"பேசி பேசியே கலைச்சுட்டீங்க.. இப்ப பாதியிலேயே போறீங்க".. (கெளதமியின் காதல் - 4)

Jan 02, 2024,05:43 PM IST

- சுதா. அறிவழகன்


2 மாதமாகி விட்டது.. நவீனின் மனதுக்குள் கெளதமியும், அவளது மனதுக்குள் அவனும் குடியேறி.. இன்னும் சில நாட்களில் செமஸ்டர் முடியப் போகிறது.. நவீனுக்கு இது கடைசி செமஸ்டர்.. இத்தோடு விடை பெறப்  போகிறது அவனது "பி.ஜி" வாழ்க்கை.. கெளதமிக்கு எதுவுமே பிடிக்கவில்லை. நவீன் இல்லாமல் எப்படி தனது அடுத்த இரண்டு காலமும் கழியப் போகிறது என்று அவளுக்குப் புரியவே இல்லை. அழுகை அழுகையாக வந்தது. தனியாக அமர்ந்து கொண்டிருந்தாள்.


பார்வதி வந்து பலமுறை சமாதானப்படுத்தியும் அவளால் சமாதானம் ஆக முடியவில்லை. நவீன் இல்லாத ஒரு நொடியைக் கூட அவளால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. நண்பர்களும், தோழியரும் எவ்வளவோ சொல்லிப் பார்த்து விட்டனர். ஆனால் யார் சொல்வதையும் கேட்கும் மன நிலையில் அவள் இல்லை. மனசு முழுக்க நவீன் அப்பிக் கிடந்தான். கூடவே இருந்து வந்த அவன் கல்லூரிக்கு இனிமேல் வர மாட்டான், வர முடியாது என்ற எதார்த்தம் அவளை புரட்டிப் போட்டது, மனசு ஏற்க முடியவில்லை. பேசாம நாமளும் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு நவீன் கூடவே போய் விடலாமா என்று கூடத் தோன்றியது அவளுக்கு.


கேன்டீனுக்கு வெளியே கீழே உதிர்ந்து கிடந்த பூக்களை அள்ளி அள்ளி கையில் போட்டபடி, மெளனமாக அமர்ந்திருந்தாள் கெளதமி. பக்கத்தில் பார்வதி, யாருடனோ போனில் பேசியபடி.. கெளதமியைத் தேடி அங்குமிங்கும் சென்ற நவீன், கேன்டீன் பக்கம் இருப்பதை அறிந்து அங்கு வந்தான். அவனைப் பார்த்ததும், "கெளதமி.. நவீன்" என்று கூறியபடி பார்வதி எழுந்து அங்கிருந்து அகன்றாள். கண்களைத் துடைத்துக் கொண்டாள் கெளதமி.




"என்னாச்சுய்யா.. இப்படியே அழுதிட்டு இருக்கப் போறியா.. சின்னக் குழந்தையா நீ"


"ஆமா அழுதுட்டேதான் இருப்பேன்.. உங்களுக்கென்ன வந்துச்சு.. நீங்கதான் ஜாலியா போகப் போறீங்களே.. போங்க"


"ஏய் பாப்ஸ்... இன்னும் 2 வருஷம்தான்.. ஜஸ்ட் 2 வருஷம்தான்.. அது முடிஞ்சதும்.. நாம கல்யாணம் பண்ணிக்கலாம்.. பிறகென்ன.. டெய்லி உன் கூட பேசிட்டே இருக்கப் போறேன்.. அப்பப்ப வந்து பார்த்துக்கறேன்.. நீயும் முடிஞ்சப்பெல்லாம் கிளம்பி எங்க வீட்டுக்கு வா.. அம்மாவும் உன்னைப் பார்க்க ஆர்வமா இருக்காங்க.."


"ஹலோ.. எல்லாம் தெரிஞ்சும் தெரியாத மாதிரியே எப்படி பேச முடியுது உங்களால.. எனக்கு டெய்லி உங்க கூடவே இருக்கணும் போல இருக்கு.. உங்களைப் பார்த்துட்டே இருக்கணும்.. உங்க அருகாமை தேவை.. நீங்க கூட இருக்கீங்கன்னு ரொம்ப கர்வமா இருந்தேன்.. திடீர்னு இப்படிப் போனா எப்படிப்பா.. எனக்கு கஷ்டமா இருக்காதா"


"நிச்சயம் கஷ்டமாதான் இருக்கும்.. எனக்கும்தான் கஷ்டமா இருக்கும். ஆனால் எதார்த்தம்னு ஒன்னு இருக்கில்லையா.. படிப்பை நல்லபடியா முடி.. படிப்பு முக்கியம்.. அதை முடிச்சுட்டு வா.. நானும், என்னோட அம்மாவும் உனக்காக காத்துட்டிருக்கோம்.. போதுமா.. வேணும்னா அம்மா கிட்ட போன் போட்டுத் தர்றேன். நீயே கேட்டுக்கோ"


"அதெல்லாம் வேண்டாம்.. நான் அத்தை கிட்ட இப்ப பேச மாட்டேன். மருமகளா வந்துட்டுதான் பேசுவேன்.. அதுவரை சஸ்பென்ஸா வைங்க.. எல்லாத்தையும் போட்டு உடைக்காதீங்க"


"ஹாஹாஹாஹா.. ஓகே. மகாராணி.. நீங்களே வந்து நீங்களே எல்லாத்தையும் சொல்லி.. நீங்களே எனக்கு பொண்ணும் பாத்துடுங்க.. அப்புறமா நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்.. சரியா மேடம்"


"இந்த கிண்டலுக்கெல்லாம் குறைச்சலே கிடையாது.. இப்படிப் பேசி பேசியே என்னை கலைச்சுட்டீங்க.. இப்ப பாதியிலேயே விட்டுட்டுப் போறீங்க.. எனக்கு கஷ்டமா இருக்கு நவீன்.. என்னால முடியலை" அழ ஆரம்பித்தாள் கெளதமி.


குலுங்கி குலுங்கி அவள் அழ ஆரம்பித்ததைப் பார்த்த நவீனுக்கு என்னவோ போலாகி விட்டது. எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. நெருங்கி அமர்ந்து அவளது தோள்பட்டையைப் பிடித்து தன்னோடு அணைத்துக் கொண்டான்.. 


"கெளதமி.. ரிலாக்ஸ்.. என்ன இது.. குழந்தை மாதிரி.. பப்ளிக் பிளேஸ் இது.. இப்படி நடந்துக்கலாமா.. காம்டவுன் ப்ளீஸ்"


"என்னால முடியலை நவீன்.. கஷ்டமா இருக்கு.. நீ என் கூடவே இருக்கணும்னு தோணுது. மொத்தமா என்னை நீ ஆக்கிரமிச்சுட்டே.. என்னால இருக்க முடியலை நீ இல்லாம.. உன் மூச்சுக் காத்து என்னைத் தொட்டுட்டே இருக்கணும்னு நினைக்கிறேன்.. ப்ளீஸ்.. ஏதாச்சும் பண்ணு.. இங்கேயே இருக்க முடியுமான்னு பாரு"


"இங்கேயே இருக்கணுமா.. அப்படின்னா வாட்ச்மேன் வேலை  வாங்கிடவா.. இங்கேயே இருக்கலாம்"


"என்னைக் கிண்டல் பண்ணாதே.. என்னோட பீலிங்ஸை புரிஞ்சுக்கோ.. ப்ளீஸ்"


"அட தாயே.. இது சப்பை மேட்டர்மா.. இதுக்குப் போய் ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகறேன்னு தெரியலியே.. சரி.. நான் ஒன்னு பண்ணுறேன்.. அம்மாவைக் கூட்டிட்டு இங்கேயே வந்துர்றேன்.. இங்கேயே ஒரு வீடு பார்த்து ரெண்டு பேரும் தங்கிக்கிறோம்.. டெய்லி மார்னிங் அன்ட் ஈவ்னிங் உன்னைப் பார்க்க வந்துர்றேன்.. இந்த சரியா இருக்குமா"


"மார்னிங், ஈவ்னிங் மட்டும்தானா.. அப்ப ஆப்டர்நூன் வர மாட்டியா.. வீட்டுலேயே தூங்கிருவியா.. நான் இல்லாம உனக்கு தூக்கம் எல்லாம் வருமாடா நவீன்"


"ஏய் குரங்கு.. நீ ஏன் அப்பப்ப ஜெனிலியா மாதிரி லூசாய்டறே.. முழு நேரமும் உன் கூடவே இருந்தா நீ எப்படிப் படிப்பே.. நான் எப்படி எங்கம்மாவைப் பாத்துக்கிறது.. நான் எப்படி ஏதாச்சும் வேலைக்குப் போறது.. நாம எப்ப கல்யாணம் பண்ணிக்கிறது.. இதெல்லாம் உனக்கு தோணவே தோணாதா.. இப்ப நான் சொன்ன ஐடியா உனக்கு ரொம்பப் பொருத்தமா இருக்கும். ஸோ அதையே செய்றேன்.. நீ படிப்புல கான்சன்ட்ரேட் பண்ணு.. சரியா"


"இதுவும் கூட என்னோட கஷ்டத்துல 75% தான் தீர்த்து வைக்கும். முழுசாத் தீர்க்காது. இருந்தாலும் இதுவாச்சும் கிடைக்குதேன்னு ஏத்துக்கறேன்.. ஆமா.. எப்ப அம்மாவைக் கூட்டிட்டு வருவே.. நாளைக்கு வந்துர்றியா பேசாம.. நம்ம காலேஜ் கிட்டேயே வீடு பார்த்துடலாமா.. பக்கத்துல இருந்தா டக்குன்னு பார்க்கலாம்ல"




"ஏன் பிரின்சிபால் ரூம் பெருசாதானே இருக்கு.. அதுல ஒரு ஒரத்துல தங்கிக்கிறோமே.. இன்னும் ஈஸியா இருக்கும் உனக்கு"


"போ நவீன்.. நீ கிண்டல் பண்றே.. சீரியஸாவே பேச மாட்டேங்குறே"


"யாரு நான் சீரியஸா பேசலையா.. அதை நீ சொல்றியாக்கும்"


"ம்க்கும்.. சரி சரி விடு.. ரிலாக்ஸ்.. உன்னோட ஐடியாவை நான் ஏத்துக்கறேன்.. சீக்கிரம் வீடு பார்த்து வரப் பாரு.. நீங்க வந்ததும் நான்தான் வந்து முதல்ல பால் காய்ச்சுவேன்.. அம்மா கிட்ட அதை மறக்காம சொல்லிடு.. மருமகதான் பால் காய்ச்சணும் முதல்ல.. தெரியுமா"


"முதல்ல நான் ஊருக்குப் போறேன்.. அம்மா கிட்ட பேசறேன்.. அவங்க சம்மதத்தை வாங்குறேன்.. பிறகு வீடு பார்க்கறேன்.. அப்புறம் பால் காய்ச்சலாம், டீ போடலாம், காபி குடிக்கலாம்.. அதுவரைக்கும் நீ அமைதியா படிச்சுட்டு இரு.. நான் டெய்லி போன் பண்றேன் உனக்கு.. ரிலாக்ஸ்டா இரு"


"படிப்பேன்.. ஆனால் அமைதியாவெல்லாம் இருக்க முடியாது.. நீ பக்கத்துல இருந்தாதான் அமைதியா இருக்க முடியும்.. இல்லாட்டி புயல் வீசிட்டேதான் இருக்கும்.. என் மனசு புரிஞ்சு நடந்துக்கப்பா, ப்ளீஸ்"


"ஓ.கே பாப்பா.. நீ ரிலாக்ஸ்டா இரு.. அது போதும்"


கெளதமியின் மனதை சற்றே ஆறுதல்படுத்திய திருப்தியில் நீண்ட பெருமூச்சு விட்டான் நவீன்.. அவளோ.. அவனை இன்னும் இறுக்கமாக பிடித்தபடி நெருங்கி அமர்ந்தாள்.


(தொடரும்)

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்