இது Vijay அரசியல்: வடக்கில் ஜெயிக்க வன்னியர்கள் முக்கியம்.. அப்ப செஞ்சி ராமச்சந்திரன்தான் கரெக்ட்!

Sep 09, 2024,11:03 AM IST

சென்னை: விஜய் தனது பாலிட்டிக்ஸை படு ஜோராக ஆரம்பிக்கத் தொடங்கி விட்டதாக தெரிகிறது. வட தமிழ்நாட்டு அரசியலில் மிக முக்கியமானவராக ஒரு காலத்தில் திகழ்ந்த செஞ்சி ராமச்சந்திரனை தனது கட்சிக்கு வருமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அனேகமாக அவர் அவைத் தலைவராக நியமிக்கப்படக் கூடும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த அழைப்பில் ஒரு ஸ்டிராட்டஜி மறைந்துள்ளது.


நடிகர் விஜய் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவுள்ளார். அதன் பிறகு அரசியலுக்கு முழுமையாக வரப் போகிறார். இடையில் தொண்டர்களை பூஸ்ட் செய்வது போல ஒரு சூப்பரான மாநாட்டை அவர் நடத்தப் போகிறார். அது அவரது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடாக அமையவுள்ளது. இந்த மாநாட்டில் தனது கட்சியின் நோக்கம், கொள்கை என்ன, என்ன செய்யப் போகிறோம், இலக்குகள் என்ன என்பது உள்பட ஏ டூ இசட் எல்லாவற்றையும் சொல்லி விட்டு தொண்டர்களை அனல் பறக்க கட்சிப் பணிகளில் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளார் விஜய்.


விஜய்க்கு அரசியல் தலைவர்கள் தேவை: 




மறுபக்கம் கட்சிக்கு "அரசியல் கட்சி" என்ற நிறத்தை முழுமையாகக் கொண்டு வரும் பணிகளிலும் விஜய் கவனம் செலுத்தி வருகிறார். இப்போது வரை இது விஜய் கட்சி என்று பலராலும் சொல்லப்படுகிறது. அதேபோல கட்சி முழுவதும் விஜய் ரசிகர்கள்தான் நிறைந்துள்ளனர். ரசிகர்களை மட்டுமே வைத்துக் கொண்டு பெரிதாக சாதிக்க முடியாது. தொண்டர்கள் தேவை.. அதை விஜய்யும் உணர்ந்துள்ளார். அந்தக் கட்டமைப்பை உருவாக்க அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்களால்தான் முடியும். அதாவது சிறந்த வழி நடத்தல் தேவைப்படும்.


புஸ்ஸி ஆனந்த் மட்டுமே தற்போது விஜய் கட்சியில் அனுபவம் வாய்ந்த ஒரு அரசியல் தலைவராக இருக்கிறார். அவரைத் தவிர்த்துப் பார்த்தால்  பெரிய தலைவர்கள் யாரும் இல்லை. இதனால் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த விஜய் திட்டமிட்டுள்ளார். அதில் முதல் நடவடிக்கையாக கட்சியில் மூத்த தலைவர் ஒருவரை சேர்த்து கட்சிக்கு தனி இமேஜை உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளார். அவரது திட்டத்தின் முதல் படிதான் செஞ்சி ராமச்சந்திரன் என்று சொல்கிறார்கள்.


விழுப்புரம் மாவட்டம் ஆவியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செஞ்சி ராமச்சந்திரன். பழுத்த அரசியல்வாதி. திமுகவில் நீண்ட காலம் இருந்தவர். பின்னர் வைகோ மதிமுகவைத் தொடங்கியபோது அதில் இணைந்து செயல்பட்டார். அதன் பின்னர் 2014ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இவரும் அமைதியாகி விட்டார். இப்போது கிட்டத்தட்ட அரசியலில் மறக்கப்பட்ட ஒரு தலைவராக இருந்து வருகிறார். லோக்சபா எம்பியாக இருந்தபோது மறைந்த வாஜ்பாய் அமைச்சரவையில் இணை அமைச்சராக பதவி வகித்தவர் செஞ்சி ராமச்சந்திரன். 


வன்னியர்கள் வாக்கு வங்கிக்கு குறி:




செஞ்சி ராமச்சந்திரன் நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட, அரசியல் நீக்கு போக்குகள் தெரிந்த, திறமையான, தொண்டர்களை கட்டியணைத்துக் கொண்டு செல்லக் கூடிய ஒரு தலைவர். குறிப்பாக வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவை அனைத்தும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வந்து சேர்ந்தால் அது கட்சிக்கு மிகப் பெரிய பூஸ்ட்டாக அமையும் என்பது விஜய்யின் கணக்கு.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரும்பான்மை சமுதாயம் என்றால் அது பட்டியலின சமுதாயம்தான். அதற்கு அடுத்து வட தமிழ்நாட்டில் வன்னியர்கள் மிகப் பெரிய வாக்கு வங்கியாக உள்ளனர். தெற்கில் முக்குலத்தோர் பெரும்பான்மையாக உள்ளனர். மேற்கில் கொங்கு வேளாளர் சமுதாயம் மிகப் பெரிய வாக்கு வங்கியாக உள்ளது. விஜய்யைப் பொறுத்தவரை தெற்கில் நல்ல ரசிகர்கள் பலம் உள்ளது. அது நிச்சயம் அப்படியே வாக்கு வங்கியாக மாறும். தூத்துக்கு சம்பவத்தின்போது அவர் நடந்து கொண்ட விதம் தெற்கில் அவருக்கு மிகப் பெரிய ஆதரவை தேடிக் கொடுத்தது. அதேபோல பூர்வீக ஊர் ராமநாதபுரம் மாவட்டம் என்பதாலும் அந்தப் பிராந்தியத்திலும் வாக்குகளை  சேகரிப்பது பெரிய கஷ்டமாக இருக்காது.


மேற்கு மண்டலத்திலும் விஜய்க்கு பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. அவரை அப்பகுதிகளில் தங்கள் வீட்டுப் பிள்ளையாகத்தான் பார்க்கிறார்கள் ரசிகர்கள். எனவே அந்தப் பகுதியிலும் விஜய்க்கு பெரிதாக கஷ்டம் இருக்காது. தனது தீவிர அரசியலால் அங்கு தற்போது வலுவாக உள்ள அதிமுக  வாக்கு வங்கி தானாகவே தன் பக்கம் திரும்பும் என்ற நம்பிக்கையில் விஜய் உள்ளார். திமுக வாக்கு வங்கிக்கும் கூட அங்கு சற்று ஆபத்துதான் உள்ளது.


விஜயகாந்த் பாணியில் விஜய்:




வடக்கில்தான் மிகப்பெரிய வாக்கு வங்கியாக வன்னியர் சமுதாய மக்கள் உள்ளனர். இவர்கள் ஏற்கனவே பாமக, தேமுதிக என பிரிந்து நிற்கிறார்கள். இதில் தேமுதிக வசம் உள்ள வாக்குகளை தன் பக்கம் இழுக்கும் முகமாகவே தனது கோட் படத்தில் விஜயகாந்த்தை கொண்டு வந்தார் விஜய் என்றும் ஒரு பேச்சு உள்ளது. விஜயகாந்த் அபிமானிகள் தன் பக்கம் ஈஸியாக வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையும் விஜய்க்கு உள்ளது. தேமுதிகவும் கூட விஜய்க்கு சாதகமாகவே உள்ளது. ஆரம்பத்தில் தேமுதிகவை கூட்டணியில் சேர்க்கவும் கூட விஜய் தயங்க மாட்டார் என்றும் கணக்கிடப்படுகிறது.


விஜயகாந்த் கூட ஆரம்பத்தில் பாமகவின் வாக்கு வங்கியைத்தான் பதம் பார்த்தார். யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. பாமக வாக்கு வங்கியிலிருந்து பலரும் பிரிந்து தேமுதிக பக்கம் வந்தனர். இப்போது வரை அவர்கள் தேமுதிகவுக்கு விசுவாசமாக உள்ளனர். அதே பாணியில் தானும் வளர விஜய் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. அதன் பொருட்டே செஞ்சி ராமச்சந்திரனை அவர் முடிவு செய்திருப்பதாக சொல்கிறார்கள். இதிலும் கூட விஜயகாந்த் பாணியைத்தான் கையில் எடுத்துள்ளார் விஜய்.


தனி வாக்கு வங்கியாக மாற்ற திட்டம்:




விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது அவருக்கு முக்கிய ஆலோசகராக திகழ்ந்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். இவரும் வட தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர்தான். எம்ஜிஆருக்கு வலது கரம் போல திகழ்ந்தவர். மிகச் சிறந்த அரசியல்வாதி, பழுத்த அரசியல் தலைவர். இவரது வழிகாட்டல் இருந்தவரைக்கும் தேமுதிக மிக மிக ஸ்டிராங்காக வளர்ந்து வந்தது. வடக்கில் விஜயகாந்த்துக்கு தனித்த வாக்கு வங்கியாக வன்னியர் சமுதாய மக்கள் திரும்ப பண்ருட்டியாரும் ஒரு காரணம். தற்போது அதே பாணியில், செஞ்சி ராமச்சந்திரனை வைத்து தனக்கென ஒரு தனி வாக்கு வங்கியை வடக்கில் உருவாக்க திட்டமிட்டுள்ளார் விஜய் என்று சொல்கிறார்கள்.


செஞ்சி ராமச்சந்திரனைத்  தொடர்ந்து மேலும் பல அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள் கட்சியில் இணைவார்கள் என்று தெரிகிறது. ஏற்கனவே திமுக மற்றும் அதிமுகவில் அதிருப்தியில் உள்ள பல மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைய விஜய்க்கு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் உள்ளன. இவை எல்லாமே விக்கிரவாண்டி மாநாட்டின்போது தெரிய வரும் என்றும் சொல்லப்படுகிறது. தன்னுடன் பயணிக்கப் போகும் தலைவர்களுடன் விக்கிரவாண்டி மேடையில் விஜய் தோன்றுவார் என்றும் சொல்லப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்