கோவை: விதிகளை மீறி சவர்மா விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.
சமீபத்தில் நாமக்கலில் உள்ள உணவகத்தில் கெட்டுப்போன சவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்தார். இதன் விளைவாக தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் உணவுத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான அலுவலர்கள் கூத்தனூர், சுந்தராபுரம், கணபதி நகர், காந்திபுரம், பீளமேடு, ஒண்டிபுதூர், சூலூர், சிங்காநல்லூர், அவிநாசி ரோடு மற்றும் பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் உள்ள உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் அதிகாரிகள் கூறுகையில், கோவையில் சவர்மா தயாரித்து விற்பனை செய்யும் உணவகங்களில் சோதனை நடத்தப்பட்டது. 73 உணவகங்களில் 57 .45 கிலோ பழைய சவர்மா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மூன்று உணவகங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. இதை ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளோம். அதில், 35 உணவகங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய உணவகளுக்கு 10 ஆயிரம் அபதாரமும் விதிக்கப்பட்டது.
சவர்மா தயாரிப்பாளர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றிருக்க வேண்டும். சவர்மா தயாரிப்பாளர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே சவர்மா செய்ய தேவையான பொருட்களை வாங்க வேண்டும். சிக்கன் போன்ற உணவுப் பொருட்களை இரண்டு நாட்களுக்கு மேல் பதப்படுத்த கூடாது .
சுகாதாரமான முறையில் உணவுப் பொருட்களை பயன்படுத்த வேண்டும். தினந்தோறும் தேவையான அளவிற்கு மட்டுமே இறைச்சி கொள்முதல் செய்யப்பட வேண்டும். சாலை ஓரத்தில் அல்லது வெட்ட வெளியில் சவர்மா தயாரிக்கும் அடுப்பை தூசிகள் படியுமாறு வைக்க கூடாது.
சமைக்கும் போது கையுறை, முக கவசம், தலைக்கவசம் அணிந்து தயாரிக்க வேண்டும். பாதுகாப்பான இடத்தில் வைத்து சமைத்து நன்கு வேகவைத்த பின்னரே வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும். சவர்மா வேக வைக்கும் போது அடுப்பை அணைத்து அணைத்து இயக்கக் கூடாது. தொடர்ந்து இரண்டு மணி நேரம் சவர்மாவை வேக வைக்க வேண்டும். விற்பனை செய்த பின்னர் மீதமுள்ள கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்.
மேற்குறிப்பிட்ட விதிகளை மீறி சவர்மா தயாரித்து விற்பனை செய்யும் உணவகங்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்படும். உணவகங்கள் மீது எந்த முன்னறிவிப்பும் வழங்கப்பட மாட்டாது .
உணவகங்கள் உடனடியாக மூடப்படும். குறிப்பாக பொதுமக்கள் ,பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என பலர் சவர்மாவை வாங்கும் போது சுகாதார முறையில் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அதன் பிறகு அதனை வாங்கி உண்ண வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
{{comments.comment}}