வரலாறு எப்போதும் பொய் பேசாது.. பொய் பேசக்கூடாது..  சீமானின் சீற்றமான பேச்சு!

Dec 25, 2023,03:27 PM IST

சென்னை: வரலாறு எப்போதும் பொய் பேசாது.. பேசக்கூடாது.. என் இனத்திற்கு என்று வரலாறே கிடையாது.. என சல்லியர்கள் பட நிகழ்வில் கலந்து கொண்டு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி பேசியுள்ளார்.


தமிழீழ விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் கதையை மையப்படுத்தி உருவான மேதகு படத்தை இயக்கிய கிட்டு, சல்லியர்கள் என்ற படத்தை இயக்கி உள்ளார். இது இவருடைய இரண்டாவது படம்.  நடிகர் கருணாஸ் தயாரித்து, இப்படத்தில் முக்கிய தோற்றத்தில் நடித்துள்ளார். கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய பாடல்களுக்கு கருணாஸ் மகன் நடிகர் கென் மற்றும் ஈஸ்வர் இணைந்து இசையமைத்துள்ளார்.


முதன்மை கதாபாத்திரத்தில் சத்யா தேவியும், அவரது தந்தையாக கருணாசும், ஆர்மி வில்லனாக களவாணி புகழ் திருமுருகன் மற்றும் டைரக்டர் மகேந்திரனும் மற்றும் பல புது முகங்களும் நடித்துள்ளனர். ஈழப் போர்க்களத்தில் நடந்த போர் மருத்துவம் பற்றியும், அதில் இறங்கி பணியாற்றிய தமிழ் மருத்துவர்கள் பற்றியும் பேசுவதே இப்படத்தின் மைய கதையாக அமைந்துள்ளது.




இப்படத்தின் சிறப்பு நிகழ்ச்சி சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலைப்புலி எஸ். தானு, பி. எல் .தேனப்பன், சிவா கிலாரி, இயக்குனர் வா. கௌதமன், பொன்ராம் மற்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.


இதில் கலந்து கொண்டு சீமான் பேசும்போது கூறியதாவது:


சல்லியர்கள் என்பதை ஒரு படம் என்று சொல்வது அவ்வளவு பொருத்தமாக இருக்காது. அது ஒரு ஆவணம். வேரை இழந்த மரமும் வரலாற்றில் மறந்து விட்ட இனமும் வாழாது. தன் இன வரலாறு தெரியாத எந்த இனமும் எழுச்சி பெற முடியாது. என் இனத்திற்கு என்று வரலாறே கிடையாது. ஏனென்றால் வரலாற்றை படைப்பவனுக்கு வரலாற்றை எழுத நேரம் கிடைக்காது. தமிழர் இன வரலாற்றை நீங்கள் பார்த்துக் கொண்டே வந்தால் எதிரிகளால் வீழ்த்தப்பட்டதே கிடையாது. உடன் பிறந்த ரத்த சொந்தங்களின் துரோகங்களால் தான் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். இறுதியாக எங்கள் தலைவர் உட்பட. 


கற்றறிவை விட பட்டறிவு மேலானது. அதனால் தான் என் தலைவர் மேதகு பிரபாகரன் எல்லாவற்றையும் ஆவணப்படுத்தினார். ஆனால் இறுதிப் போரில் அவற்றில் பாதிக்கு மேல் சிதைந்து அழிந்து விட்டது. அவருக்கு ஒரு பேரார்வம் இருந்தது. சிண்ட்லர்ஸ் லிஸ்ட் போல, பிரேவ்  ஹார்ட் போல, டென்கமான்மெண்ட்ஸ்  போல  நம்முடைய விடுதலைப் போராட்ட வரலாறும் படமாக வரவேண்டும் என்று பெரிய அளவில் ஆர்வப்பட்டார். அதற்காகத்தான் அவர் ஆணிவேர் படத்தை தயாரித்தார். தலைவரின் படத்தை போஸ்டர்களில் அடித்து ஒட்டினாலே இங்குள்ள  போலீசார் கிழித்தெறிகின்றனர். இங்குள்ள அரசியல் சூழல் அப்படி இருக்கிறது. இதை மாற்ற வேண்டும். அதன் பின்னர் தம்பி கௌதமன் சொன்னது போல அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க வேண்டும். 




விழித்துக்கொண்ட வீர மறவர்களின் வரலாறு தான் தமிழர்களுடைய வீர காவிய வரலாறு. அதில் ஒரு துளி தான் இந்த சல்லியர்கள் படம். மருத்துவம் என்பதே மகத்துவம். தன் உயிரை எடுக்க வந்த ஒருவனுக்கும் உயிரைக் கொடுக்கின்ற அறம் சார்ந்த மறவர்கள் நம் தமிழர்கள் என்பதை இந்த படம் உணர்த்துகிறது. இந்த படம் இன்னும் பிரம்மாண்டமாக கூட எடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அந்த உணர்வை சிதைக்காமல் நமக்குள் கடத்திவிட்டார் கிட்டு. அதில் பிரம்மாண்டம் எதுவும் தேவைப்படவில்லை. 


என் தம்பி இயக்குனர் கிட்டுவிடம் குறும்படம் எடுக்கும் காலத்தில் இருந்தே படைப்பாற்றல், எழுத்தாற்றல் நிறைய இருக்கிறது. படத்தில் வசனங்கள் நன்றாகவே இருக்கிறது. காட்சி அமைப்புகளில் எதுவும் பொய் சொல்லி விட முடியாது. இலக்கியம் பொய் பேசும்.. புராணம் பொய் பேசும்... ஆனால் வரலாறு எப்போதுமே உண்மை பொய் பேசாது.. பேசக்கூடாது. பகைவனாக இருந்தாலும் அன்பு காட்டுங்கள் என்பதைத்தான் இந்த படம் பேசுகிறது. மருத்துவப் பெண் நந்தினியாக நடித்துள்ளவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். புதிதாக வந்துள்ளவர் என்று சொல்லவே முடியாது. அந்த நாட்டில், அந்த காட்டில் என்ன  முகத்தை பார்த்தானோ, அதேபோன்ற ஒரு முகம்..  அதே போன்ற ஒரு போராளியின் முகம் தான் மகேந்திரன். கருணாஸ் நடித்துள்ள அந்தப்பகுதி இந்த படத்தின் இதயம் போன்றது.


இதை ஒரு படம் என்று சொல்லாமல் ஒரு வரலாற்று பதிவு என்று தான் உலகம் தமிழ் சொந்தங்கள் வரவேற்க வேண்டும். நம் அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும். வரலாறு தான் எல்லா தேசிய இனங்களுக்கும் வழிகாட்டி இருக்கிறது. நம் குழந்தைகளுக்கு இரண்டு மணி நேரம் நாம் காட்டுகின்ற ஒரு பாடமாக இதை செய்ய வேண்டும்.




அயோத்தி போன்ற படங்களுக்கு நாங்கள் குரல் கொடுப்பது அதை மக்கள் சாதாரணமாக கடந்து போய்விடக் கூடாது என்பதற்காகத்தான். ஆனால் இந்த படத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். சமீபத்தில் வெளியான சித்தா படம் சிறப்பாக இருந்தது. பார்க்கிங் படம் கூட நன்றாக இருந்தது என என்னிடம் கூறி பார்க்க சொன்னார்கள். வெள்ளத்தில் சிக்கிக் கிடந்த எங்களால் எப்படி படம் பார்க்க முடியும்? எங்களது படமே பெரிய படமாக போய்விட்டது.


இந்த நாட்டை ஐந்து ஆறு முறை ஆண்ட நிர்வாக தலைவர்களைப் போல என் தலைவனுக்கு ஒரு ஐந்து ஆண்டுகள் மட்டும் இருந்திருந்தால் உலகத்தில் தலை சிறந்த வல்லாதிக்க நாடாக எங்கள் தமிழ் ஈழ நாட்டை கொண்டு போய் சேர்த்திருப்பார். ஆனால் கடைசிவரை அவர் போர்க்களத்தில் போராளி தலைவனாகவே நிற்க வேண்டியதாக போய்விட்டது. விடுதலைப் போராட்ட வீரர்களை பெருமைப்படுத்துவது போன்று, எங்களது மருத்துவப் பிள்ளைகளை பெருமைப்படுத்துவது போன்று ஒரு தேன் கூட்டை தொடுவது போன்று கவனமாக இந்த பதிவை கையாண்டு இருக்கிறார்கள் கருணாஸூம் இயக்குனர் கிட்டுவும்.. என்று கூறினார்.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்