"ஒரே ஆளா இருக்கணும்.. இல்லாட்டி ஒரே குரூப்பைச் சேர்ந்த ஆளா இருக்கும்".. (கெளதமியின் காதல் -12)

Feb 26, 2024,05:12 PM IST

- சுதா. அறிவழகன்


"நவீனா?.." மின்னல் தாக்கியது போல ஸ்தம்பித்து நின்றாள் கெளதமி. பக்கத்தில் இருந்த அத்தனை பேரும் அவளை நோக்கி வேகமாக திரும்பினர். 


"என்னப்பா சொல்றீங்க.. நவீனா?"


"ஆமாம்மா.. அப்படித்தான் பேசிய நபர் சொன்னார்.. ஆனால் இது எந்த நவீன்னு எனக்குத் தெரியலை.. குரல் எனக்கு அடையாளம் தெரியாதே"


"என்ன சொன்னார்ப்பா?"


"கெளதமி எங்கேன்னு கேட்டார்.. நான், நீ திருவனந்தபுரம் போயிட்டிருப்பதாக சொன்னேன்.. அதுக்கு அவர், சார், தயவு செய்து அவளை வர வேண்டாம்னு சொல்லுங்க. நானே ஒரு வாரத்தில் கால் பண்றேன்.. சென்னைக்கும் வருவேன்.. ஸோ, அவளை எங்கேயும் போக வேண்டாம்னு சொன்னார். அவர் சொல்லி முடிச்சதும் கால் கட் ஆயிருச்சு"




"அய்யோ.. எனக்கு தலையே வெடிச்சுடும்போல இருக்கே.. எந்த நம்பர்ல இருந்துப்பா பண்ணார். ஏன் என்னைய வர வேண்டாம்னு சொன்னார்.. அவர்தான் நிஜமாவே பேசினாரா?.."


"எனக்கு எப்படி தெரியும்.. எனக்கும் குழப்பமாதான் இருக்கு.. நீங்க இப்போ என்ன பண்ணப் போறீங்க?. பேசாம போலீஸ்ல சொல்லிடலாம்.. இதுல ஏதோ பெரிய குழப்பம் இருக்கிற மாதிரி எனக்குத் தெரியுது.. நீங்க பெரிய சிக்கல்ல மாட்டிப்பீங்களோன்னு எனக்குப் பயமாவும் இருக்கு.. மொதல்ல திரும்பி வாங்க... பேசலாம்"


"இருங்கப்பா ஜார்ஜ் அண்ணா பேசனும்கிறாங்க"


"சார்.. நான் ஜார்ஜ்.. அது நவீன்தான்னு உங்களுக்கு உறுதியா தெரியுதா சார்?.. எந்த நம்பர்ல இருந்து கால் வந்துச்சு.. அதைச் சொல்ல முடியுமா?.. சொல்லுங்க.. "985......".. ஓ.. இது அவனோட நம்பர் இல்லையே சார்.. வேற நம்பரா இருக்கே.. வேற யார்கிட்டயாவது போன் வாங்கி பேசிருப்பானா.. இருங்க சார் நான் திரும்ப கால் பண்றேன் நீங்க.. பயப்படாம இருங்க சார்.. கெளதமிக்கு எதுவும் ஆகாது.. நாங்க இருக்கோம்"


காலை கட் பண்ணிட்டு வேகமாக திரும்பினான் ஜார்ஜ்.


"இது எதோ திசை திருப்பும் செயல் மாதிரி தெரியுது. நம்மளை யாரோ பாலோ பண்ற மாதிரியும் எனக்குத் தெரியுது.. நம்மளை நவீன் பத்தி சிந்திக்க விடாம டைவர்ட் பண்ணப் பாக்கறாங்களோன்னு தெரியுது"


"அதுதான் ஏன்?.. அப்படி என்னதான் அவனுக்கு பிரச்சினை.. கடத்தி வச்சிருக்காங்களா.. அப்படின்னா ஏதாவது டிமாண்ட் இருக்கனும்ல?.. அப்படியும் எதுவும் இல்லை.. வரச் சொல்லி ஒரு பக்கம் போன் வருது.. வராதேன்னு இப்போ போன்.. அதுவும் நவீன் பெயரைப் பயன்படுத்தி.. அது நவீனா இருந்தா.. அவன் ஏன் இவ அப்பாவுக்கு போன் பண்ணனும்?.. இவளுக்குத்தானே பண்ணிருக்கனும்!.. இல்லை நமக்கு யாருக்காவது பண்ணிருக்கலாம்ல.. அங்க ஏன் பண்ணனும்.. அப்படின்னா பேசியது நிச்சயமா நம்ம நவீன் இல்லை".. மூச்சு வாங்க பேசினாள் பார்வதி.


முகமெல்லாம் வியர்த்து உடலெல்லாம் நடுங்கியபடி காணப்பட்ட கெளதமி, செல்லை எடுத்து நவீன் நம்பரை டயல் செய்தாள்.. வழக்கம் போல ஸ்விட்ச் ஆப்.




"பைத்தியம் பிடிக்கற மாதிரி எனக்கு.. ஏன் இப்படி ஒரு குழப்பம்.. நவீன் ஏன்டா இப்படி கஷ்டப்படுத்தறே என்னை" அப்படியே உட்கார்ந்து அழ ஆரம்பித்து விட்டாள் கெளதமி.


பட்டென்று அவளை நோக்கிக் குணிந்த பார்வதி, "டீ.. இது பப்ளிக் பிளேஸ்.. கன்ட்ரோல் பண்ணு.. முதல்ல காருக்குள்ள உக்காரு நீ.. நாங்க பேசிட்டு முடிவு பண்றோம்.. எழுந்திரு மொதல்ல.." அவளை தோளைப் பிடித்து தூக்கினாள். அழுகையை அடக்க முடியவில்லை கெளதமியால். அப்படியே போய் கார் பின் சீட்டில் உட்கார்ந்தவள் விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள்.


பார்வதி, குமார், ஜார்ஜ் மூவருக்குமே ஒன்றுமே தோணவில்லை. என்ன செய்வது என்றும் புரியவில்லை. அப்படியே சமைந்து போய் நின்று கொண்டிருந்தனர் சிறிது நேரம். குமார்தான் சுதாரித்தான்.


"See.. நாம திருவனந்தபுரம் போற பிளானை சேஞ்ச் பண்ண வேண்டாம். நிச்சயம் நவீன் போன் பண்ணியிருக்க வாய்ப்பில்லை. வேற யாரோ.. அது நவீனை தங்களோட கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நபராகத்தான் இருக்க முடியும்..  நாம வர்றதை அந்த க்ரூப் விரும்பலை, தடுக்கப் பார்க்குது.. நாம திட்டமிட்டபடி போகலாம்.. என்னதான் ஆச்சுன்னு பார்த்துடலாம்.. அங்கே போய்ட்டா ஏதாவது லூப் கிடைக்கும்.. இதைத் தவிர எனக்கு வேற வழி தெரியலை"


"கரெக்ட்தான். நாம போய்ப் பார்த்துடலாம்.. நம்மளை ஸ்டாப் பண்ண, இல்லாட்டி திசை திருப்ப நிறைய குழப்பம் பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன். நாம தெளிவா இருந்தாதான் எதையும் செய்ய முடியும்.. முதல்ல இவளை நார்மலாக்கனும்.. இல்லாட்டி இவளை வீட்டுக்கு அனுப்பிட்டு நாம மட்டும் போய்ட்டு வரலாம்"


"இல்லை.. நானும் வர்றேன்.. என்னை விட்டுட்டுப் போய்ராதீங்க ப்ளீஸ்.. நான் அழறது அவனை நினைசுச்தான்.. அவன் இருக்கானா இல்லையா.. அது தெரிஞ்சா கூட போதும்.. மனசு நிம்மதி ஆயிரும்.. நான் அழலை.. நாம பிளான்படி போகலாம்"... அழுதபடியே குறுக்கிட்டாள் கெளதமி.


பார்வதி அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.. அவளைப் பார்த்த ஜார்ஜ், "நீ ஏன் எதுவுமே சொல்லாம நிக்கிறே"


"இல்லை.. எனக்கு இப்ப புது டவுட் வருது.. அதாவது இதுக்கு முன்னாடி வாங்க வாங்கன்னு  ஒரு ஆள் நமக்கு போன் பண்ணினார் இல்லையா.. அதுதான் அந்த நாராயணன்.. இப்ப பேசிய நபரும் அதே நாராயணனா ஏன் இருக்கக்  கூடாதுன்னு எனக்குத் தோணுது"


பார்வதி கூறியதைக் கேட்டு திடுக்கிட்டனர் ஜார்ஜும், குமாரும்.


"நாராயணன் பேசும்போது பதட்டமா பேசினார். வாங்கன்னு சொன்னார்.. அவரது குரலில் நம்மை வர வைக்க வேண்டும் என்ற டோன் நல்லா தெரிஞ்சுச்சே.. அதே ஆள் ஏன் வர வேண்டாம்னு சொல்லனும்.. அதுவும் நவீன் பெயரைப் பயன்படுத்தி..  லாஜிக்  இடிக்குதே பாரு"


"எதுவும் இடிக்கலை.. நல்லா யோசிச்சுப் பாருங்க. பேசுனது நிச்சயம் நவீன் கிடையாது.. இல்லையா.. அப்படீன்னா ஏற்கனவே நமக்குப் பேசிய அதே நபர் கூட இப்போது பேசியிருக்கலாம் இல்லையா.. ஏன் கேட்கிறேன்னா.. சம்திங் ஹேஸ் ஹப்பன்ட் டு நவீன்.. அது எனக்கு உறுதியா தெரியுது. அவனை நாம காப்பாத்தறதை சம் பெர்சன்ஸ் விரும்பலை.. சோ நம்மை குழப்பிட்டிருக்காங்க.. நாமளும் அவங்க குழப்பி விடுற பாதையிலேயே கரெக்டா போய்ட்டிருக்கோம்.. அதான் எனக்கு டவுட்டா இருக்கு"


"சரி.. கெளதமி அப்பா கிட்ட பேசுனது நாராயணனான்னு நாம எப்படி கன்பர்ம் பண்ண முடியும்"


"நமக்கு முன்னாடி நாராயணன் பேசினார் இல்லையா.. அந்த நபர் இருக்குல்ல.. அதுவும், கெளதமி அப்பாவுக்கு வந்த போன் நம்பரும் ஒன்னான்னு பார்க்கலாமே"


அப்போதுதான் ஜார்ஜுக்கு உறைத்தது.. அட இதை நாம யோசிக்கலையே!.. உடனே நாராயணனிடமிருந்து வந்த நம்பரையும், கெளதமி அப்பா சொன்ன நம்பரையும்  செக் செய்தான்.. இரண்டுமே வேறு வேறு எண்.. ! ஆனால் கடைசி 3 எண்கள் கண்களை உறுத்தின..  நாராயணன் அழைத்த செல் எண்ணின் கடைசி 3 இலக்கங்கள்.. 345.. கெளதமி அப்பாவுக்கு வந்த நம்பரின் கடைசி மூன்று எண்கள் 346.. மற்ற எண்கள் எல்லாம் இரு போன் நம்பருக்கும் ஒன்றே!


ஷாக் அடித்தது போல இருந்தது நால்வருக்கும். பார்வதி முகம் பிரகாசமானது.. "நான் சொல்லலை.. இந்த நாராயணனுக்கும், கெளதமி அப்பாவுக்கு கால் பண்ண நபருக்கும் தொடர்பு இருக்கு.. ஒன்னு, ஒரே ஆளா இருக்கணும், இல்லாட்டி ஒரே குரூப்பைச் சேர்ந்த ஆளா இருக்கும்.. நிச்சயமா அது நம்ம நவீன் கிடையாது"




இப்போது கெளதமிக்கு இன்னும் பயமாகி விட்டது. அப்படீன்னா.. நவீன் பேசலையா.. அவனுக்கு ஏதாவது பெருசா நடந்திருக்குமா.. அவளால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மீண்டும் அழுகை வெடித்தது.


அவளை நோக்கி திரும்பிய பார்வதி, "கெளதமி இப்ப நீதான் தைரியமா இருக்கணும்.. இல்லாட்டி நாம எதையும் செய்ய முடியாது. இனிமே நமக்குக் குழப்பம் வேண்டாம்.. முதல்ல கிளம்புவோம்.. திருவனந்தபுரம் போறதுக்குள்ள இதுமாதிரி பல குழப்பம் நமக்கு வரலாம்.. ஆனால் பாதியிலேயே திரும்பிப் போனால் நிச்சயம் நவீனை நம்மாள கண்டுபிடிக்கவே முடியாது.. ஸோ, நாம கிளம்புவோம்"


"எஸ் பாரு.. நீ சொல்றதுதான் கரெக்ட்.. நாம டிலே பண்ண வேண்டாம்.. கெளதமி, நீ தைரியமா இரு. அவனுக்கு எதுவும் ஆகியிருக்காது.. அப்படியே அவன் சிக்கலில்  இருந்தாலும் கூட ஏதாவது செய்து அவனை மீட்றலாம்.. நீ ஒத்துழைப்பு கொடுத்தால்தான் நாங்க ஏதாவது செய்ய முடியும்"


" கண்டிப்பாண்ணா.. நான் அழலை.. தைரியமா இருக்கேன்.. உங்க கூடவே வர்றேன்.. ஏதாவது பண்ணி அவனைக் கண்டுபிடிப்போம்.. கிளம்பலாம்ண்ணா"


இறுகிய முகங்களுடன், கவலைகள் சூழ கனத்த இதயத்துடன் நான்கு பேரும் காரில் ஏற..  கார் சாலையில் வேகம் கொண்டு சீறிட்டு பாய்ந்தது... நால்வரின் மனங்களும் அதை விடவேகமாக துடித்துக் கொண்டிருந்தது.


(தொடரும்)


Drawing: L.Jithesh Balan

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்