- மீனாட்சி
லக்னோ: நீளமான தலைமுடியை விரும்பாத பெண்களைப் பார்க்கவே முடியாது. இடுப்பு வரை நீண்டுபுரளும் தலைமுடியைக் கொண்டோரைப் பார்த்துப் பார்த்து பலரும் பொறுமுவதைப் பார்த்திருப்போம். ஆனால் 15 வயது சிறுவன் உலகிலேயே நீளமான தலைமுடியைக் கொண்ட ஆண் என்ற சாதனையைப் படைத்து அசத்தியுள்ளார்.
கின்னஸ் உலக சாதனைகள் 2024 புத்தகத்தில் தனது சாதனையை உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த சிறுவன் பதிந்துள்ளார். கின்னஸ் சாதனை படைக்கும் பலரைப் பற்றி நாம் சிறுவயது முதலே பார்த்து, வியந்திருப்போம். அப்படிப்பட்ட சாதனை புத்தகத்தில் நாம் இடம் பெற வேண்டும் என்று பலரும் ஆசைப்படுவார்கள். அதை அடைய வேண்டும் என்று வெறியுடன் செயல்பட்டவர்களும் உண்டு.
அப்படித்தான் சிதக்தீப் சிங் சாஹல் என்ற சிறுவனும் இருந்து தனது கனவை நினைவாக்கியுள்ளார். அவர் தனது வாழ்நாளில் முடி வெட்டிக்கொண்டதே இல்லையாம். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இந்த சிறுவன், பெண்களை விட மிக நீளமான கூந்தலை வைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இந்த சிறுவன் சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர். உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேரந்தவர். சிறு வயதிலிருந்தே இவர் தலைமுடியை வெட்டிக் கொண்டதில்லை. காரணம், சீக்கியர்கள் தலைமுடியை வெட்டிக் கொள்ளக் கூடாது என்பது அவர்களது மத கட்டுப்பாடுகளில் ஒன்று. இதனால் நீண்ட தலைமுடியுடன்தான் அவரக்ள் இருப்பார்கள். அதற்கு மேல்தான் தலைப்பாகையும் அணிவார்கள். இது அவர்களது சம்பிரதாயம்.
அதன்படியே சாஹலும் சிறு வயதிலிருந்தே தலைமுடியை வெட்டிக் கொண்டதில்லையாம். இது அப்படியே தலைமுடி நீளமாக வளர்ந்து இன்று உலக சாதனையை படைத்து விட்டது. சாஹலின் தலைமுடி பராமரிப்பில் அவரது தாயார்தான் உதவியாக இருக்கிறாராம். அவர்தான் தலைமுடியை கழுவுவது, உலர வைப்பது, பின்னர் அள்ளி முடிந்து தலைப்பாகை அணிய உதவுவது என்று உதவி செய்கிறாராம். இதன் காரணமாகவே சாஹலால் தலைமுடியை பராமரிப்பது எளிதாக இருக்கிறதாம்.
"எனது குடும்பத்தினர், எனது தாயாரின் ஆதரவு, உதவி இல்லாமல் இது சாத்தியமாகியிருக்காது" என்று தனது கின்னஸ் சாதனை குறித்து பெருமையாக கூறுகிறார் சாஹல்.
சாஹலின் தலைமுடி கிட்டத்தட்ட 5 அடி நீளத்தில் இருக்கிறதாம். செப்டம்பர் 14ம் தேதி சாஹலின் தலைமுடி கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளதாக கின்னஸ் சாதனை நிறுவனம் அறிவித்துள்ளது.
தலைமுடியை வளர்ப்பது பெரிய காரியம் அல்ல.. தலைமுடியை பராமரிப்பதுதான் மிக மிக கடினமானது. அந்த பராமரிப்புக்காகவே பலரும் நீளமான தலைமுடியை வைத்துக் கொள்ள முயல்வதில்லை. காரணம், அதை சரியாக கழுவ வேண்டும். காய வைக்க வேண்டும். ஈரம் அதிகம் இருக்கக் கூடாது. வியர்க்கும்போது சிரமமாக இருக்கும், அதைப் பின்னுவது அதை விட பெரிய காரியம். இப்படி பல்வேறு காரணங்களால்தான் நீளமான தலைமுடி கொண்டோரை இன்று பார்ப்பதே அரிதாகி விட்டது.
இப்படிப்பட்ட நிலையில் தங்களது பிள்ளையின் தலைமுடியை கருத்துடன் பராமரித்து இன்று கின்னஸ் சாதனை படைக்கும் அளவுக்கு அதை பத்திரமாக காத்து பெருமை தேடிக் கொடுத்த சாஹலின் தாயாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
{{comments.comment}}