருப்பீர்கள்தான்.. ஆனால் அவற்றை 'சம்சாரம் அது மின்சாரம்' விசு போல சொல்லி காட்டவேண்டாம்...  ஏனெனில் உங்கள் குழந்தைகளுக்கான  கடமையை செய்தீர்கள் அவ்வளவே.. சிலர் எப்பொழுதும் தன் பிள்ளைகளிடம் உனக்காக நான் அதை செய்திருக்கிறேன், இதை செய்து இருக்கிறேன் என்று சொல்லி காட்டிக்கொண்டே இருப்பார்கள்.. இந்த பூமியில் நம் குழந்தை பிறப்பதற்கு நாம் ஒரு கருவி அவ்வளவு தான்.. குழந்தை பெற்றால் அதற்கான அனைத்து தேவைகளையும் பெற்றோர்கள் தான் செய்ய வேண்டும்..  அப்படி செய்து விட்டு அடிக்கடி பிள்ளைகளிடம் உனக்காக அதை செய்தேன் இதை செய்தேன் என்று சொல்லிக் கொண்டிருந்தால் உங்கள் மீது அந்த பிள்ளைக்கு வெறுப்பு தான் வளரும்..  ஏனென்றால் இது ஒரு கால சுழற்சி தான். இன்று நீங்கள் உங்கள் குழந்தைக்கு செய்தீர்களானால் நாளை உங்கள் குழந்தை அவர்களது குழந்தைகளுக்கும் இந்த கடமையை  செய்வார்கள். இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்..

இன்று இருக்கும் சூழ்நிலையில் நாம் அனைவரும் கூட்டு குடும்ப வாழ்வு சிதைந்துபோன தலைமுறையில் வாழ்கிறோம் என்பதை மறவாதீர்கள்.. அதனால் தேவைபட்டால் வருடம் ஒருமுறை சென்று பேரன் பேத்திகளுடன் சந்தோஷமாக இருந்து பொழுதை கழித்து  வாருங்கள் அல்லது விடுமுறையில் பேரக்குழந்தைகளை தங்களது வீட்டிற்கு அழையுங்கள் ...  அப்படி நீங்கள் அங்கே  சென்றால்  அங்கே அதிகம் தங்க வேண்டாம்... அதேபோல இளமைக் காலங்களில், பெற்ற பிள்ளைகளிடம் கொஞ்சம் அனுசரணையாக  நடந்து கொள்ளுங்கள்... அப்படி நீங்கள் நடந்து கொண்டால் தான்  உங்களின் முதுமை காலங்களில் அவர்கள் உங்களை அனுசரித்து நடந்து கொள்வார்கள்... கொஞ்சம் இளமையாக இருக்கும்போது அடுத்தவர்களை மதிக்காமல் கஷ்டப்படுத்தி விட்டு கடைசி காலத்தில் என் பிள்ளைகள் என்னை பார்க்கவில்லை என்று குறை கூறுவதைத் தவிருங்கள்.

தட்டிக் கேளுங்கள்



எந்த சூழ்நிலையிலும்  எந்த நேரத்திலும் உங்கள் மருமகள் அல்லது மருமகன் முன் உங்கள் மனைவியை அல்லது கணவனை யாராவது குறை கூற நேர்ந்தால்  அதனை எதிர்த்து கேள்வி கேட்க தயங்காதீர்கள்.. அப்படி நீங்கள் தயங்கும் நேரத்தில் அவர்களுக்கான மரியாதையை அவர்கள் இழக்க நேரிடும்... எக்காரணத்தை கொண்டும் அவர்களின் ஆடம்பர வாழ்வை பற்றி விமர்சிக்காதீர்கள்.. மேலும் அவர்களுக்கு    சேமிப்பின் அவசியம் பற்றி சொல்லி அவமானப்படவும் வேண்டாம்... ஏனென்றால் அவர்கள் இன்று வாழும் வாழ்க்கை நீங்கள் அந்த காலத்தில் வாழ்ந்த வாழ்க்கை போல போராட்டமான வாழ்க்கை கிடையாது.. இன்றைய காலம் இயந்திரத்தனமான நவீன கார்ப்பரேட் வாழ்க்கை அன்றைய காலத்தில் உங்களுக்கு ஆயிரம் ரூபாய் பெரிது என்றால்  இன்று அவர்கள் லட்சங்களை கூட போதாது என்பார்கள்... அதேபோல இன்று நீங்கள் அனாவசியமான செலவு என்று யோசிப்பது அவர்களுக்கு அவசியமான ஒன்றாக இருக்கும்.. இன்றைய சூழ்நிலையில் இருவரும் வேலைக்கு சென்றால் தான்  குடும்பத்தை சமாளிக்க முடியும் என்ற நிலையில் அவர்கள் இருக்கிறார்கள் அதனால் அந்த காலத்தில் நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையை சொல்லி சிக்கனமாக இருக்க வேண்டும் என்று  அவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள்... உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்தது போல் அவர்களுக்கான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து விட்டுப் போகட்டும்.

பேரக்குழந்தைகள் மீது பாசம் வைப்பது தவறில்லை ஆனால்  அதிக பாசம் ஆசை வைத்தால் அது மோசமாக மாறிவிடும்... அவர்கள் குழந்தையை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள், முடிந்த அளவு அறிவுரைகளை தவிருங்கள்.. அதேபோல குழந்தை பெற்றுக் கொள்வதிலும் எக்காரணத்தைக் கொண்டும் நீங்கள் தலையிடாதீர்கள்... ஏனென்றால் அன்றைய காலத்தில் நீங்கள் பத்து குழந்தைகள் வரை பெற்றெடுத்திருக்கலாம் .. அன்று நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையும் சாப்பிட்ட உணவு முறையும் வேறு. ஆனால் இன்று எல்லாமே மாறிவிட்டது... இருவரும் வேலைக்கு செல்லும் வீட்டில் ஒரு குழந்தை இருந்தாலே கவனித்து கொள்வது பெரும்பாடாக இருக்கிறது.. அப்படி இருக்கும்போது குழந்தை வளர்ப்பது பெற்றெடுப்பது என்று அவர்கள் தான் யோசிக்க வேண்டுமே தவிர நீங்கள் யோசிக்க வேண்டாம்... அப்படி நீங்கள் யோசிப்பவராக இருந்தால் இருவரும் வேலைக்கு செல்லும் போது குழந்தைகளை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்... உங்களால் குழந்தைகளை கவனிக்க முடியாது என்றால் அவர்களது சொந்த விஷயத்தில் நீங்கள் தலையிடாமல் இருப்பது நல்லது. அதுதான் உங்களுக்குப் பாதுகாப்பானதும் கூட.

முதுமையைக் கண்டு பயப்படாதீர்கள்



இன்றைய தலைமுறையினர் உங்களை விட அறிவிலும் திறமையிலும் சிறந்தவர்கள் என்பதை ஏற்று கொள்ள முன் வாருங்கள்...  அதில் நாம் தயக்கம் காட்டவே  கூடாது. அந்த அறிவும் திறமையும் கூட உங்களிடமிருந்து வந்தது என்பதை நினைத்து நீங்க பெருமைப்படலாம். அவர்களுக்கான பாதையை அவர்களே தேர்ந்தெடுக்கட்டும். இன்றைய காலத்தில் ஆண்களும் சரி பெண்களும் சரி எல்லா துறையிலுமே சிறந்து விளங்கி கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழட்டும் என்று மனதார நினைத்துக் கொள்ளுங்கள்...
இப்படி ஒரு சில விஷயத்தில் உங்கள் மனதை பக்குவப்படுத்திக் கொண்டாலே முதுமை காலத்தில் மன அமைதி கிடைக்கும்.. மரியாதையும் பாதிக்கப்படாது. அன்பும் அரவணைப்பும் தொடரும்.

முதுமை வந்துவிட்டது என்று பயந்து விடாதீர்கள்.. எல்லோருக்கும் அது ஒரு நாள் வரத்தான் செய்யும்.இனிவரும் காலங்கள் நமக்கு தனிமை சிறை தான் என்று நினைத்து தளர்ந்து விடாதீர்கள்.. அதேபோல பெற்ற  பிள்ளைகள் நம்மை தாங்குவார்கள் என்றும் அதிகளவு நம்பிக்கை கொள்ளாதீர்கள்... எல்லாவற்றையும் எதார்த்தமாக, இயல்பாக அது போகும் போக்கில் ஏற்றுக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள். யாரிடமும் கை ஏந்தி நிற்கும் நிலையை தவிர்க்கப் பாருங்கள்.. வாழும்போதே உங்கள் காலத்திற்கென்று கொஞ்சம் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்... முதுமையை சந்தோஷமாக கழிக்க பாருங்கள்.

சமீபத்திய செய்திகள்

news

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ரிப்பன் மாளிகையை சுற்றிப் பார்க்க அரிய வாய்ப்பு

news

2028 அதிபர் தேர்தலுக்குத் தயாராகப் போகிறாரா கமலா ஹாரிஸ்.. அடுத்த திட்டம் என்ன?

news

நவ. 14, 15 கன மழை எச்சரிக்கை.. சென்னையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்.. மேயர்பிரியா அப்டேட்!

news

ப வரிசைப் பட நாயகன்.. தமிழ்த் திரையுலகின் முத்திரை இயக்குநர்.. பீம்சிங் நூற்றாண்டு விழா.. நாளை!

news

உங்களுக்காக நடனமாடுகிறோம்.. எங்களுக்காக இதைச் செய்யுங்களேன்.. மேடை நடனக் கலைஞர்கள் கோரிக்கை!

news

மீண்டும் இ பாஸ் கட்டாயம்.. கொடைக்கானல், ஊட்டியில் வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்

news

TNPSC குரூப் 2 தேர்வு எழுதியவர்களா நீங்கள்.. சூப்பரான குட் நியூஸ் சொன்ன தேர்வாணையம்..!

news

Weather Report: தமிழ்நாட்டில்.. 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு .. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

news

விஜய் ஆர்கானிக் மாஸ் என்றால்... விசிக என்ன இன்ஆர்கானிக் மாஸா?.. விசிக தலைவர் திருமாவளவன்

அதிகம் பார்க்கும் செய்திகள்