- சுதா. அறிவழகன்
நடந்ததெல்லாம் கனவா அல்லது நனவா என்று யாருக்குமே புரியவில்லை.. எல்லாம் ஒரு சொடுக்கில் நடந்தது போல ஓடி விட்டது. யாராலும் நம்ப முடியவில்லை.. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.. கண் முன்னாடி நடந்த எல்லாமே ஒரு மாஜிக் போன்ற உணர்வுதான் ஒவ்வொருவரின் மனதிலும் ஓடிக் கொண்டிருந்தது.
மொத்தக் கல்லூரியும் புதிய சாம்பியனை சில நாட்கள் கொண்டாடியது. ஆனால் அடுத்து வந்த சில நாட்களில் நவீனைக் காண முடியவில்லை.. கெளதமிக்கு அது வித்தியாசமாக இருந்தது.. பலரிடமும் கேட்டுப் பார்த்தாள். யாரிடமும் தெளிவான தகவல் இல்லை. கெளதமிக்கு ஒரு மாதிரியாக இருந்தது.. ஆனா நாம இப்போ ஏன் அவனைப் பத்திக் கவலைப்பட்டுட்டு இருக்கோம் என்ற எண்ணமும் உடன் வந்து கெளதமியை இம்சித்தது.
இப்படியே ஒரு வாரம் ஓடி விட்டது.. அவளுக்கு இருப்பு கொள்ளவில்லை. எங்க போய்ட்டான் இவன்.. என்ற எண்ணம் மனசைப் போட்டுப் பிறாண்டிக் கொண்டிருந்தது.. அவஸ்தையாக நாட்கள் நகர்ந்த நிலையில் திடீரென திரும்பி வந்தான் நவீன்.
அவன் வந்ததைக் கேள்விப்பட்டதும் நேராக வகுப்புக்கு விரைந்தாள் கெளதமி.. நேராக அவன் முன்பு போய் நின்றாள்.. நிமிர்ந்து பார்த்தவனிடம்... "பேச வேண்டும்" என்று அவள் கண்களால் பேசினாள்.. உணர்ந்து கொண்ட நவீன், அங்கிருந்து வெளியே வந்தான்.
"என்னாச்சு கெளதமி"
"எங்கே போய்ட்டீங்க.. ஆளையே காணோம்.. எங்காவது போனால் சொல்லிட்டுப் போகக் கூடாது.. நீங்க பாட்டுக்குப் போனால் எப்படி.. உங்களைத் தேட மாட்டாங்களா"
"இருங்க இருங்க.. யார் தேடுவாங்க.. புரியலையே"
"இல்லை.. நீங்க இந்த கல்லூரியோட ஹீரோ மாதிரி.. திடீர்னு காணாமப் போயிட்டா எல்லோருக்கும் ஒரு மாதிரி இருக்கும்ல. தேடுவாங்க இல்லையா.. அதனாலதான் கேட்டேன்.. இனிமே எங்காச்சும் போனால் சொல்லிட்டுப் போங்க "
"யார் கிட்ட சொல்லணும்"
"அதெல்லாம் நான் எப்படிங்க சொல்ல முடியும்.. யார் கிட்ட சொல்லணுமோ அவங்க கிட்ட சொல்லிட்டுப் போங்க சார்.. புரியுதா"
"அதான் யார் கிட்ட சொல்லிட்டுப் போகணும்னு சொல்லுங்க மேம்.. கண்டிப்பா சொல்லிட்டே போறேன்"
"இது என்ன வம்பாப் போச்சு.. உங்களுக்கு ஒருவாட்டி சொன்னா புரியாதா.. இல்லை புரியாத மாதிரி நடிக்கிறீங்களா.. இத்தனை வருஷம் சாம்பியனா வேற இருந்திருக்கீங்க.. கொஞ்சம் கூட உங்களுக்கு புரியவே மாட்டேங்குது.. இதுக்கு மேல நான் என்ன சொல்றதுன்னு எனக்கே தெரியலை.. "
"ஹாஹாஹாஹாஹா" .. படபடவென்று நவீன் விழுந்து விழுந்து சிரிக்க.. அங்கே கெளதமிக்குள் கலர் கலராக உணர்வுகள் பெருக்கெடுக்க.. படுபாவிப் பய.. "கண்டுபிடிச்சுட்டானே" என்ற வெட்கம் கூடவே சந்தில் புகுந்து சிந்து பாட.. கெளதமிக்கு ஒரு மாதிரியாகி விட்டது.
"ஹலோ போதும்.. போதும் சிரிச்சது.. ஏன் இப்படி"
"இல்லைங்க.. ஒன்னும் இல்லை.. அடக்க முடியலை.. அப்புறம் மேலே சொல்லுங்க" சிரிப்பை அடக்க முடியாமல் மீண்டும் வெடிக்க ஆரம்பித்தான் நவீன்.
வெட்கம் பிடுங்கித் தின்ன.. டக்கென்று எழுந்து நடக்க ஆரம்பித்தாள் கெளதமி..
அதைப் பார்த்த நவீன், சிரிப்பை அடக்க முயன்று அடக்க முடியாமல் மெல்ல மெல்ல சிரித்தபடி அவளிடம் ஓடி வந்தான்.
"கோச்சுக்காதீங்க பாஸ்.. சிரிப்பை அடக்க முடியலை.. கொஞ்சம் டைம் குடுங்க.. எப்படியாவது அடக்கிடுறேன்"
" உங்களுக்கெல்லாம் நக்கலாப் போச்சுங்க.. ஒரு மனுஷி மெனக்கெட்டு வந்து நலம் விசாரிக்கிறாளே.. அவளுக்கு தேங்க்ஸ் கூட சொல்லலை.. ஆனால் இப்படி விழுந்து விழுந்து சிரிச்சு கேலி பண்றீங்க.. ரொம்ப நல்ல மனுஷங்கதான் நீங்க"
"அப்படியெல்லாம் இல்லைங்க.. நீங்க சொன்ன விதமும், உங்க மூஞ்சியோட ரியாக்ஷனும் பார்த்து சிரிக்க ஆரம்பிச்சுட்டேன்.. உங்களுக்கு நடிக்க வரலைங்க.. இனிமேல் டிரை பண்ணாதீங்க.. ப்ளீஸ் விட்ருங்க".. மறுபடியும் அவன் வெடித்துச் சிரிக்க.. டென்ஷனாகி விட்டாள் கெளதமி.
"ஹலோ இங்க பாருங்க.. மறுபடியும் சிரிச்சீங்க.. கடுப்பாகிருவேன் பார்த்துக்கங்க" என்று கூறிய கெளதமியின் கண்களில் புதிதாக ஒன்றைப் பார்த்தான் நவீன்.. அது பாசத்தைக் கொட்டியது.. அன்பைக் காட்டியது.. நெருக்கத்தை உணர்த்தியது.. நவீன் நவீன் என்று சொல்வது போல இருந்தது..
ஒரு வேளை நம்மைக் காதலிக்கிறாளோ?..
உணர்வுகள் உள்ளுக்குள் எகிறிக் குதிக்க.. நவீன் சிரிப்பைக் குறைத்தபடி கெளதமியை நெருங்கிப் பார்க்க ஆரம்பித்தான்.
இப்போது தனது பார்வையை விலக்கிக் கொள்ள முடியவில்லை கெளதமிக்கு.. அவனது பார்வையை பருக ஆரம்பித்தாள். வெட்கம் விலகிப் போனது.. நெருக்கம் நெருங்கி வந்தது.. விலகாதே.. அப்படியே பார்த்துட்டே இரு என்று உள்ளுக்குள் உந்தித் தள்ளியது.. உணர்வுகளை மெல்ல மெல்ல வெளிக்காட்ட ஆரம்பித்தாள். இருவரது பார்வைகளும் ஒன்றை ஒன்று போட்டி போட்டுக் கொண்டு விழுங்கிக் களிக்க.. இருவருக்குள்ளும் ஒரு புதிய கதை "அ" போட தொடங்கியிருந்தது.
"ஸாரி கெளதமி.. இனிமே உங்க கிட்ட சொல்லாம எதையும் செய்ய மாட்டேன்"
"இட்ஸ் ஓகே.. கொஞ்சம் கஷ்டமாயிருச்சு எனக்கு.. அதான்.."
"புரியுது.. இனிமேல் இப்படி நடக்காது.. சரியா"
"ம்ம்.. சரி.. ஆமா எங்கே போனீங்க"
"அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு போன் வந்தது. அதான் உடனே கிளம்பிட்டேன்.. அவங்க தனியா இருக்காங்க ஊர்ல.. அதான் கூட இருந்துட்டு வந்தேன்.."
"ஓ.. என்னாச்சு அவங்களுக்கு..ஏன் தனியா இருக்காங்க.. அப்பா, அண்ணன், தம்பி, தங்கை, அக்கா இப்படி யாரும் இல்லையா உங்களுக்கு?"
"அப்பா இறந்துட்டாங்க.. நான் வீட்டுல ஒரே பையன்"
"ஓ.. ஸாரி.. அம்மா எப்படி தனியா இருப்பாங்க.. கூட துணைக்கு யாராவது சொந்தக்காரப் பொண்ணுங்களை வச்சுக்கலாமே"
"என்னோட சித்தி பொண்ணு கூடதான் இருந்தா.. இப்போ அவளுக்கு காலேஜ் திறந்துட்டாங்க.. அதான் அவ போயிட்டா.. ஸோ, தனியா இருக்காங்க.. என்னோட ஸ்டடிஸ் இன்னும் 2 மாசத்துல முடிஞ்சுருமே.. பிறகு அவங்க கூடவே நான் போயிருவேன்.. "
2 மாசத்துல காலேஜை விட்டுப் போகப் போறானா.. அய்யோ.. அப்புறம் அடுத்த 2 வருஷத்தை நான் எப்படி கழிக்கிறது.. கெளதமிக்குள் உண்மை உறைக்க.. மனசு பதற.. ஒரு தவிப்பு தாவி வந்து நெஞ்சுக்குள் அமர்ந்தது.
"ஆமாமா.. அதுவும் சரிதான்.. ஆனால் இந்த 2 மாசமும் அம்மா தனியாதான் இருக்கணும் இல்லையா"
"வேணும்னா.. நீங்க கூட இருந்துட்டு வர்றீங்களா".. சிரிக்காமல் கேட்ட நவீனின் கேள்வி கெளதமியை எக்கி இழுத்தது.
"எ.. எ..என்னது நானா.. நான் எப்படிங்க.. அவங்க என்ன நினைப்பாங்க.. ஏத்துப்பாங்களா?"
"எதை ஏத்துப்பாங்களா?"
"என்னை"
"ஏன் ஏத்துக்க மாட்டாங்க.. ஏத்துப்பாங்க"
"எப்படி உறுதியா சொல்றீங்க?"
"எப்படிங்க பிடிக்காம போகும்"
"ஓ.. பிடிச்சுருமா.. பிரச்சினை இருக்காதா?"
"ம்ஹும்.. ஒரு பிரச்சினையும் இருக்காது.."
"ம்ம்.. அப்படீன்னா சொல்லிட்டீங்களா?"
"என்ன சொல்லணும்?"
"என்னைப் பத்தி.."
"அதான் என்ன சொல்லணும்"
"என் கிட்டேயே கேட்டா எப்படிப்பா"
"வேற யார் கிட்டப்பா கேக்கணும்"
"எங்கப்பா கிட்ட வந்து கேளுங்க"
"என்ன கேட்க?"
"என்னைக் கேளுங்க"
சொல்லிய வேகத்தில் மின்னலென எழுந்து வேகமாக நடக்க ஆரம்பித்தாள் கெளதமி.. ஒரு தென்றல்.. ஜிலுஜிலுவென நடந்து போவது போல உணர்ந்தான் நவீன்.. இத்தனை அழகாக ஒரு புரபோசலை சினிமாவில் கூட பார்த்திருக்க மாட்டார்கள் யாரும்.. அந்த இடமே ரம்மியமாக தோன்றியது அவனுக்கு.. வேகமாக நடந்து சென்ற கெளதமி, நடந்தபடியே மெல்லத் திரும்பி நவீனைப் பார்த்தாள்.. பார்வையில் வெட்கம் போய் காதல் தோன்றியது.. கண்களில் நிரம்பிக் கிடந்த காதலை,, மெல்ல நவீனை நோக்கி வீசியபடி, புன்னகை சிந்தியபடி பொங்கிப் பொங்கி நடந்த அவளைப் பார்த்தபடி அப்படியே அமர்ந்திருந்தான் நவீன்.. அவனுக்குள் அத்தனை சந்தோஷம்.. உற்சாகம்.. மகிழ்ச்சி.. திருப்தி.. உணர்வுகள் தாறுமாறாக உந்தித் தள்ள.. எழப் பிடிக்காமல் அப்படியே அமர்ந்திருந்தான்.
வானத்தில் மேகக் கூட்டங்கள் திரண்டு சூழ.. மெல்லிய ஒரு மின்னல் கண்ணடித்துச் செல்ல.. நவீன் மனசுக்குள் மழை...!
(தொடரும்)
சென்னை மக்களே.. ரெடியா.. 12ம் தேதி முதல் கன மழை வெளுக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் தந்த அலர்ட்!
அண்ணாமலைக்குப் பின்னாடி.. விஜய்க்கு சீமான் கொடுத்த இடம்.. அந்த அன்புத்தம்பிதான் ஹைலைட்டே!
தவெக விஜய்க்கு பின்னால் இருக்கும் விஐபி யார்?.. பரபரக்கும் அரசியல் களம்.. அட, இவர் தானாமே!!
Delhi Ganesh.. 400க்கும் மேற்பட்ட படங்கள்.. ஹீரோ டு காமெடியன்.. மறக்க முடியாத டெல்லி கணேஷ்
நவம்பர் 10 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
விருச்சிக ராசிக்காரர்களே.. மகிழ்ச்சியான செய்திகள் வீடு தேடி வரும் நாள்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ரிப்பன் மாளிகையை சுற்றிப் பார்க்க அரிய வாய்ப்பு
2028 அதிபர் தேர்தலுக்குத் தயாராகப் போகிறாரா கமலா ஹாரிஸ்.. அடுத்த திட்டம் என்ன?
நவ. 14, 15 கன மழை எச்சரிக்கை.. சென்னையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்.. மேயர்பிரியா அப்டேட்!
{{comments.comment}}