சென்னை: கர்நாடகத்தில் லோக்கல் பிரச்சினைதான். இப்போது தோற்றுள்ளோம். ஆனால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவே கர்நாடகத்தில் வெல்லும் என்று கூறியுள்ளார் மூத்த தமிழ்நாடு பாஜக தலைவர் எச். ராஜா.
கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பாஜக பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. ஆட்சியைப் பறி கொடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தீவிரப் பிரச்சாரம் செய்தும் கூட பாஜகவால் வெல்ல முடியாமல் போய் விட்டது.
மறுபக்கம் காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இத்தனைக்கும் பாஜக வசம் கர்நாடகத்தில் ஆட்சி அதிகாரம் எல்லாம் இருந்தும் கூட, காங்கிரஸ் கட்சியின் எளிமையான பிரச்சாரத்தையும் தாண்டி அக்கட்சிக்கு பெரும் வெற்றியை மக்கள் கொடுத்துள்ளனர்.
இந்தத் தோல்வி குறித்து பாஜக தலைவர்கள் நேற்று பெரியஅளவில் கருத்துக்களைக் கூறாமல் மெளனம் காத்தனர். இப்போது ஒவ்வொருவராக பேச ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவர் எச். ராஜா தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், டெல்லியில் கடந்த 3 சட்டசபைத் தேர்தல்களாக ஆம் ஆத்மிதான் ஜெயித்து வருகிறது. பாஜகவுக்கு 3 தொகுதிகளே கிடைத்தன. அதேசமயம், கடந்த 4 லோக்சபா தேர்தல்களாக அங்கு பாஜகதான் மொத்தம் உள்ள 7 தொகுதிகளிலும் வென்று வருகிறது.
கர்நாடகத்தில் முழுக்க முழுக்க உள்ளூர் காரணிகளால்தான் இந்தத் தேர்தல் முடிவு வந்துள்ளது. இது மாறும். 2024 லோக்சபா தேர்தலில் பாஜக வெல்லும் என்று கூறியுள்ளார் எச். ராஜா.
உள்ளூர் காரணிகள் என்று எந்தப் பிரச்சினையை எச். ராஜா சொல்கிறார் என்று தெரியவில்லை. முதல்வராக இருந்த பி.எஸ். பொம்மையின் செயல்பாடுகள் சரியில்லை என்கிறாரா அல்லது 40% கமிஷன் வாங்கும் ஆட்சி என்று எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் குற்றம் சாட்டியதே காரணம் என்று சொல்கிறாரா அல்லது ஹிஜாப் தடை, திப்பு சுல்தான் விவகாரம் உள்ளிட்டவை காரணம் என்று சொல்கிறாரா என்று தெரியவில்லை.
{{comments.comment}}