சென்னை: பொதுவாக உணவு சாப்பிடும் போது, அது எந்த வகையான உணவாக இருந்தாலும் கவனமுடன் சாப்பிட வேண்டியது மிக மிக அவசியம். அவசரம் அவசரமாக சாப்பிடுவது, அரைகுறையாக மென்று சாப்பிடுவது, பல நேரங்களில் விபரீதங்களை ஏற்படுத்தி விடுவதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
சமீப காலமாக பரோட்டா சாப்பிட்டு தொண்டையில் சிக்கி இறந்தார், சிக்கன் சாப்பிடும்போது தொண்டையில் சிக்கி மரணம், மீன் தொண்டைக்குள் சிக்கி மரணம் என்ற செய்திகளை அடிக்கடி பார்க்க நேரிடுகிறது. அசைவ உணவுகள் சாப்பிடும் போது மிகுந்த கவனத்துடன் சாப்பிட வேண்டியது பொதுவாகவே அவசியமானது, முக்கியமானது. ஆனால் பலரும் அதை சரியாக சாப்பிடாமல், அவதி அவதியாக சாப்பிடுவது, வேகம் வேகமாக சாப்பிடுவது, சரியாக மெல்லாமல் சாப்பிடுவது என்று ஒரு அவசரகதியில் சாப்பிடுவதால் தான் இது போன்ற செயல்கள் அதிகமாக நடைபெறுகின்றன.
இப்படித்தான் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே 40 வயது கட்டுமானத் தொழிலாளர் ஒருவர் பரோட்டா தொண்டையில் சிக்கி இறந்துள்ளார். அவரது பெயர் சாந்தனன். வீட்டில் இவர் பரோட்டா சாப்பிடும் போது தொண்டையில் சிக்கிக் கொண்டுள்ளது. சில விநாடிகளிலேயே அவர் மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்து போனார். பரோட்டா பீஸ், அவரது மூச்சுக் குழாய்க்குள் போய் சிக்கிக் கொண்டதே இதற்குக் காரணம். இது போன்ற சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன.
பிய்த்துப் போட்டு பீஸ் ஆக்குங்கள்:
பரோட்டா என்பது சற்று கடினமான உணவு பொருள். வழக்கமான உணவு போல இதை கேஷுவலாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இந்த மாதிரியான கடின உணவுகளை, அசைவ உணவுகள் குறிப்பாக சிக்கன், மட்டன், மீன் சாப்பிடும் போது கூடுதல் கவனம் இருக்க வேண்டியது அவசியம்.
பரோட்டாவை பலர் தோசை போல சாப்பிடுவதைப் பார்த்திருப்போம். அப்படி சாப்பிடக் கூடாது. முதலில் பரோட்டோவை நன்றாக பிய்த்துப் போட்டுக் கொள்ள வேண்டும். சின்ன சின்ன பீஸாக பிய்த்துப் போட்ட பின்னர் அதில் சால்னாவோ அல்லது குழம்போ ஏதோ ஒன்றை ஊற்றி நன்றாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும். நன்றாக ஊறிய பின்னர் பீஸ் பீஸாக எடுத்து மெதுவாக மென்று தின்ன வேண்டும். அப்படி ஊற வைத்துச் சாப்பிடும்போதுதான், பரோட்டா நன்றாக சாஃப்ட்டாக இருக்கும், சாப்பிடுவதற்கும் எளிதாக இருக்கும். இல்லாவிட்டால் கடித்துத் தின்பதே சிரமமாக இருக்கும்.
சால்னாவில் ஊற வையுங்கள்:
அதேபோல சாப்பிடும்போது பேசாமல் சாப்பிடுவது முக்கியம். காரணம், பரோட்டா என்பது வழுவழுப்பானது, எளிதில் கரையாத ஐட்டமும் கூட. இட்லி, இடியாப்பம் அளவுக்கு இது மென்மையானதும் கிடையாது. வாய்க்குள் போட்டதுமே இது கரைந்து விடாது. நன்றாக மென்றுதான் உண்ண வேண்டும். இல்லாவிட்டால் சிக்கிக் கொள்ளும்.
சின்ன சின்ன பீஸாக எடுத்து நிதானமாக மென்று சாப்பிடும்போதுதான் இது சரியாக தொண்டைக்குள் இறங்கி பத்திரமாக வயிற்றுக்குப் போய்ச் சேரும். வேகம் வேகமாக சாப்பிடும்போது எங்காவது சிக்கிக் கொள்ளும் அபாயம் உள்ளது. எனவே தான் மற்ற உணவுகளை விட பரோட்டா சாப்பிடும்போது கவனமாக சாப்பிட வேண்டும் என்பார்கள். இது பரோட்டாவுக்கு மட்டுமல்ல, சப்பாத்தி உள்ளிட்டவற்றுக்கும் கூட பொருந்தும்.
நிதானமாக மென்று சாப்பிடுங்கள்:
பொதுவாகவே நம்மிடையே நிதானமாக சாப்பிடும் பழக்கம் கிட்டத்தட்ட அருகிப் போய் விட்டது. எதைச் சாப்பிட்டாலும் வேகமாக சாப்பிடுவது, சரியாக மெல்லாமல் சாப்பிடுவது என்று பழகி விட்டோம். நிதானமாக சாப்பிடுவது, நன்றாக மென்று சாப்பிடுவது நம்மிடையே பலரிடம் இல்லை. நமக்கு இயற்கை பற்களைக் கொடுத்திருப்பதே மென்று தின்ன வேண்டும் என்பதற்காகத்தான். நாம் அதை சரியாகவே பயன்படுத்துவதில்லை.
நிதானமாக, மென்று தின்பதால் சாப்பாட்டின் ருசியையும் உணர முடியும், பாதுகாப்பாகவும் உணவை உள்ளே அனுப்ப முடியும். எனவே எதை சாப்பிட்டாலும் நன்கு மென்று உண்ணுங்கள்.. கவனமாக சாப்பிடுங்கள், பாதுகாப்பாக சாப்பிடுங்கள்.
{{comments.comment}}