சென்னை: தங்கம் விலை தினம் தினம் உயர்ந்து மக்களை கலக்கத்தில் ஆழ்த்தி வருகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.52920க்கு விற்கப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தங்கம் விலை ஆரம்பத்தில் இருந்து உயர்ந்து வந்தாலும் அது ஒரு சீரான நிலையில் தான் இருந்தது எனலாம். ஆனால் தற்போது தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. இந்த விலை ஏற்றத்தை பொதுமக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விலை ஏற்றத்திற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வருகிறது.
குறிப்பாக இஸ்ரேல்- பாலஸ்தீன தாக்குதலுக்கு பிறகு தங்கம் விலை அதிகரிக்க தொடங்கியது. கடந்த டிசம்பர் 4ம் தேதி பவுனுக்கு 47 ஆயிரத்து 800 என்று உயர்ந்தது தங்கம் விலை.அதன் பின்னர் ஏற்ற இறக்கமாக இருந்து வந்த நிலையில் கடந்த மாதம் திடீரென மீண்டும் உயரத் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஏறும் முகமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக மார்ச் 28ஆம் தேதி ஒரு பவுன் ஐம்பதாயிரத்தை கடந்தது. அதற்கு அடுத்து மார்ச் 29ம் தேதி 51 ஆயிரத்து கடந்து புதிய உச்சத்தை தொட்டது. அதற்கு அடுத்தும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே தான் வருகிறது. இந்த நகை விலை உயர்வு பொதுமக்களை மிகவும் பாதித்து வருகிறது.
இன்றைய தங்கம் விலை...
இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6615 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 105 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.840 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 52,920 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7216 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.57,728 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.912 உயர்ந்துள்ளது.
வெள்ளி விலை...
தங்கம் மட்டும் உயரவில்லை வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை நேற்றைய விலையை விட இன்று ரூ.2 உயர்ந்து இன்று 1 கிராம் வெள்ளி விலை 87 ரூபாயாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 696 ஆக உள்ளது.
அமெரிக்காவின் பொருளாதாரத்தை எதிர்க்கும் ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் டாலருக்கு பதிலாக தங்கத்தை வாங்கி குவித்து வருவது தான் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். இந்தியாவை பொறுத்தவரை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதும் தங்கத்தின் விலை உயர காரணமாக கூறப்படுகிறது.
குறிப்பாக சீன அரசு தங்கத்தை ரகசியமாக வாங்கி குவித்து வருவதும், சீன இளைஞர்கள் மத்தியில் தங்கம் மீதான மோகம் அதிகரித்து வருவதும் விலை ஏற்றத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும் சர்வதேச அளவில் நிலவும் நிச்சயமற்ற சூழல் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிப்பு ஆகியவற்றால், வரும் நாட்களில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொடும் என்கிறார்கள் நிபுணர்கள்.
{{comments.comment}}