டெல்லி: டெல்லி ஜி20 மாநாட்டின் முதல் நாளில் நிறைவேற்றப்பட்ட பிரகடனம் குறித்து தெரிந்த பலருக்கும், அதன் பின்னணியில் என்னெல்லாம் நடந்தது என்பதை அறிந்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கும். அத்தனை உழைப்பு அந்த பிரகடனத்தின் பின்னால் அடங்கியிருக்கிறது.
ஜி 20 மாநாட்டின் முதல் நாளான நேற்று அனைத்துத் தலைவர்களும் ஒருமித்த கருத்துடன் பொதுப் பிரகடனம் ஒன்றை நிறைவேற்றினர். அதுதான் டெல்லி பிரகடகனம். 'Planet, People, Peace and Prosperity'என்ற பெயரிலான இந்த பிரகடனம் நேற்றைய மாநாட்டில் ஒருமித்த கருத்துடன் நிறைவேற்றப்பட்டது. ஒரு தலைவர் கூட இந்த பிரகடனத்திற்கு மாற்றுக் கருத்து கூறவில்லை என்பது ஆச்சரியமானது.
இந்த ஆச்சரியத்தை நிஜமாக்கிய பெருமை ஜி20 மாநாட்டுப் பிரகடனத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்ட ஜி20 ஷெர்பா (உதவியாளர்) அமிதாப் காந்த் மற்றும் அவரது குழுவைச் சேர்ந்தவர்களையே சாரும். இந்தக் குழுவினர் தான் ஒவ்வொரு நாட்டுக் குழுவுடனும் பேசிப் பேசி பிரகடனத்தை இறுதி செய்துள்ளனர். இந்த பிரகடனத்தின் வெற்றி, தங்களுக்கு கிடைத்த வெற்றியாக இவர்கள் சொல்லவில்லை. மாறாக இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றியாக பெருமையுடன் கூறியுள்ளனர்.
இதுகுறித்து அமிதாப் காந்த் போட்டுள்ள ஒரு டிவீட்டில், டெல்லி பிரகடனத்தில் மிகவும் முக்கியமானது என்னவென்றால், பல்வேறு தலைவர்களுடனும் நாங்கள் தொடர்ந்து பேசினோம். குறிப்பாக ரஷ்யா - உக்ரைன் தொடர்பான பகுதிகளை இறுதி செய்ய அனைத்துத் தலைவர்களுடனும் பேசினோம். கிட்டத்தட்ட 200 மணி நேரங்கள் தொடர்ந்து விவாதம் போனது. 300 முறை சந்தித்தோம். 15 முறை அறிக்கையை திரும்பத் திரும்ப தயாரித்தோம். இறுதியில்தான் எல்லாம் சுபமாக முடிந்ததாக அவர் கூறியுள்ளார். தனது அணியினருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
அமிதாப் காந்த்துடன், அவரது அணியைச் சேர்ந்த அதிகாரிகள் நாகராஜ் நாய்டு காகனூர் (இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி), ஈனம் கம்பீர் (தூதரக அதிகாரி) ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியே கூட தனது உரையின்போது எங்களது அணியின் அயராத பணியால் இந்த பிரகடனம் முழுமை பெற்றுள்ளது. இதற்காக எனது ஷெர்பாவுக்கும், அவரது அணியினருக்கும் நான் நன்றி கூறிக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார் என்பது நினைவிருக்கலாம்.
ஷெர்பா என்றால் என்ன?
ஜி20 மாநாட்டு செய்திகளின்போது அடிக்கடி "ஷெர்பா" என்ற வார்த்தையை கேட்டிருப்போம்.. அப்படின்னா என்ன என்று நம்மவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், இது இமயமலைப் பகுதியில் அதிகமாக உச்சரிக்கப்படும் வார்த்தையாகும். இமயமலை ஏற வரும் மலையேற்ற பயணிகளுக்கு உதவியாக செல்பவர்கள்தான் இந்த ஷெர்பாக்கள். அதாவது உதவியாளர்கள் என்று பெயர்... கைடு என்று சொல்கிறோமே அது போல.
இந்த ஷெர்பாக்கள்தான் எந்தப் பகுதி வழியாக போக வேண்டும். எந்தப் பகுதி எளிமையானது, எங்கு கடினமானது என்பதையெல்லாம் நமக்கு சுட்டிக் காட்டி வழி காட்டுவார்கள். நேபாள பாஷையில் ஷெர்பா என்றால் உதவியாளர், கைடு என்று பொருளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
{{comments.comment}}