"எனக்கும்தான் புரியலை பட் ரொம்ப டேமேஜிங்கா எதுவும் இருக்காதுன்னு நினைக்கிறேன்"(கெளதமியின் காதல் -13)

Mar 04, 2024,06:13 PM IST

- சுதா. அறிவழகன்


விடியலை நோக்கி விரைந்து கொண்டிருந்தது வானம்.. தூரத்து வெளிச்சக் கீறல் ரம்யமாக இருந்தது.. முளைத்துக் கிளர்ந்தெழத் துடித்துக் கொண்டிருந்த சூரியக் கதிர்களை முடிந்தவரை தடுத்துப் பார்த்து முடியாமல் வெளிச்சத்தின் பிரகாசத்தைப் பார்த்து, வெட்கித் தலை கவிழ்ந்து ஓடியது இருள்.. 


திருவனந்தபுரத்தை நெருங்கிக் கொண்டிருந்தது கார்.. அத்தனை பேரும் முழுத் தூக்கத்தில் - டிரைவரைத் தவிர. முதலில் மெல்ல கண் விழித்தது பார்வதிதான். 


"டிரைவர்ண்ணா.. எங்க இருக்கோம்.. வந்துட்டோமா"




"நெருங்கிட்டோம்மா.. இன்னும் 5 கிலோமீட்டர் தாம்மா.. நீங்க நல்லா தூங்கிட்டிருந்தீங்களா.. அதான் நான் எங்கேயும் நிறுத்தலைம்மா.. டீக்கு நிறுத்தவாம்மா.."


"இருங்கண்ணா.. இவங்களை எழுப்பறேன்.. ஜார்ஜ்.. டேய் குமாரு.. எழுந்திருங்க.. திருவனந்தபுரம் நெருங்கிட்டோம்.."


அவளது குரலைக் கேட்டு படக்கென்று எழுந்தான் குமார்.


"மெதுவா எழுப்ப மாட்டியா.. படபடன்னு எழுப்புனா நான் பயந்துக்குவேன்"


"அது சரி..  டீ  பிரேக் விடலாமா.. சொல்லுங்க"


"நிறுத்தலாமே.. எங்க இருக்கோம் இப்போ"


"இன்னும் 5 கிலோமீட்டர்ஸ்தான்.. நெருங்கிட்டோம்.. அண்ணா.. நல்ல கடையாப் பார்த்து நிறுத்துங்கண்ணா.. ரெஸ்ட் ரூம் இருக்கிற இடமா"


"சரிங்கம்மா"


தூரத்தில் ஒரு விசாலமான ஹோட்டல் தென்படவே.. கார் அங்கு விரைந்தது. நிறுத்திய சில விநாடிகளில் கெளதமிக்கும் முழிப்பு தட்டியது.


"டிரிவேன்ட்ரம் வந்துட்டமா"


"இல்லடிம்மா.. வரப் போகுது.. அதுக்கு முன்னாடி ஒரு காபி பிரேக்"


"இவ்வளோ காலையிலேயே காபியா.. வயித்தக் கலக்குமே"


"அதுக்குத்தான்.. சரி ரெஸ்ட் ரூம் போறேன் வர்றியா.. ஜார்ஜ் எனக்கு லெமன் டீ போதும்.. கெளதமி உனக்கு?"


"எனக்கும் அதே"


"ஓகேப்பா.. 2 லெமன் டீ.. நாங்க வந்துர்றோம்.. வாடி சீக்கிரமா"


இருவரும் ரெஸ்ட் ரூம் பக்கம் விரைய, டீ ஆர்டர் செய்து விட்டு அங்கிருந்த டேபிளில் உட்கார்ந்தனர் ஜார்ஜும், குமாரும்.




"மச்சான்..  தம் அடிக்கலாமா"


"பார்வதி செருப்பால அடிப்பா.. ரூம்க்கு போய் பார்த்துக்கலாம்.. இப்ப உதைப்பாங்க ரெண்டு பேரும்"


"டேய்.. சுளையா 24 மணி நேரம் ஆயிருச்சுடா.. வாயே டிரை ஆயிருச்சு"


"இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்துதான் ஆகணும் மச்சான்.. டிக்னிட்டி முக்கியம்ல"


"ஆமாமா.. ரொம்ப முக்கியம்"


டீ ரெடியாகி டேபிளுக்கு வந்தது. கூடவே சில பிஸ்கட்களையும் வாங்கி வைத்தனர். கெளதமியும், பாருவும் வந்து சேர.. ரிலாக்ஸ்டாக டீ சாப்பிட ஆரம்பித்தனர்.


"பாரு.. உங்க அப்பாவோட பிரண்ட் கேலிகட்ல இருக்கார்ல.. அவர் கிட்ட பேசி வந்திருக்கோம்னு சொல்லலாமா"


"இப்பவேவா .. முதல் போய் ரூம் போட்டு விசாரிக்க ஆரம்பிப்போம்.. அதுல ஏதாவது சிக்கல் வந்தாலோ அல்லது உதவி தேவைப்பட்டாலோ கேப்போம்.. அதுதானே சரியா இருக்கும்.. இப்ப  போய் என்ன கேக்கிறது"


"அதுவும் சரிதான்.. சரி முதல்ல டீக் கடையை முடிங்க"


குமார் டீயைக் குடித்தபடி எதேச்சையாக கடைக்கு வெளியே பார்வையை ஓட விட்டான்.. அப்போது ஒரு பைக்கில் அமர்ந்திருந்த நபர், குமாரையே பார்த்தபடி இருந்தார். இவன் ஏன் நம்மளையே குறுகுறுன்னு பார்க்கிறான் என்று யோசித்தபடி, பதிலுக்கு குமாரும் உத்துப் பார்க்க.. அந்த நபர் அவனைப் பார்த்து சிரித்தார்.


இப்போது குமாருக்கு ஒரு மாதிரியாகி விட்டது.. ஒரு வேளை "அவனா இவன்" என்று குழம்பிப் போனவன் டக்கென பார்வையைத் திருப்பிக் கொண்டான். ஆனாலும் கியூரியாசிட்டி உந்தித் தள்ள மீண்டும் பார்க்க, அந்த நபர் வச்ச பார்வையை எடுக்காமல் குமாரையே பார்த்தபடி இருந்தார்.


கடுப்பான குமார், டக்கென டீ கிளாஸை வைத்து விட்டு.. அந்த நபரிடம் விரைந்தான். ஜார்ஜும் மற்றவர்களும் அவனை குழப்பமாக பார்த்தபடி டீயை அருந்திக் கொண்டிருந்தனர்.


பைக் நபர் அருகே சென்ற குமார் அந்த நபரை நோக்கி, "நீ ஆரானு, எந்தினானு என்னே நோக்குன்னது" என்று வினவினான்.


அந்த நபரோ, "ஞான் நிங்களே மாட்டொன்னும் நோக்கின்னுல்லா" என்று பதிலளிக்க.. இதற்கு மேல் அவனிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் படக்கென்று திரும்பி வந்தான் குமார். ஆனாலும் மனசுக்குள் என்னவோ நெருடியது.. சற்று நின்ற அவன் டக்கென திரும்பிப் பார்த்தான்.. பைக் அங்கு இல்லை. அந்த நபரும் இல்லை.


மீண்டும் டேபிளை நோக்கி திரும்பியவனிடம், "டேய் யார்ரா அது.. என்ன கேட்டே" என்று ஜார்ஜ் கேட்க, "இல்லை மச்சான் என்னையே பார்த்துட்டிருந்தான்.. சிரிச்சான்.. அதான் போய் ஏன் என்னையே பார்த்துட்டிருக்க யார் நீன்னு கேட்டேன்.. அதுக்கு அவன் நான் ஒன்னும் உன்னைப் பார்க்கலைன்னு சொல்றான்.. இப்ப போய்ட்டான்.. யாரா இருக்கும்"


"பிராந்தனா"  இருக்கும்" என்றாள் பார்வதி.


சரி வாங்கப்பா போலாம்.. டயர்டா இருக்கு எனக்கு என்று கெளதமி குரல் கொடுக்க, காசைக் கொடுத்து விட்டு கிளம்பினர்.


---


குமார் ஏற்கனவே ஹோட்டலில் ரூம் புக் பண்ணியிருந்தான். திருவனந்தபுரம் சென்டிரல் ரயில் நிலையத்துக்குப் பக்கத்தில்தான் ஹோட்டல்.. சங்கீதா டூரிஸ்ட் ஹோம்.. அந்த ஹோட்டலுக்குப் போனைப் போட்டான் குமார்.


"ஹலோ.. சார் ஞாங்கள் ஹோட்டலினு அடுத்தானு.. ஏது வழியானு வரேண்டது?"


"---------"


"ஓ.. சரி.. ஏது தெருவில்?"


"-----"


"சரியேட்டா.. ஞாங்கள் வரும், தேங்ஸ்"


"டிரைவர்ண்ணா.. பஸ் ஸ்டாண்ட் தாண்டியதும், லெப்ட் சைட்ல தம்பனூர் மஸ்ஜித் ரோடு அப்படின்னு வருமாம்.. அதுல புகுந்து நேரா  போனா லெப்ட் சைட்ல் நாலாவது பில்டிங்காம்.. நான் மேப் போட்டிருக்கேன்.. ரூட் சொல்றேன்.. நீங்க போய்ட்டே இருங்க"


"ஓகே சார்"


டிராபிக்  இல்லாத காலை நேரம் என்பதால் கார் வேகமாக செல்ல முடிந்தது. திருவனந்தபுரம் மிகவும் பழமையான நகரம்.. கொச்சி போல பேய்த்தனமான பரபரப்பு இங்கு இருக்காது.. எல்லாமே நிறுத்தி நிதானமாகவே நடக்கும்.. சேட்டன்மார்களும், சேச்சிமார்களும் காலை நேரத்தில் சாலையில் அங்குமிங்கும் பரவலாக விரைந்தபடி இருக்க.. திருவனந்தபுரத்தை ரசித்துப் பார்த்தபடி வந்தனர் நால்வரும்.


தம்பனூர் பாலத்தைத் தாண்டி ரயில் நிலையத்தை நெருங்கிய கார் அங்கிருந்த ரவுண்டானாவை ஒரு சுற்று சுற்றி இடது புறமாக மஸ்ஜித் சாலையில் நுழைந்து விரைந்தது.. சிறிது தூரத்திலேயே வந்து விட்டது சங்கீதா டூரிஸ்ட் ஹோம்.


ஹோட்டலுக்குள் காரை செலுத்தி காலியாக இருந்த பார்க்கிங்கில் அதை நிறுத்தினர். காரிலிருந்து இறங்கிய குமார், நான் போய் ரிசப்ஷனில் என்ட்ரி போட்டுட்டு, ரூம் எதுன்னு கேட்டுட்டு வந்துர்றேன்.. அதுக்குப் பிறகு லக்கேஜ் எடுத்துக்கலாம் என்று கூறி ஜார்ஜை வாடா என்று அழைத்துக் கொண்டு உள்ளே போனான்.


கெளதமியும், பார்வதியும் காரை விட்டு இறங்கினர். உள்ளே இருந்த பிளாஸ்க்கை திறந்து சூடான தண்ணீரை கொஞ்சம் குடித்தாள் கெளதமி. ரொம்ப டயர்டாக இருந்தது. நாக்கெல்லாம் வறண்டு போயிருந்தது.


"என்னடி பண்ணுது"


"ஒன்னும் பண்ணலை பாரு.. டயர்டா இருக்கு.. நமக்கே இவ்வளவு கஷ்டம்னா.. நவீனுக்கு எப்படி இருக்கும்.. எப்படி இருக்கார்னு நினைச்சாலே.. பதட்டமாகுதுடி"


"தேடத்தானே வந்திருக்கோம்.. கவலைப்படாதே.. எதுவும் ஆயிருக்காதுன்னு எனக்குத் தோணிட்டே இருக்கு.. யாரோ இடையில புகுந்து ஏதோ குழப்பம் பண்றாங்கன்னு மட்டும் தெளிவா புரியுது"


"எதுக்கு குழப்பம் பண்ணனும்.. என்னதான் வேணும் அவங்களுக்கு.. இதனால என்ன லாபம் இருக்க முடியும் அவங்களுக்கு.. அதுதான் புரியவே மாட்டேங்குது"


"எனக்கும்தான் புரியலை.. பட்.. ரொம்ப டேமேஜிங்கா எதுவும் இருக்காதுன்னு நினைக்கிறேன்.. லெட் அஸ் ஹோப் ஃபார் குட் நியூஸ்.. நீ ரிலாக்ஸ்டா இரு.. முதல்ல போய் நீ தூங்கி ரெஸ்ட் எடு. நானும் கூடவே இருக்கேன். அவங்க ரெண்டு பேரும் வெளில போய்ட்டு வரட்டும்.. எல்லா இடத்துக்கும் நீ அலைஞ்சா உடம்பு தாங்காது.. சரியா"




"ம்ம்.. பட் எவ்வளவு நேரம் உள்ளேயே அடைஞ்சு கிடக்க முடியும்.. போக முடியும்ங்கிற இடத்துக்கு நானும் வர்றேன்.. தடுக்காத ப்ளீஸ்"


"அது நாளைக்குப் பார்க்கலாம்.. அட்லீஸ்ட் இன்னிக்கு ஒரு நாளாவது ரெஸ்ட் எடு.. அப்பத்தான் சம்மாவாச்சும் வெளில போக முடியும்"


குமாரும், ஜார்ஜும் காரை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.


"என்னாச்சு"


"ரூம் போட்டாச்சு.. போலாம்" என்று குமார் கூற டிரைவரும், ஹோட்டல் ஊழியர் ஒருவருமாக சேர்ந்து சூட்கேஸ் உள்ளிட்ட லக்கேஜ்களை காரிலிருந்து எடுக்க ஆரம்பித்தனர்.. "சார் நீங்க போங்க.. நாங்க எடுத்துட்டு வர்றோம்" என்று டிரைவர் சொல்ல, நால்வரும் ஹோட்டலுக்குள் சென்றனர்.


முதல் தளத்தில் ரூம்கள் இருந்தன. லிப்ட்டில் மேலே சென்றனர். பக்கத்து பக்கத்திலேயே ரூம்கள் கிடைத்திருந்தன. கெளதமியும், பார்வதியும், 13வது எண் அறைக்குள் செல்ல, 14வது அறையை ஜார்ஜும், குமாரும் எடுத்துக் கொண்டனர். டிரைவரும், ஹோட்ல் ஊழியரும் லக்கேஜ்களை கொண்டு வந்து கொடுக்க, அவரவர் லக்கேஜ்களை பார்த்துப் பிரித்து எடுத்துக் கொண்டனர்.


"டிரைவர்ண்ணா.. உங்களுக்கு கீழே சிங்கிள் ரூம் போட்டிருக்கு.. அங்க தங்கிக்கங்க.. சரியா.. பாரு.. ஒரு 2 ஹவர்ஸ் ரெஸ்ட் எடுக்கலாம்.. ரெப்ரஷ் ஆயிட்டு, சாப்பிட்டுட்டு பிறகு மத்த வேலையைப் பார்க்கலாம்.. முதல்ல என்ன பண்ணலாம்னு உக்காந்து பேசுவோம்.. அதுக்குப் பிறகு மத்ததைப் பார்க்கலாம். முதல்ல நாராயணனை கண்டுபிடிக்கனும்"


கெளதமியின் செல்  சிணுங்கியது. எடுத்து காதில் வைத்து, "ஹலோ" என்றாள்.. மறுமுனையில் யாரென்று தெரியவில்லை.. முகம் மெல்ல மாறியது.. அப்படியே கண்கள் செருக.. மயங்கிச் சரிந்தாள் கெளதமி.. பார்வதி தாங்கிப் பிடிக்க.. ஜார்ஜும், குமாரும்.. திகிலடித்தாற் போல நின்றனர்.


(தொடரும்)


Drawing: L. Jithesh balan

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்