- சுதா. அறிவழகன்
குபுக்கென்று கண்ணீர் வந்து விட்டது கெளதமிக்கு.. வறண்ட பாலைவனத்தில் நீர் தேடி அலைந்தவளுக்கு சுனை தென்பட்டால் எப்படி இருக்குமோ.. அந்த உணர்வுதான் கெளதமிக்கு இப்போது.
"அம்மா..ம்மா.. எங்கம்மா இருக்கீங்க.. என்னாச்சும்மா உங்களுக்கு.. அவர் எங்கம்மா இருக்கார்.. நான் தவிச்சுப் போயிருக்கேன்ம்மா.. இங்க கேரளாவுல இருக்கேன்.. நீங்க எங்க இருக்கீங்க"
அழுகையும் குமுறலுமாக வெடித்துப் பேசினாள் கெளதமி. அவளை நெருங்கி தோளை அணைத்தபடி.. யாருடி போன்ல என்று கேட்டாள் பார்வதி.
அவளிடம், நவீனோட அம்மா என்று கூறிய கெளதமி, போனை ஸ்பீக்கரில் போட்டு தனது பேச்சைத் தொடர்ந்தாள்.
"அம்மா.. என்னம்மா ஆச்சு உங்களுக்கெல்லம்.. எங்கம்மா இருக்கீங்க.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்மா.. நவீனை வச்சு ஒரு பெரிய மர்ம நாடகமே நடந்திட்டிருக்கும்மா.. அவர் எங்கம்மா"
"எனக்கும் தெரியலை கெளதமி.. எனக்கு உடம்புக்கு முடியாமப் போய்ருச்சு.. சொந்தக்காரங்க மூலமா திருவனந்தபுரத்துக்கு போய் அங்கே அட்மிட் ஆயிட்டேன்.. அந்த ஹாஸ்ப்பிட்டல்ல அட்டென்டர் கூட அனுமதிக்க மாட்டாங்க.. அவங்களே பாத்துப்பாங்க.. இதனால நவீன் வெளில தான் தங்கிருந்தான்.. கொஞ்ச நாள் வந்து போயிட்டிருந்தான்.. பிறகு காணலை.. அவன் வரலை.. எனக்கும் புரியலை.. சரி ஊருக்குப் போயிருப்பான்னு நினைச்சிருந்தேன்.. இப்போ நான் ஊருக்கு வந்துட்டேன்.. ஆனால் அவன் இங்கேயும் வரலைன்னு சொந்தக்காரங்க சொன்னாங்க.. உன்னோட நம்பரை ரொம்ப கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சேன்.. நவீன் உன் கூட இல்லையாம்மா.. எனக்கு ஒன்னுமே புரியலையே.. நீ கேரளாவுல எங்கே இருக்கே.. நாரோயில் வர முடியுமா.. எனக்குப் பயமா இருக்கும்மா"
நவீனின் அம்மா பேசப் பேச பெரும் குழப்பமடைந்தாள் கெளதமி.. பார்வதிக்கும் புரியவில்லை... பார்வதி போனை வாங்கி பேசினாள்.
"அம்மா நான் பார்வதி.. கெளதமி, நவீனோட பிரண்ட். நவீன் இப்போ மிஸ்ஸிங்ம்மா.. எங்க இருக்கார்னு தெரியலை. அவரைத் தேடித்தான் நாங்க இங்க வந்திருக்கோம். ஆக்சுவலா நாங்க நாகர்கோவில் வந்தோம்.. உங்களைப் பார்க்க.. பட் நீங்க ஹாஸ்பிட்டல் போயிட்டீங்கன்னு சொன்னாங்க. பேச முயற்சி பண்ணோம். முடியலை. இப்ப நீங்க சொல்றது எங்களுக்கு ஷாக்கிங்கா இருக்கு.. நவீன் ஏதாவது சொன்னாரா.. அவரோட பேச்சுல ஏதாவது மாறுதல் தெரிஞ்சதா.. ஏதாவது உங்களுக்கு வித்தியாசமா பட்டுச்சா"
"இல்லையேம்மா.. நல்லாதான் பேசிட்டிருந்தான்.. திடீர்னுதான் காணலை.. நான் டிஸ்சார்ஜ் ஆனதும் அவனுக்குப் போன் போட்டேன். அது போகலை. சரி ஊருல இருப்பான்னு நினைச்சு வந்து பார்த்தா இங்கேயும் இல்லை.. என்னாச்சுன்னு தெரியலையே.. நீங்கெல்லாம் இப்போ எங்க இருக்கீங்க?"
"திருவனந்தபுரத்துல இருக்கோம்மா.. சரி நீங்க ரிலாக்ஸ்டா இருங்க.. நாங்க நாலு பிரண்ட்ஸும் நவீனைத் தேடித்தான் இங்க வந்திருக்கோம்.. சீக்கிரம் நல்ல முடிவு தெரியும்னு நம்புறோம்.. நீங்க தைரியமா இருங்க.. நாங்க இங்க வந்த வேலையை முடிச்சுட்டு நேரா நாகர்கோவில் வர்றோம்.. தைரியமா இருங்க.. நாங்க தொடர்ந்து உங்க கிட்ட பேசுறோம்"
நவீன் அம்மாவின் பேச்சு கெளதமி, பார்வதி இருவரையும் பெரும் குழப்பத்தில் மூழ்கடித்தது. இது என்னடி புதுக் குழப்பம் என்று கெளதமி, அழுதபடி பார்வதியைப் பார்த்தாள். எனக்கும் புரியலை.. என்று தலையைப் பிடித்துக் கொண்டாள் பார்வதி. கொஞ்சம் ரிலாக்ஸ்டா இரு.. யோசிப்போம்.. எந்தப் பக்கம் போறதுன்னே தெரியலை.. எல்லாப் பக்கமும் ஏதாவது ஒரு பேரியர் வந்தா என்னதான் செய்றது நாம என்று விரக்தியாக கூறியபடி ரிசப்ஷனுக்குப் போன் போட்டு 2 டீ சொன்னாள். கெளதமியிடம், டீ வரும்.. வாங்கி வை.. நான் ரெஸ்ட் ரூம் போய்ட்டு வர்றேன் என்று கூறி உள்ளே சென்றாள்.
கெளதமி அப்படியே சேரில் சாய்ந்தபடி கண்களை மூடினாள்.. அவளைப் பொறுத்தவரை நவீனின் தாயாரை தனது சொந்த அம்மாவாகத்தான் பார்த்தாள்.. அந்த அளவுக்கு அவர் அன்பு காட்டினார், பாசத்தைப் பொழிந்தார்.. பேச்சுக்குப் பேச்சு என்னோட மருமகள் என்று அவர் சொல்லும்போதெல்லாம் அப்படி இருக்கும் கெளதமிக்கு.
ஒருமுறை நவீனைப் பார்க்க சென்னைக்கு வந்திருந்தார். அவரைப் பார்க்க கெளதமி வந்திருந்தாள்.. அப்போது ஏதோ ஒரு மனக் குழப்பத்தில் இருந்தாள். அவளிடம் பேசினார் நவீனின் தாயார். அவரது பேச்சு எப்போதுமே கலகலப்பாக, ஜாலியாக, கேஷுவலாக, எதார்த்தமாக இருக்கும். இட்டுக்கட்டியெல்லாம் அவருக்கு அலங்காரமாக பேசத் தெரியாது.
கெளதமியை தனது அருகே அமர வைத்து அணைத்தபடி, நீ இப்ப கலகலன்னு சிரிக்கிற மாதிரி ஒரு கதை சொல்லட்டா கேக்கறியா என்று கேட்டார்.
அதைக் கேட்டதும் பளிச்சென 1000 வாட்ஸ் பல்பு கெளதமி முகத்தில் ஒளிர் விட்டது.. ஹய்.. கதையா எனக்குப் பிடிக்குமே.. சொல்லுங்க சொல்லுங்க என்று அவரது மடியில் படுத்துக் கொண்டாள். கெளதமியின் தலையை வருடிக் கொடுத்தபடி கதையை ஆரம்பித்தார் அம்மா.
"ஒரு ஊர்ல ஒரு காக்கா இருந்துச்சாம்.."
"என்னது காக்கா கதையா".. குறுக்கிட்டாள் கெளதமி..
"ஆமா.. குறுக்க பேசாம கேளு.. அதுக்கு ஒரு நாள் ரொம்ப பசியாம்.. அங்க இங்க பறந்து பார்த்தும் எதுவுமே சாப்பிடக் கிடைக்கலை.. சரி ஆயா கடைல வடையாச்சும் இருக்கான்னு பாப்போம்னு பறந்து போய் கடைக்கு போச்சாம்.. வழக்கமா போற கடைதான்.. பார்த்தா அங்க ஆயாதான் இருந்துச்சு.. கடை இல்லையாம்.. என்னடா இது வடைக்கு வந்த சோதனைன்னு.. ஆயா கிட்ட பேசுச்சாம்.
"ஏன் ஆயா.. இன்னிக்கு கடை போடலையா"
"ம்க்கும்.. எங்க கடை போட.. எல்லா விலையும் ஏறிப் போச்சே.. எப்படி நான் பொருள் வாங்கி கடையைப் போடறது.. அப்படியே வந்தாலும் நீ வந்து நாலஞ்சு எடுத்துட்டுப் போய்டறியே" அப்படின்னு ஆயா அலுத்துக்குச்சாம்.
அதைக் கேட்ட காக்காவுக்கு ஒரு மாதிரி ஆயிருச்சாம்.. ஏன் ஆயா அப்படி சொல்லிட்டே. சரி ஆயா இனி உன் கிட்ட காசு கொடுக்காம நான் வடை சாப்பிட மாட்டேன் சரியா அப்படின்னு சொல்லுச்சாம்.
அதைக் கேட்ட ஆயா கேட்டுச்சாம்.. காசு கொடுக்க உன் கிட்ட ஏது காசு.. நீ என்னா வேலையா பாக்கப் போறேன்னு கேட்டுச்சாம்.
அதுக்கு காக்கா சொல்லுச்சாம்.. அதப் பத்தி உனக்கு என்னா கவலை.. நான் ஏதோ பண்ணி உனக்கு காசு கொண்டாந்து தாரேன். அதுக்கேத்தாப் போல நீ வடை கொடு போதும் சரியான்னு சொல்லுச்சாம்.
ஆயாவுக்கு ஒரே சிரிப்பு.. ஆனாலும் அடக்கிக்கிட்டு, சரி சரி கோச்சுக்காதே.. நாளைல இருந்து காசை கொண்டா.. நான் வடை தர்றேன்.. இன்னிக்கு கடை லீவு.. இப்ப இடத்தைக் காலி பண்ணுன்னு சொல்லுச்சாம்.
காக்காவும் சரின்னு சொல்லிட்டு அங்க இருந்து பறந்து போச்சாம்.. அடுத்த 2 நாளா காக்காவைக் காணலை.. ஆயாவுக்கு ஒரு மாதிரி இருந்துச்சாம்.. என்னதான் வெடுக்குன்னு சொல்லிட்டாலும், அதுவும் நம்ம புள்ளை மாதிரிதானே.. அதைப் போய் கடிஞ்சு பேசிட்டோமேன்னு ஆயாவுக்கு ஒரு மாதிரி ஆயிருச்சு.. காக்கா வரும் வழியையே அப்பப்போ பார்த்துட்டே வியாபாராம் பண்ணுச்சாம்.
கரெக்டா 3 நாள் கழிச்சு காக்கா வந்துச்சாம்.. அதைப் பார்த்ததும்தான் ஆயாவுக்கே உசுரே வந்துச்சாம்..
"எங்க போய்ட்ட 3 நாளா.. கோச்சுக்கிட்டியா நான் பேசுனதுக்கு" அப்படின்னு ஆயா கேட்டுச்சாம்.
அதுக்கு காக்கா சொல்லுச்சாம், சேச்சே நீ என் ஆயா மாதிரி.. உன்னைக் கோச்சுப்பேனா.. இந்தா பிடி" அப்படின்னு சொல்லிட்டு ஆயாவோட கைக்கு கிட்ட போய் ரெக்கையை படபடன்னு விரிச்சு ஆட்டுச்சாம்.. பார்த்தா.. பொல பொலன்னு காசு கொட்டுது!
ஆயாவுக்கு ஷாக்காயிருச்சு.. என்னாடா இது.. இவ்வளோ காசு என்று ஆச்சரியப்பட்டபடி என்னா காக்கா இது என்று கேட்டுச்சாம். எங்க சுட்ட இதை அப்படின்னும் நக்கலா கேட்டுச்சாம்.
அதைக் கேட்ட காக்கா, ஏய் கெழவி உனக்கு ரொம்பத்தான் இது.. இது நான் உழைச்சு சம்பாதிச்ச காசு.. எடுத்துக்கோ... இப்ப கொடு வடை.. அதுவும் நல்ல வடையா, கெட்டிச் சட்னி வச்சு, இலையில வச்சு கட்டிக் கொடு.. அப்படின்னு சவுண்டா பேசுச்சாம்.
அதைக் கேட்ட ஆயா, சிரிச்சபடியே இலை நிறைய வடையை வச்சு, சட்னியும் வச்சு காக்கா கிட்ட கொடுத்துச்சாம்.. அப்புறம் கேட்டுச்சாம், இப்ப சொல்லேன்.. எப்படி சம்பாதிச்ச இதை?
அதுக்கு காக்கா சொல்லுச்சாம்.. அதுவா.. நீ சொன்னது யோசிச்சுப் பார்த்தேன் ஆயா. என்னதான் இருந்தாலும் உழைச்சு சம்பாதிச்சா அது ஒரு சுகம்தான்னு எனக்கும் தோணுச்சு.. ஆனா என்னால என்ன வேலை செய்ய முடியும்னு யோசிச்சேன். அப்பத்தான் ஒரு ஐடியா தோணுச்சு.. நம்ம ஊர்லதான் தலைவர்ங்க சிலைதான் அதிகமாச்சே.. அதையெல்லாம் எங்களை மாதிரி காக்காங்கதானே அசிங்கப்படுத்தறாங்க.. அதனால் நான் போய் அந்தந்த கட்சித் தலைவர்ங்க கிட்ட பேசி, உங்க தலைவர் சிலையெல்லாம் சுத்தமா பாத்துக்கிறேன்.. எனக்கு சம்பளம் கொடுங்கன்னு கேட்டேன்.. அவங்க முதல்ல சிரிச்சாங்க.. உன்னைய மாதிரி நக்கலா.... அப்புறம் சரின்னு சொன்னாங்க..
அப்புறம் நான் என்ன பண்ணேன், என்னோட ஏரியாவுல இருக்கிற தலைவர்ங்க சிலை மேல எந்தக் காக்காவும் உக்காராம பாத்துக்கிட்டேன்.. அதுக்கு அவங்க என் கிட்ட சண்டைக்கு வந்தாங்க.. நான் சொன்னதைக் கேட்டா உங்களுக்கு அலைச்சலே இல்லாம இருந்த இடத்துக்கே சாப்பாடு கொண்டு வந்து தர்றேன்.. உங்களுக்குத் தேவையானதை நான் செய்றேன்.. சந்தோஷமா சாப்பிடுங்க. ஜாலியா இருங்க.. நீங்க சாப்பாட்டுக்கு அலையவே தேவையில்லை அப்படின்னு டீல் பேசினேன். அவங்க ஒத்துக்கிட்டாங்க.. பிறகென்ன.. தலைவர்கள் சிலை இப்போ சுத்தமாய்ருச்சு.. எனக்கும் கைல காசு கிடைச்சிருச்சு.. இப்போ உன் கிட்ட அதைக் கொடுத்து வடையும் வாங்கியாச்சு.. என்னோட கூட்டத்துக்கு இப்போ நான் தலைவன் ஆயாச்சு.. என் பேச்சைக் கேட்ட அவங்களுக்கு இப்போ சாப்பாடும் தரப் போறேன்..
உழைப்பும் சுகமாதான் இருக்கு கெழவி.. தோ பாரு.. இனிமேலும் என்னை ஓசி காக்கான்னு சொல்லக் கூடாது.. நான் உழைக்கும் காக்கா இப்போ.. சரியா.. வர்ட்டா.. அப்படின்னு சொல்லிட்டே.. வடை பார்சலை லாவகமாக கையில் எடுத்துக் கொண்டு விர்ரென்று பறந்து போச்சாம் அந்த கம்பீர காக்கா... அவ்வளோதான் கதை!
அம்மா கதையைச் சொல்லி முடித்து சிரிக்க.. கெளதமி கிட்டத்தட்ட அரைத் தூக்கத்துக்கே போயிருந்தாள்.. அவ்வளவு சுகமாக இருந்தது.. அம்மா தலையை வருடிக் கொடுத்தபடி கதை சொல்லியது.
"தூக்கம் வருதா.. அப்படீன்னா மனசு ரிலாக்ஸ் ஆயிருச்சுன்னு அர்த்தம்.. அதான் தூக்கம் வருது"
"நிஜமாதாம்மா.. மனசு ரொம்ப லேசாய்ருச்சு.. பஞ்சு போல லேசா இருக்கு இப்போ.. ஆமா இந்த காக்கா கதை எதுக்கு சொன்னீங்க"
"உருவத்துல தான் நீ பொண்ணா இருக்கே.. ஆனா மனசளவுல இன்னும் குழந்தைதான்.. அதான் காக்கா கதை" என்று பலமாக சிரித்த அம்மா, "உலகத்துல பிறக்கிற ஒவ்வொருத்தருக்குமே ஒரு பர்பஸ் இருக்கும்மா.. யாருமே இங்கே சும்மா இல்லை, தனியா இல்லை.. வேஸ்ட்டாவும் இல்லை.. அந்த பர்பஸ் எப்ப நிறைவேறுதோ அப்பத்தான் அவங்களோட பிறப்பும் முழுமையாகும். உனக்கு இப்ப வந்திருக்கிற பிரச்சினை கூட உன்னை டெஸ்ட் பண்ணத்தான்.. அதில் நீ ஜெயிச்சா.. உன்னால பிரச்சினைகளை சந்தித்து சமாளித்து கரையேறும் திறமை கை கூடும்.. நீ அதை சந்திக்கப் பயந்து பின்வாங்கினா.. நீ கடைசி வரைக்கும் பின்னாடியேதான் போயிட்டிருப்பே.. அதுக்குத்தான் இந்தக் கதை.. புரிஞ்சுதா!"
"கரெக்ட்தாம்மா" என்று கூறிக் கொண்டே, "நீங்க என் கூடவே இருங்கம்மா" அம்மாவை இழுத்து இன்னும் அணைத்தபடி அவருக்குள் தன்னை புதைத்துக் கொண்டாள் கெளதமி.
விர்ரென்று ஒலித்தது காலிங் பெல்..!
நினைவு கலைந்த கெளதமி, டீ பாயா இருக்கும் என்று போய் கதவைத் திறந்தாள்.
"இவிட பார்வதி யாரானு?"
(தொடரும்)
{{comments.comment}}