"தெரியலை.. அந்தப் பொண்ணு சொல்றது புரியலை.. பெரிய குழப்பமா இருக்கு".. (கெளதமியின் காதல் -17)

Apr 02, 2024,06:05 PM IST

- சுதா. அறிவழகன்


"குமார்.. நாம ரிட்டர்ன் ஆகலாம்.. இந்த இடத்துல நமக்கு எதுவும் கிடைக்க வாய்ப்பில்லை.. இருந்த ஒரே நபரும் போயாச்சு.. இனி வேற ஏதாச்சும் யோசிக்கணும்.. கெளதமி ஒரு ஐடியா சொல்றா.. டிரை பண்ணிப்  பார்க்கலாம்.. வா கிளம்புவோம்"


"ஓகே.."


இருவரும் நாராயணனின் உடலுக்கு ஒரு வணக்கம் போட்டு விட்டு, அவரது மகனுக்கு தேங்ஸ் சொல்லி விட்டு, அவரது செல்போன் நம்பரையும் மறக்காமல் வாங்கிக் கொண்டு கிளம்பினர்.


மீண்டும் கார் பயணம்.


முன்னாக்கி நீண்டு கிடந்த சாலை வேகமாக பின்னோக்கி ஓடிக் கொண்டிருந்தது.. ஜன்னல் வழியாக ஊடுறுவி காதுகளை உரசிச் சென்று கொண்டிருந்தது சற்றே குளிர்ந்த காற்று..  இரு பக்கமும் திடீர் திடீரென குறுக்கிட்ட சிறு சிறு குளங்கள், கால்வாய்கள், அடர்ந்த மரங்கள்.. மனசுக்கு ரம்யமாக இருந்தாலும் ரசிக்கும் மன நிலையில் குமாரும் இல்லை, ஜார்ஜும் இல்லை. 


ஜார்ஜைப் பொறுத்தவரை நவீன் ஒரு நண்பன் மட்டும் கிடையாது.. ஒரு  சகோதரனைப் போல.. அத்தனை நெருக்கமாக இருப்பார்கள் இருவரும். ஜார்ஜின் குடும்பத்தில் நவீன் ஒரு செல்லப் பிள்ளை.. அவனது அம்மாவுக்கு நவீனை ரொம்பப் பிடிக்கும்.. அடிக்கடி வீட்டுக்கு வரச் சொல்வார்.. தனது கையாலையே சமைத்துப் போடுவார்.. ஏன் சில நேரம் இரண்டு பேரையும் உட்கார வைத்து ஊட்டியும் விடுவார்.. ஜார்ஜைக் கூட விட்டு விடுவார்.. நவீனிடம் ரொம்ப பாசமாக அருகே அமர்ந்து அவன் பேசுவதையெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பார். அத்தனை அன்பு, அவ்வளவு பிடிக்கும்.





இப்படித்தான் ஒரு நாள் நவீனுக்கு ஏதோ மனசு சரியில்லை என்று வீட்டுக்கு வந்திருந்தான். அவனது முகத்தைப் பார்த்த ஜார்ஜின் அம்மா, என்னாச்சுப்பா என்று கேட்க.. தனது மனக் கஷ்டத்தை கொட்டித் தீர்த்தான்.


"அம்மாவுக்கு என் மேல ரொம்ப பாசம்மா.. சின்ன வயசுலேயே அப்பா இறந்துட்டதலா  ரொம்ப சிரமப்பட்டு என்னை வளர்த்தாங்க..  அடிக்கடி அவங்களுக்கு உடம்புக்கு முடியாமப் போகுது.. கூட இருந்து என்னால பார்த்துக்க முடியலை.. அங்கேயே வந்துடவான்னு கேட்டா .. வேண்டாம்.. நீ முதல்ல படிப்பை முடி.. அப்புறம் வா.. நல்ல வேலை கிடைக்கணும்.. அது முக்கியம்.. எந்த ஊரா இருந்தாலும் பரவாயில்லை.. போ.. நான் என்னைப் பாத்துக்கறேன்னு சொல்றாங்க.. எனக்குத்தான் மனசுக்கு ஒரு மாதிரியா இருக்கு"


"இதுல என்னடா  இருக்கு நவீன்.. எந்த அம்மாவா இருந்தாலும் பிள்ளை நல்லா இருக்கணும்னுதானே நினைப்பாங்க.. அவங்களும் அப்படித்தான் இருக்காங்க.. இதெல்லாம் தாய்மையோட சிறப்பு நவீன்.. எங்களைப் பொறுத்தவரை பிள்ளைங்க நல்லா இருக்கணும்.. மேல மேல உயரணும்.. அது மட்டும்தான் நோக்கமாக இருக்கும்.. அதைத் தாண்டி எங்களுக்கு வேறு என்ன கவலை இருக்கும்னு நினைக்கிறே.. நாங்க படுவதெல்லாம் கஷ்டமே கிடையாது.. அப்படி கஷ்டம்னு நினைச்சிருந்தா.. உங்களையெல்லாம் பெத்துக்க நாங்க யோசிச்சிருப்போமா இல்லையா.. அதை விட பெரிய கஷ்டம் பெண்களுக்கு  இருக்கா என்ன.. அதையே சமாளிச்ச நாங்க.. உங்களை வளர்க்க கஷ்டப்படுவோமா.. இதையெல்லாம் நினைச்சு அப்செட் ஆகாத.. நல்லா படிங்க.. நல்ல வேலைக்குப் போங்க.. நல்ல பொண்ணாப் பார்த்து கல்யாணம் பண்ணுங்க... சந்தோஷமா இருங்க.. எங்களுக்கு அவ்வளவுதான்டா ஆசை"


சிரித்தபடி ஜார்ஜ் அம்மா கூற அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான் நவீன். அப்போதுதான் ஜார்ஜின் அம்மாவிடம் தான் கெளதமியை காதலிப்பதைச் சொன்னான்.


"அட பார்ரா.. இது எப்படா.. சொல்லவே இல்லையே நீ.. ஜார்ஜ் கூட சொல்லலே.. திருட்டுப் பசங்கடா நீங்க.. யார்டா அது.."


"எங்க ஜூனியர்ம்மா.. ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு.. முதல்ல சண்டைதான் போட்டோம்.. இப்ப எனக்குப் பிடிச்சவளா மாறிட்டா.. அவளுக்கு நான் உலகமாவே மாறிருக்கேன்.. அம்மாவுக்கும் சொல்லிட்டேன்.. அவங்களும் உன் இஷ்டமே என் இஷ்டம்னு சொல்லிட்டாங்க.. ஒரு நாளைக்கு இங்க கூட்டிட்டு வர்றேன்"


"அதை விடுடா.. என் பிள்ளைங்க சரியாதான் முடிவெடுப்பீங்க.. எனக்கு அது பத்திக் கவலை இல்லை.. பொண்ணு எந்த ஊரு.. என்ன பேரு.. எப்படி இருப்பா".. வழக்கமான கேள்விகளை ஆர்வத்தோடு அவர் அடுக்கிக் கொண்டே போக.. விளக்கிக் கூறினான் நவீன். ஜார்ஜ் அம்மாவுக்கு அவ்வளவு சந்தோஷம். டக்கென்று ஜார்ஜ் பக்கம் திரும்பி, "ஏன்டா உனக்கும் இப்படி ஏதாச்சும் இருக்கா.. சொல்லுடா.. எங்களுக்கு வேலை மிச்சாகும்ல" என்று கலாய்க்க, அவன், "அட ஏம்மா நீ வேற காமெடி பண்ணிட்டு" என்று அலுத்துக் கொண்டான்.


பிறகு ஒரு நாள் கெளதமியை, ஜார்ஜ் வீட்டுக்கு அழைத்து வந்தான் நவீன். கிட்டத்தட்ட ஒரு பெண் பார்க்கும் படலம் போல அமைந்தது அது. ஜார்ஜின் அம்மா, வாம்மா மருமகளே என்று வாய் நிறையக் கூப்பிட, அண்ணி அண்ணி என்று ஜார்ஜின் தங்கைகள் இருவரும் பாசத்தைக் கொட்ட, இடமே கலகலப்பாகி விட்டது. கெளதமிக்கே ரொம்ப கூச்சமாகப் போய் விட்டது. நவீனுக்கு மனசு அத்தனை ரிலாக்ஸ்டாக இருந்தது.


கெளதமியை தனியே கூட்டிக் கொண்டு போன ஜார்ஜின் அம்மா அவளிடம் நீண்ட நேரம் பேசினார். ஏதோ தனது சொந்த மருமகள் போலவே அவர் நினைத்து பாசத்தைப் பொழிந்து பேசியது கெளதமிக்கு அத்தனை சந்தோஷமாக இருந்தது.


"ம்மா.. உங்களை அம்மான்னு கூப்பிடவா"


"வேணாம் கெளதமி.. எனக்கு நீ மூத்த மருமகள்.. அப்படித்தான் நாங்க எல்லோரும் நினைக்கிறோம்.. ஜார்ஜை விட நவீன் 9 மாசம் பெரியவன்.. ஸோ, எங்களுக்கு மூத்த மருமகள் நீ.. அதனால உரிமையோட அத்தைன்னு கூப்பிடு.. இதுவும் உன்னோட புகுந்த வீடு தான்.. நவீன் ரொம்ப நல்லவம்மா.. ஜார்ஜை விட நல்லவன்.. நானே சொல்றேன்.. அவன் கிட்ட கூட சின்னச் சின்ன கெட்ட பழக்கம் இருக்கு.. நவீன் அப்படி இல்லை.. ரொம்ப சுத்தமான பையன்.. தேடிப் பார்த்தாலும் இப்படி ஒருத்தன் கிடைக்க மாட்டான். என் பொண்ணுங்களுக்கு ஜார்ஜை விட நவீனைத்தான் ரொம்பப் பிடிக்கும். ஏதாவது ஒன்னுன்னா முதல்ல அவனுக்குத்தான் போன் போட்டு அண்ணா அண்ணான்னு ஓடுங்க.. அப்படி ஒரு பாசம்.


நவீனோட வாழ்க்கையிலே நிறைய இழப்புகள்.. எல்லாத்தையும் தனியாவே சந்திச்சு, சமாளிச்சிருக்கான். ஒரு உதவி வேணும்னு கூட யார் கிட்டயும் கேட்க மாட்டான். ஜார்ஜ் அப்பா அவனுக்கு நிறைய முறை உதவிகள் பண்றேன்னு சொன்னப்ப கூட வாங்க மாட்டேன்னுட்டான். ஆனால் அவன் மட்டும் பாசத்தை அப்படி வாரி வாரி வழங்குவான்.. நீ ஒரு பாதுகாப்பான ஆள் கிட்டதான் வந்து சேந்திருக்க.. அவனை நீ நல்லா பாத்துக்குவியோ இல்லையோ,, அவன் நிச்சயமா உன்னை பாத்துக்குவான்.. அதுக்கு நான்  கியாரண்டி"


"ஆச்சரியமா இருக்கும்மா.. நானும் நீங்க சொன்னதை உணர்ந்திருக்கேன். என்னை இப்பவே ரொம்பத் தாங்குகிறார்.. அதேசமயம், தன்னோட அம்மாவுக்கும் அத்தனை முக்கியத்துவம் கொடுப்பார். அதுதான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. வழக்கமான ஒரு காதலனா அவர் இல்லை.. ஆனா ஒரு நல்ல காவலனா இருக்கார்.. நான் அதிர்ஷ்டசாலிம்மா"


"இதுல என்னடா சந்தேகம்.. நவீனைப் பிடிக்காதவங்க இருக்கவே முடியாது.. இப்படியெல்லாம் பிள்ளைகள் கிடைப்பது அரிது" என்று மகிழ்ச்சியை கொட்டிப் பகிர்ந்து கொண்டனர் இருவரும்.


"நவீன்  டிகிரி முடிச்சதும் முதல்ல கல்யாணத்தை பண்ணிடு.. டிலே வேண்டாம்.. வேலை கிடைக்கும் வரைக்கும் நம்ம வீட்டுக்கே கூட வந்திருங்க.. இவ இங்கிருந்து காலேஜ் போகட்டும்.. நீ வேலை தேடி முடிச்ச பிறகு தேவைன்னா வீடு பார்த்து தனியா போய்க்கோ.. இல்லாட்டி நம்ம வீட்டிலேயே கூட இருங்க.. நம்ம வீடுதான் கடல் போல இருக்கே. பிறகென்ன" என்று சொல்லிக் கொண்டே போக, நவீனுக்கு நெகிழ்ச்சியாகி விட்டது.


"தேங்க்ஸ்மா" என்று அவரது கைகளைப் பிடித்துக் கொண்டான்.. அவரோ கட்டி அணைத்துக் கொண்டு ஆசிர்வதித்தார்.. 


"க்ரீச்ச்ச்ச்ச்ச்ச்ச்"


திடீரென கார் வேகமாக நின்றதில் நினைவுகள் கலைந்து திடுக்கிட்டு விழித்தான் ஜார்ஜ்.. "என்னாச்சு சேட்டா"..  ஒரு மாடு குறுக்கே போயிருச்சு சாரே.. வேற ஒன்னும் இல்லை என்று டிரைவர் கூற, கார் மீண்டும் பயணம் தொடர்ந்தது.




குமாரின் செல்போன் சிணுங்கவே அவன் அதை எடுத்துப் பார்த்தான்.. புது எண்.


"ஹலோ.. "


"....."


"ஹலோ யாருங்க நீங்க.. என்ன விளையாடறீங்களா"


"...."


"சரி.. அதுக்கு என்ன ஆதாரம் இருக்கு.. "


"........................................................."


"ஹலோ.. ஹலோ"


"யார்டா குமாரு"


"தெரியலை.. அவ சொல்றது புரியலை.. பெரிய குழப்பமா இருக்கு"


"சொல்றாளா.. பொண்ணா பேசினது"


"ஆமா"


"என்ன சொல்லுச்சு அந்தப் பொண்ணு"


"பார்வதியாலே.. கெளதமிக்கு ஆபத்தாம்"


(தொடரும்)

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்