2025 வருக வருக.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

Dec 31, 2024,08:43 PM IST

சென்னை: புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு,  முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக நிறுவனர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.



இது தொடர்பாக  முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 




இந்திய ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மீட்ட 2024 நிறைவுற்று, புத்தாண்டு 2025 பிறக்கிறது.


தமிழ்ப் புதல்வன், ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர், நீங்கள் நலமா, கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கும் புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம், கலைஞர் கைவினைத்திட்டம், ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தின் இரண்டாம் கட்டம், இரண்டு கோடிப் பயனாளிகளைக் கடந்த மக்களைத் தேடி மருத்துவம், 500 கோடிக்கும் அதிகமான கட்டணமில்லாப் பயணங்கள் செய்யப்பட்டுள்ள விடியல் பயணம் திட்டம், இந்திய அளவில் பாராட்டுகளைப் பெற்று வரும் ‘நான் முதல்வன்’ திட்டம், மகளிரின் பொருளாதாரத் தன்னிறைவை நோக்கிய கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் 1.48 லட்சம் பேருக்கு கூடுதலாக விரிவாக்கம், அத்திக்கடவு - அவிநாசி திட்டம் என 2024-ம் ஆண்டு தமிழ்நாட்டில் நமது திராவிட மாடல் அரசின் தொடர் சாதனைப் பயணம் புதிய பாய்ச்சல்களை நிகழ்த்திக் காட்டியுள்ளது. இந்தச் சாதனைகளை உச்சிமுகர்ந்து அங்கீகரிக்கிறோம் எனக் கூறும் விதமாகத்தான் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது என இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வெற்றி மகுடம் சூட்டினர் நம் மக்கள். தமிழ்நாடும், புதுச்சேரியும் அளித்த அந்த மாபெரும் வெற்றிதான் இந்தியாவில் மதச்சார்பின்மைக்கான குரல் இன்னும் உயிர்ப்போடு ஒலித்துக் கொண்டிருக்க, தொடர்ந்து நிலைத்து நிற்க மிக முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. அந்த வகையில் விடுதலை இந்திய வரலாற்றில் ஜனநாயகத்தை பாதுகாத்து, இந்நாட்டின் பெருமையை நிலைநாட்ட, தமிழ்நாடு மக்கள் அளித்த வெற்றிக்குரிய 2024-ஆம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டாக அமைந்துவிட்டது. சோதனைகள், தடங்கல்களைக் கடந்து சாதனைகள் படைக்கவும், வெற்றி பெறவுமான நம்பிக்கையினையும் உத்வேகத்தினையும் அளித்தது 2024-ம் ஆண்டு!


புத்தாண்டாகிய 2025-ல் உலகெங்கும் அமைதி திரும்பட்டும். நம் நாட்டில் சமூக நல்லிணக்கம் தழைத்துச் செழித்தோங்கட்டும். இல்லந்தோறும் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கட்டும்! தமிழ்நாடு அதற்கு வழிகாட்டும்! அனைவருக்கும் எனது உளம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.


புத்தம் புது நம்பிக்கைகளுடன் மலர்கின்ற இந்த புத்தாண்டில் தமிழக மக்கள் அனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார். 


அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி:


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சி காலங்களில் மக்கள் நலன் ஒன்றை மட்டும் குறிக்கோளாக கொண்டு

பல்வேறு முத்தான திட்டங்கள் செயல்படுத்தியதோடு மக்கள் எவ்வித அச்சம் என்று நிம்மதியுடன் வாழ்ந்து வந்ததை இந்த நேரத்தில் பெருமையோடு சுட்டிக் காட்டிக் கொள்ள விரும்புகிறேன். 


தமிழ்நாட்டில் அனைத்து நிலைகளிலும் வாழும் மக்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு நாம் அனைவரும்  ஒன்றுபட்டு நிற்போம் ஓயாது உழைப்போம்.

பொற்கால ஆட்சியை நம் தமிழ்நாட்டில் மீண்டும் அமைப்போம் என இந்நாளில் சபதமேற்போம்.


மக்கள் அனைவருக்கும் இந்த புத்தாண்டு புதிய நம்பிக்கையும்,  எழுச்சியையும், மலர்ச்சியையும், வளர்ச்சியையும், வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி அனைவருக்கும் எனது உள்ளங்கனிந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கி கொள்கிறேன் என கூறியுள்ளார்.


பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:


 மாற்றத்திற்கும், மகிழ்ச்சிக்கும் வழிவகுக்கக் கூடிய 2025 ஆம் ஆண்டை வரவேற்று கொண்டாடும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


ஒவ்வொரு புத்தாண்டும் எல்லையில்லாத நம்பிக்கைகளுடன் தான் பிறக்கின்றன... ஆனால், அந்த ஆண்டின் நிறைவு சோதனைகளுடன் தான் முடிகிறது. நம்பிக்கை தான் வாழ்க்கை. கடந்த சில ஆண்டுகளின் துயரங்கள் அனைத்தும் துடைத்தெறியப்படும்; அனைத்து துறைகளிலும் இதுவரை இல்லாத முன்னேற்றங்கள் எட்டப்படும் என்ற நம்பிக்கையுடன் புதிய ஆண்டை வரவேற்போம். புத்தாண்டு நமக்கு மகிழ்ச்சியை, மட்டற்ற மகிழ்ச்சியை மட்டுமே அளிக்கும்; ஏமாற்றங்களை முழுமையாக விரட்டியடிக்கும்.



2025 ஆம் ஆண்டு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை  இரு குறள்களின் வாயிலாக விளக்க விரும்புகிறேன். திருக்குறளின் 551 ஆம் குறள், கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து என்பதாகும். கொடுங்கோன்மை என்ற அதிகாரத்தில் வரும் இந்தக் குறளுக்கு கலைஞர் எழுதிய உரை,‘‘அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்’’ என்பதாகும். தமிழ்நாட்டில் இப்போது நிலவும் கொலைத் தொழில் ஆட்சி அகற்றப்படுவதற்கு 2025 ஆம் ஆண்டு வலிமையான அடித்தளம் அமைக்க வேண்டும்.

நாம் எதிர்பார்ப்பது நிச்சயம் நடக்கும். 2025 ஆம் ஆண்டு நாம் எதிர்பார்த்ததைப் போலவே இனிப்பாக அமையும்.. அனைவருக்கும் அனைத்து நலன்களும், வளங்களும் கிடைக்கும். பொருளாதாரம் வளரும்.மகிழ்ச்சி பெருகும்.அமைதியும், நிம்மதியும் கிடைக்கும். அவற்றை சாதிக்க நாம் கடுமையாக உழைப்போம் என்று கூறி தமிழக மக்களுக்கு மீண்டும் ஒருமுறை புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.



ஓபிஎஸ்:


மலரும் ஆங்கிலப் புத்தாண்டை மலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் இந்த இனிய நாளில், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


வன்முறை, பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை, கள்ளச் சாராயம், போதைப் பொருட்கள் நடமாட்டம் ஆகியவை ஒழிக்கப்பட்டு, அமைதி, வளம் வளர்ச்சி என்ற பாதையில் தமிழ்நாட்டைச் அழைத்துச் சென்று, தமிழ்நாடு இந்தியாவிற்கே முன்மாதிரியாக விளங்கிட வேண்டும் என்ற லட்சியத்தை அடைய நாம் அனைவரும் பாடுபட வேண்டும். அப்பொழுதுதான், அமைதியான சூழலில் வளமான வாழ்வு பெற்று அனைத்து மக்களும் முன்னேற்றம் காண முடியும்.


வருகின்ற புத்தாண்டு அனைத்து மக்களின் வாழ்க்கையை வளமாக்கும் ஆண்டாக, துன்பங்கள் கரைந்து இன்பங்கள் நிறையும் ஆண்டாக, தோல்விகள் தேய்ந்து வெற்றிகள் பெருகும் ஆண்டாக, தடைகளைத் தகர்த்தெறியும் ஆண்டாக, கனவுகள் நனவாகும் ஆண்டாக எல்லையில்லா மகிழ்ச்சியை தரும் ஆண்டாக, மாற்றத்தினை உருவாக்கும் ஆண்டாக மலரட்டும் என்ற என்னுடைய அவாவினைத் தெரிவித்து, அனைவருக்கும் என்னுடைய புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.


டிடிவி தினகரன்:


மலரும் புத்தாண்டை மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி வரவேற்கும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

டாக்டர் அன்புமணி ராமதாஸ்.. பனையூரில் ஆதரவாளர்களுடன்.. 3வது நாளாக தீவிர ஆலோசனை

news

வீட்ல யாருமே இல்லை.. எதுக்கு ரெய்டுன்னும் தெரியலை.. ED சோதனை குறித்து அமைச்சர் துரைமுருகன்

news

அதிரடியாக உயர்ந்து வரும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.58,000த்தை கடந்தது

news

கோவையில் கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து.. பதட்டம்.. அருகாமை பள்ளிகளுக்கு விடுமுறை

news

சுவிட்சர்லாந்தில் முகத்தை மறைக்கும் புர்கா அணிய தடை.. புத்தாண்டிலிருந்து அமலுக்கு வந்த சட்டம்

news

பொங்கல் தொகுப்பு.. தொடங்கியது டோக்கன் விநியோகம்.. வீடு தேடிச் சென்று வழங்க முதல்வர் உத்தரவு

news

India vs Australia 5th test.. கடைசி நிமிடத்தில் ரோகித் சர்மா விலகல்.. பும்ராதான் கேப்டன்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - ஜனவரி 03, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

பெண்கள் உயர்ந்தால் தான் ஒரு சமூகம் உயர்ந்து நிற்க முடியும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

அதிகம் பார்க்கும் செய்திகள்