"பணமும், போதையும் மனிதனை மிருகமாக்கும்.. அவன் அப்படித்தான் மிருகமானான்".. (கெளதமியின் காதல் - 25)

May 27, 2024,06:15 PM IST

- சுதா. அறிவழகன்


ஷாக்கடித்தாற் போல  நின்று விட்டான் ஜார்ஜ்.


"ஸார்.. என்ன சொல்றீங்க.. அவன் எங்களோட பிரண்ட்.. என்னை விட நவீனுக்கு ரொம்ப குளோஸும் கூட. அவன் எப்படி இப்படிப் பண்ணியிருப்பான்.. நம்ப முடியலை"


"நம்பித்தான் ஆகணும்.. அவன்தான் எல்லாத்துக்கும் காரணம் அப்படிங்கிறதுக்கு முழுமையா எவிடென்ஸ் கலெக்ட் பண்ணிட்டோம்.. மொத்தம் 3 காலேஜ் அவனோட கன்ட்ரோல்ல இருந்தது. அங்க டிரக்ஸ் சப்ளை பண்றது ஃபுல்லா இவன்தான். இது நவீனுக்கு தெரிஞ்சதும் அதிர்ச்சி ஆகியிருக்கார். கூப்பிட்டு கண்டிச்சிருக்கார். இதெல்லாம் விட்ரு.. இல்லாட்டி நண்பன்னு கூட பார்க்க மாட்டேன்னு சொல்லி வார்ன் செஞ்சிருக்கார். இதை குமார் ரசிக்கலை.. ஸோ, தன்னோட கேங் லீடர் கிட்ட சொல்லவும், அவங்க நவீனை காலி செய்யும் முடிவுக்கு வந்திருக்காங்க. ஆனால் கொலை அளவுக்கு வேண்டாம், நவீன் நல்லவன்.. கடுமையா எச்சரிச்சு விட்ரலாம் அப்படின்னு குமார் சொன்னதாலதான் இதுவரை நவீனைக் கொல்லாம வச்சிருக்காங்க. அவனை பிடிக்க டீம் போயிருக்கு. 2, 3 நாளா உங்க கூட அவன் ஆக்டிவா இருந்திருக்க மாட்டானே.. கவனிக்கலையா நீங்க"


"ஆமா.. கொஞ்சம் சுரத்தில்லாமல்தான் இருந்தான்.. பெருசா எந்த ரியாக்ஷனும் காட்டாம இருந்தான்.. இப்பவும் கூட எங்கேயோ வெளில போய்ட்டு வர்றேன்னுதான் சொல்லியிருந்தான்.."


"வெளியில் போகலை.. எஸ்கேப் ஆக திட்டம் போட்டிருந்தான்.. போறதுக்கு முன்னாடி கெளதமியை காலி செய்யவும் திட்டமிட்டிருந்தான்.. பட் அது நடக்காததால இனி மாட்டிப்போம்னு எஸ்கேப் ஆக கிளம்பினான்.. ஆரம்பத்துல இருந்தே உங்க எல்லோரையும் டைவர்ட் செய்தது அவன்தான்.. சத்தம் போடாம ஒவ்வொரு விஷயமா திட்டம் போட்டு, குழப்பிட்டே இருந்தான். பட் அவனோட எந்த பிளானும் சரியா ஒர்க் அவுட் ஆகலை. எங்க டீம் முற்றுகையிட்டிருக்கு.. கொஞ்ச நேரத்துல பிடிச்சிருவாங்க"




"என்ன ஸார் இது. கற்பனை செய்து கூட பார்க்க முடியலை.. குமார் இப்படிப்பட்டவனா.. இவ்வளவு மோசமானவானா.. நம்பவே முடியலை சார்.. கண்டிப்பா நம்ப முடியலை"


"பணமும், போதையும் மனிதனை மிருகமாக்கும்.. குமார் அப்படித்தான் மிருகமானான்.. முதல்ல டிரக்ஸ் அடிச்சான்.. அதில் காசு கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொண்டு விற்க ஆரம்பிச்சான்.. அதன் பிறகு ஏஜென்ட் போல மாறி விட்டான்.. இப்போது மோசமான செயல்கள் அவனை விடாம பிடிச்சுக்கிட்டதால, நெருங்கிய நண்பனையே கடத்தும் அளவுக்குப் போய்ட்டான்"


"கொடுமை சார்.. இதை எங்களால ஜீரணிக்கவே முடியலை"


"ரிலாஸ் ஜார்ஜ்.. உண்மைகள் கசக்கும்"


இன்ஸ்பெக்டரின் செல் ஒலிக்கவே, எடுத்துப் பேசினார்.


"ஹலோ.. சொல்லுங்க.. ஓ.. குட்.. நேரா ஸ்டேஷனுக்குக் கொண்டு வந்திருங்க.. கூட எத்தனை பேர் இருந்தாங்க.. ஓ.. ஓகே.. அத்தனை பேரையும் செக்யூர் பண்ணியாச்சா.. தட்ஸ் குட்.. அள்ளிட்டு வாங்க.. யாரும் தப்பிச்சுரக் கூடாது.. எதுவும் விபரீதமா பண்ணிரக் கூடாது.. கவனமா கூட்டிட்டு வாங்க"


"ஜார்ஜ்.. குமார் சிக்கிட்டான்.. அவனோட கூட்டாளிகள் 4 பேரும் சேர்ந்து மாட்டியிருக்காங்க.. ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வரச் சொல்லிருக்கோம்.. அங்கு வச்சு விசாரணைக்குப் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தவுள்ளோம்.. அதுக்கு முன்னாடி நாம இப்ப நவீனைப் பார்த்துட்டு பிறகு ஸ்டேஷனுக்குப் போலாம்.. வாங்க"


இன்ஸ்பெக்டர் சொல்லச் சொல்ல ஜார்ஜ் பரபரப்பானான். குமார் சிக்கியது ஒரு பக்கம் வருத்தத்தைக் கொடுத்தாலும், நவீனைப் பார்க்கப் போகிறோம் என்பது அவனுக்குள் மிகப் பெரிய சந்தோஷத்தை ஏற்படுத்தியது. இன்ஸ்பெக்டரிடம் பெர்மிஷன் கேட்டு விட்டு, பார்வதிக்கும் போன் செய்து முடிந்தால் அவளையும் வரச் சொன்னான். பார்வதியும் இப்போது ஹேப்பி.. உடனே வருவதாக கூறினாள்.. ஜீப் வேகமாக மருத்துவமனை நோக்கி விரைந்தது.


நவீன் அனுமதிக்கப்பட்டிருந்தது ஒரு தனியார் மருத்துவமனை. காயங்கள் அதிகமாக இருந்ததால் முன்னெச்சரிக்கையாக அங்கு கொண்டு வந்திருந்தனர். 3வது மாடியில் அறை.. லிப்ட் மூலமாக 3வது மாடிக்கு விரைந்த போலீஸாரும், ஜார்ஜும், வார்டு எண் 111ல் நவீன் இருப்பதை அறிந்து அங்கு சென்றனர்.


அறைக் கதவைத் தட்டி விட்டு அனைவரும் உள்ளே நுழைந்தனர். முகம் முழுக்க மறைந்துக் கிடந்த தாடி, கண்களில் வீக்கம், உடலில் பல இடங்களில் வீக்கம், மெலிந்து போன உடல்.. அடித்துப் போட்டாற் போல கிடந்தான் நவீன். அவன் கிடந்த கோலத்தைப் பார்த்து நெஞ்சே வெடிப்பது போல இருந்தது ஜார்ஜுக்கு.. எப்படி இருப்பான்.. எவ்வளவு அழகு.. எவ்வளவு கம்பீரம்.. நம்ம நவீனா அது என்று கண்ணெல்லாம் கண்ணீர் துளிக்க வேகமாக அருகில் ஓடினான் ஜார்ஜ்.


அருகே போய் நவீனைப் பார்த்தபோது மனசெல்லாம் ஒரு மாதிரியாகி விட்டது. திரும்பி இன்ஸ்பெக்டரைப் பார்த்து, "சார் ஆண்களேப் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு எங்க நவீன் எல்லாவற்றிலும் பெஸ்ட் சார்.. அவனை இப்படி ஆக்கியவர்களை சும்மா விடாதீங்க சார்.. என்கவுண்டரில் கூட போட்டுத் தள்ளுங்க.. மனசாட்சியே இல்லாத மிருகங்கள் சார் இவங்க" என்று ஆவேசமாக கூறவே, அவனது தோளைத் தட்டி ஆசுவாசப்படுத்தினார் இன்ஸ்பெக்டர்.


சிறிது நேரத்தில் பார்வதியும் அங்கு வந்து சேர, அந்த இடமே சோகமயமானது. பார்வதி அப்படியே ஓரமாக போய் நின்று அழ ஆரம்பித்து விட்டாள். அவளால் நவீனைப் பார்க்க முடியவில்லை. ஜார்ஜை கையைக் காட்டி வெளியே அழைத்தாள்.


"என்னடா இப்படி கிடக்கிறான்.. நம்ம நவீனா இது.. ரொம்ப வேதனையா இருக்கு. கெளதமி பார்த்தா செத்தே போயிருவா.. ஏன் இப்படி சிதைச்சுப் போட்டுட்டுப் போயிருக்கானுக"


"அந்தக் கும்பலை விடு பாரு.. குமார் இப்படி செய்வான்னு நினைச்சுக் கூட பார்க்கலை.. எவ்வளவு உதவியிருப்பான் அவனுக்கு நவீன். எல்லோரும் அவனை எப்படி நடத்தினோம்.. அவனுக்கு இப்படி செய்ய எப்படி மனசு வந்தது.. என்னால முடியலை.. கைல மட்டும் கிடைச்சான்.. மவனே.. வகுந்துருவேன் அவனை.. ராஸ்கல்" ஆவேசமாக குமுறினான் ஜார்ஜ்.


அறைக் கதவைத் திறந்து வெளியே வந்த இன்ஸ்பெக்டர் அனைவரையும் ஸ்டேஷனுக்கு வருமாறு கூறி விட்டு நடக்க ஆரம்பித்தார். அங்கு குமார் இருப்பான் என்பதால், அவனைப் பார்த்து நாக்கைப் பிடுங்கும்படி நாலு கேள்வி கேட்க வேண்டும் என்ற வேகத்துடன் உடன் நடக்க ஆரம்பித்தான் ஜார்ஜ். பார்வதி நான் நவீனுடன் இருக்கேன்.. நீ போய்ட்டு வா என்று கூறி விட்டாள்.


ஸ்டேஷனுக்குச் சென்ற போலீஸ் டீம், அங்கு இன்னும் குமார் அழைத்து வரப்படாததால், காத்திருக்க முடிவு செய்தது. கிட்டத்தட்ட ஒரு மணி நேர காத்திருப்புக்குப் பின்னர் குமாரும் மற்றவர்களும் அங்கு அழைத்து வரப்பட்டனர். குமாரைப் பார்த்த ஜார்ஜுக்கு ரத்தம் கொதித்தது. வேகமாக அருகில் சென்று அவனது கன்னத்தில் ஓங்கி பளார் என அறைந்தான். அதைப் பார்த்து போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். ஜார்ஜைப் பார்த்து, இது போலீஸ் ஸ்டேஷன். இப்படியெல்லாம் செய்யக் கூடாது என்று எச்சரித்தனர்.


ஆனால் குமார் ஜார்ஜைப் பார்த்து கோபம் கொள்ளவில்லை. மாறாக, "ஸாரி மச்சான்.. எனக்கு வேற வழி தெரியலை" என்று கூறியபடி நகர்ந்தான்.


"என்னடா ஸாரி.. நீயெல்லாம் மனுஷனா" ஆவேசமாக சத்தம் போட்டான் ஜார்ஜ்.


அதைக் கேட்ட குமார் அமைதியாக நின்றான். பிறகு போலீஸாரிடம் பெர்மிஷன் வாங்கிக் கொண்டு ஜார்ஜிடம் வந்தான்.


"நான் செஞ்சது மிகப் பெரிய தப்புதான். மறுக்கலை.. எனக்கு இதைத் தவிர வேறு வழியில்லை.. இதை நான் செய்யாட்டி என்னோட உயிர், என்னோட குடும்பத்தோட உயிர் மொத்தமும் போயிருக்கும். மனசாட்சியே இல்லாமல்தான் இதைச் செய்தேன்.. ஆனால் மனசுக்குள் அழுதபடிதான் செய்தேன். என்னை மாதிரி பலரையும் இந்த போதை உலகம் அழிச்சிட்டிருக்கு.. இதுல சிக்கிட்டா மீள்வது கடினம்.. என்னால முடியாமதான், அவங்க இழுத்த இழுப்புக்கெல்லாம் போனேன்.. நவீன் அப்பவே சொன்னான்.. சீக்கிரமா திருந்திரு இல்லாட்டி அழிஞ்சுடுவன்னு... இதோ இப்போ அவன் சொன்னதுதான் நடக்கப் போகுது"


அமைதியாக சொன்னபடி பேன்ட் பாக்கெட்டுக்குள் இருந்த பாக்கெட்டைப் பிரித்து அதில் இருந்ததை வேகமாக வாயில் போட்டுக் கொண்டான் குமார். அதை ஜார்ஜ் எதிர்பார்க்கவில்லை.. சற்று தொலைவில் இருந்த போலீஸாரும் எதிர்பார்க்கவில்லை. ஜார்ஜ் போட்ட கூச்சலைப் பார்த்து அனைவரும் ஓடி வந்தனர். அதற்குள் மயங்கிச் சரிந்து விட்டான் குமார். அவன் கையில் இருந்த பாக்கெட்டை வேகமாகத் தட்டிப் பறித்த போலீஸார் அதைப் பார்த்த போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.. சயனைடு விஷம்!


உடனடியாக ஆம்புலன்ஸுக்குப் போன் பறந்தது. அடுத்த சில நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்து.. அதில் இருந்த டாக்டர் குமாரைப் பரிசோதித்தபோது, அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார். அத்தனை பேரும் ஸ்தம்பித்துப் போய் நின்றனர்.


(அடுத்த வாரத்துடன் முற்றும்)

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்