"கூட்டணிக்காக கதவுகள் திறந்தே இருக்கின்றன".. அழைக்கிறார் அமித்ஷா.. கிளம்பிப் போகுமா அதிமுக?

Feb 07, 2024,10:22 AM IST
டெல்லி: கூட்டணிக்காக எப்போதுமே எங்களது கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று அதிமுகவுக்கு மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. இதனால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மீண்டும் பாஜக - அதிமுக இடையே கூட்டணி ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக, பாஜக கட்டுப்பாட்டுக்குப் போய் விட்டது. இரு கூட்டணி அமைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டன. ஆனால் மிகப் பெரிய தோல்வியே கிடைத்தது. லோக்சபாவில் தேனி தொகுதியில் மட்டுமே அதிமுக கூட்டணி வென்றது. சட்டசபைத் தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்தது.

இந்த நிலையில் அண்ணாமலைக்கும், அதிமுக தலைவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால், கூட்டணியை விட்டு பாஜகவை விலக்குவதாக அதிமுக அறிவித்தது. இனி எந்தக் காலத்திலும் கூட்டணி கிடையாது, நாங்கள் இலவு காத்த கிளிகள் அல்ல என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கூறி வருகின்றனர்.



ஆனால் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக தீவிரமாக முயற்சித்து வருகிறது. கூட்டணி இல்லாமல் தனியாக போனால் பெரும் பாதிப்பு வரும் என்பதால் கூட்டணியை தொடர பாஜக விரும்புகிறது. இதற்காக ஜி.கே.வாசன் மூலமாக அதிமுக தலைமையுடன் பேச்சு நடந்துள்ளது. அதேபோல பாமகவையும் கூட்டணிக்குள் இழுக்க பாஜக தீவிரம் காட்டுகிறது.

இந்த நிலையில் தற்போது அமித் ஷாவே, கூட்டணிக்காக கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று கூறி அதிமுகவுக்கு கிட்டத்தட்ட பகிரங்கமாகவே அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக தினத்தந்தி நாளிதழுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

அதிமுகவுடன் கூட்டணி உண்டா?

கேள்வி: தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்றாகி விட்டது. 3வது அணி அமைக்கத் திட்டமா?

பதில்:  கூட்டணிக்காக எல்லா கதவுகளும் திறந்தே இருக்கின்றன. இது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

கேள்வி: தமிழ்நாட்டில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருக்கிறார். அவரது அரசியல் பிரவேசம் பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என நினைக்கிறீர்களா?

பதில்: ஜனநாயக நாட்டில் யாரும் புதிய கட்சியை தொடங்கலாம். எந்த கட்சியிலும் சேரலாம். ஆனால் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பதை தமிழக வாக்காளர்கள் தான் முடிவு செய்வார்கள்.

கேள்வி: 2024 தேர்தலில் 400க்கும் மேல் இடங்களை வெல்வதாக சொல்கிறீர்கள். இப்படி வெற்றி தரும் மக்களை வென்றெடுக்க பாஜக என்ன செய்கிறது?



பதில்: பிரதமர் மோடியின் கரீப் கல்யாண் கொள்கை நாட்டின் அனைத்து துறைகளையும் மேம்படுத்தி உள்ளது. உள்கட்டமைப்பில் பத்து ஆண்டுகளுக்குள் ஏற்பட்ட ஒரே கடுமையான மாற்றம் இதுவாக இருக்கலாம். நீங்கள் டிஜிட்டல் இந்தியாவை பாருங்கள். காய்கறி விற்கும் கிராமத்து ஏழை பெண் கூட யுபிஐ மூலம் பணம் செலுத்துவார்.

கேள்வி: பிரதமரின் உத்தரவாதத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு உங்களது அரசு செல்கிறதா?

பதில்: எங்கள் அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது என்பது வெளிப்படை. பிரதமர் மோடி உலகின் மிகவும் பிரபலமான தலைவர். உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவர் எங்கள் கட்சியில்தான் உள்ளார். சாதி சமூகம் மொழி மாநிலம் ஆகியவற்றைக் கடந்து எல்லா இடங்களிலிருந்தும் ஒரே மாதிரியான ஆ்தரவு மோடி தலைமைக்கு உள்ளது.

தமிழ்நாட்டுக்கு ஸ்பெஷலாக உண்டா?


கேள்வி: தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு என தனி அறிவிப்பு உண்டா?

பதில்: நாங்கள் இன்னும் எங்கள் தேர்தல் அறிக்கையை இறுதி செய்யவில்லை. ஆனால் தமிழ்நாடு நாட்டின் ஒரு முக்கியமான மாநிலம். அதற்கென நிறைய விஷயங்கள் தேர்தல் அறிக்கை இடம்பெற உள்ளன.

கேள்வி: அயோத்திக்கும், தமிழ்நாட்டுக்கும் உள்ள ராமாணத் தொடர்பைப் பயன்படுத்தி ஆன்மீக சங்கமம் நடத்தும் திட்டம் உள்ளதா?

பதில்: தமிழகம் முழு தேசத்துடனும் தொடர்பில் இருக்கிறது. சோம்நாத் சௌராஷ்டிரா உடன் தொடர்பு உள்ளது. காசி அயோத்தியுடன் உள்ளது. கலாச்சாரத்திற்கும் மக்களுக்கும் இடையிலான பிணைப்புகள் துண்டிக்கப்பட்ட ஒரு காலம் வந்தது. இப்போது பிரதமர் மோடி நாட்டை இணைக்க நிறைய பணிகளை செய்துள்ளார். ஒன்றாக இணைக்க இதுவே சரியான வழி என்று நான் நம்புகிறேன்.



கேள்வி: அலகாபாத் ஹைகோர்ட்டில் இந்தி வழக்காடு மொழியாக இருப்பது போல சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக்கப்படுமா?

பதில்: தீர்ப்புகள் பல பிராந்திய மொழிகளில் கிடைக்க வேண்டும் என்பது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எடுத்துள்ள ஒரு சிறந்த முயற்சி. இதன் மூலம் அனைவரும் தீர்ப்பை படித்து புரிந்து கொள்ள முடியும். அரசாங்கத்தின் கவனம் ஒவ்வொரு பிராந்திய மொழியிலும் உள்ளது. தமிழகத்தில் ரயில் நிலையங்களில் தமிழில் அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. தமிழை வளர்க்க பிரதமர் நிறைய காரியங்களை செய்துள்ளார் என்றார் அமித் ஷா.

அதிமுக என்ன முடிவெடுக்கும்?



கூட்டணிக்காக கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று அமித் ஷா கூறியிருப்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது. இது அதிமுகவுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாகவே பார்க்கப்படுகிறது. அதிமுக இதைப் பரிசீலிக்குமா அல்லது முறிந்தது முறிந்ததுதான் என்ற முடிவில் உறுதியாக இருக்குமா என்று தெரியவில்லை.

அதேசமயம், அதிமுகவை கூட்டணிக்குள் மீண்டும் கொண்டு பாஜக தரப்பிலிருந்து பலமுனை முயற்சிகள் நடப்பதாக உறுதியாக நம்பப்படுவதாலும், அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதாலும் விரைவில் இதுகுறித்து ஒரு தெளிவு கிடைக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்