"சரி சரி அமைதியா இரு.. நான் குளிச்சுட்டு கிளம்பி வர்றேன்".. (கெளதமியின் காதல் -5)

Jan 08, 2024,11:20 AM IST

- சுதா. அறிவழகன்


காலிங் பெல் அடித்தது..  பிளாஷ்பேக் கலைந்து.. எழுந்தாள் கெளதமி. கதவைத் திறந்து பார்க்க எதிர் வீட்டு மாமி நின்றிருந்தார்.


"வாங்க மாமி.. என்னாச்சு"


"பொண்ணே, ஒரு ஹெல்ப் வேணும்.. சிலிண்டர் வந்திருக்கு. இந்த மனுஷன் என் பர்ஸ்ல இருந்த ரூபாயையெல்லாம் வழிச்சு எடுத்துட்டுப் போயிட்டார். சில்றையாதான் இருக்கு. பீரோவிலேயும் காசைக் காணோம்.. பேங்க் போகணும்னு நினைச்சிருந்தேன்.. அதுக்குள்ள சிலிண்டர் வந்துருச்சு. ஒரு தெளசன்ட் ரூபிஸ் கொடு.. மாமா வந்ததும் குடுத்துடறேன்.. இல்லாட்டி பேங்க் போயிட்டு வந்து குடுத்துடறேன்"


"பரவாயில்லை.. இருங்க மாமி எடுத்துட்டு வர்றேன்"




மாமி கையில் ரூபாயைக் கொடுத்து அனுப்பி வைத்து கதவை மூடினாள் கெளதமி. மாடியில் காய வச்ச வடாம் என்னாச்சுன்னு தெரியலையே.. பார்த்துட்டு வருவோம்னு நினைத்தபடி மாடிக்குப் போனாள். வெயில் சுட்டெரிக்க வடாம் அருகே ஒரு சில  காகங்கள் சுற்றி நின்று கொத்திக் கொண்டிருந்தன. 


"வந்துட்டீங்களா.. கரெக்டா வந்துருவீங்களே.. எப்படித்தான் உங்களுக்கு மூக்கு வேர்க்குமோ".. செல்லமாக அலுத்தபடி.. சூ சூ என்று கூறியபடி காகங்களை மெல்ல விரட்டினாள். அவற்றை விரட்டி விட்டு காய்ந்திருந்த வடாமை அப்படியே துணியோடு சேர்த்து மடித்துக் கொண்டு கீழே வந்தாள்.


ஒரு பாத்திரத்தை எடுத்து, துணியில் இருந்த வடாமை மெல்ல ஒவ்வொன்றாக எடுத்து உள்ளே போட்டாள்.. தடைபட்டுப் போன நினைவுகளை நோக்கி மனசு மீண்டும் பின்னோக்கி ஓடியது.. கைகள் வடாமை எடுத்து உள்ளே போட.. மனசுக்குள் கடந்த காலம் மீண்டும் விரிந்தது..


அதன் பிறகு நவீன் எப்போது வந்தான்?


--




கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை நவீனிடமிருந்து தினசரி போன் வந்தது. சொன்னபடி நடந்து கொண்டான் சமத்துப் பையனாக.. காலையில் ஒரு போன், மாலையில் ஒரு போன்.. என காதல் மழை பொழிந்தது.. "கால்" வழியாக. என்னடி காலா இல்லை காதலா என்று தோழிகள் கிண்டலடிக்கும் அளவுக்கு இருவரும் மூழ்கிக் கிடந்தார்கள்.


ஆனால் அவன் பேசிய ஒவ்வொரு முறையும் அழத் தவறவில்லை கெளதமி. அவனும் பேசிப் பேசி அவளை ஆறுதல் படுத்தினான்... சில நேரங்களில் அட போங்கய்யா என்று அலுத்தபடி கொஞ்ச நேரம் அழ விட்டான்.. அதைப் பார்த்து கடுப்பானாள் கெளதமி.. "யோவ்.. நான் அழுதா நீ சமாதானப்படுத்தணும்.. அப்டியே விட்ருவியா".. என்றும் சண்டை பிடித்தாள். இடையில் 2 முறை நேரில் வந்தும் பார்த்து விட்டுப் போனான். வீடுதான் செட் ஆகவில்லை. அம்மாவுக்கும் உடம்பு ரொம்ப முடியவில்லை என்பதால் உடனடியாக ஊரைக் காலி செய்யவும் முடியாத நிலை.


இப்படி நவீனுக்கு ஒரு பக்கம் தர்மசங்கடம், மறுபக்கம் கெளதமிக்கு மன உளைச்சல். இருவரும் தவித்துக் கொண்டிருந்தனர். இந்த தவிப்புக்கு நடுவில் இவர்களது காதலும் வலுவாக வளர ஆரம்பித்தது. காதல் கொண்ட மனதுக்கு.. எது ஆறுதல்.. இரு மனங்களின் நெருக்கமும், அன்பும், பாசமும் மட்டும்தானே.. அதை நேரில் அனுபவிக்க முடியாமல் ஏக்கத்திலேயே கழித்துக் கொண்டிருந்தனர் இருவரும்.


அது ஒரு ஞாயிற்றுக்கிழமை.. வழக்கமாக சன்டே என்றால் ஒரே நாளில் பல தடவை பேசி விடுவான் நவீன். காலை  6 மணிக்கே முதல் போன் வந்து விடும். அந்த போன் அழைப்புதான் கெளதமியை கண் விழிக்க வைக்கும். ஆனால் அன்று போன் வரவில்லை. தூக்கம் கலைந்து கெளதமி செல்போனை எடுத்துப் பார்த்தபோது மணி 7.30 என்று  காட்டியது. அய்யோ.. என்னாச்சு இவ்வளவு நேரம் தூங்கிட்டேன்.. பதறியடித்தபடி கால் ஹிஸ்டரியைப் பார்த்தாள்.. "நவீன் போன் பண்ணலையே" என்று உறைக்க.. குழப்பமானாள். 


என்னாச்சு.. ஏன் போன் பண்ணலை.. குழம்பியபடியே அவனுக்கு போனைப் போட்டாள். ரிங் போய்க் கொண்டே இருந்தது. ஆனால் அட்டென்ட் பண்ணலை.. மீண்டும் மீண்டும் டிரை செய்தாள்.. ரிங் போனதே தவிர எடுக்கவில்லை. குழப்பம் இப்போது பயமாக மாறியது. 


ஏன் அவன் போனை எடுக்கலை..?


வேகமாக எழுந்து பல் துலக்கி முகத்தை துடைத்து விட்டு மீண்டும் டிரை செய்தாள். இப்போதும் ரிங் மட்டுமே போனது. பயம் இப்போது பதட்டமானது.  நைட்டியை கழற்றி விட்டு சுடிதாருக்கு மாறினாள். பார்வதிக்கு போனைப் போட்டாள். 


"சொல்லுடி"


"பாரு.. நவீன் கிட்ட இருந்து போன் வரலை.. நான் கால் செய்தா ரிங் போகுது.. அட்டென்ட் பண்ண மாட்டேங்குறார்.. என்னாச்சுன்னு தெரியலை"


"சரி.. கொஞ்ச நேரம் கழிச்சு பண்ணிப் பாரு.. ஏதாச்சும் வேலையை வெளில போயிருக்கலாம் அல்லது போன் அவர் கிட்ட இல்லாம இருக்கலாம்ல.. பதட்டம் அடையாம கொஞ்ச நேரம் கழிச்சுப் பாரு"


"இல்லடி.. இதுவரைக்கும் 10 வாட்டிக்கு மேல போன் போட்டுட்டேன்.. எடுக்கலியே.. என்னாவாயிருக்கும்"


"அதான்டி சொல்றேன்ல.. போன் அவர் கிட்ட இல்லாம இருக்கலாம்.. இல்லாட்டி சைலன்ட் மோட்ல இருக்கலாம்.. இத்தனை தடவை பண்ணிருக்கில்ல.. கண்டிப்பா திரும்ப பண்ணுவார்.. டென்ஷன் இல்லாம இரு. நான் வேணும்னா கிளம்பி வரவா"


"ஆமா.. கிளம்பி வா.. எனக்கு பயமா இருக்கு"


"சரி சரி அமைதியா இரு.. நான் குளிச்சுட்டு கிளம்பி வர்றேன்.. பிரேக்பாஸ்ட் வெளில சாப்பிட்டுக்கலாம்.. வெயிட் பண்ணு"


"இப்ப சாப்பாடா முக்கியம்.. முதல்ல கிளம்பி வாடி"


"சரி பேபி.. ரிலாக்ஸ் வந்துர்றேன்"


கெளதமிக்கு எதுவும் புரியவில்லை. நவீன் இப்படி இருந்ததே இல்லை. என்ன வேலையாக இருந்தாலும் போன் பண்ணாமல் இருக்க மாட்டான்.. எனக்கு டென்ஷனாகி விடும் என்பதால் எப்போதுமே போன் செய்வதிலிருந்து தவறவே மாட்டான். அப்படிப்பட்ட  ஆள் இன்னிக்கு டைமுக்கு போனும் பண்ணலை.. போன் பண்ணா எடுக்கவும் செய்யலை.. என்னாச்சுன்னு புரியலையே.. குழம்பித் தவித்த கெளதமிக்கு தலையே வெடிச்சுரும் போல இருந்தது.




சற்று நேரத்தில் பார்வதி வந்து சேர, இருவரும் அவளது ஸ்கூட்டியில் வெளியே கிளம்பினர்.


"திரும்ப டிரை பண்ணியா கெளதமி"


"அதைத்தான் தொடர்ந்து பண்ணிட்டிருக்கேன். வேற எந்த வேலையும் செய்யலை.. பல்லு வெளக்குனதோட சரி,  டாய்லெட் கூட நான் போகலை இன்னும்"


"அட கருமம் பிடிச்சவளே.. இவ்வளவு டென்ஷன் ஏன் உனக்கு. போன் கையில் இருந்திருக்காது அவருக்கு. இல்லாட்டி பண்ணிருக்க மாட்டாரா.. இதுக்குப் போயி இப்படி டென்ஷன் ஆவியா நீ.. சரி.. இப்ப என்ன செய்யலாம்"


"தெரியலியே.. பேசாம அவரோட ஊருக்குப் போயிப் பார்ப்போமா.."


"என்னாது.. ஊருக்குப் போவோமா.. ஏன்டி.. என்ன நினைச்சிட்டிருக்கே நீ.. அவர் இருக்கிறது நாகர்கோவில்.. நீ இருக்கிறது சென்னை.. வெண்ணமவளே ஓவராதான் பண்றே நீ.. நினைச்சதும் கிளம்பி ஓடும் தூரமா அது.. வெயிட் பண்ணு.. திரும்ப போன் பண்ணுவோம். அவரோட பிரண்ட்ஸ் கிட்ட கேட்டா ஏதாவது வேற காண்டாக்ட் நம்பர் தெரியும்ல.. அதை டிரை பண்ணுவோம். அமைதியா இரு. முதல்ல இந்த ஜார்ஜ் பயலைப் பிடிப்போம்"


"ஏய்.. ஜார்ஜ் என்னோட அண்ணன்.. மரியாதையா பேசு"


"என்னாது நொன்னணா.. இது வேறயா.. அவனையெல்லாம் "அவன்"னு சொல்றதே மரியாதையான வார்த்தை தாண்டி.. அதை விட கம்மியான வார்த்தைலதான் கூப்பிடணும்.."


ஜார்ஜ் வீட்டை நோக்கி ஸ்கூட்டி பறந்தது. ஆனால் அதை விட வேகமாக கெளதமியின் மனசு படபடத்துக் கொண்டிருந்தது. பத்து நிமிட தூரத்தில் வந்து சேர்ந்தனர். வீட்டு வாசலிலேயே நின்று யாருடனோ பேசிக் கொண்டிருந்தான்.  கெளதமியைப் பார்த்ததும் விழிகளில் ஆச்சரியம்  காட்டிய ஜார்ஜ், கொஞ்ச நேரம் இருங்க என்று சைகை காட்டினான்.  போனை பேசி முடித்து விட்டு அவர்களிடம் திரும்பினான்.


"என்னாச்சும்மா காலைலேயே இங்க வந்திருக்கீங்க.. ஏதாவது பிரச்சினையா"


"இல்லை.. சும்மா உங்களைப் பார்த்து குட்மார்னிங் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தோம்.. அப்பத்தான் இன்னிக்கு நாள் நல்லாருக்கும்னு முக்குத் தெரு ஜோசியர் சொன்னாரு .. அதான்" நக்கலடித்தாள் பார்வதி.


"சும்மா இருடி இவ வேற.. அண்ணா.. அவர்கிட்ட இருந்து எனக்கு காலைல போன் வரலை.. நான் போன் போட்டா ரிங் போகுது, எடுக்க மாட்டேங்குறாரு.. உங்களுக்கு ஏதாவது பண்ணாரா"


"போன் எடுக்கலையா.. ஏன் எடுக்கலை.. இரு நான் டிரை பண்றேன்"


சொன்ன கையோடு நவீனுக்குப் போனைப் போட்டான் ஜார்ஜ். ரிங் போனது..  கால் எடுக்கப்படவில்லை. ஜார்ஜுக்கும் குழப்பமாக இருந்தது. ஏன் நவீன் போனை எடுக்கலைன்னு தெரியலையே.. திரும்பத் திரும்ப டிரை செய்தான்.. அதே கதைதான்.


"ஏன் போன் எடுக்க மாட்டேங்குறான்னு தெரியலையே.. "


"அவருக்கு வேற ஏதாவது கான்டாக்ட் நம்பர் இருக்காண்ணா.. வீட்டுல லேன்ட்லைன் நம்பர் ஏதாவது இருக்கா?"




"வீட்டு நம்பர் இருக்கான்னு தெரியலையே.. அவனோட இந்த நம்பர் மட்டும்தான் என் கிட்ட இருக்கு. காலேஜ்ல விசாரிச்சா ஏதாவது தெரிய வாய்ப்பிருக்கு.. இரு நம்ம காலேஜ் ஆபீஸ் பியூன் கிட்ட பேசிப் பார்க்கிறேன்"


பியூனுக்குப் போனைப் போட்டு மேட்டரைக் கூறி விவரம் கேட்டான். சிறிது நேரத்தில் அவர் தேடித் தருவதாக கூறவே அதை அப்படியே கெளதமிக்கு பாஸ் செய்தான். தேங்ஸ் சொல்லி விட்டு அங்கிருந்து இருவரும் கிளம்பினர்.


நவீனுக்கு என்னாச்சு.. ஏன் போனை எடுக்கலை.. எங்கே போயிருப்பான்.. ஏன் இப்படி பண்றான்.. இப்படி பண்ண மாட்டானே.. ஏதாவது உடம்புக்கு முடியலையா.. அல்லது அவனோட அம்மாவுக்கு ஏதாச்சும் ஆயிருக்குமா.. ஒன்னுமே புரியலையே.. தலையெல்லாம் வலித்தது கெளதமிக்கு. அடி வயிறு வலிப்பது போல இருந்தது. 


"பாரு வயிறு வலிக்குதுடி"


"வலிக்காம என்ன செய்யும்.. வெளியில் எங்கேயும் போக வேண்டாம். என் வீட்டுக்குப் போகலாம்.. முதல்ல நீ ரெஃப்ரஷ் ஆயிட்டு வா. சாப்பிடலாம். பிறகு யோசிப்போம்"


ஆக்சிலரேட்டரைத் திருகி வேகம் கொடுத்து வீட்டை நோக்கி வண்டியை விரட்டினாள் பார்வதி.


(தொடரும்)

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்