"எல்லோரையும் பார்த்து பயமா இருக்கு.. நிச்சயம் உயிரோட இருக்க மாட்டேன்.. (கெளதமியின் காதல் - 23)

May 14, 2024,06:41 PM IST

- சுதா. அறிவழகன்


நவீன் தன்னை நிராகரித்ததை கூட ஒரு வகையில் ஏற்றுக் கொண்டாள் பார்வதி. மனசை மெல்ல மெல்ல மாற்றிக் கொள்ள ஆரம்பித்தாள்.. ஆனால் அவன் கெளதமியை காதலிப்பதை அவளால் ஏற்கவே முடியவில்லை. மனசு அரித்துக் கொண்டே இருந்தது. என்னை விட எந்த வகையில் அவள் ஒசத்தி.. என்னிடம் இல்லாத அறிவா, அழகா.. என்ன அவளிடம் அப்படி  இருக்கு என்ற வழக்கமான பொறாமை அவளையும் போர்வை போல போர்த்திக் கொண்டிருந்தது.


ஒரு நாள் அந்த பொறாமைத் தீயை, நவீனே தண்ணீர் ஊற்றி அணைத்தான். பார்வதி இன்னும் பொறுமிக் கொண்டிருப்பதை உணர்ந்த அவன், அவளை லன்ச்சுக்குக் கூட்டிக்  கொண்டு போய் நிறுத்தி நிதானமாக பேசி விளக்கிப் புரிய வைத்து இயல்பாக்கினான். அதன் பிறகுதான் கொஞ்சம் நார்மல் ஆனாள் பார்வதி. அடுத்தடுத்து வந்த நாட்களில் முழுசாக மாறிப் போனாள்.. கெளதமியின் காதலுக்கு ரொம்ப உதவியாக இருந்தாள்.


"ஹோட்டல் வந்தாச்சும்மா"


ஆட்டோ டிரைவரின் குரல் கேட்டு நிகழ்காலத்துக்குத் திரும்பினாள் பார்வதி. ஆட்டோவை கட் செய்து விட்டு ஹோட்டலுக்குள் நுழைந்தவள்.. அறையை நோக்கி வேகமாக விரைந்தாள். காலிங் பெல்லைத் தட்டியவளுக்கு நிற்கக் கூட பொறுமை இல்லை. அங்கும் இங்கும் உலாத்தினாள்.. கதவு திறக்கவில்லை. என்னாச்சு இவளுக்கு, தூங்கிட்டாளா..  திரும்பவும் காலிங் பெல்லை அழுத்தினாள். அப்படியும் கதவு திறக்கவில்லை.


மொபைலை எடுத்து கெளதமியின் எண்ணை அழுத்தினாள். ரிங் போய்க் கொண்டே இருந்தது. ஆனால் ரூமுக்குள் செல்போன் ஒலிக்கும் சத்தம் கேட்கவில்லை. கதவில் நன்றாக காதை வைத்துக் கொண்டு கேட்டுப் பார்த்தாள்.. ம்ஹூம்.. உள்ள சத்தம் கேட்பது போலவே தெரியவில்லை. குழப்பமடைந்த பார்வதி, ரிசப்ஷனுக்கு விரைந்தாள்.


"எக்ஸ்கியூஸ்மி.. என்னோட ரூம் மேட் எங்காவது வெளில போனாங்களா.. பார்த்தீங்களா"


"ஆமா.. அவங்க 2 மணி நேரத்துக்கு முன்னாடிதான் போனாங்க. கீ கூட இங்கே கொடுக்கலையே.. என்னாச்சு"


"இல்லை.. கதவைத் தட்டியும் திறக்கலை.. அதான் கேட்டேன்.. ஆல்டர்நேட்டிவ் கீ கிடைக்குமா"


"ஆ.. இருக்கு.. தர்றேன்" என்று கூறிய ரிசப்ஷன் பெண் மாற்றுச் சாவியை எடுத்து பார்வதியிடம் நீட்டினார்.


சாவியை வாங்கியபடி ரூமை நோக்கி நடந்த பார்வதிக்கு பெரும் குழப்பமாக இருந்தது. இவ எங்கே போனா.. அதுவும் சொல்லாம கொள்ளாம.. அறைக்குள் வந்தவள், சற்றே திடுக்கிட்டாள்.. அறை படு சுத்தமாக இருந்தது. கெளதமியின் சூட்கேஸைக் காணவில்லை. அவளது துணிமணிகளையும் காணவில்லை. அவளது பொருட்கள் எதுவுமே அறையில் இல்லை. பாத்ரூமுக்குள் எட்டிப் பார்த்தாள்.. அங்கும் கெளதமியின் பிரஷ், சோப் என எதுவுமே இல்லை.




அறையைக் காலி செய்து விட்டு சென்றிருக்கிறாள் கெளதமி.  ஒன்றும் புரியாமல் அப்படியே சேரில் விழுந்தாள் பார்வதி.. என்னாச்சு.. என்ன நடக்குது.. ஏன் இப்படிப் பண்றாங்க எல்லோரும்.. அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன் நான்.. இவங்க கூட வந்ததுதான் தப்பா.. கேள்விகள் துளைத்தெடுக்க தலை சுற்றுவது போல இருந்தது. வாட்டர் பாட்டிலை எடுத்து தண்ணீரை மட மடவென குடித்தவள், அப்படியே தனது முகத்தில் தண்ணீரை ஊற்றிக் கொண்டாள்.. அவ்வளவு டென்ஷன்.


பதட்டம் தணியும் வரை சற்று கண்களை மூடிக் கிடந்த பார்வதி பின்னர் மெதுவாக எழுந்து ரெஸ்ட் ரூம் நோக்கிப் போனாள். வழியில் டிரஸ்ஸிங் டேபிள் மீது ஒரு தாள் படபடத்தபடி இருந்ததைப் பார்த்து அதை எடுத்தாள். கெளதமி எழுதியிருந்தாள்.


"டியர் பாரு. எனக்கு மனசு சரியில்லை. நான் ஊருக்குக் கிளம்புகிறேன். எனக்கு யார் மீதும் கோபம் இல்லை. என்னைப் படைத்தவன் மீதுதான் கோபம். உங்களையெல்லாம் என் கண்ணில் காட்டியது அவன்தானே. உங்களையெல்லாம் கோபித்துக் கொள்ளக் கூட எனக்கு மனசு வரவில்லை. ஆனால் உங்க எல்லோரையும் பார்த்து எனக்குப் பயமா இருக்கு..  என்னோட நவீன் எனக்கு உயிர்.. அவன் கிடைக்காட்டி நான் நிச்சயம் உயிரோட இருக்க மாட்டேன். நீங்க யாரோ தப்பு செஞ்சிருக்கீங்கன்னு தோணுது.. யார்னு சொல்லத் தெரியலை.. உங்களை வெறுக்க முடியலை.. உங்க எல்லோரையும் அவ்வளவு நேசிச்சுட்டேன்..  தயவு செய்து என்னோட உயிரோட விளையாடாதீங்க. நான் எல்லோரையும் மன்னிச்சுர்றேன்.. என்னோட நவீனை மட்டும் எனக்குக் கொடுத்திருங்க. எனக்கு வேற எதுவும் வேண்டாம். கெளதமி"


கடிதத்தை அப்படியே மடித்தபடி கண்களை மூடி நின்றாள் பார்வதி.. கண்ணீர் வழிந்தோடியது.. இவளும் என்னைப் புரிஞ்சுக்கலை.. அயர்ச்சியாக வந்தது.. அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. பெட்டில் போய் அமர்ந்தாள். சிறிது நேர யோசனைக்குப் பின்னர் ஜார்ஜுக்கு போன் போட்டாள்.


"சொல்லு"


"கெளதமி ரூமில் இல்லை. லெட்டர் எழுதி வச்சுட்டுப் போய்ட்டா"


"வாட்.. எங்க போய்ட்டா.. அவளே போய்ட்டாளா. இல்லை நீ ஏதாவது திட்டுனியா"


"ஏய் ஃபூல். நான் இப்ப போலீஸ் ஸ்டேஷன்தான் போகப் போறேன்.. லெட்டரை அங்க கொடுக்கணும்.. உனக்கு சொல்லலாம்னு பண்ணேன்.. போனை வைக்கிறேன்"


முகம் முழுக்க கோபம் கொப்பளிக்க வேகமாக ரெடியாகி கடிதத்தையும் கையோடு எடுத்துக் கொண்டு அறையை பூட்டிக் கொண்டு வெளியேறினாள் பார்வதி.


கிளம்பிய வேகத்தில் விசாரணைக்காக சென்ற அதே காவல் நிலையத்திற்கு வந்து சேர்ந்தாள் பார்வதி. இன்ஸ்பெக்டர் இல்லை. காத்திருக்கச் சொன்னார்கள். வெளியில் வந்து அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்தாள். மனசுக்குள் ஏகப்பட்ட சூறாவளி.. சுழற்றியடித்துக் கொண்டிருந்தது. செல்போன் சிணுங்கியது.. ஜார்ஜ்.


"எங்கே இருக்கே"


"போலீஸ் ஸ்டேஷன்"


"மொதல்ல அங்க இருந்து கிளம்பி வா"


"ஏன்.. மறுபடியும் அசிங்கப்படுத்தவா"


"முட்டாள் மாதிரி பேசாதே.. கெளதமி காயமடைஞ்ச நிலையில் ஹோட்டலுக்கு பக்கத்துல கிடந்திருக்கா.. ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கோம்.. கிளம்பி வா"


"கெளதமியா.. என்னாச்சு.. எந்த ஹாஸ்பிட்டல்"


படபடப்போடு அங்கிருந்து வெளியே வந்த பார்வதி, ஆட்டோ பிடித்து ஜார்ஜ் சொன்ன ஹாஸ்பிட்டலுக்குப் போகச் சொன்னாள்.


சின்ன ஹாஸ்பிட்டல்தான்.. பரபரப்பாக அதே சமயம் மாயான அமைதியோடு இயங்கிக் கொண்டிருந்தது. ஜார்ஜ் சொன்ன வார்டு நோக்கி வேகமாக நடையைப் போட்டாள் பார்வதி. அறைக்குள் சென்றவள், கெளதமி படுத்துக் கிடந்த கோலத்தைப் பார்த்து அதிர்ந்து போய் விட்டாள். முகமெல்லாம் காயம்.. வலது கையிலும் காயம்.. சேற்றில் கிடந்திருப்பாள் போல.. டிரஸ்ஸெல்லாம் சேறாக இருந்தது.


"என்னாச்சு.. எங்க இருந்தா.. ஏதாவது ஆக்சிடென்ட்டா"


"தெரியலை.. ஹோட்டல்ல இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் சாலையோரமா ஒரு பள்ளத்துல விழுந்து கிடந்திருக்கா.. போலீஸுக்குத் தகவல் போய் அவங்க கொண்டு வந்து இங்க சேர்த்திருக்காங்க. இவ கண் முழிச்சு சொன்னாதான் என்னாச்சுன்னு தெரியும்."


"பார்த்தா ஆக்சிடென்ட் போலத் தெரியலையே.. யாரோ அடிச்சுப் போட்டது மாதிரி தெரியுதே"


"அப்படித்தான் தெரியுது.. ஆனா இவளா சொன்னாதான் நாம ஒரு முடிவுக்கு வர முடியும்னு போலீஸ்ல சொல்லிருக்காங்க"


"அய்யோ கடவுளே.. ஏன் இப்படி அடுத்தடுத்து நமக்குன்னு சோதனை வருதோ.. என்னதான் நடக்குது நம்மளைச் சுத்தி.. ஒன்னுமே புரியலையே"


"எனக்கும் புரியலை.. என்ன செய்றதுன்னே தெரியலை.. போலீஸ் விசாரிச்சாங்க.. நான் எல்லாத்தையும் சொல்லிட்டேன்.. எதுக்கு வந்தோம் அப்பிடிங்கிறதைப் பத்தி.. அவங்க அதை ஒரு புகாரா இங்க கொடுக்கச் சொல்லிருக்காங்க.. நீங்களா தேடுனா எதுவும் கிடைக்காது.. போலீஸ்தான் சரியான வழின்னு சொன்னாங்க.. சரின்னு சொல்லி விரிவா ஒரு புகார் எழுதிக் கொடுத்திருக்கேன்"


"என்ன எழுதிக் கொடுத்திருக்கே.. என்னைப் பத்தி அதிலும் ஏதாவது உளறி வச்சிருக்கியா"


"பொதுவான புகாராத்தான் கொடுத்திருக்கேன்.. அதேசமயம், உன் மேலே சந்தேகம்னு ஏற்கனவே அந்த போலீஸ் ஸ்டேஷன்ல கொடுத்ததையும் சொல்லிருக்கேன்.. அதை மறைக்க முடியாதே.. அதுக்கு அவங்க, அப்படியெல்லாம் ஒரு தனிப்பட்ட நபரை மட்டும் சந்தேகப்பட முடியாது. மொத்தமா உங்க எல்லோரையும் நாங்க விசாரிப்போம்.. அதுக்குப் பிறகுதான் முடிவுக்கு வர முடியும்னு சொல்லிருக்காங்க"


"அதான பார்த்தேன்.. உனக்கு என் மேல ஏன்தான் இவ்வளவு வன்மம்னு தெரியலை.. அப்படி என்ன சந்தேகம் என் மேல.. இல்லை தெரியாமத்தான் கேக்கறேன்.. என்னைப் பார்த்தா உனக்கு என்ன தோணுது.. உன் மூஞ்சியைப் பார்த்தாதான் எனக்கே சந்தேகமா வருது.. நீதான் அவனை ஏதோ பண்ணிருக்கணும்.. இப்படி நான் போய் கம்ப்ளெயின்ட் தரட்டா.. சொல்லு"


ஆவேசமாக பேசிய பார்வதியை அமைதியாக பார்த்து விட்டு திரும்பிக் கொண்டான் ஜார்ஜ்.


"நமக்கு நவீன் மட்டுமல்ல, கெளதமியும் நல்ல பிரண்ட். இவங்களுக்கு துரோகம் செய்ய நம்ம யாருக்கும் மனசு வராது.. இதை நான் முழுமையா நம்பறேன்.. என் மேல நீங்க சந்தேகப்பட்ட மாதிரி நான் உங்க மேல இந்த நொடி வரைக்கும் சந்தேகப்படலை. இனியும் பட மாட்டேன்.. எனக்கு நம்பிக்கை இருக்கு.. அவனை முதல்ல நல்லபடியா கண்டுபிடிக்கணும்.. அதுதான் என் மனசுல இருக்கிற ஒரே நினைப்பு.. இதைத் தவிர வேற எதுவும் எனக்குள்ள இல்லை".. மூச்சு வாங்க பேசி நிறுத்தினாள் பார்வதி.


"ஸாரி பார்வதி.. டென்ஷன்ல அப்படி புகார் சொல்லிட்டேன்.. மனசுல வச்சுக்காதே.. எனக்கு வேறு வழியே தெரியலை.. எந்தப் பக்கம் போறதுன்னும் தெரியலை.. "


"அதுக்காக உன் பிரண்டையே சந்தேகப்படுவியா.. அந்த அளவுக்கா உனக்கு மூளை மழுங்கிப் போச்சு.. எதையும் நாலு தடவை யோசிச்சு பண்ணு.. எதிலும் அவசரப்படாதே"


நல்ல நட்புக்குள் ஏற்பட்ட மனக் கசப்பு அந்த நொடியில் உடைந்து தளர்ந்து சிதறிப் போனது.. புழுக்கம் குறைந்து.. மனசு லேசாவது போல உணர்ந்தான் ஜார்ஜ்.. பார்வதியும்தான்.


ஜார்ஜ் செல்போன் சிணுங்கியது.


"ஹலோ..  ஆமாங்க.. எங்கே.. எப்போ.. சான்ஸே இல்லை சார்..  இருங்க வர்றேன்"


பதட்டமாக பேசிய ஜார்ஜை படபடப்புடன் பார்த்தாள் பார்வதி.


(தொடரும்)

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்