சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சியையும், எழுச்சியையும் ஒரு கட்டுரையில் முடித்து விட முடியாது.. இன்னும் விளங்கச் சொல்வதானால் ஒரு பானைக்குள் அடங்கி விடக் கூடியதல்ல விசிகவின் வெற்றி.. அத்தனை போராட்டங்கள், அவமானங்கள், புறக்கணிப்புகளைக் கண்டு அதிலிருந்து மீண்டு புடம் போட்டத் தங்கமாய் இன்று அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
திருமாவளவன் என்ற ஒற்றை மனிதரின் வீரப் போராட்டம்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இன்றைய எழுச்சிக்கு முக்கியக் காரணம். இதில் வேறு யாருமே உரிமை கொண்டாடவே முடியாது. அந்த அளவுக்கு அரும்பாடுபட்டு இந்த கட்சியை இன்று அங்கீகாகரம் பெற்ற ஒற்றை தலித் சக்தியாக மாற்றிக் காட்டியிருக்கிறார் திருமாவளவன். தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட ஒரே தலித் கட்சி இந்த நொடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மட்டுமே.
அடக்க அடக்க வளர்ந்த விசிக
தலித் பேந்தர் இயக்கமாகத்தான் ஆரம்பத்தில் விசிக பிறந்தது. மதுரையில் தலித் பேந்தர் இயக்கமாக மலைச்சாமியால் தொடங்கப்பட்ட இயக்கம்தான் இன்றைய விசிக. மலைச்சாமியின் மறைவுக்குப் பின்னர் இயக்கம் திருமாவின் கைக்கு வந்தது. பின்னர் இதை அரசியல் இயக்கமாக மாற்றி விடுதலைச் சிறுத்தைகள் என்று பெயரிட்டார் திருமாவளவன். அதன் பிறகு அவர் சந்தித்த சவால்கள், அடக்குமுறைகள், அவமானங்கள் எண்ணற்றவை. இருந்தாலும் மனிதர் விடவில்லை, பயப்படவில்ல, ஓயவில்லை. மாறாக எதிர்த்து போராட ஆரம்பித்தார். அடக்க அடக்க எதுவுமே வெடித்து சிதறி விஸ்வரூபம் எடுக்கும் என்பதை நிரூபித்த கட்சிதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
சந்தித்த அவமானம் ஒவ்வொன்றையும் தனது கட்சியின் வளர்ச்சிக்கான படிக்கட்டுக்களாக அடுக்கி வைத்து அதன் மீது ஏறி நின்று எகிறி அடித்தார். தேர்தல் அரசியலில்தான் விசிகவுக்கு நிறைய அவமானங்கள் கிடைத்தன. ஒரு சீட்டுக்கும், இரண்டு சீட்டுக்கும் மட்டுமே விசிகவை கூட்டணியில் சேர்த்தன பெரும் கட்சிகள். இது திருமாவுக்கும் தெரிந்தாலும் கூட அவர் அதை பொருட்படுத்தவில்லை. மாறாக தனது கட்சிக்கான, தனது மக்களுக்கான அங்கீகாரம் மட்டுமே முக்கியம் என்பதை மனதில் வைத்து தனது கொள்கைக்கும் பங்கம் வந்து விடாமல் தளராத மனதுடன் தனக்கு சரியான கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு வந்தார்.
தேர்தல் அரசியலில் விசிக
1999ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸுடன் கூட்டணி வைத்து முதல் தேர்தலை விசிக சந்தித்தது. அதில் தமாகவின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. 2 தொகுதிகளை ஒதுக்கி போட்டியிட்ட நிலையிலும் இரண்டிலும் தோல்வியே கிடைத்தது. தொடர்ந்து 2004 லோக்சபா தேர்தலிலும் விசிக போட்டியிட்டது. அதில் ஐக்கிய ஜனதாதள கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட விசிகவுக்கு 8 இடங்கள் ஒதுக்கப்பட்டன. வழக்கம் போல அதிலும் தோல்விதான். இப்படி தொடர் தோல்விகளைச் சந்தித்த விசிகவுக்கு முதல் வெற்றி கிடைத்தது 2006 சட்டசபைத் தேர்தலில்தான். அதிமுகவுடன் கூட்டணி வைத்து 9 தொகுதிகளைப் பெற்று இரண்டு தொகுதிகளில் வெற்றியைப் பெற்று தனது முதல் அங்கீகாரத்தை சுவைத்தது விசிக. அந்தத் தேர்தலில் மணி சின்னத்தில் போட்டியிட்டது விசிக.
அடுத்து 2009ல் வந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றது விசிக. இத்தேர்தலில் அக்கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டன. நட்சத்திரம் சின்னத்தில் அப்போது போட்டியிட்ட விசிக ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. அதாவது திருமாவளவன் மட்டும் சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்றார்.
தட்டுத்தடுமாறிய பயணம்
தொடர்ந்து மாறி மாறி ஒவ்வொரு முறையும் ஒரு சின்னம், ஒரு கூட்டணி விசிகவின் பயணம் தட்டுத் தடுமாறியபடி தொடர்ந்தது. 2011 சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்டு பத்திலும் தோல்வி, 2014 லோக்சபா தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் தோல்வி, 2016 சட்டசபைத் தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வி என்று அடுத்தடுத்து தோல்விகளைச் சுமந்து வந்த விசிக, 2019 லோக்சபா தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் ஒன்றில் பானைச் சின்னத்திலும், இன்னொரு தொகுதியில் (விழுப்புரம்) உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டது. இரண்டிலும் வென்றது. இதையடுத்து வந்த 2021 சட்டசபைத் தேர்தலில் 6 இடங்களை ஒதுக்கியது திமுக. அதில் நான்கு இடங்களில் வென்று சட்டசபை வரலாற்றிலேயே முதல் முறையாக அதிக அளவிலான எம்எல்ஏக்களைப் பெற்று புதிய கெளரவம் சேர்த்துக் கொண்டது விசிக.
இதையடுத்து 2024ல் நடந்த லோக்சபா தேர்தலில் மீண்டும் இரண்டு இடங்களில் பானைச் சின்னத்தில் போட்டியிட்டு தனது தேர்தல் அரசியல் அங்கீகாரத்தையும் பெற்று சாதனை படைத்தது விசிக. மாநிலம் தழுவிய அளவில் வாக்கு வங்கி இருந்தாலும் கூட, வட தமிழ்நாட்டில் பாமகவுக்கு கடும் போட்டியைக் கொடுக்கக் கூடிய சக்தியாக இருந்தாலும் கூட எடுப்பார் கைப்பிள்ளை நிலையில்தான் விசிகவை மற்ற கட்சிகள் இன்று வரை பார்த்து வருகின்றன. அதை மாற்ற வேண்டும், பெரும் சக்தியாக உருவெடுக்க வேண்டும், தலித் சமுதாயத்திற்கான அங்கீகாரத்தை அழுத்தம் திருத்தமாக பெற வேண்டும் என்ற ஒரே காரணத்தால்தான் தன்னைத் துரத்தும் விமர்சனங்கள், அவதூறுகள், அவமானங்களை திருமாவளவன் சகித்துக் கொண்டிருக்கிறார்.
கொள்கையில் உறுதி காட்டிய திருமாவளவன்
2 சீட்டுக்காக இப்படி கூட்டணி வைக்க வேண்டுமா என்ற கேள்வி கிட்டத்தட்ட நிரந்தரமாகி விட்டது. ஆனாலும் திருமாவளவன் அதற்கு தொடர்ந்து அசராமல் பதிலளித்தபடிதான் இருக்கிறார். சீட் முக்கியமல்ல, கொள்கை முக்கியம், கட்சி முக்கியம் என்பதே அவரது ஒரே பதிலாக உள்ளது. தனது கொள்கையில் எந்த சமரசமும் செய்து கொள்வதில்லை திருமாவளவன். கட்சியின் வளர்ச்சி, தனது கொள்கை, கட்சியின் எதிர்காலம் இதை மட்டுமே மனதில் கொண்டு அவர் தொடர்ந்து அயராமல் கடுமையாக உழைத்ததன் விளைவே இன்று விசிகவுக்குக் கிடைத்திருக்கும் மாநிலக் கட்சி அங்கீகாரம்.
சும்மா வந்து விடவில்லை இந்த அங்கீகாரம்.. திருமாவளவன் என்ற தனி மனிதரின் தொடர் போராட்டங்கள் கொடுத்த உரமே இன்றைய எழுச்சிக்கு முக்கியக் காரணம். பாராட்டுவோம் திருமாவையும், விடுதலைச் சிறுத்தைகளையும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பொங்கல் மட்டுமல்ல.. எல்லா நேரத்திலும் உழவர்களை நினைக்க வேண்டும்.. கார்த்தி
பாஜக தலைவராக அண்ணாமலை நீடிப்பாரா?.. புதிய தலைவரை தேர்வு செய்ய மத்திய அமைச்சர் வருகை!
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி.. பொங்கலுக்கு மழை இருக்கு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!
மீண்டும் மீண்டும் உயரும் தங்கம் விலை... இப்படியே.. போனா எப்படி... புலம்பும் வாடிக்கையாளர்கள்!
விழுந்து விழுந்து அடிபட்டாலும்.. தளராமல் எழுந்து வந்து.. எழுச்சி பெற்ற விடுதலைச் சிறுத்தைகள்!
தேர்தலுக்கு முன்னும் பின்னும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதே ஆட்சியாளர் எண்ணம்: தவெக தலைவர் விஜய்
சென்னை அயலகத் தமிழர் நாள் விழாவில்.. வடஅமெரிக்க தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் புத்தக கண்காட்சி
7வது முறையாக திமுக ஆட்சி அமையும்.. ஏற்றம் காணும் அரசாக அது இருக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
ரியாஸ்கானின் தாயாரும்.. உமா ரியாஸின் மாமியாருமான.. ரஷிதா பானு காலமானார்!
{{comments.comment}}