பெங்களூரு: கர்நாடகத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருவதால் அங்கு "அரசியலும்" வேகம் பிடித்துள்ளது. விதம் விதமான புதிய புதிய பிரச்சினைகளால் மாநிலத்தில் அரசியல் சூடு அதிகமாக இருக்கிறது. தற்போது திப்பு சுல்தானை வைத்து ஒரு சர்ச்சை வெடித்துள்ளது.
திப்பு சுல்தான் கர்நாடகத்தின் அடையாளமாக பார்க்கப்படுபவர். வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட்ட மாவீரனாக கருதப்படுபவர். இந்த நிலையில் வீர் சவர்க்கரை, திப்பு சுல்தானுக்கு நேராக நிறுத்தி தனது பிரச்சாரத்தை பாஜக மேற்கொண்டு வருகிறது. இது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
இந்து சங் பரிவாரங்களைப் பொறுத்தவரை திப்பு சுல்தான் கட்டாயப்படுத்தி பல ஆயிரம் பேரை முஸ்லீமாக மாற்றிய சர்வாதிகாரி. இந்து விரோதி என்பதாகும். இதனால் அவரை தேசியவாதியாக கருத முடியாது, சுதந்திரப் போராட்ட வீரராக கருத முடியாது என்று இந்து பரிவாரங்கள் கூறி வருகின்றன. இதை முன்வைத்தே தற்போது தேர்தலில் ஒரு பிரச்சினையாக திப்பு சுல்தானை கையில் எடுத்துள்ளது பாஜக.
சமீபத்தில் இந்த விவகாரத்தில் ஒரு புதிய ஐட்டத்தை எடுத்து வீசியது பாஜக. திப்பு சுல்தானை உண்மையில் கொன்றதோ ஆங்கிலேயப் படைகளோ அல்லது மராத்தா ராணுவமோ அல்ல.. மாறாக, ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த ஊரி கெளடா மற்றும் நஞ்சே கெளடா ஆகியோர்தான் திப்பு சுல்தானைக் கொன்றவர்கள் என்று பாஜக கூறியது பெரும் சலசலப்பையும், அதிர்ச்சி அலைகளையும் அங்கு ஏற்படுத்தியுள்லது.
இது மிகத் தவறான கருத்து. அப்படிப்பட்ட இருவர் உண்மையில் இல்லவே இல்லை. அது கற்பனை என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். ஆனால் பாஜக தான் சொன்ன கருத்தை வாபஸ் பெறத் தயாராக இல்லை. குறிப்பாக ஒக்கலிகா வகுப்பைச் சேர்ந்த பாஜக தலைவர் சி.டி. ரவி, அமைச்சர்கள் அஸ்வத் நாராயண், கோபாலய்யா போன்றோர், ஊரி கெளடா - நஞ்சே கெளடாதான் திப்புவைக் கொன்றனர் என்று அடித்துக் கூறி வருகின்றனர்.
இதனால் சலசலப்பு கூடியுள்ளது. கர்நாடகத்தைப் பொறுத்தவரை இரு பெரும் ஜாதிகள் உள்ளன. ஒன்று ஒக்கலிகா இன்னொன்று லிங்காயத். இதில் லிங்காயத்து வகுப்பினர் பெரும்பாலும் பாஜகவுக்கே ஆதரவாக இருக்கின்றனர். ஆனால் ஒக்கலிகா வாக்குகள் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகியோருக்கு பிரிந்து செல்லும். தேவெகெளடா ஒக்கலிகா பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் இந்த வகுப்பினர் தொடர்ந்து கெளடாவின் அரசியலுக்கு துணை நின்று வருகின்றனர். தற்போது இந்த வாக்கு வங்கியை உடைக்கும் முகமாகவே ஊரி கெளடா - நஞ்சே கெளடா என இருவரை கையில் எடுத்துள்ளது பாஜக என்று கருதப்படுகிறது.
ஆனால் இல்லாத இருவரை வைத்து பாஜக பொய்ப் பிரச்சாரம் செய்வதாக காங்கிரஸும், மதச்சார்பற்ற ஜனதாதளமும் குற்றம் சாட்டியுள்ளன. ஆனால் பாஜக தனது வேலையில் படு தீவிரமாகியுள்ளது. பாஜகவைச் சேர்ந்தவரும், முன்னாள் சினிமாத் தயாரிப்பாளருமான தற்போதைய தோட்டக்கலைத்துறை அமைச்���ர் முனிரத்னா, ஊரி கெளடா - நஞ்சே கெளடா ஆகியோரை வைத்து படம் எடுக்கப் போவதாக வேறு அறிவித்துள்ளார்.
அவர்களது பெயரையே படத்துக்கும் வைத்துள்ளார்.
இப்படி பாஜக தனது வழி தனி வழி என்று பாய்ந்தோடிச் செல்ல ஆரம்பித்துள்ளதால் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளார் ஒக்கலிகா பிரிவு மடாதிபதியான ஸ்ரீ ஆதி சுன்சனகிரி மடத்தின் தலைவர் நிர்மலானந்தானந்தா மகாசுவாமிஜி. எந்தக் கருத்தை யார் சொன்னாலும் மடத்தின் ஆலோசனையைப் பெற்ற பிறகே தெரிவிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இந்த விவகாரத்தை வைத்து திரைப்படம் எடுக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனால் பாஜக தலைவர்கள் பலர், சி.டி. ரவியின் கருத்துக்கு முரணாக உள்ளனர். ஊரி கெளடா - நஞ்சே கெளடா குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சுதாகரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, எனக்குத் தெரிந்த ஒரே கெளடா தேவே கெளடா மட்டும்தான் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
மருது சகோதரர்களை வைத்து குழப்பம்
இதை விட பெரிய காமெடி என்னவென்றால் அமைச்சர் முனிரத்தினா நடத்திய பட பூஜை விழாவில் ஊரி கெளடா - நஞ்சே கெளடா படத்துக்குப் பதில் மருது பாண்டியர் சகோதரர்களின் படத்தை வைத்திருந்தது பெரும் காமெடியாகியுள்ளது. இந்த உண்மையை ஆல் நியூஸ் முகம்மது ஜுபைர் தனது டிவிட்டர் பக்கத்தில் அம்பலப்படுத்தியதால் பாஜகவினருக்கு பெரும் தர்மசங்கடமாகி விட்டது.
தேர்தல் முடிவதற்குள் என்னென்ன கூத்தெல்லாம் நடக்கப் போகுதோ!
{{comments.comment}}