டெல்லி: கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று தமிழில் சொல்வார்கள். ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதும் யுனிவர்சல் பொது மொழிதான். அதை உணராமல் போய், தேவையில்லாத ஈகோவால் டெல்லியில் மண்ணைக் கவ்வியுள்ளனர் ஆம் ஆத்மியும், காங்கிரஸும். இவர்களின் தோல்வியால் ஒட்டுமொத்த இந்தியா கூட்டணியும் வட இந்தியாவில் கேலிக்குரியதாகியுள்ளது.
பாஜக 46 சதவீத வாக்குகளைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றி விட்டது.. மறுபக்கம் ஆம் ஆத்மி 45 சதவீத வாக்குகள் வரை கைப்பற்றி ஆட்சியை இழந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தேர்தலில் 6 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. ஆனால் ஒரு இடமும் ஜெயிக்கவில்லை. கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு விஷயம் புரியும்- ஆம் ஆத்மியும், காங்கிரஸும் கை கோர்த்து போட்டியிட்டிருந்தால் இந்நேரம் பாஜக எதிர்க்கட்சி வரிசையில் இருந்திருக்கும். ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்திருக்கும்.
ஆம் ஆத்மியும், காங்கிரஸும் பிரிந்ததால்தான் ஆம் ஆத்மியின் வெற்றிக்கான வாய்ப்புகள் சிதறிப் போய் விட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஆம் ஆத்மியின் தோல்விக்கு நாங்கள் பொறுப்பு கிடையாது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். அதேசமயம், இருவரும் இணையாமல் போனதால்தான் ஆட்சியைப் பறி கொடுத்துள்ளது ஆம் ஆத்மி என்று பரவலாக சொல்லப்படுகிறது.
விட்டுக் கொடுக்க முன்வராத ஆம் ஆத்மி- காங்கிரஸ்
பாஜக கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருந்த நிலையில், நாலாபக்கமும் தீவிரமான நெருக்கடிகள் ஆம் ஆத்மிக்கு தரப்பட்டு வந்த நிலையில் நிச்சயம், காங்கிரஸ் கூட்டணியை கெஜ்ரிவால் உறுதி செய்திருக்க வேண்டும். அதில் எப்படி அவர் தவறினார் என்பதுதான் பெரும் கேள்வியாக உள்ளது. இந்த இடத்தில்தான் இரு கட்சிகளுக்கும் இடையிலான ஈகோ விஸ்வரூபம் எடுத்து நின்று விலா நோக சிரித்துக் கொண்டிருக்கிறது. யார் பெரியவர் என்ற மோதலில், ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லாத காரணத்தால்தான் கூட்டணி அமையாமல், ஆட்சியைப் பறி கொடுத்துள்ளனர்.
இதற்கு முன்பு ஹரியனா சட்டசபைத் தேர்தலிலும் இதுதான் நடந்தது. காங்கிரஸ் கட்சி கூட்டணிக்குத் தயாராக இருந்தபோதிலும் கூட ஆம் ஆத்மி அதில் கெத்து காட்டியதால் கூட்டணி அமையவில்லை. ஆம் ஆத்மியும், காங்கிரஸும் தனித்துப் போட்டியிட்டனர். இருவரும் இணைந்திருந்தால் நிச்சயம் பாஜகவுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்திருக்க முடியும். அதைச் செய்யத் தவறினர். விளைவு தனித்தனியாக போட்டியிட்ட ஆம் ஆத்மி ஒரு இடத்திலும் ஜெயிக்கவில்லை. காங்கிரஸ் 37 இடங்களில் வென்றது. ஆட்சியைத் தக்க வைத்த பாஜகவோ, 48 இடங்களில் வென்றது. ஒரு வேளை காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி அமைத்துப் போட்டியிட்டிருந்தால் நிச்சயம் பாஜகவுக்கு இந்த வெற்றி கிடைத்திருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கக் கூடும்.
ஒட்டாமல் பயணிக்கும் ஆம் ஆத்மி - காங்கிரஸ்
ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸும், ஆம் ஆத்மியும் ஒட்டாமல்தான் பயணிக்கின்றன. தனது பிரதான எதிரியாக பாஜகவை விட ஆம் ஆத்மியைத்தான் காங்கிரஸ் கருதுகிறது. காரணம், தனது இருப்பைக் காலி செய்வதில் பாஜகவை விட ஆம் ஆத்மிதான் மிக வேகமாக இருப்பதாக அது நினைக்கிறது. அதில் ஓரளவு உண்மையும் உள்ளது. பாஜகவுக்கு மாற்றுக் கட்சியாக காங்கிரஸ் இருந்து வந்த நிலை மாறி அந்த இடத்தைப் பிடிக்கவே ஆம் ஆத்மியும் ஆர்வம் காட்டுகிறது.. ஒவ்வொரு மாநிலமாக அதைத்தான் அது குறி வைத்து செய்தும் வந்தது. இதனால்தான் ஆம் ஆத்மியிடம் நெருங்க காங்கிரஸ் ஆர்வம் காட்டுவதில்லை. இந்தியா கூட்டணியில் கூட ஆரம்பத்தில் ஆம் ஆத்மி இடம் பெறவில்லை. கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பு நாட்டின் பெரும்பாலான முக்கியக் கட்சிகள் கூட்டணியில் இணைந்த நிலையில் ஆம் ஆத்மியும் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்று திரினமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வலியுறுத்தியதால்தான் வேறு வழியில்லாமல் காங்கிரஸ் இறங்கி வந்தது. ஆம் ஆத்மி இந்தியா கூட்டணிக்குள் வந்தது.
ஆனால் லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் இரு கட்சிகளும் மீண்டும் ஆளுக்கு ஒரு பக்கம் பிய்த்துக் கொண்டு போக ஆரம்பித்தனர். இரு கட்சிகளுக்கும் இடையில் உள்ள ஈகோதான் இந்த ஒற்றுமையின்மைக்கு முக்கியக் காரணம். டெல்லி தேர்தலில் கூட்டணி அமையாமல் போனதற்குக் காரணம், உள்ளூர் தலைவர்களுக்கு இடையே நிலவிய ஈகோ பிரச்சினை, கருத்தொற்றுமை ஏற்படாதது, விட்டுக் கொடுக்க முன்வராதது, தேவையில்லாத பிடிவாதம், நான் பெரியவனா நீ பெரியவனா என்ற மோதல் என பல காரணங்களைச் சொல்லலாம். மனதார கூட்டணி அமைய வேண்டும் என்று இரு கட்சிகளுமே நினைக்கவில்லை. இதனால்தான் கூட்டணி அமையாமல் போய் விட்டது. இணைந்து செயல்பட வேண்டும் என்றால் யாராவது ஒருவர் இறங்கிப் போக வேண்டும். ஆனால் இருவருமே அதற்குத் தயாராக இல்லாத காரணத்தால் அது சாத்தியமில்லாமல் போய் விட்டது.
11 தொகுதிகளில் தப்பிய பாஜக
அத்தோடு 2024 லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டும் இருகட்சிகளுக்கும் டெல்லியில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 7 இடங்களையும் பாஜகவே வென்று விட்டது. இதனாலும் கூட காங்கிரஸுடன் இணைவதை ஆம் ஆத்மி விரும்பவில்லை. இதுவும் ஒரு முக்கியக் காரணம். இப்படிப் பல்வேறு காரணங்களால் தான் கூட்டணி அமையாமல் போய் விட்டது. இவர்கள் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் நிச்சயம் 11 தொகுதிகளில் பாஜக தோற்றிருக்கும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அது நடந்திருந்தால் நிச்சயம் பாஜகவுக்கு சிக்கலாகியிருக்கும். இவ்வளவு பெரிய வெற்றியை அது பெற்றிருக்க முடியாது.
அதாவது புது டெல்லி (இங்குதான் கெஜ்ரிவால் போட்டியிட்டு தோல்வியுற்றார்), ஜனக்புரா, கிரேட்டர் கைலாஷ், பத்லி, திமார்பூர், மாள்வியா நகர், ராஜிந்தர் நகர், நங்கோலாய் ஜாட், சாதர்பூர், சங்கம் விஹார், திரிலோக்புரி ஆகிய தொகுதிகளில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில்தான் பாஜக வென்றுள்ளது. இந்தத் தொகுதிகளில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் வேட்பாளர்களின் வாக்குகளைச் சேர்த்தால், அது பாஜகவின் வெற்றி வித்தியாசத்தை விட அதிகமாக வருகிறது. எனவே ஆத் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி அமைக்காமல் போனதால்தான் பாஜக வென்றுள்ளது என்பதை எளிதாக உணர முடியும்.
வலிமையான கூட்டணி அவசியம்
நாடு தழுவிய அளவில் வலிமையான எதிர்க்கட்சி கூட்டணி அமைந்த காரணத்தால்தான் பாஜகவுக்கு கடந்த லோக்சபா தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் போனது. தேசிய ஜனநாயகக் கூட்டணியாகத்தான் ஆட்சியமைக்க முடிந்தது. இன்னும் சில முக்கியமான எதிர்க்கட்சிகளும் கூட்டணியில் இணைந்திருந்தால், அதாவது நிதீஷ் குமார், சந்திரபாபு நாயுடு போன்றோரையும் கஷ்டப்பட்டாவது சேர்த்திருந்தால் இப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியாகக் கூட பாஜக ஆட்சியில் இருந்திருக்க முடியாது. இந்த உண்மை தெரிந்தும் கூட அடுத்தடுத்து இரு முக்கிய சட்டசபைத் தேர்தல்களை கோட்டை விட்டுள்ளன ஆம் ஆத்மியும், காங்கிரஸும். இது இந்தியா கூட்டணிக்கு நல்லதல்ல என்று அக்கூட்டணியின் முக்கியத் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த இடத்தில்தான் தமிழ்நாட்டில் திமுக மேற்கொண்டு வரும் கூட்டணி பார்முலா ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ரோல்மாடலாக இருக்கிறது. வலிமையான கூட்டணி அமைப்பதற்காக தன்னுடைய நிலையிலிருந்து எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு இறங்கி வர திமுக தயங்காது. தனது சீட்டுகளைக் கூட குறைத்துக் கொண்டு கூட்டணிக் கட்சிகளைத் திருப்திப்படுத்த முயலும். கூட்டணியை தக்க வைக்கவும், அதை வலிமையாக்கவும் அனைத்து விதங்களிலும் ஆக்கப்பூர்வமாக திமுக முயலும். இது அனைவருக்கும் தெரிந்த உண்மைதான். இதனால்தான் கடந்த பல தேர்தல்களாக திமுக கூட்டணி எந்த பிளவும் இல்லாமல் படு வலிமையாக இருக்கிறது.
இப்படிப்பட்ட வலிமையான கூட்டணியை தேசிய அளவில் அமைக்க வேண்டும் என்ற நோக்கில்தான் இ்நதியா கூட்டணியே உருவானது. ஆனால் தலைநகரிலேயே இந்தக் கூட்டணி தவிடுபொடியாக நிற்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள ஆம் ஆத்மியும், காங்கிரஸும் முன்வருவார்களா?
சென்னையில்.. இரண்டே முக்கால் மணி நேரம் விஜய்யுடன் தீவிர ஆலோசனை நடத்திய.. பிரஷாந்த் கிஷோர்!
டெல்லி முதல்வராக மீண்டும் ஒரு பெண்.. பாஜகவின் திட்டம் இதுதான்.. பதவியேற்பு விழா எப்போது?
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஸ்டேடியத்தில்.. நாளை தொடங்கி.. 3 நாட்கள் விறுவிறு ஜல்லிக்கட்டு!
பெரியாரை ஏற்க மாட்டேன்.. இப்பதான் தொடங்கியுள்ளேன்.. போகப் போக நிறைய உள்ளது.. சீமான்
ரேஸ் டீம் பெண்ணின் ஷூ லேஸை கட்டி விட்ட அஜீத் குமார்.. அஜீத்தே அஜீத்தே.. கொண்டாடும் ரசிகர்கள்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி.. சென்னையில் விரைவில் போராட்டம்.. டாக்டர் அன்புமணி ராமதாஸ்
மகா கும்பமேளா 2025: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
சொத்தைப் பிரித்துத் தராத தொழிலதிபர் தாத்தா.. 73 தடவை கத்தியால் குத்திய கொடூர பேரன்!
ஈரோடு கிழக்குத் தொகுதி..எம்எல்ஏவாக பதவியேற்றார் விசி சந்திரகுமார் - முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
{{comments.comment}}