வீட்டு முற்றத்தில் சின்னச் சின்னதாக.. மெல்லத் தாளமிட்டபடி.. விழுந்து கொண்டிருந்தது மழை.. கூடவே லேசான காற்றும்.. ரம்மியமான சூழல்.. புறத்தில் மட்டும் அல்ல.. அத்தனை பேர் மனதிலும்.. உயர்த்திக் கட்டப்பட்டிருந்த திண்ணையில் போடப்பட்டிருந்த ஈஸிசேரில் சாய்ந்து படுத்தபடி நவீன்.. அருகே குட்டி ஸ்டூலைப் போட்டு அதில் கெளதமி.. இடது கை சேரைப் பிடித்தபடியும், வலது கை நவீனின் தலையைத் தடவியபடியும்.. அரைத் தூக்கத்தில் இருந்தான் நவீன்.
நாகர்கோவில் வந்து ஒரு வாரமாகி விட்டது.. நவீனுக்கு இப்போது கொஞ்சம் தேவலாம்.. ஆனால் நடக்க சில நாட்களாகும் என்று டாக்டர்கள் கூறி விட்டனர். கெளதமியும் பரவாயில்லை.
"இந்தாடி டீ.. " கையில் கிளாஸைக் கொடுத்தபடி அருகில் வந்து அமர்ந்தாள் பார்வதி.
"கிளைமேட் நல்லாருக்குல்ல"
"ம்.. ஆமா.. நவீன் அடிக்கடி சொல்வான்.. இந்த ஊருக்கு நீ வந்த பிறகு வேற எந்த ஊரும் உனக்குப் பிடிக்காதுன்னு.. ரெண்டு பேரும் முதல் முறையாக இந்த ஊர்ல பக்கத்து பக்கத்துல இருக்கோம்.. ஆனா ரசிக்க முடியலை.. என்ன கொடுமை பாரு"
"அதான் சரியாகிட்டு வர்றார்ல.. கொஞ்ச நாள்தானே.. பொறுத்துக்கோ"
இவர்களது பேச்சு சத்தம் கேட்டு மெல்ல விழித்துப் பார்த்தான் நவீன்.
"நவீன் முழிச்சிட்டார் போல.. அவருக்கு கஞ்சி எடுத்துட்டு வரட்டா"
பார்வதி சொன்னதைக் கேட்ட நவீன், தலையை அசைத்து சரி என்றான். பார்வதி எழுந்து உள்ளே போனாள். "நீ மெதுவா பேசிட்டு இரு கெளதமி.. நான் வர்றேன்".. அவள் கஞ்சி எடுப்பதற்காக மட்டும் போகவில்லை.. நவீனுக்கும் இப்போது கஞ்சி தேவைப்படவில்லை.. ஆனால் அந்த இடத்தில் கெளதமிக்கும் - நவீனுக்குமான ஸ்பேஸ் தேவைப்பட்டது.
பார்வதி எழுந்து சென்றதைப் பார்த்தபடி இருந்த கெளதமி, அவள் தலை மறைந்ததும், நவீன் பக்கம் திரும்பினாள். அவனோ ஏற்கனவே அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி இருந்தான்.
கண்ணில் பொங்கிய கண்ணீரை அடக்கத் தோணாமல் அப்படியே மெல்ல அவன் பக்கமாக சாய்ந்து, இதழோடு இதழ் பொருத்தி ஆழமாக முத்தமிட்டாள் கெளதமி.. விலகவில்லை பல விநாடிகள் இருவரும். முத்தமும், கெளதமியும் கண்ணீரும் இணைந்து நவீன் முகத்தை நனைத்தன. துடைக்கத் தோணவில்லை இருவருக்கும்.
"ரொம்ப பயந்துட்டியா"
"பயப்படாம இருக்க முடியுமா நவீன்.. ஒரு கட்டத்துல நீங்க உயிரோட இருக்கறீங்களான்னு கூட டவுட் வந்துருச்சு.. எவ்வளவு வேதனை.. இன்னும் கொஞ்ச நாள் ஆகியிருந்தா நிச்சயம் நான் தவறான முடிவைத்தான் எடுத்திருப்பேன்.. அந்த அளவுக்கு உடைஞ்சு போயிட்டேன்.. என் வாழ்க்கையில இப்படி ஒரு துயரமான நாட்களை நான் சந்திச்சதே இல்லை.. எப்படி இத்தனை நாள் உயிரைக் கையில் பிடிச்சுட்டு இருந்தேன்னே தெரியலை"
"நான் அம்மாவை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போன சில நாள்லேயே குமார் கிட்ட இருந்து போன் வந்துச்சு.. அவன் ஒருத்தரைப் போய் பார்த்துட்டு வரச் சொன்னான்.. எனக்குப் பிராப்ளம் பண்றாங்க.. நீதான் அதை சரி செய்யணும்னு சொல்லி அழுதான்.. சரி போய்த் தொலையறான்னு நானும் போய்ப் பார்த்தேன்.. அதுக்குப் பிறகு அந்தக் கும்பல் கிட்ட சிக்கிட்டேன்.. குமார் இந்த அளவுக்கு கீழே போவான்னு நான் எதிர்பார்க்கலை.. அதுக்குப் பிறகு என்னை தொடர்ந்து பல இடங்களுக்கு மாத்திட்டே இருந்தாங்க. எனக்கு ஒரு கட்டத்தில் நாம பிழைக்க மாட்டோம்னு தோண ஆரம்பிச்சிருச்சு.. அந்த நாட்களில் எனக்கு இருந்த ஒரே நம்பிக்கை நீ மட்டும்தான்.. உன்னை மட்டும்தான் நினைச்சுட்டே இருந்தேன். எப்படியாவது மறுபடியும் சந்திச்சுர மாட்டோமான்னு ரொம்ப ஏங்கினேன்.. நீ எவ்வளவு கஷ்டப்படுவேன்னு நினைச்சு நினைச்சுதான் ரொம்ப வேதனையா இருந்தது"
"அதை திரும்ப நினைக்காதீங்க நவீன்.. போகட்டும்.. எல்லாமே போயிருச்சு, முடிஞ்சிருச்சு.. இனி நாம புதுசா வாழப் போறோம்.. இதை மறு பிறப்பா எடுத்துக்குவோம்.. இனிமேலதான் நம்மளோட சந்தோஷங்கள் அத்தனையும் பூத்துக் குலுங்கப் போகுது.. முதல்ல நாம கல்யாணம் பண்ணிக்கலாம்.. படிப்பை நான் அதுக்குப் பிறகு தொடர்ந்துக்கிறேன்.. இனிமேலும் டிலே பண்ண எனக்கு விருப்பம் இல்லை. அம்மா கிட்ட நானே பேசறேன்"
"என்னால நிக்கவே முடியலை.. எப்படி இப்ப போய் கல்யாணம் பண்ணிக்க முடியும்.. கொஞ்ச நாள் போகட்டுமே.. அதான் நல்லபடியா வந்தாச்சே பிறகென்ன"
"இல்லை நவீன்.. என்னால இதுக்கு மேலேயும் உ ங்களை விட்டுப் பிரிஞ்சு இருக்க முடியாது. உங்க கூடவே இருக்கப் போறேன்.. அதுக்கு உங்க மனைவியா ஆனாதான் சரியா இருக்கும். அதனாலதான் சொல்றேன்"
"ரிலாக்ஸா இரு.. அம்மா கிட்ட பேசலாம்.. முடிவு பண்ணலாம்.."
"ம்ம்.. சரி.. ரொம்ப வலிக்குதா"
"எது கெளதமி"
"உடம்புதான்"
"உடம்பு வலியெல்லாம் பெருசா இல்லை.. உதடுதான் ரொம்ப வலிக்குது"
"உதடு வலிக்குதா.. ஏன்.. அது நல்லாத்தானே இருந்துச்சு"
"இருந்துச்சுதான்.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இன்னொரு உதடு வந்து மோதி என்னோட உதடு காயமாகிருச்சு"
"இன்னொரு உதடா??.. ஓய்.. இந்த ரணகளத்திலும் உங்களுக்கு கிளுகிளுப்பா.. நான் எவ்வளவு சோகமா, அழுகையோட, வலியோட முத்தம் கொடுத்தேன்.. அது உங்களுக்கு கிண்டலா இருக்கா"
"கிண்டல் இல்லடி செல்லப்பொண்ணு.. உன்னோட விளையாடி ரொம்ப நாளாச்சுல்ல.. அதான்"
"இந்த கிண்டல், விளையாட்டு இல்லாம நாம பட்ட கஷ்டம்.. நரகம் நவீன்"
உள்ளிருந்து யாரோ வரும் சத்தம் கேட்கவே, கெளதமி சற்று நகர்ந்து அமர்ந்தாள். நவீனின் அம்மா.
"என்னம்மா சொல்றான் என் மவன்"
"ரொம்ப வலிக்குதாம்மா.. அதான் சொல்லிட்டிருக்கார்".. கெளதமி நவீனை குறும்பாக பார்த்தபடி அம்மாவிடம் சொல்ல, நவீனுக்கும் முகத்தில் பொங்கியது புன்னகை.
"வலி உடனே சரியாகுமா.. கொஞ்சம் கொஞ்சமாதானே குணமாகும்".. அம்மாவும் அவர்களது சேட்டையைப் புரிந்து கொள்ளாமல் எதார்த்தமாக பேச.. அந்த இடம் சற்றே ரிலாக்ஸானது.
"அம்மா.. உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்.. என்னடா இந்த இடத்துல உட்கார்ந்து இப்படி பேசறாளேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க.. இதுக்கெல்லாம் நேரம் காலம் இடம் பொருள் ஏவல் தேவையில்லைன்னு நான் நினைக்கிறேன்.. அதான் கேட்கிறேன்"
"என்னத்த கேட்கப் போறே.. கல்யாணத்தைப் பத்திதானே.. ஏற்கனவே பார்வதி இதைப் பத்தி என் கிட்ட சொல்லிட்டா.. நவீன் கொஞ்சம் சரியாகட்டும்.. நான் உங்க வீட்டுக்கு எங்க வீட்டு ஆட்களோட வர்றேன். முறைப்படி பொண்ணு கேட்கிறோம்.. மத்தது அடுத்தடுத்து நடக்கும்.. போதுமா"
"பார்வதி சொல்லிட்டாளா.. ஓ காட்.. எப்படி உங்க கிட்ட சொல்றதுன்னு தயங்கிட்டிருந்தேன்"
"இதுல தயக்கம் எதுக்குடா.. எனக்கும் இதே எண்ணம்தான். சரி உன் படிப்பு முடியட்டும்னுதான் எல்லோரும் நினைச்சிருந்தோம்.. இடையில இப்படி நடக்கக் கூடாதது நடந்து போயிருச்சு.. இனியும் லேட் பண்ண வேண்டாம். கல்யாணத்தை முடிச்சுட்டு அப்புறம் படி.. என் கண் முன்னாடி மறுபடியும் நீங்க பிரியக் கூடாது.. அதுக்கு கல்யாணம்தான் சரியான முடிவு.. நல்லதே நடக்கும்"
வருங்கால மாமியாரை அப்படியே போய் கட்டிப்பிடித்துக் கொண்டாள் கெளதமி.. மருமகளை அணைத்துக் கொண்டு முதுகில் வாஞ்சையுடன் தட்டிக் கொடுத்தார் அம்மா.
கஞ்சியுடன் உள்ளிருந்து பார்வதி வர... அங்கு நடப்பதைப் பார்த்து மெல்லிய புன்னகையுடன், "என்னது.. மாமியாரும், மருமகளும் வழக்கமாக சண்டைதான் போடுவாங்க.. நீங்க என்னடான்னா கட்டிப் பிடிச்சு கொஞ்சிட்டிருக்கீங்க.. அடடா ஃபைட் சீன் மிஸ்ஸாகுதே" என்று கலாய்க்க, அம்மாவும், கெளதமியும் கலகலவென சிரித்தபடி இன்னும் இறுக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்டனர்.
"மனசு சுத்தமா இருக்கணும், எதையும் வெளிப்படையா பேசணும், ஈகோ பார்க்கக் கூடாது, விட்டுக் கொடுத்துப் போகத் தெரியணும், அன்பைக் கொட்டணும், நீக்குப் போக்காக நடந்துக்கணும்.. ஒருவருக்கு ஒருவர் அணுசரனையா, கரிசனமா இருக்கணும், மதிக்கணும், உதவணும்.. இப்படி இருந்தா யாருக்கும் எந்த சண்டையும் வராது பாரு.. நிறையப் பேர் இதை சரியா புரிஞ்சுக்காம, எதுக்கெடுத்தாலும் டென்ஷன் ஆகி, சண்டை போட்டு குடும்பத்தில் நிம்மதியே இல்லாமல் போயிருது"
"உண்மைதான்மா.. நான் சும்மா கலாய்ச்சேன்மா" என்று புன்னகைத்தபடி கஞ்சியை ஆற்றி கெளதமி கையில் கொடுத்தாள் பார்வதி. அவள் வாங்கி அதை நவீனுக்கு வாயில் புகட்டினாள்.
"லன்ச் என்னம்மா"
"ஜார்ஜ் மீன் வாங்கிட்டு வரப் போயிருக்கான்.. அவன் கிட்ட ஒரு இடத்தைச் சொல்லி அங்க வாங்கிட்டு வரச் சொல்லிருக்கேன்.. அந்த இடத்துல நல்ல மீன் கிடைக்கும்.. அவன் வந்ததும் சமையலை ஆரம்பிச்சுரலாம்"
"ஓ.. வடிவேலு படத்துல வருமே.. இங்கு நல்ல மீன்கள் கிடைக்கும்.. அந்தக் கடையா" கெளதமி கலாய்க்க, அம்மா செல்லமாக அவள் முதுகில் தட்டினார். இவர்கள் விளையாட்டுக்கு மத்தியில் ஜார்ஜ் வந்து சேர்ந்தான்.
கையில் இருந்த பையை ஓரமாக வைத்தவன் பார்வதியிடம் திரும்பி, "பாரு கொஞ்சம் காய் வாங்கணும்.. வழியில கடை பார்த்தேன்.. பட் எனக்கு சரியா வாங்கத் தெரியாது.. நீ கொஞ்சம் வர்றியா" என்று கேட்க, அவளோ, இப்பவா என்று பதிலுக்கு வினவினாள். வேலையை முடிச்சுரலாமே.. பக்கத்துலதான் வா போய்ட்டு வந்துரலாம் என்று ஜார்ஜ் சொல்ல, உள்ளே போய் பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள் பார்வதி.
பைக்கை எடுத்த ஜார்ஜ் மெயின் ரோட்டுக்கு வண்டியைத் திருப்பி கொஞ்ச தூரத்திலேயே தென்பட்ட ஒரு பார்க்குக்குள் புகுந்தான். காய்கறி வாங்க கூப்பிட்டவன் பார்க்குக்குள் வண்டியை விடவே குழப்பமடைந்தாள் பாரு.
"இங்கேயா காய்கறி விக்கிறாங்க"
"ஹிஹிஹி.. காய்கறி இங்க விக்கலை.. ஆனால் காதல் விற்கும் இடம் இது.. அதான் வாங்கிட்டுப் போலாம்னு கூட்டி வந்தேன்"
"என்ன உளர்ற.."
"உளறலை.. நான் உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.. சொல்ல டைம் கிடைக்கலை.. சொல்லாம இருந்தா ஹார்ட் வெடிச்சுரும் போல ஃபீல் ஆகுது.. அதான் சொல்லிடலாம்னு.. நீ ரிஜக்ட் பண்ணினாலும் பரவாயில்லை.. பட் எனக்கு என்னோட மனசை சொல்லிரணும்னு தோணுச்சு.. அதான் சொல்லிட்டேன். இப்ப ரிலாக்ஸ் ஆயிருச்சு.. வீட்டுக்குப் போலாம் வா"
"ஹலோ லூசா நீ.. நீ பாட்டுக்கு கூட்டிட்டு வந்தே.. காதலிக்கிறேன்னு சொல்லிட்டு வா வீட்டுக்குப் போலாம்னு சொல்ற.. என்னாச்சு உனக்கு"
"எஸ் பாரு.. பைத்தியம் பிடிச்சிருச்சு.. திடீர் பைத்தியம்.. உன் மேலதான்.. பட் இன்னும் முத்திப் போகலை.. கொஞ்சம் கொஞ்சமா ஆரம்பிச்சிருக்கு.. ரொம்ப சிக்கலாய்ரக் கூடாதுல்ல.. அதான் இப்பவே சொல்லிட்டேன்.. Jokes apart, நிஜமாவே உன்னை லவ் பண்றேன். இத்தனை நாளா தோணல.. இப்பத்தான் அந்த ஃபீல் வந்தது. மறைக்க விரும்பலை.. அதான் வெளிப்படையா சொல்லிட்டேன்.. இதுல தப்பில்லையே பாரு.. ஏற்பதும், ஏற்காததும் உன்னோட இஷ்டம்.. இதை நான் இன்னும் யார் கிட்டயும் சொல்லலை.. உன் கிட்டதான் ஓபன் பண்ணிருக்கேன்."
"எனக்குக் குழப்பமா இருக்கு.. பார்க்ல வச்சு முடிவு பண்றதா இதெல்லாம்"
"பார்க் வேணாமா.. அப்ப பீச் போலாமா.. நாகர்கோவில் பீச் சூப்பரா இருக்கு தெரியுமா"
"எனக்கு டைம் வேணும்"
"நோ ஹர்ரி.. எப்போ வேணும்னாலும் நீயும் லவ் பண்ண ஆரம்பிக்கலாம்.. நான் காத்திருப்பேன்"
"ஹலோ.. லவ் பண்றதுக்கு டைம் கேட்கலை.. முடிவெடுக்க டைம் வேணும்"
"அதைத்தான் நான் வேற வார்த்தைல சொன்னேன்"
"சரி வா முதல்ல வீட்டுக்குப் போலாம்.. எனக்கு உன் கூட தனியா இருக்கிறது வித்தியாசமா படுது.. கிளம்பலாம்"
அவள் படபடப்பாவதைப் பார்த்து புன்னகைத்தான் ஜார்ஜ்.. அவனுக்குப் புரிந்து விட்டது.. உற்சாகத்தோடு வண்டியை ஸ்டார்ட் செய்து, நிஜமாவே அருகில் இருந்த காய்கறிக் கடைக்கு விட்டான்.. ஒப்புக்கு சில காய்களை வாங்கிக் கொண்டு இருவரும் வீடு திரும்பினர்.
திண்ணையில் அமர்ந்திருந்த கெளதமி, இருவரும் போனபோது இருந்த முகத்திற்கும், இப்போது திரும்பி வந்த பிறகு உள்ள முகத்திற்கும் நிறைய வித்தியாசம் இருப்பதைப் பார்த்து, பார்வதியைப் பார்த்து பார்வையாலேயே என்னடி ஆச்சு என்று கேட்டாள்.
ஒன்னும் இல்லை.. விலகு என்று அவள் உள்ளே செல்ல முற்பட, அவளைத் தள்ளிக் கொண்டு போய் தனியாக வைத்து துருவினாள்.. பார்வதி நடந்ததைச் சொல்ல, "வாவ்.. நிஜமாவா.. சூப்பர் செலக்ஷன்.. அண்ணா பெஸ்ட்.. உடனே சரின்னு சொல்லு.. தயங்காதே.. எல்லாம் நல்லபடியா முடியும். பேசாம நம்ம ரெண்டு பேர் கல்யாணத்தையும் ஒன்னா கூட வச்சுக்கலாம்"
"ஏன்டி அவனை விட பெரிய லூசாயிருப்ப போல நீ.. அது சரி அண்ணன் லூசா இருந்தா, தங்கச்சியும் அப்படித்தான இருப்பே... தடால்னு எப்படி முடிவெடுக்க முடியும்.. வீட்டுல அம்மா அப்பா கிட்ட பேசணும், மதம் வேற குறுக்கே வருது.. எப்படி உடனே முடியும்" என்று பார்வதி கேட்க, "அதெல்லாம் நான் பாத்துக்கறேன்.. அப்பா கிட்ட நான் பேசறேன். இல்லாட்டி நவீன் அம்மாவை விட்டுக் கூட பேச வைக்கலாம்.. எல்லாம் சரி வரும். ஜார்ஜ் அண்ணா சூப்பரான மனுஷன்.. முதல்ல சரின்னு சொல்லுடி ப்ளீஸ்" அவள் கெஞ்சலாக பார்வதி முகத்தைப் பிடித்துக் கேட்க, " சரி சரி.. யோசிச்சு சொல்றேன்" என்று விலகி உள்ளே சென்றாள் பார்வதி.
அவள் போனதும் வெளியே ஓடி வந்த கெளதமி, நவீன் அருகே அமர்ந்து, அப்படியே எல்லாவற்றையும் அவன் காதிலும் கொட்டினாள்.
"வாவ்... இது எப்ப.. அவன் சொல்லவே இல்லையே"
"அட இப்பத்தான் ரெண்டு பேரும் மனசைப் பரிமாறிக் கிட்டாங்க போல.. அவ இன்னும் ஓகே சொல்லலை.. டைம் கேட்ருக்காளாம்.. பட் ஓகே சொல்லிருவா.. மூஞ்சியைப் பார்த்தாலே தெரியுது.."
"ஓ.. ஜார்ஜ் குட் சாய்ஸ்தான்.. பார்வதியை நல்லா பாத்துப்பான்.. அவனை விட அவ ரொம்ப புத்திசாலி, ரெண்டு பேருக்கும் நல்லா மேட்ச் ஆகும்" நவீன் சொல்லிக் கொண்டே போக.. கெளதமிக்குள் குஷி அப்படி துள்ளி விளையாடியது.. அவள் முகமே பிரகாசமானது.. குழந்தை மாதிரி குதூகலித்தாள்.
அவளை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த நவீன், "உனக்கு ரொம்ப நல்ல மனசு கெளதமி, ஒரு குழந்தை கிட்ட இருக்கும் சுத்தமான மனசு உனக்கும் இருக்குது.. அடுத்தவங்க சந்தோஷத்தைப் பார்த்து சந்தோஷப்படுற மனசு இருக்கிறவங்க, தெய்வத்துக்கு சமம்.. நீயும் கூட தெய்வம்தான் கெளதமி.. இந்த தெய்வம்தான் என்னைக் காப்பாத்திருக்கு.. எனக்கு மனசு ரொம்ப லேசாய்ருச்சு.. சந்தோஷத்துல நிரம்பியிருக்கு.. நான் அதிர்ஷ்டசாலிதான்.. நான் எத்தனையோ நல்ல காரியங்கள் செஞ்சிருக்கேன்.. அம்மா போகாத கோவில் கிடையாது, வேண்டாத சாமி கிடையாது.. ஆனால் இது எல்லாத்தையும் தாண்டி, என்னைக் காப்பாத்தி கூட்டி வந்து இன்னிக்கு உயிரோட உட்கார்த்தி வச்சிருக்கிறது உன்னோட காதல்தான்.. அந்த ஸ்டிராங்கான அன்புதான் என்னை மீட்டு வந்திருக்கு.. I am really really lucky கெளதமி"
நவீன் உணர்ச்சிவசப்பட்டு பேசப் பேச மகிழ்ச்சியுடன் எழுந்து வந்து அவனை கட்டி அணைத்துக் கொண்டாள் கெளதமி.
வெளியில் மீண்டும் ஒரு அழகான மழை பெய்யத் தொடங்கியது. அப்போது பார்த்து நவீனின் செல்போன் ஒலிக்க, எடுத்து ஹலோ என்றான்.
"என்னடா மாப்ளை.. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கிற போல?"
(முற்றும்)
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}