கும்பமேளா பயணிகள் 18 பேர் பலி.. டெல்லி ரயில் நிலையத்தில் நடந்த விபரீதத்திற்கு இதுதான் காரணம்!

Feb 16, 2025,03:16 PM IST

டெல்லி: கும்பமேளாவுக்குச் செல்லும் 2 ரயில்கள்  புறப்படத் தாமதமானதால்,  பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு அதில் சிக்கி 18 பேர் பலியாகியுள்ள சம்பவம் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. ரயில்கள் புறப்பாடு தாமதமானதால் ரயில் நிலையத்தில் அளவுக்கு அதிகமாக கூட்டம் கூடியதால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.


இறந்தவர்களில் 11 பேர் பெண்கள், 4 பேர் குழந்தைகள் என்று கூறப்படுகிறது. சனிக்கிழமை இரவு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீட்டை ரயில்வே துறை அறிவித்துள்ளது. படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 2.5 லட்சம் உதவியும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடும் அறிவிக்கப்பட்டுள்ளது.




இறந்தவர்களில் 9 பேர் பீகாரைச்  சேர்ந்தவர்கள். எட்டு பேர் டெல்லிக்காரர்கள். ஒருவர் ஹரியானா என்று தெரிய வந்துள்ளது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இந்த சம்பவம் தொடர்பாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.


நடந்தது என்ன?


இரவு 8 மணியளவில் 14 மற்றும் 15வது பிளாட்பாரங்களில் கூட்டம் திடீரென கிடுகிடுவென அதிகரித்தது. இந்த இரு பிளாட்பாரங்களிலும் காத்திருந்தவர்கள் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்குச் செல்வதற்காக ரயில்களுக்குக் காத்திருந்தனர்.  அவர்கள் செல்லும் ரயில்கள் புறப்படத் தாதமாகி வந்ததால் கூட்டம் கட்டுக்கடங்காமல் போய் பெரும் நெரிசல் ஏற்பட்டது.  இதனால்தான் இந்த விபரீதம் ஏற்பட்டு விட்டது.


கூட்ட நெரிசல் தொடர்பாக எந்தவிதமான வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று ரயில்வே அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். முதலில் உயிரிழப்பு குறித்து ரயில்வே அதிகாரிகள் எதுவும் அறிவிக்கவில்லை. ஆனால் டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும்தான் உயிரிழப்பு குறித்து தெரிவித்தனர். 


உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவுக்காக நாட்டின் பல்வேறு நகரங்களிலிருந்தும் ஏராளமான சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் எந்த ரயிலிலும் இடம் போதவில்லை. கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கிறது. இதனால் பல ஊர்களில் கும்பமேளாவுக்காக போகக் காத்திருப்பவர்கள் ரயில்களின் கண்ணாடிகள், கதவுகளை உடைத்து உள்ளே ஏறும் சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. பிப்ரவரி 26ம் தேதியுடன் கும்பமேளா நிறைவு பெறவுள்ளது.


இதற்கிடையே கும்பமேளா தேதியை நீட்டிக்க வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார். மிகப் பெரிய அளவிலான மக்கள் கும்பமேளாவுக்குப் போகக் காத்துள்ளனர். ஆனால் போக முடியாத அளவுக்கு கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே கும்பமேளாவில் பங்கேற்ற புனித நீராடும் கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


கும்பமேளா நிறைவுடையும் நாளான பிப்ரவரி 26ம் தேதி மகா சிவராத்திரி வேறு வருகிறது. எனவே அன்று மிகப் பெரிய அளவில் கூட்டம் கூடும் என்பதால் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

news

சபரிமலையில் நடிகர்கள் கார்த்தி ரவி மோகன் சுவாமி தரிசனம்!

news

Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?

news

என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!

அதிகம் பார்க்கும் செய்திகள்