சென்னை: சென்னை பூந்தமல்லி அருகே குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை அருகில் இருந்த தம்பதியினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூந்தமல்லி ராமானுஜம் கூடல் தெருவில் 33 வயதுடைய யுவராணி என்பவர் வசித்து வருகிறார். அவர் வீட்டின் அருகே ஒரு குப்பைத் தொட்டியில் இருந்து பூனை கத்துவது போல சத்தம் கேட்டுள்ளது. யுவராணி ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளார். அப்போது அந்தக் குப்பைத் தொட்டியில், பிறந்து ஒரு சில மணி நேரமேயான பச்சிளம் பெண் குழந்தை தொப்புள் கொடியுடன் கிடந்துள்ளது. எறும்புகள் மொய்த்த நிலையில் வலி தாங்காமல் குழந்தை கதறி அழுது சோர்ந்து போயிருந்தது.
இதை பார்த்த யுவராணி கணவரை அழைத்து அந்த குழந்தையை குப்பை தொட்டியில் இருந்து மீட்டு பூந்தமல்லி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று முதல் உதவி அளித்துள்ளார். அதன் பின்னர் பூந்தமல்லி காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டு இருந்ததனால், பூந்தமல்லி மருத்துவமனையில் இருந்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பூந்தமல்லி போலீசார் குழந்தையை மீட்கப்பட்ட இடத்திற்குச் சென்று குழந்தை வீசியது யார்? எதற்காக இப்படி செய்தார்கள் என்று ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், அருகில் இருக்கும் கண்காணிப்பு கேமரா காட்சிகளும் மூலமாகவும் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இது குறித்து யுவராணி பேசுகையில், குழந்தையை இப்படி குப்பை தொட்டியில் வீசி இருப்பது மிகுந்த மன வேதனை அளிக்கிறது. இந்த மாதிரி எல்லாம் யாரும் செய்யாதீர்கள். ஆசிரமத்தில் கூட போய் சேர்த்திடுங்கள். பூந்தமல்லியை அடுத்து, இப்ப எக்மோர் ஹாஸ்பிட்டல சேர்த்திருக்கோம். இப்ப பாப்பா நல்லா இருக்கு. இன்னும் 15 நாள் இன்குபேட்டரில் வைக்கனும்னு சொல்லியிருக்காங்க. 2 நாள் குப்பையில் இருந்து உயிருக்கு போராடிட்டு இருந்த குழந்தை உயிர் பிழைத்ததினால், பாப்பாவுக்கு அதிர்ஷ்டலட்சுமி என்று பெயர் சூட்டியுள்ளோம் என்றார் யுவராணி.
{{comments.comment}}