"அடிப்படையே தவறா இருக்கு.. என்னை குற்றவாளின்னு முடிவு பண்ணி கேக்கறீங்களே".. (கெளதமியின் காதல் -21)

Apr 29, 2024,06:58 PM IST

- சுதா. அறிவழகன்


"என்னோட பிரண்ட்தான்.. நீங்க?"


"போலீஸ்"


"போலீஸா.. என்னாச்சுங்க?".. முகம் வெளிறியது கெளதமிக்கு.. ரெஸ்ட் ரூமிலிருந்து வெளியே வந்த பார்வதிக்கும் தூக்கி வாரிப்போட்டது.. எதுக்கு போலீஸ் என்று புரியாமல் வாசலை நோக்கி விரைந்து வந்தாள்.


"எங்களுக்கு ஒரு புகார் வந்திருக்கு.. பார்வதி மேல ஒருத்தர் புகார் கொடுத்திருக்கார். அதை விசாரிக்கணும்.. நீங்கதான் பார்வதியா?"


பார்வதியை நோக்கி அந்தப் பெண் கேட்டார்.


"நான்தான் மேம்.. பட் நீங்க யூனிபார்மில் இல்லை, போலீஸ்னு சொல்றீங்க.. என் மேல புகார்னு சொல்றீங்க.. புரியலையே?.."


வெளியில் நின்றிருந்த பெண் தனது ஐடியை பார்வதியின் முகத்தை நோக்கி நீட்டினார்.


"மப்டில இருக்கேன்.. நீங்க பெண் என்பதால் உங்களுக்கு சங்கடம் ஏற்படக் கூடாதுங்கிறதுக்காக யூனிபார்மில் வரலை.. போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் வாங்க. ஜஸ்ட் விசாரணைதான்.. விசாரணை முடிஞ்சதுன்னா நீங்க திரும்பிடலாம்.. பயப்படாதீங்க"


"பயப்படலை மேம்.. ஆனால் என் மேல என்ன புகார்.. யார் கொடுத்திருக்காங்க?"


"ஜார்ஜ்னு ஒருத்தர் கொடுத்திருக்கார்.. நவீன் அப்படிங்கிறவர் மிஸ்ஸிங்.. அதுதொடர்பாக உங்க மேல சந்தேகம் தெரிவிச்சு புகார்ல சொல்லிருக்கார்.. அதுக்காக விசாரிக்கணும்"


அந்தப் பெண் சொல்லச் சொல்ல கெளதமியும், பார்வதியும் இன்னும் அதிர்ச்சி அடைந்தனர். 


"வாட்.. என்ன சொல்றீங்க.. ஜார்ஜ் எங்க பிரண்ட், நவீன் எங்க பிரண்ட்.. அவனைக் காணாமல்தான் நாங்கெல்லாம் அவனைத் தேடி வந்திருக்கோம்.. என் மேல எப்படி சந்தேகப்படலாம்.. ஜார்ஜே நேரில் வந்து கொடுத்தாரா?.."


"ஆமாம்மா.. அவரும் இப்போ ஸ்டேஷன்லதான் இருக்கார்.. டைம் ஆகுது வாங்க போகலாம்"


கெளதமிக்கும் சரி, பார்வதிக்கும் சரி ஒன்றுமே புரியவில்லை.. 


"மேம் நான் கெளதமி.. காணாமல் போன நவீனோட லவ்வர்.. இவ என்னோட பெஸ்ட் பிரண்ட்.. இவ மேல எதுக்கு ஜார்ஜ் அண்ணா புகார் கொடுத்திருக்காங்க.. எனக்குப் புரியலை.. இவ நல்லவ, என் கூடவேதான் இருக்கா.. இவ எப்படி இப்படிப் பண்ணுவா.. எனக்குப் புரியலை.."


"இங்க பாருங்க.. புகார் வந்திருக்கு.. சட்டப்படி புகார் வந்தா அதுகுறித்து நாங்க விசாரிக்கணும். அது எங்களோட டூட்டி.. விசாரிக்கத்தானே கூப்பிடறோம்.. தைரியமா வாங்க.. அதெல்லாம் ஒன்னும் தப்பா ஆகாது.. நான்தான் இவ்வளவு பொறுமையா எடுத்துச் சொல்றேன்ல.. வாங்க.. விசாரணையை முடிச்சுட்டு நீங்க கிளம்பிடலாம்.."


இதற்கு மேலும் முரண்டு பிடித்தால் அந்தப் பெண் ஏதாவது முரட்டுத்தனமாக நடக்கக் கூடும் என்று பார்வதி நினைத்தாள்.. ஸ்டேஷனுக்கு வருவதாக அந்தப்  பெண் போலீஸ்காரரிடம் கூறிய அவள், டிரஸ் சேஞ்ச் பண்ணி விட்டு வருவதாக கூறி உள்ளே சென்றாள். சில நிமிடங்களில் ரெடியானவள் கெளதமியிடம், " நீ வர வேண்டாம்.. இங்கேயே இரு.. நான் போயிட்டு வந்துர்றேன்" என்று கூறியபடி கிளம்பினாள்.


கெளதமிக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.. பிராந்து பிடித்தவள் மன நிலையில் அவளது சிந்தனைகள் இருந்தன. "பாரு, போய்ட்டு வா, தைரியமா போ.. நான் உன்னை நம்பறேன்" என்று மட்டுமே அவளால் சொல்ல முடிந்தது.


காவல் நிலையம் சைலன்ட்டாக இருந்தது. பெரிய அளவில் யாரும் இல்லை. சில போலீஸ் தலைகளும், புகார் கொடுக்க வந்தவர்கள், விசாரணைக்கு வந்தவர்கள் என ஒரு சிலரே இருந்தனர். ரிசப்ஷனில் ஜார்ஜும், குமாரும் அமர்ந்திருந்தனர்.


பெண் போலீஸ்காரருடன் உள்ளே நுழைந்த பார்வதி, ஜார்ஜ் இருந்ததைப் பார்த்து அவனை நோக்கி கோபப் பார்வையை வீசினாள். அவனோ, அவளது பார்வையைத் தவிர்த்தான். குமாரும்  எந்த சலனமும் இல்லாமல், பார்வதியைப் பார்த்தபடி இருந்தான்.


"இங்கேயே வெயிட் பண்ணும்மா.. நான் சார் கிட்ட சொல்லிட்டு வர்றேன்.. இங்க உட்காரு" என்று கூறி பார்வதியை அமரச் சொல்லி விட்டு இன்ஸ்பெக்டர் அறைக்குள் நுழைந்தார் அந்தப் பெண் போலீஸ். சில விநாடிகளில் வெளியே வந்த அவர், பார்வதியை நோக்கி கையைக் காட்டி அழைத்தார்.


பார்வதி எழுந்து அவருடன் சென்றாள். அருகில் இருந்த இன்னொரு அறைக்குள் நுழைந்த பெண் போலீஸ்காரர், அங்கே லைட்டு, பேன் போன்றவற்றை ஆன் செய்து விட்டு பார்வதியை அமருமாறு கூறி விட்டு வெளியேறினார்.


சில நிமிடங்கள் கழிந்தன.. அறைக்குள் யாரும் இல்லை. பேன் ஓடும் சத்தம் வித்தியாசமாக இருந்தது. பார்வதிக்குள்  குட்டி குட்டியாக பூகம்பங்கள் வெடிப்பது போல இருந்தது. அவ்வளவும் கோபம்.. ஏன்.. ஏன் என் மேல் ஜார்ஜ் புகார் கொடுத்தான்.. என்ற கோபம்.. குட்டிக் கோபம் பெரும் கோபமாக மாறி நாடி நரம்பெல்லாம் சூடாக ஆரம்பித்த நிலையில், அறைக் கதவு திறந்தது. 


இன்ஸ்பெக்டரும், அந்தப் பெண் போலீஸ்காரரும் உள்ளே நுழைந்தனர். பார்வதி எழுந்தாள்.


"உட்காருங்க உட்காருங்க" என்று அவளை அமரச் சொல்லியபடி இன்ஸ்பெக்டர் அருகில் இருந்த சேரை இழுத்து பார்வதிக்கு சற்று அருகே போட்டு அமர்ந்து கொண்டார். அந்தப் பெண் போலீஸ்காரரும் இன்னொரு சேரில் அமர்ந்தார்.


"உங்க பேருதான் பார்வதியா?"


"ஆமா சார்"


"சீ இது பார்மாலிட்டியான விசாரணைதான். ரிலாக்ஸா இருங்க, பயமோ, டென்ஷனோ வேண்டாம்.. ஜார்ஜ், குமார் இவங்க யாரு.. கெளதமி, நவீன் உங்களுக்கு என்ன வேணும்?"


"நாங்க ஐந்து பேரும் ஒரே கல்லூரியைச் சேர்ந்தவங்க சார். குமார், ஜார்ஜ், நவீன் என்னோட சீனியர்கள். கெளதமி என்னோட பெஸ்ட் பிரண்ட்"


"குட்.. உங்களுக்குள்ள என்ன பிரச்சினை.. ஏன் கேரளாவுக்கு வந்தீங்க?"


"சார், நவீன் - கெளதமி லவ்வர்ஸ். நவீனை கொஞ்ச நாளா காணோம். அவரோட சொந்த ஊர் நாகர்கோவில்.. அங்க போய் விசாரிச்சப்போ எந்தத் தகவலும் கிடைக்கலை. கேரளாவில் அவர் இருப்பதா எங்களுக்கு சில போன் கால் வந்துச்சு. அதான் தேடி இங்கே வந்தோம்"


"ஓ.. பிறகு என் உங்க மேல ஜார்ஜ் புகார் கொடுத்திருக்கார்?"


"சத்தியமா எனக்குப் புரியலை சார்.. என் மேல என்ன புகார் சொல்லிருக்கார் சார்?"


"நீங்கதான் அவரை எங்கேயோ கடத்தி வச்சிருக்கீங்கன்னு சொல்லிருக்கார்"


"சார்.. இது சுத்த ஹம்பக்... இது என்ன மாதிரியான புகார்னே புரியலை.. இதை கம்ப்ளீட்டா ரிஜக்ட் பண்றேன்"


"சரி அதை விடுங்க.. உங்களைச் சுத்தி சில சந்தேக வளையம் சூழ்ந்திருக்கு.. அதை கிளியர் பண்ணுங்க.. அதுக்கு நீங்க கோஆபரேட் பண்ணித்தான் ஆகணும்"


"தாராளமா சார்.. நான் மாட்டேன்னு சொல்லலியே... ஆனால் இந்த புகாரோட அடிப்படையே தவறா இருக்கு.. என்னை குற்றவாளின்னு முடிவு பண்ணிட்டு நீங்க கேக்குற மாதிரி இருக்கே.. அது தப்பாச்சே.. நான் தப்பு செஞ்சிருந்தா, எப்படி பாதிக்கப்பட்டவங்க கூடவே வந்திருப்பேன்.. என் வேலையெல்லாம் விட்டுட்டு இவங்க கூடயே இருந்திருப்பேன்.. அதை நீங்க யோசிக்கணுமா இல்லையா?"


"உங்க லாஜிக் சரிதாம்மா.. பட் எங்களுக்கு புகார் வந்திருக்கு.. புகார் கொடுத்தவர் பல சந்தேகங்களை முன்வச்சிருக்கார்.. ஸோ, அதை தெளிவாக்க வேண்டியது எங்களது கடமை இல்லையா"


"சரி இப்போ நான் என்ன செய்யணும்?.."


"நாங்க கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்க போதும்"


"கேளுங்க"


"உங்களுக்குக்கும் நவீனுக்கும் என்ன மாதிரியான நட்பு?"


"ரொம்ப இயல்பான, சாதாரணமான, சக மாணவன் - மாணவி, சீனியர் - ஜூனியர் என்ற அடிப்படையிலான நட்பு மட்டும்தான் சார் இருந்தது"


"அவரோ அல்லது நீங்களோ காதலிக்கிறதா யாராவது ஒருவர் சொல்லிருக்கீங்களா?"


"நான் சொல்லிருக்கேன்.. ஆனால் அதை அவர் நிராகரிச்சுட்டார்.. அதற்கான காரணத்தையும் எனக்கு அழகா புரிய வச்சார்.. அதன் பிறகு நாங்க ரொம்ப நல்ல நண்பர்களா மாறிட்டோம்.. எங்களுக்குள் எந்த உறுத்தலும் இல்லை"


"நவீனும், கெளதமியும் எவ்வளோ நாளா காதலிக்கிறாங்க?"


"சில மாதங்களா"


"நவீனுடனான  காதல் குறித்து கெளதமி உங்க கிட்ட முதல் முதல்ல சொன்னப்போ நீங்க எப்படி ரியாக்ட் பண்ணீங்க?"


"கண்டிப்பா நான் அதிர்ச்சி அடையலை. பட், ஆச்சரியமா இருந்தது..  காரணம், நவீனுக்கு பல விஷயங்களில் கெளதமி மேட்ச் ஆக மாட்டா.. என்னைய விட எந்த வகையில் கெளதமியை உயர்ந்தவளா நவீன் பார்த்தார்னும் ஆச்சரியப்பட்டேன். இருந்தாலும் இவங்க காதலை நான் எந்த இடத்திலும் எதிர்க்கவோ, வெறுக்கவோ இல்லை. காரணம், நவீனுக்கு முன்னாடியே கெளதமியை எனக்குத் தெரியும், என்னோட குளோஸ் பிரெண்ட்..  ஸோ, நவீன் அவளுக்கு கிடைச்சதை சந்தோஷமாத்தான் பார்த்தேன்"


"இவங்களோட காதல் இரு வீட்டுக்கும் தெரியுமா?"


"எஸ் சார்.."


"சரி, நவீன் மிஸ்ஸிங் அப்படிங்கிற தகவல் வந்ததும் நீங்க முதல்ல என்ன பண்ணீங்க?"


"ஷாக் ஆனேன்.. அடுத்தடுத்து என்ன செய்யணும்கிறதை பிளான் பண்ணோம்.. அவனைத் தேடிப் போகலாம்னு சொன்னப்போ முதல் ஆளா நானும் வந்தேன்..  நவீன் ரொம்ப நல்ல மனுஷன் சார்.. அவர் பத்திரமா திரும்ப கிடைக்கணும், கெளதமியோட சந்தோஷமா வாழணும்.. இதைத் தவிர வேற எந்த எண்ணமும் எனக்கு இல்லை சார்.. நீங்க நினைக்கிற மாதிரி, தப்பா எதுவுமே என்னிடம் இல்லை.. ஐ எம் வெரி கிளியர்"


"ஓகே. கூல்.. சரி நீங்க கிளம்புங்க.. இப்போதைக்கு நீங்க திருவனந்தபுரத்திலேயே தங்கியிருங்க. மறுபடி தேவைப்பட்டா கூப்பிடுவோம்.."


"தேங்க்யூ சார்"


வெளியில் வந்த பார்வதியின் முகம் கறுத்துப் போயிருந்தது. முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்தபடி ரிசப்ஷனுக்கு வந்தாள். அங்கே அமர்ந்திருந்த ஜார்ஜை நோக்கி வேகமாக நடந்தாள்.


"இவ்வளவுதான் நம்ம பிரண்ட்ஷிப்பா?.. இவ்வளவுதான் நீ என்னை புரிஞ்சு வச்சிருக்கியா.. உன்னை ஜென்டில்மேன்னு நினைச்சேன் ஜார்ஜ்.. ஆனால் இவ்வறு குயுக்தியா நீ யோசிப்பேன்னு சத்தியமா நான் நினைச்சுக் கூட பார்க்கலை.. Why George.. why on me??.. ஏன்டா இப்படி ஒரு சந்தேகம் உனக்கு?.. ஆரம்பிச்சதுல இருந்து உங்க கூட தானே இருக்கேன்.. பிறகு எப்படி என் மேல இப்படி ஒரு சந்தேகம்?.. எந்த புள்ளியில உனக்கு என் மேல சந்தேகம் வந்துச்சு?.. சத்தியமா எனக்குப் புரியலை.. கெளதமி கூட சந்தேகப்படலையே.. பிறகு உனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு மட்டமான சிந்தனை?.. உண்மைதான்.. நான் நவீனைக் காதலிச்சேன்.. பட் அது ஒன் சைட்.. முடிஞ்சும் போச்சு.. அவனும் சரி, நானும் சரி எந்த உறுத்தலும் இல்லாம நல்லாத்தானே பழகிட்டிருந்தோம்.. அது உனக்கே நல்லா தெரியும். பிறகு எப்படி நான் தப்பா யோசிப்பேன்?.. நீ ஒரு முட்டாள்னு நான் விளையாட்டா கெளதமி கிட்ட சொல்லுவேன்.. ஆனா நிஜமாவே நீ முட்டாள்னு நிரூபிச்சுட்டே ஜார்ஜ்.. ரொம்ப கஷ்டமா இருக்கு எனக்கு.. I just can't digest this".. மூச்சு வாங்க பேசி விட்டு அவனது பதிலைக் கூட எதிர்பார்க்காமல் வெளியேறினாள் பார்வதி.


ஜார்ஜிடமிருந்து எந்த சலனமும் இல்லை. 


(தொடரும்)

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்