- மீனா
சென்னை: ஒரு சாதாரண தக்காளி.. என்னா கிராக்கி ஆகிப் போய்க் கிடக்கு பாருங்க இப்ப.. முன்னெல்லாம் இதெல்லாம் ஒரு தக்காளியா.. அழுகிப் போச்சுன்னு தூக்கி எறிஞ்சு போய்ட்டே இருப்போம்.. இப்ப அப்படியா.. 2 தக்காளி கிடைச்சா போதும்னு சொல்ற அளவுக்கு விலைவாசி எகிறிப் போய்க் கிடக்கு. அப்படி ஆயிருச்சுங்க தக்காளியோட நிலைமை!
விண்ணை முட்டும் தக்காளி விலை இன்று நாம் எல்லாருக்கும் பேசும் பொருளாக மாறி இருப்பதை சத்தியமா அந்த தக்காளியே எதிர்பார்த்திருக்காது. தக்காளி விலை எப்ப தான் குறையுமோ என்று ஒவ்வொரு இல்லத்தரசிகளும் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை எப்போது உயர்ந்தாலும் உடனடியாக பாதிக்கப்படுவது என்னவோ எப்பொழுதும் நடுத்தர மக்களாக தான் இருக்கிறார்கள்.
அதிலும் இல்லத்தரசிகளுக்கு இன்னைக்கு என்ன சமைக்கலாம் நாளைக்கு என்ன சமைக்கலாம் என்ற ஒரு குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். இப்ப இந்த குழப்பத்தோடு, "தக்காளி இல்லாம என்ன சமைக்கலாம்" என்ற சிந்தனைதான் எல்லாருக்குமே ஓடிக்கிட்டு இருக்குது. முன்பெல்லாம் குடும்பத் தலைவர்கள் தம் வீட்டு பெண்கள் நகை வேணும் புடவை வேணும் என்று கேட்டாலே இதயத் துடிப்பு அதிகரிக்கும்.. அடடா பர்ஸ் என்னாகப் போகுதோ என்ற கவலை வந்து கவ்விக் கொள்ளும். ஆனால் இப்போதெல்லாம் வீட்டுப் பெண்கள் தக்காளி வாங்கி தரீங்களா என்று கேட்டாலே பதறிப் போய் பொறும்மா இப்போதான் லோனுக்கு அப்ளை பண்ணி இருக்கிறேன் சீக்கிரம் வந்துடும் பிறகு வாங்கிக் கொள்ளலாம் என்று நக்கலாக சொல்லும் அளவுக்குப் போய் விட்டது.
அந்த அளவுக்கு தக்காளியோட விலை நம்ம எல்லாரையும் பாடாய்ப்படுத்து. முன்னாடி எல்லாம் ஒருத்தவங்கள மோட்டிவேட் பண்றதுக்கு சவாலே சமாளி என்று சொல்லி கேட்டிருப்போம், இப்போ உள்ள சூழ்நிலைக்கு "தக்காளி இல்லாம சமையலை சமாளி" என்ற வார்த்தைதான் எல்லார் வீட்டிலும் கேட்டுக் கொண்டிருக்கு. தங்கம் தான் வாங்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்து கொண்டே போகுதுன்னு பார்த்தா , இந்த தக்காளி தங்கத்தோட போட்டி போட்டுகிட்டு நான் பெருசா நீ பெருசா பார்ப்போமான்னு மல்லுக்கு நிக்குது.
இந்த சண்டையைப் பார்த்து பெட்ரோல், டீசல் விலையெல்லாம் கிலியாகிப் போய்க் கிடக்குது. நம்மள விட தக்காளி பெரியஇடம் போல என்று பெட்ரோல் பங்குகள் பார்த்துப் பதறும் அளவுக்கு போய் விட்டது தக்காளியின் விலை. இவங்க போடுற சண்டைல கிழியறது என்னமோ மக்களாகிய நம்மளுடைய சட்டைகள் தான். இப்படியே போனா தங்கத்துக்கு ஷோரூம் இருக்கிற மாதிரி தக்காளிக்கும் ஷோரூம் வச்சுருவாங்களோன்னு கொஞ்சம் பயந்தும் வருது.
வழக்கமா தங்கம் வாங்கத்தான் சேத்து வப்பாங்க.. இப்ப தக்காளி வாங்கவும் காசு சேத்து வைக்கணும் போல.
தங்கம் வாங்க சேர்த்து வச்ச காசெல்லாம் தக்காளி வாங்கி கரையுதே என்று இல்லதரசிகளுக்கு வருத்தமாக தான் இருக்கு. தக்காளி விலை இப்படி தலைவிரித்தாடும் நிலையில், அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே என்று பாடுவது போல் "தக்காளி சாதம், தக்காளி சட்னி, தக்காளி தொக்கு, தக்காளி ஊறுகாய்" எல்லாம் நம்ம கண் முன்னாடி வந்து டண்டணக்கா டான்ஸ் ஆடிக் காட்டிப் போகின்றன.. ஆஹா.. மறுபடியும் எப்படா இதையெல்லாம் சாப்பிடப் போறோமோ என்ற ஏக்கத்தையும் கிளறி விட்டுச் செல்கின்றன.
இப்படி எல்லாப் பக்கமும் தக்காளி நம்மை குழப்பியடித்தாலும் கூட, தையும் மீறி தக்காளி வாங்கிட்டு வந்தாலும் இதை எப்படி சீக்கிரம் காலியாகாமல் சமைப்பது என்று அதி தீவிர கவலைதான் பெண்களுக்கு உள்ளது. ஒரு படத்துல மனோரமா என்ன பண்ணுவங்கன்னா.. முழு கோழிய முன்னாடி கயிற்றில் கட்டி விட்டுட்டு அதை பார்த்துக்கொண்டே அவங்க கோழிக்கறி குழம்பு சாப்பிடற மாதிரி நினைச்சுகிட்டு சாப்பிடுவாங்க... அதே மாதிரி தாங்க நாமளும் குழம்பு பாத்திரத்தின் பக்கத்துல தக்காளிய வச்சுக்கிட்டு அதை பார்த்து தக்காளி போட்டுட்டோம்னு நினைத்து சாப்பிட்டுக்க வேண்டியதுதான் போல.
சரி இப்படியே போனா எப்படிப்பா.. தக்காளி இல்லாம உயிர் வாழவே முடியாதா.. அதாவது சமையலே பண்ண முடியாதான்னு உங்க தொலைதூரத்து மைன்ட் வாய்ஸ் இங்க வரைக்கும் கேட்குது.. ஏன் இல்லாம.. பெரிய லிஸ்ட்டே இருக்கு.. எடுங்க நோட்டை.. குறிச்சுக்கங்க டிப்ஸை..
மோர் குழம்பு ,மிளகாய் கிள்ளி போட்ட சாம்பார், வெங்காய கார குழம்பு, லெமன் சாதம், புளி சாதம், தேங்காய் சாதம், புதினா சாதம், மல்லி சாதம், புடலங்காய் கூட்டு, சுரக்காய் கூட்டு, தேங்காய் சட்னி, வெங்காய சட்னி, கடலைமாவு சட்னி.. இவ்வளவு இருக்குங்க.. இதுக்கெல்லாம் தக்காளி தோல் கூட தேவைப்படாது.. என்ன இப்ப மனசு ரிலாக்ஸ் ஆகிருச்சா... என்னங்க, தக்காளி வாங்க போன உங்களை தடுத்து நிறுத்திட்டேனா... தக்காளி எங்கன்னு உங்க வீட்டம்மா கேட்டா தயவு செய்து என்னை சொல்லிடாதீங்க, அடிச்சு கூட கேப்பாங்க.. அப்பவும் சொல்லிடாதீங்க!
புகைப்படம், கட்டுரை: மீனா
{{comments.comment}}