- பொன் லட்சுமி
இன்றைய காலகட்டத்தில் பலரும் மகிழ்ச்சியை தேடி எங்கெங்கோ அலைகின்றனர்.. ஆனால் அது வேறு எங்கேயும் இல்லை.. நமக்குள்ளேயேதான் ஒளிஞ்சிட்டிருக்கு.. மகிழ்ச்சி என்பது நமக்குள்ளே இருக்கும் ஒரு உணர்வு.. அதை சரியாக புரிந்து கொண்டவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.. புரியாதவர்கள்தான் தேடி அலைகிறார்கள்.
மகிழ்ச்சியாக இருக்க ரொம்ப மெனக்கெட தேவையில்லைங்க.. வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைவது என்பது அவ்வளவு பெரிய கடினமும் அல்ல.. மனதை ஒருநிலைப்படுத்த கற்றுக் கொண்டால் போதும்...
1. விட்டுக் கொடுப்பது :
விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை என்னும் பழமொழிக்கு ஏற்ப குடும்ப உறுப்பினர்களிடையே விட்டுக்கொடுத்து செல்வது கூட ஒரு வித மகிழ்ச்சி தான்... அது குழந்தைகள் ஆனாலும் சரி, கணவன் மனைவியானாலும் சரி, தாய் தந்தை ஆனாலும் சரி, சகோதர சகோதரிகள் ஆனாலும் சரி, உறவினரானாலும் சரி.. விட்டுக் கொடுத்துப் பாருங்க.. சொர்க்கமாக உணர்வீர்கள்.
2. ஒப்பிட்டு பார்ப்பதை நிறுத்துங்கள் :-
இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான திறமைகள் இருக்கும்.. பக்கத்து வீட்டுக்காரர் அவ்வளவு பெரிய வீடு கட்டி இருக்கிறார் நம்மிடம் இல்லையே என்று புலம்புவதை விட , இருப்பதற்கு இடம் கூட இல்லாமல் எத்தனையோ பேர் சாலை ஓரங்களில் வசிக்கிறார்கள்.. கடவுள் அவர்களை விட நம்மை ஒரு படி மேலே வைத்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டாலே மகிழ்ச்சி கிடைத்துவிடும்.. இருப்பதை வைத்து வாழ பழகிக் கொண்டாலே துன்பம் என்பது பாதி அளவு குறைந்து விடும்.
3. நன்றி சொல்ல பழகிக் கொள்ளுங்கள் :-
முதலில் தினமும் காலை எழுந்தவுடன் ஆத்மார்த்தமாக கடவுளுக்கு நன்றி சொல்ல பழகிக் கொள்ளுங்கள்... கடவுள் நம்பிக்கை இல்லையா, நீங்க நல்லாருக்கணும்னு நினைக்கிறவங்களுக்கு நன்றி சொல்லுங்க. ஒவ்வொரு நாளையும் எந்த ஒரு பிரச்சனையிலும் சிக்காமலும், பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருந்ததற்கு நன்றி என்று இரவில் தூங்க செல்லும் முன்பும் கூறி பழகுங்கள்... அதேபோல நமக்கு உதவியவர்களுக்கும் நம்மோடு வாழ்க்கையில் பயணிப்பவர்களுக்கும் நன்றி கூறுங்கள்..
4. முடிந்த அளவுக்கு உதவி செய்யுங்கள் :-
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பார்கள். அதேபோல நம்மிடம் யாரேனும் இல்லாதவர்கள் யாசகம் கேட்கும் பொழுதோ நம்முடைய உதவி யாருக்காவது தேவைப்படும் பொழுது முன்னின்று நம்மால் முடிந்த அளவு உதவி செய்ய வேண்டும்.. பசியுடன் இருப்பவர்களுக்கு ஒருவேளை உணவு அளிப்பது கூட அவர்களுக்கு நாம் செய்யும் உதவி தான்... உதவியை பெற்றுக் கொண்டவர்கள் நீ நல்லா இருப்பா பா, உன் குழந்தைகள் உன் குடும்பம் நல்லா இருக்கணும் என்று அவர்கள் வாயார சொல்லி வாழ்த்தும்போது நம் மனதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.. அப்படி அடுத்தவருக்கு உதவி செய்வது கூட ஒரு வித போதை தான்... அந்தப் போதை நமக்கு கொடுக்கும் பரிசு மகிழ்ச்சி அதை வார்த்தையால் விவரிக்க முடியாது.
5. துன்பத்தில் இருப்பவருக்கு ஆறுதல் அளிப்பது :-
நமக்கு மிகவும் நெருக்கமானவரோ அல்லது தெரிந்தவரோ அல்லது குடும்ப உறுப்பினரோ யாராவது ஏதோ ஒரு துன்பத்தில் இருக்கும் பொழுது நம்மால் முடிந்த அளவு அவருக்கு ஆறுதலாய் இருப்பது தான் உலகத்திலேயே பெரிய மகிழ்ச்சி... நம்மால் அவர்களுக்கு மனதளவில் உனக்கு நான் இருக்கிறேன் என்ற தைரியம் கொடுப்பதே அவர்களுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய உதவி... எத்தனையோ பேர் மனதில் ஆயிரம் கவலைகளை வைத்துக்கொண்டு யாரிடம் சொல்லவும் முடியாமல் அதிலிருந்து மீளவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு நம்பிக்கையையும் , தைரியத்தையும் எது வந்தாலும் உனக்காக நான் இருக்கிறேன் என்று ஒரு சொல் அவர்களின் வாழ்க்கையை மாற்றி அமைக்கும். அதுவே நாம் அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய உதவி தான்... உன்னால் தான் இன்று நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று ஒருவர் நம்மிடம் கூறினால் அதைவிட வேறு மகிழ்ச்சி நமக்கு என்ன வேண்டும்..
6. எதிர்பார்ப்பை குறைத்துக் கொள்ளுங்கள்:-
சிலர் எப்பொழுதும் முடிந்து போனதையோ இல்லை நாளை நடக்க இருப்பதையோ பற்றியே சிந்தித்துக் கொண்டு இன்றைய நாளை ரசிக்க மறந்து விடுகிறார்கள்... ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் முடிந்தது முடிந்தது தான். அதை பற்றி பேசியோ நினைத்தோ ஒரு பயனும் இல்லை.. அதேபோல நாளை என்பது நிச்சயமற்றது, நாளை நடக்கவிருப்பதை நாம் இறைவன் கையில் ஒப்படைத்து விட்டு. இன்று இருக்கும் நாளை மட்டும் நமக்கான நாள் என்று எண்ணி மகிழ்ச்சியுடன் வாழ கற்றுக் கொண்டாலே ஒவ்வொரு நாளும் நமக்கு மகிழ்ச்சி தான்.
7. குறை சொல்பவரை ஒதுக்கி வையுங்கள் :-
சிலர் எப்பொழுதும் யாரையாவது குறை கூறிக்கொண்டே இருப்பார்கள்.. அவர்களை விட்டு நாம் சற்று ஒதுங்கி இருப்பதே நமக்கு நல்லது.. ஒரு சிலர் எப்பொழுதும் எதிர்மறையான எண்ணங்களை கொண்டவர்களாகவே இருப்பார்.. நாம் நம்முடைய லட்சியத்தில் முன்னோக்கி அடியெடுத்து வைக்கும் பொழுது இதெல்லாம் உனக்கு தேவையா, உன்னால இதெல்லாம் செய்ய முடியாது என்று நமது லட்சியத்தை அடைய விடாமல் எதிர்மறையான வார்த்தைகளை பேசி தடுத்துக் கொண்டே இருப்பர்.. அவர்களை முடிந்தால் நம் வாழ்க்கையில் இருந்தே ஒதுக்கி விட வேண்டும். இப்படிப்பட்டவர்களின் சொல்லை நம் காதில் வாங்காமல் நம் இலட்சியத்தை மட்டுமே நோக்கி அடி எடுத்து வைக்க வேண்டும்...
8. புன்னகை என்னும் மருந்து :-
நாம் மகிழ்ச்சியில் இருக்கும் போது நமது முகம் எப்பொழுதும் புன்னகையை மட்டுமே சிந்தி கொண்டு இருக்கும்.. துன்பத்தில் சிரிப்பவன் எவனோ அவனே ஞானி என்று கூறுவார்கள்.. ஆனால் நம்மில் பலர் மகிழ்ச்சியில் இருக்கும் போது கூட வாய்விட்டு சிரிப்பதில்லை... அதற்குக் காரணம் நான்கு பேர் ஒன்றாக இருக்கும் இடத்தில் சத்தம் போட்டு சிரித்தால் நம்மை தவறாக நினைத்து விடுவார்களோ என்ற மனநிலை தான் யார் நம்மை பற்றி என்ன நினைத்தால் என்ன நமக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்வதுதான் நமக்கு உள்ளார்ந்த மகிழ்ச்சி என்பதை அறிந்து நடப்பவர்கள் யாரோ அவர்கள்தான் உண்மையில் மகிழ்ச்சியாக இருப்பவர்கள்.
9. இதுவும் கடந்து போகும்:-
நம் வாழ்க்கையில் எவ்வளவோ அவமானங்களையும், பிரச்சனைகளையும் சந்தித்து இருப்போம் . அதையும் மீறி என்றாவது ஒரு நாள் நம் வாழ்க்கை நாம் நினைத்தபடி கண்டிப்பாக மாறும்... நாம் அதிகமாக நேசித்த ஒரு உறவோ அல்லது ஒரு பொருளோ நம்மை விட்டு போகும்போது நமது மனம் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் துன்பத்தில் தவிக்கும்.. ஆனால் அதை மட்டுமே நினைத்துக் கொண்டு இருந்தால் வரப்போகும் சந்தோசங்களை ஏற்க முடியாமல் போய்விடும்.. இதுவும் ஒரு நாள் கடந்து போகும் என்ற மனநிலை வளர்த்துக் கொண்டால் மனம் கொஞ்சம் தெளிவு பெறும்... வருவது வரட்டும் போவது போகட்டும் என்ற மனநிலையில் இருந்தால் மட்டுமே மகிழ்ச்சி என்ற ஒன்று நம் வாழ்வில் நிலைத்து நிற்கும்..
10. நம் வாழ்க்கை நம் கையில் :-
இந்த உலகில் நம்முடைய வாழ்க்கை என்பது ஒரு தடவை தான்.. நம் வாழ்க்கையில் நல்லதோ கெட்டதோ எந்த முடிவாக இருந்தாலும் நம் மனம் சொல்படி தான் கேட்க வேண்டும்... அடுத்தவர் வாழ்க்கைக்காக தான் நாம் வாழ வேண்டும் என்ற நிலை இருந்தால் எப்பொழுதும் நாம் சந்தோசமாக வாழ முடியாது... ஒரு சில சந்தர்ப்பங்களில் நாம் அடுத்தவரின் வாழ்க்கைக்காகவும் கொஞ்சம் விட்டுக்கொடுத்து செல்ல தான் வேண்டும்... அதேபோல் நம்முடைய வாழ்க்கையையும் நாம்தான் வாழ வேண்டும்... இன்னொரு பிறவி நமக்கு இருக்குமா இல்லையா என்று தெரியாது கிடைத்த இந்த ஒரு பிறவியில் ஒரு நாளையாவது நமக்கு பிடித்த மாதிரி வாழ்ந்து விட்டு போகணும். நமக்கு பிடித்த விஷயத்தை நம்மால் எளிமையாக எந்த தடையும் இன்றி செய்து முடிக்க முடியுமானால் நம்மை விட இந்த உலகில் மகிழ்ச்சியாக இருப்பவர் யாருமே கிடையாது.
{{comments.comment}}