"என்னாச்சு நவீன்.. காம் டவுன்... ரிலாக்ஸ்".. (கெளதமியின் காதல் - 2)

Dec 18, 2023,06:54 PM IST

- சுதா. அறிவழகன்


போட்டிகள் களை கட்ட ஆரம்பித்தன. கெளதமி தனது டீமில் உள்ள ஒவ்வொருவரையும் தட்டித் தட்டிக் கொடுத்து அவர்களுக்கு தைரியமூட்டி, மோட்டிவேட் செய்து களத்தில் இறக்கி விட்டாள். முதல் 3 போட்டிகளில் கெளதமி டீம் அடுத்தடுத்து வெல்லவே, நவீன் டீம் சற்றே ஜெர்க் ஆனது. நவீனுக்கே அது ஆச்சரியமாக இருந்தது. கெளதமி கலக்கலாக டீமை கொண்டு செல்வதாக உணர்ந்தான்.  கோபமோ, ஏமாற்றமோ, ஒரு வெறி உணர்வோதான் அந்த நேரத்தில் அவனுக்கு வந்திருக்க வேண்டாம். ஆனால் அதற்குப் பதில் ஒரு மகிழ்ச்சி உணர்வு மனதை மெல்ல வருடியது அவனுக்கே கூட ஆச்சரியமாகத்தான் இருந்தது.


4வது போட்டியில் நவீன் டீமுக்கு வெற்றி. அதற்குப் பிறகு நடந்த அடுத்த 4 போட்டிகளிலும் கூட அவனது அணியே வென்றது. 8 போட்டிகளில்  5க்கு 3 என்ற கணக்கில் அவர்களது தரப்பு கை ஓங்கவே, கெளதமி தரப்பு இப்போது உஷாரானது.. அடுத்தடுத்து போட்டிகளில் வெல்லும் திட்டங்களை ரொம்பத் தீவிரமாக யோசித்து மெல்ல மெல்ல காய் நகர்த்தினர். அதற்கு நல்ல பலனும் கிடைத்தது. அடுத்த 2 போட்டிகளை அவர்கள் வெல்ல, இப்போது காலேஜே பரபரப்பாகியது. நவீன் கோட்டைக்குள் புகுந்து கெளதமி குரூப் கலகலக்க வைத்து வந்தது டாக் ஆப் தி காலேஜ் ஆக மாறியது. போட்டிகளும் சுவாரஸ்யமாகின.




நவீன் தரப்பு இப்போது சீரியஸானது. எப்படியாவது 3 போட்டிகளில் ஜெயித்து விட்டால் போதும்.. கோப்பை நமக்குத்தான் என்று கூறிய அவன், அடுத்து வரும் போட்டிகளில் எதிர்த் தரப்பை தகர்க்கும் வகையிலான சில யோசனைகளை தனது நண்பர்களுக்குக் கூறி அவர்களை ஊக்கப்படுத்தினான்.  ஆனால் அவர்களது திட்டத்தில் மண்ணை அள்ளிப் போடும் விதமாக அடுத்து வந்த 4 போட்டிகளில் தலா 2ல் இரு அணிகளும் வெல்லவே.. சஸ்பென்ஸில் உறைந்தது கல்லூரி மொத்தமும்.  இப்போது ஆளுக்கு 7 போட்டிகளில் வெற்றி.. மிச்சம் உள்ள ஒரு போட்டியில் வெல்லும் அணியே சாம்பியனாகும் என்பதால் நவீன் தரப்பு ரொம்பவே டென்ஷனாகிப் போனது.


கடைசிப் போட்டியும் வந்தது.. அது பாட்டுப் போட்டி.. நவீனுடன் இந்தப் போட்டியில் நேரடியாக மோத ஸ்டேஜ் ஏறினாள் கெளதமி.. எல்லாப் போட்டிகளிலும் அவள் பங்கேற்காமல் தனது டீமை மட்டுமே உற்சாகப்படுத்தி கலந்து கொள்ள வைத்து வந்தாள்.. இதுதான் அவள் கலந்து கொண்ட ஒரே போட்டி. இதனால் ஸ்டேஜே படு சூடாக காணப்பட்டது. மொத்த கல்லூரியும் இரண்டாக பிரிந்து நின்றது. இதுவரை நவீனை மட்டுமே சாம்பியனாக பார்த்து வந்த கல்லூரிக்கு, இப்போது கெளதமியும் அந்த டைட்டிலுக்கு பொருத்தமானவளாக தோன்ற ஆரம்பித்தாள். மாணவர்கள் மட்டுமல்லாமல், ஆசிரியர்களுக்கும் கூட ஒரு கியூரியாசிட்டி வந்து விட்டது.


கெளதமி ஒரு கர்நாடக இசைப் பாடலை தேர்ந்தெடுத்திருந்தாள். அவளுக்கு இயல்பாகவே நன்றாகப் பாட வரும். ஆனால் அதெல்லாம் வீட்டுக்குள்தான். வெளியில் எங்கேயுமே அவள் பாடியதில்லை. தனக்குப் பாட வரும் என்று கூட யாரிடமும் அவள் சொன்னதில்லை. தனக்குள்ளாகவே அதை வைத்திருந்தாள். இதனால்தான் அவள் பாடப் போகிறாள் என்று கேள்விப்பட்டதுமே அவளது தோழிகள் "அப்படியே ஷாக் ஆகி விட்டனர்".


"டீ.. நீயா பாடப் போறே.. அப்படின்னா என்னன்னாவது தெரியுமா.. அவன் சூப்பரா பாடுவான்.. நீ எப்படி சமாளிக்கப் போறே.. வேண்டாம்மா ரிஸ்க்கு"


"ச்சுப்.. நான் நிஜமாவே நல்லா பாடுவேன்.. உங்ககிட்ட இதுவரைக்கும் அதைச் சொல்லலை.. பட் நல்லா பாடுவேன்.. இதுதான் நான் சொன்ன டிரம்ப் கார்ட்.. நாமதான்ஜெயிக்கிறோம்.. பீ ரிலாக்ஸ்ட்"


கெளதமியின் இந்த வார்த்தையைக் கேட்டதும்தான் தோழிகளுக்கு நிம்மதி வந்தது. மேடைக்கு முன்வரிசையில் குவிந்து கிடந்தார்கள், தங்களது "கேங் லீடர்" பாடி அசத்தப் போவதைப் பார்க்க. போட்டி தொடங்கியது. லேடீஸ் பர்ஸ்ட் என்று நவீன் கூறி விட்டதால் முதலில் கெளதமியே பாடினாள். அவள் பாடப் பாட.. அரங்கமே மூச்சு கூட விடாமல் அப்படியே மெய் சிலிர்த்துப் போய் கேட்டுக் கொண்டிருந்தது... அட இவ்ளோ நல்லா பாடறாளே.. வாவ்.. என்று எல்லோருடைய விழிகளும் ஆச்சரியத்தில் விரிந்தன. அப்படி ஒரு அருமையான குரல்வளத்துடன் சூப்பராக பாடிக் கொண்டிருந்தாள் கெளதமி.


நவீனே ஆச்சரியமாகி விட்டான். கெளதமி பாடுவாளா.. அதுவும் இவ்வளவு அழகா பாடுவாளா என்று வியப்படைந்த அவனுக்கு, நம்மால் இவளுக்கு ஈடு கொடுக்க முடியுமா என்ற சந்தேகமும் வந்து விட்டது.  கண் இமைக்காமல் கெளதமி பாடிக் கொண்டிருந்ததை முழுசாக இன்வால்வ் ஆகி பார்த்துக் கொண்டிருந்த நவீனை அவனது தோழர்கள் திரும்பிப் பார்த்து "எப்படியாவது ஜெயிச்சுருடா மச்சா.. சொதப்பிராதே" என்று கண்களால் ஜாடையில் கெஞ்சிக் கொண்டனர். அவர்களுக்கு புன்முறுவலை மட்டுமே பதிலாக கொடுத்த நவீன், பார்வையை மீண்டும் மேடையின் பக்கம் திருப்பினான்.




ஒரு வழியாக கெளதமியின் பாடல் முடிவடைந்தது. ஒரு சின்ன பிரேக்.. பிறகு நவீன் பாடுவார் என ஸ்டேஜில் அறிவிக்க.. கூட்டத்தில் உற்சாகக் குரல் "கெளதமி .. கெளதமி.. கெளதமி". அரங்கமே அதிரும் வகையில் கிளம்பிய அந்த கோஷத்தைப் பார்த்து நவீன் அமைதியாக புன்னகைத்துக் கொண்டான். அவனைச் சுற்றி நின்ற நண்பர்கள்தான் டென்ஷனாக இருந்தனர்.


"டேய்.. இவ பிளான் பண்ணி நம்மைக் கவுத்திட்டாடா.. இவ்வளவு நல்லா பாடுவான்னு தெரியாமப் போச்சே.. மச்சா.. இதை விட சூப்பரா பாடிருவீல்ல"


நண்பர்களின் பீதியைப் பார்த்து சிரித்த நவீன் "காம் டவுன் மச்சீஸ்..  ரிலாக்ஸ்டா இருங்க.. நாமதான் ஜெயிப்போம்.." என்று அமைதிப்படுத்திய நவீனுக்குள் சின்னதாக ஒரு உதறல் வந்ததை உணர முடிந்தது. தனக்கும் ஒரு காம் டவுன் கூறிக் கொண்ட அவன்.. "நவீன் இப்போது பாடலாம்" என்று அறிவிப்பு வந்ததைத் தொடர்ந்து மெல்ல மேடை ஏறினான்.


அவன் எப்படிப் பாடுவான்.. என்ன மாதிரியான பாடல் பாடுவான்.. என்பது மொத்தக் கல்லூரிக்கும் நன்றாகத் தெரியும் என்பதால் அப்படிப்பட்ட ஒரு பாட்டைத்தான் எதிர்பார்த்து எல்லோரும் காத்திருந்தனர். ஆனால் எல்லோருக்கும் ஒரு சர்ப்ரைஸ் வைத்திருந்தான் நவீன்.. அவன் பாட எடுத்துக் கொண்டது ஒரு மலையாளப் பாடல். யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. வழக்கமாக அவன் தமிழ்ப் பாடலைத்தான் பாடுவான். இப்போது மலையாளத்தை அவன் கையில் எடுத்தது அனைவருக்குமே ஆச்சரியம்தான். அப்போது ரொம்ப ஹிட்டாக இருந்த பாடல் அது.. பாடுவதற்கு கடினமானதும் கூட. ஆனால் பாடலை நவீன் பாட ஆரம்பித்ததுமே.. அவனது குரலிலும், அதன் மென்மையிலும், அவன் பாடிய தத்ரூபத்திலும் அனைவருமே மயங்கத் தொடங்கினர்.


மொத்த அரங்கத்தையும் தனது இனிமையான குரலால் கட்டிப் போட்டு விட்டான் நவீன். பாடல் நீள நீள .. மொத்த அரங்கமும் தாளத்துக்கு ஏற்பட கை தட்டத் தொடங்கி விட்டது... கெளதமியின் முகத்தில் ஒரு ஏமாற்றம் படரத் தொடங்கியது.. நிச்சயம் நவீன்தான் ஜெயிப்பான்.. இவ்வளவு அருமையாக பாடுகிறானே என்ற எண்ணம் அவளது மனதுக்குள் குடியேற.. அவளும் தன்னிச்சையாக கை தட்டத் தொடங்கினாள்.


மொத்த அரங்கமும் நவீனுடன் சேர்ந்து பாடலில் ஐக்கியமாக.. திடீரென குரல் உடைபட்டு.. அப்படியே பாடுவதை நிறுத்தினான் நவீன்.. நிறுத்திய வேகத்தில் தொடர்ந்து இறுமத் தொடங்கினான்.. அத்தனை பேரும் அப்படியே அமைதியில் உறைந்தனர். கைத்தட்டல்கள் நின்றன.. அரங்கம் அதிர்ச்சியில் மூழ்கியது... என்னாச்சு..?


சில நொடி இறுமலுக்குப் பிறகு மீண்டும் பாட எத்தனித்தான் நவீன்.. ஆனால் குரல் ஒத்துழைக்கவில்லை. அத்தோடு பாடல் நின்றுபோனது. கண்களில் கண்ணீர் துளிர்க்க எல்லோரையும் பார்த்து "ஸாரி" என்று கூறியபடி மேடையை விட்டு நகர்ந்தான் நவீன்.. அவனது நண்பர்களுக்கு பூமி காலுக்குக் கீழே நழுவுவது போல இருந்தது. போச்சு எல்லாம் போச்சு.. என்று பெரும் ஏமாற்றத்தில் மூழ்கிப் போனார்கள்.. ஸ்டேஜை விட்டு கீழே இறங்கிய நவீனை அவர்கள் கட்டிப் பிடித்துக் கொண்டார்கள். அத்தனை பேர் கண்களிலும் கண்ணீர்.


என்ன நடக்கிறது என்றே கெளதமிக்குப் புரியவில்லை. நம்ப முடியாத கண்களுடன் நவீனைப் பார்த்த அவளுக்கு என்ன தோன்றியதோ, விசுக்கென எழுந்து அவனை நோக்கி ஓடினாள்.. இடையில் நின்றிருந்த அத்தனை பேரையும் விலக்கி விட்டு, வேகமாக அவனை நெருங்கியவள் கிட்டே போய், அவனது தோளைத் தொட்டுப் பிடித்து, தன் பக்கம் திருப்பி "என்னாச்சு" என்று விழிகளால் கேட்டாள். அவளுக்குப் பதில் சொல்ல முடியாமல் கண்களில் நீர் துளிர்க்க அப்படியே சில விநாடிகள் அவளைப் பார்த்தான் நவீன்.. அவர்களின் பார்வைப் பரிமாறல்கள்.. அவர்களுக்கு மட்டுமே புரிந்தது.. சுற்றிலும் நின்றவர்கள் சில விநாடிகள் அப்படியே அவுட் ஆப் போகஸ் ஆக..  அப்படியே நவீனை கட்டி அணைத்து முதுகில் தட்டி "ரிலாக்ஸாகுங்க.. ஒன்னுமில்லை" என்று மெல்லிய குரலில் கெளதமி கூற, நவீன் கண்களை மூடியபடி அவளது ஆறுதலை ஆமோதித்தான்.


இருவரும் சில விநாடிகள் அப்படியே நின்றிருந்த நிலையில் சட்டென சுதாரித்து இயல்பு நிலைக்குத் திரும்பினர். கெளதமிக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. அங்கிருந்து மெல்ல நகர்ந்து தன் இருக்கைக்குப் போனாள்.. மொத்த கல்லூரியும் என்னாச்சு நவீனுக்கு என்ற சலசலப்பில் மூழ்கியது. பிரின்சிபால், நவீனிடம் சென்று பேசி அவனை அமைதிப்படுத்தினார். அனைவரும் இயல்பு நிலைக்குத் திரும்பி வர, போட்டி முடிவை அறிவிக்க நடுவர் மேடை ஏறினார்.


"இருவருமே நன்றாகப் பாடினர். ஒருவரை ஒருவர் விஞ்சும் வகையில் பாடினர். யாருக்கு மார்க் போடுவது என்றே தெரியாமல் நாங்கள் திணறிக் கொண்டிருந்தோம். ஆனால் திடீரென நவீன் பாடியபோது ஏற்பட்ட இடையூறு  காரணமாக அவருக்கான மதிப்பெண் சற்றுக் குறைந்து விட்டது. ஸோ, கெளதமி வென்றதாக அறிவிக்கிறோம்" என்று நடுவர் அறிவிக்கவே, ஒட்டுமொத்த அரங்கமும் அப்படியே அமைதியில் உறைந்தது. யாரும் கை கூட தட்டவில்லை. யாரும் இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை.. ஆம், இந்த ஆண்டு கல்ச்சுரல்ஸில் நவீன் டீம் தோல்வி அடைந்து விட்டது.. யாராலும் இதை நம்ப முடியவில்லை.. அதை ஏற்க மனசும் வரவில்லை. 


மொத்த அரங்கும் அமைதியாக இருந்த நிலையில் ஒரு ஒற்றைக் கைதட்டல் மெல்ல எழுந்தது. அது நவீன்.. மெல்ல எழுந்து நின்று கைகளை ஓங்கி தட்ட ஆரம்பித்தான். அவனைப் பார்த்து மற்றவர்களும் அவனுடன் இணைய மொத்த அரங்கமும் கைத்தட்டல் ஒலியில் நிறைந்தது.. கெளதமியின் கண்களில் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. துடைக்கக் கூட தோன்றவில்லை அவளால்.. ஆனால் இது ஆனந்தக் கண்ணீர் அல்ல.. என்பது அவளுக்கு மட்டுமே தெரியும்.. நவீனைப் பார்த்தபடியே, பார்வையை விலக்காமல் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள் கெளதமி.


அடுத்தடுத்து மேடையில் நடந்த எதுவுமே கெளதமிக்கு கண்ணில் படவில்லை. அவளது மொத்தப் பார்வையும் நவீன் மீது மட்டுமே குவிந்து கிடந்தது. அவனும் மெல்லிய புன்னகையுடன் நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். கெளதமி பக்கம் திரும்பவே இல்லை.. ஆனால் அவள் தன்னையே பார்த்துக் கொண்டிருந்ததை உணர்ந்திருந்தான். 




மேடையில் சாம்பியன் பட்டத்தை அளிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. இதுவரை சாம்பியனாக இருந்த நவீனிடமே, புதிய சாம்பியனுக்கான பட்டத்தை அளிக்குமாறு கல்லூரி முதல்வர் கேட்டுக் கொள்ள, மேடை ஏறினான் நவீன். கைத்தட்டல் விண்ணைப் பிளந்தது.. சாம்பியன் பட்டத்துக்கான கோப்பையை கெளதமி கையில் நவீன் கொடுக்க, அவளது பார்வை நவீனின் பார்வையுடன் மோதி நிற்க.. இருவருக்குள்ளும் ஏதோ உணர்ச்சிப் பெருக்கு.


"தேங்க்ஸ் நவீன்.. நாங்க ஜெயிச்சிருந்தாலும்.. உண்மையான சாம்பியன் நீங்கதான்.. யு ஆர் தி ரியல் சாம்பியன்.. ஆல்வேஸ்" என்று மெல்லிய குரலில் கெளதமி சொல்ல, அதையும் புன்னகையுடன் வாங்கிக் கொண்டான் நவீன்.


"உங்களோட திறமையும், கடுமையான உழைப்புதான் இந்த வெற்றிக்கு முழுக் காரணம். நீங்க ஒரு கிரேட் லீடர். வாழ்த்துகள் கெளதமி" என்று பதிலுக்கு நவீனும் வாழ்த்த.. புன்னகைத்தபடி அதை தலையாட்டினாள் கெளதமி.


(தொடரும்)


கெளதமியின் காதல் - அத்தியாயம் 1

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்