டெல்லி: நாடாளுமன்றத்துக்குள் இரு இளைஞர்கள் அத்துமீறி நுழைந்ததோடு, லோக்சபாவுக்குள்ளும் குதித்து போராட்டம் நடத்தியிருப்பது நாட்டையே அதிர வைத்துள்ளது. இவர்கள் எப்படி இத்தனை பாதுகாப்பையும் மீறி உள்ளே நுழைந்தனர் என்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
இன்று காலை நாடாளுமன்றத்திற்கு உள்ளும் வெளியும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டனர் நான்கு பேர். லோக்சபாவுக்குள் புகுந்த 2 பேர் அங்கிருந்த பார்வையாளர் மாடத்திலிருந்து குதித்து சபையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். அதேபோல நீலம் என்ற பெண் உள்ளிட்ட 2 பேர் வெளியில் போராட்டம் நடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.
மிக மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்ட இடம்தான் நாடாளுமன்ற வளாகம். எம்.பிக்களே கூட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களைத் தாண்டித்தான் உள்ளே போக முடியும். உரிய அடையாளங்கள் இல்லாவிட்டால் எம்.பிக்களே கூட உள்ள போய் விட முடியாது. அப்படிப்பட்ட இடத்தில் 2 பேர் ஊடுறுவி மிக மிக சாதாரமாக போராட்டம் நடத்தியிருப்பது அனைவரையும் அதிர வைத்துள்ளது.
இதுவரை நாடாளுமன்றத்திற்குள் இப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லை. குறிப்பாக லோக்சபாவுக்குள் எந்த அத்துமீறலும் நடந்ததில்லை. பழைய நாடாளுமன்றக் கட்டத்திற்கு வெளியே தீவிரவாதத் தாக்குதல் நடந்த தினத்தன்று, புதிய நாடாளுமன்றத்திற்குள் இப்படி ஒரு அத்துமீறல் நடந்திருப்பது அதிர்ச்சிஅடைய வைத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் ஊடுறுவி பிடிபட்ட நான்கு பேரில் ஒருவரான சாகர் சர்மா என்பவருக்கு லோக்சபாவுக்குள் செல்வதற்கான பாஸ், பாஜகவைச் சேர்ந்த மைசூரு எம்.பி. பிரதாப் சிம்ஹா மூலம் கிடைத்ததாக கூறப்படுகிறது. அவரிடம் என்ன சொல்லி சாகர் சர்மா பாஸ் வாங்கினார் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இதுபோல ஊடுறுவச் சொல்லி திட்டமிட்டுக் கொடுத்தது யார் என்பதும் கேள்வியாக எழுந்துள்ளது.
இவர்களுக்குப் பின்னால் ஏதாவது அமைப்பு இருக்கலாம் என்ற சந்தேகமும் காவல்துறைக்கு உள்ளது. அதுகுறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
சபாநாயகர் ஓம் பிர்லா உறுதி
இந்த சம்பவம் குறித்து சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகையில், இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது. அனைத்து அமைப்புகளும் இணைந்து விசாரித்து வருகின்றன. முழுமையான விசாரணை நடத்தப்படும். ஊடுறுவல்காரர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டு விட்டனர். உறுப்பினர்களின் அனைத்துக் கவலைகளும் கவனிக்கப்படும்.
சபைக் கூட்டத்தை சலனம் இல்லாமல் தொடர்ந்து நடத்த வேண்டியது நமது கடமை. அனைத்து உறுப்பினர்களும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து லோக்சபா கூட்டம் தொடர்ந்தது. இருப்பினும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை எழுப்பிய வண்ணம் இருந்ததால் மாலை 4 மணி வரை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
{{comments.comment}}