சென்னை: யாராவது ஏதாவது சொல்லிட்டா எனக்கு கோபத்தைக் கட்டுப்படுத்த முடியலைங்க.. கடுமையான கோபம் வந்துருது.. தலைக்கேறும் கோபத்தால் என்ன பேசறன்னு கூட தெரியலை.. வாயில் வந்ததையெல்லாம் பேசிடுறேன்.. சில நேரம் கையைக் கூட நீட்டிடுறேன்.. கெட்ட வார்த்தை வந்துருது.. "வேளச்சேரி சந்திரமோகன்- தனலட்சுமிக்கு" மட்டும் இல்லீங்க.. பலருக்கும் இந்தப் பிரச்சினை இருக்கிறது.. ஆனால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியும்.
அழுகை, சிரிப்பு, பசி போல கோபமும் ஒரு வகையான உணர்வுதான். உணர்வுகள் தூண்டப்படும்போது கோபம் வருகிறது. நமது ஈகோவை யாராவது தொட்டு விட்டால், சீண்டி விட்டால் கோபம் வருகிறது. ஏதாவது ஏமாற்றம் ஏற்பட்டால் அதை கோபமாக பலரும் வெளிப்படுத்துவது சகஜம்தான். யாராவது நம்மைத் திட்டி விட்டால் கோபம் வருகிறது.. யாராவது நம்மைக் கேலி செய்தால் கோபம் வருகிறது.. கோபம் வராத மனிதனைப் பார்க்கவே முடியாது. சிலருக்கு எந்த வகையில் அவர்களைத் தூண்டினாலும் உணர்வுகளை அதாவது கோபத்தை கட்டுப்படுத்தும் நிதானம், முதிர்ச்சி இருக்கும்.. ஆனால் அவர்களுக்குமே கூட கண்டிப்பாக கோபம் ஏதாவது ஒரு ரூபத்தில் வரத்தான் செய்யும்.. காரணம், அது மனித இயல்பு. Trigger ஆகாமல் பார்த்துக் கொண்டாலே எதையும் சமாளிக்க முடியும்.
உணர்வுகளைத் தவிர்க்க முடியாது.. குறைக்கலாம்
ரொம்ப நுனுக்கமாக சொல்வதாக இருந்தால், மனிதர்களால் எந்த உணர்வையும் தவிர்க்க முடியாது.. மாறாக அதைத் தடுக்கலாம் அல்லது குறைக்கலாம், கட்டுக்குள் வைத்திருக்கலாம்.. அது சாத்தியமே.
கோபப்படுவது ஒரு வகையில் நல்லது என்று உளவியல் சொல்கிறது. காரணம், அது நமக்குள் இருக்கும் நெகட்டிவிட்டியை வெளியில் கொண்டு வர உதவுகிறது என்பதால் கோபப்படுவது நல்லதுதான். எதையும் அடக்கக் கூடாது, அடக்க முடியாது என்பதுதான் இயற்கையின் விதியும் கூட. ஆனால் அதீத கோபமும், தேவையில்லாத கோபமும், பொறுமயாக இருக்க வேண்டிய இடத்தில் கோபப்படுவதும், பொருத்தமற்ற கோபமும் நமக்கே எதிராக திரும்பி விடும். அந்த மாதிரியான சமயங்களில் நாம் கோபத்தைக் கட்டுப்படுத்துவதே நல்லது.
சிலருக்கு எப்போதாவது கோபம் வரும்.. பலருக்கோ எப்பப் பார்த்தாலும் கோபம் வரும், எதற்கெடுத்தாலும் கோபம் வரும்.. காரணமே இல்லாமல் பலருக்குக் கோபம் வரும்.. .யாராவது தப்பு செய்தால் சிலருக்குக் கோபம் வரும்.. நாம் நினைத்தது நடக்காவிட்டால் சிலருக்குக் கோபம் வரும்.. இப்படி கோபங்கள் வருவதற்கு ஆயிரம் காரணம் உள்ளது. ஆனால் எல்லாக் கோபமும் நியாயமானதாக இருக்க முடியாது. நமக்கு வரும் கோபத்தை சற்று கட்டுக்குள் வைத்துக் கொண்டு, எதற்கெல்லாம் நாம் கோபப்படுகிறோம் என்று சற்று சிந்தித்துப் பார்த்தால், நிச்சயம் நம்மை நம்மால் சரி செய்ய முடியும்.
எத்தனை எத்தனை பாதிப்புகள் வருது பாருங்க
சரி கோபம் வருவதால் என்னவெல்லாம் பாதிப்பு.. உடல் ரீதியாக பார்த்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.. நரம்புத் தளர்ச்சி ஏற்படலாம்.. மன ரீதியாகவும் அது நமக்கு பாதிப்பைத் தரும். பலருக்கு Insecurity பிரச்சினை இருக்கும்.. அவர்களுக்கு யாராவது நமக்கு எதிராக இருக்கிறார்களோ, நம்மைக் கவிழ்த்து விடுவார்களோ.. எதிராக இருப்பார்களோ.. நம்மைப் பற்றிதான் புறணி பேசறாங்களோ என்று தேவையில்லாமல் பயந்து கொண்டே இருப்பார்கள். ஆனால் அதை வெளிக்காட்ட மாட்டார்கள். அதே சிந்தனையில் இருப்பதால் அவர்களுக்குள் ஒரு விதமான பதட்டம் இருக்கும். அந்த பதட்டத்தை சில நேரங்களில் தேவையில்லாத இடங்களில் கோபத்தின் வாயிலாக வெளிப்படுத்துவார்கள்.. சிடுசிடுவென இருப்பார்கள்.. அவர்கள் சிரிப்பதே அரிதாக இருக்கும்.. அப்படியே சிரித்தாலும் அது செயற்கையாக இருக்கும். காலப் போக்கில் இது மன நோயாகவும் மாறிப் போகும் அபாயமும் உள்ளது.
நமக்குள் வரும் உணர்வுகளை நாம் கட்டுப்படுத்தத் தெரிந்து கொள்ள வேண்டும். அதை எப்படி கட்டுக்குள் வைப்பது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.. அதற்கு முதலில் அந்த உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும்.. சரி கோபத்தை எப்படி புரிந்து கொள்வது?
கோபத்தை எப்படி கட்டுப்படுத்தலாம்
சிம்பிள்.. எதிர்பார்ப்புகளை முதலில் விடுங்கள். எது நடக்குமோ அதுதான் நடக்கும்.. எதிர்பார்த்தது நடந்தால் சந்தோஷமாக (அதிலும் நிதானம் தேவை) அதை எதிர்கொள்ளுங்கள்.. எதிர்பாராதது நடந்தால் அதை எதிர்கொள்ளும் மன பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அப்படிச் செய்வதால் Frustration குறையும், அது குறைந்தாலே பதட்டம் தானாக குறையும்.. பதட்டம் போனால் நிதானம் வந்து விடும்.. நிதானமாக இருந்தால் நிச்சயம் கோபம் வராது.
உங்களுக்குப் பிடிக்காதது நடந்து விட்டால் அதை இயல்பாக அதன் போக்கில் எடுத்துக் கொள்ள முயலுங்கள். அப்படிச் செய்யும்போது மனம் டென்ஷன் ஆகாது.. டென்ஷனைக் குறைத்தால் தானாக கோபமும் குறையும். கோபத்தைக் குறைக்க மன ரீதியாகவும் நாம் நம்மை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.
யாராவது உங்களை ஏதாவது சொல்லி விட்டால், விமர்சித்தால், உங்களிடம் கோபமாக பேசினால், ஏன் கெட்ட வார்த்தையே சொல்லித் திட்டினாலும் கூட.. உடனே பதட்டமடையாதீர்கள்.. மாறாக அவர்களிடம் நிதானமாக பேச முயலுங்கள். எடுத்த எடுப்பிலேயே யாரும் அதீதமாக திட்ட மாட்டார்கள்.. அவர்கள் சொல்வதை கேட்காமலோ அல்லது அதை இகழ்ந்தாலோ அல்லது நாம் ஏதாவது தவறாக பேசினாலோதான் எதிர்முனையில் இருப்பவர்கள் கோபமடைவார்கள். எனவே யாராவது ஏதாவது சொன்னால், அதில் நியாயம் இருந்தால் அதை கேட்பதிலும், ஏற்பதிலும் தவறில்லைதானே.. எனவே யாராவது ஏதாவது சொன்னால் உடனே கோபப்படாமல் பொறுமையாக அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்.. அதில் நியாயம் இருந்தால் தயக்கமே இல்லாமல் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். தேவையில்லாத விவாதம், சண்டை, கோபம் வராது.
பொது இடங்களில்தான் பலருக்கும் கோபம் வரும்.. காரணம் வழியில் சந்திக்கும் நபர்களின் செயல்கள், பேச்சுக்களால் நாம் கோபம் அடையும் சூழல் அதிகம். எனவே வீட்டை விட்டு வெளியே வந்து விட்டால், எதிர்கொள்ளும் எல்லோரும் உங்களைப் போல இருப்பார்கள் என்ற எண்ணத்தை முதலில் விட்டு விடுங்கள். மன ரீதியாக ஒரு விதமான தயார் நிலையில் இருந்து விடுங்கள்.. யார் எப்படி இருந்தாலும் அதை எதிர்கொண்டு அந்த சூழலுக்குப் போல செயல்பட முயலுங்கள்.. நீங்கள் வீட்டில் வீரனாக இருக்கலாம்.. கிங் ஆக இருக்கலாம்.. ஆனால் வெளியில் வந்து விட்டால் நீங்கள் பத்தோடு பதினொன்றுதான்.. எனவே அதை மனதில் கொண்டு விவேகமாக செயல்பட்டால்.. தேவையில்லாத சண்டைகளுக்கு வாய்ப்பே வராது.
பேசுங்கள்.. சிரியுங்கள்.. விட்டுக் கொடுங்கள்
எரிச்சல், விரக்தி, பதட்டம், மன அழுத்தம் இதெல்லாமும் கூட நம்மை கோபப்படுத்தும் முக்கியக் காரணிகள். இதை தவிர்த்தாலே, கோபத்தையும் நாம் குறைத்து விட முடியும். அதற்கென்று நிறைய வழிகள் உள்ளன. யோகாசனம் இருக்கிறது. அழகான மார்னிங் வாக் உங்களை இயல்பாக்க உதவும். நாலு பேரிடம் மனம் விட்டுப் பேசுங்கள்.. நல்லதாக பேசிப் பழகுங்கள்.. எல்லாவற்றையும் ரசிக்கப் பழகுங்கள்.. நண்பர்களை அதிகமாக வைத்துக் கொள்ளுங்கள். ஈகோவை விட்டுத் தள்ளுங்கள்.. நீங்களே முன்வந்து மற்றவர்களிடம் பேசுங்கள், செய்யுங்கள்.. இதெல்லாம் உங்களை இயல்பான மன நிலையில் வைத்துக் கொள்ள உதவும்.
இரு கை தட்டினால்தான் ஓசை வரும்.. எனவே யாராவது ஒருவர் இறங்கிப் போனாலே போதும்.. மற்றவரும் தானாக இறங்கி வந்து விடுவார்.. ரெண்டு பேரும் சேர்ந்து சவுண்டு கொடுத்தால்தான் அங்கு சண்டை ஆரம்பமாகும்.. விட்டுக் கொடுக்கும் யாரும் கெட்டுப் போனதாக சரித்திரமே இல்லை.
கோபத்தில் எழுபவன் நஷ்டத்துடன் அமருவான்
சமீபத்தில் நடந்த இரண்டு சம்பவங்களைப் பாருங்கள்.. சென்னையில் நள்ளிரவில் ஏன் இப்படி இங்கே இருக்கிறீர்கள். பாதுகாப்பு இல்லை, கிளம்பிப் போங்க என்று சொன்ன காவலர்களைப் பார்த்து ஒரு ஆணும், அவரது தோழியும் தேவையில்லாமல் கோபப்பட்டு, அகங்காரம் காட்டி, அதீதமான வார்த்தைப் பிரயோகத்தில் இறங்கி.. கடைசியில் என்னாச்சு.. இப்போது சிறைக்குப் போகும் நிலை ஏற்பட்டு விட்டது. கோபப்பட்டு எழுபவன் நஷ்டப்பட்டு அமர்வான் என்பார்கள்.. அதற்கு இதுதான் உதாரணம்.
அதேபோல மாமல்லபுரத்தில் பாருங்கள், இது ஒன்வே இந்தப் பக்கம் போகாதீங்க என்று சொன்னதற்காகவும், அந்த செக்யூரிட்டி பயன்படுத்திய வார்த்தைப் பிரயோகத்தாலும் கோபப்பட்டு ஒரு குடும்பமே தெருவில் இறங்கி சரமாரியாக அந்த நபரை அடித்து உதைத்த சம்பவம்.. எத்தனை கொடுமை.. எல்லாவற்றுக்குமே காரணம், தலைக்கு மேல் ஏறிய கோபம்தானே.. அதைத் தவிர்த்தால் இந்த செய்திகளுக்கே வேலையில்லாமல் போயிருந்திருக்கும்.
நமக்குக் கிடைத்திருப்பது ஒரு வாழ்க்கைங்க... அழகான வாழ்க்கை.. சந்தோஷமாகவும், சிரித்த முகத்துடனும், நாலு நல்ல விஷயங்களைச் செய்தும் இந்த வாழ்க்கையைக் கடந்து போகலாமே.. எதற்கு சண்டை சச்சரவுகள் தேவையில்லாத கோப தாபங்கள்.. மனதைப் பக்குவப்படுத்துங்கள்.. கோபத்தை விட்டொழியுங்கள்.. அது மனசுக்கும் நல்லதல்ல.. உடம்புக்கும் நல்லதல்ல..!
கோபப்படாம, பொறுமையாக இந்த கட்டுரையைப் படித்ததற்காக உங்களுக்கு ஒரு சபாஷ்ங்க!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}